Friday, October 1, 2010

உப பாண்டவம்

  நாவல் :         உப பாண்டவம்
  ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
  வெளியீடு : விஜயா பதிப்பகம்
  பக்கங்கள் :  384
  விலை :     ரூ. 200
  பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
        உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)

Friday, September 10, 2010

மறைவாய்ச் சொன்ன கதைகள் - நாட்டார் கதைக்களஞ்சியம்

மறைவாய்ச் சொன்ன கதைகள் 
தொகுப்பு: கி.ரா., மற்றும் கழனியூரன்
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம்


கி. ராவும், கழனியூரனும் தொகுத்த நூறு நாட்டுப்புறப் பாலியல் கதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தின் பரிந்துரையில், அழகு கேட்டு விடாமலிருக்க,  பெரும்பாலும் கி.ராவின் வாக்கியங்களையே உபயோகித்து இருக்கிறேன்.  வேறுவகையில் justify செய்ய முடியவில்லை.  "பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்தது என்று இவை சொல்கின்றன.  மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறர்கள்.  'பிள்ளை நல்லது, பீ பொல்லாது' என்ற சொலவடையை இவர்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது...  இந்த சேகரிப்பில் ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை".   கி.ரா தமது முன்னுரையில், இந்தக் கதைகளை வெளியிட யாருமில்லாததால் தாமே செய்வதாகச் சொல்லுகிறார்.  இக்கதைகளின் காலக்கட்டத்தை, தி.மு, தி.பி. (திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால், பின்னால்  ) என்று கொள்ள வேண்டுமாம். 

Monday, August 30, 2010

மகாகவி பாரதியார்மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ. ரா
பரிந்துரை: சண்முகம்காலம்: 1910.
ஊர்: புதுவை.
இடம்: பாரதி வசிக்கும் வீடு.

பாரதியை அதுவரை பார்த்திராத வ.ரா அவரை பார்க்கப் போய் இருக்கிறார். நமஸ்கரித்தவுடன் 'யார் ?' என்று வினவுகிறார். வ.ரா. இங்கிலீஷில் தன்னை அறிமுகப்படுத்தத் தொடங்குகிறார். உடனே பாரதி, 'அடே பாலு ! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா ! அவரிடம் நீ பேசு. எனக்கு வேலையில்லை' என்று உரக்கக் கத்திவிட்டு பின்னர் வ.ரா விடம் 'ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் ? ' என்று வருத்தப் பட்டிருக்கிறார்.

இது தான் 'மகாகவி பாரதியார்' நூலின் தொடக்கம்.

Sunday, August 22, 2010

ஆயிஷா - குறுநாவல்

ஆயிஷா
பரிந்துரை: விருட்சம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ,
                    7 , இளங்கோ சாலை, சென்னை - 18 
                    ( 044 - 24339024 / 24332924 / 24332424 )

சமீபத்தில் மனதை பாதித்த இந்த சிறுகதை, ஆயிஷா

தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.  கீழ்கண்ட சுட்டியிலுருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்: http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf
ஆங்கிலம்: http://www.eranatarasan.com/download/AYEESHA_english.pdf

Tuesday, August 17, 2010

சாயாவனம்சாயாவனம்
ஆசிரியர் : சா. கந்தசாமி
பதிப்பகம் : காலச்சுவடு
பரிந்துரை : ஜெகதீஷ் குமார் 

  


தக்கையின் மீது நான்கு கண்கள் என்கிற அபூர்வமான சிறுகதைதான் நான் வாசித்த சா. கந்தசாமியின் முதல் படைப்பு. தலைப்பு போலவே கதையும் தனித்தன்மை கொண்டிருந்தது. ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையில் ஓடையில் மீன் பிடிக்கையில் நடக்கும் போட்டியும், தாத்தாவுக்குப் பேரனின் மேலுள்ள ego clash கோபமாக வெளிப்படுவதும் மிக இயல்பாகவும் அழகாகவும் வெளிப்பட்டிருந்த கதை.

Thursday, August 5, 2010

கானல் வரி - தமிழ்நதி


கானல் வரி
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: உயிர்மை
பரிந்துரை: சண்முகம்தமிழ்நதியை நான் "ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்" என்னும் காத்திரமான கட்டுரையினூடாகத் தான் அறிந்துகொண்டேன். இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உள்ள தார்மிகச் சீற்றமும் நியாயமும் என்னை வெகுவாக கவர்ந்தன.

என் வரையில், சீரிய இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர் வரிசையில் அம்பையை மட்டுமே நான் அறிந்திருந்தேன். சீரிய பெண் எழுத்தாளர்கள் அருகிப் போன நம் சமூகத்தில், பெண்ணின் மனவோட்டத்தை பெரும்பாலும் ஆண்களே பதிவு செய்யும் இந்த அவல நிலையில், 'கானல் வரி' யின் வாயிலாக, ஒரு பெண்ணின் உலகை, அவள் காணும் உலகை தரிசிக்க ஆவலாய் நுழைந்தேன்.

Friday, July 30, 2010

சாப்பாட்டுப் புராணம்


சாப்பாட்டுப் புராணம்
ஆசிரியர்: சமஸ்
பதிப்பகம்: தான் பிரசுரம்
பரிந்துரை: சண்முகம்இந்த சாப்பாட்டைப் பற்றிய புராணமெல்லாம் இலக்கியமாகுமா ? இதற்கெல்லாம் ஒரு பரிந்துரையா ? இந்த கேள்வி எனக்கும் இருந்தது. இந்த கேள்வியை முன் கூட்டியே உணர்ந்தார்போல், இந்நூலின் முகப்புரையில் பதிலுரைக்கிறார் சமஸ்:

"... இரண்டு ஊர்க்காரர்கள் சந்தித்துக்கொண்டால், ஊரைப்பற்றி, உணவைப்பற்றி மனதார, வாயார பேசிப் பூரிப்படைகிறோம். ஆனால் எழுத்து என்று வரும்போது அதன் முக்கியத்துவத்தை நிராகரித்து விடுகிறோம். உணவைப்பற்றி எழுதுவது இலக்கியமாகாது என்கிற தாழ்வான அபிப்பிராயம் நம்மிடத்தில் படிந்திருக்கிறது.... "

Saturday, July 24, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்

நாவல்      : யாமம்
ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்.

உயிர்மை வெளியீடாக வந்திருக்கும்  எஸ். ராமகிருஷ்ணனின்  நாவலான 'யாமம்' சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின்  அவ்வீட்டின்  விளக்குகளின்  சுடர்கள்  அனைத்தும்  ஒன்று  கூடி  அம்மனிதர்களின் குண  இயல்புகளையும்,  ஆசைகளையும்  ஏக்கங்களையும்  பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று   நாவலின்  முன்னுரையில்   எஸ்.ரா.  குறிப்பிடுகின்றார்.  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரமாவதுப் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது.  யாமம் என்பது ஒருவகை  அத்தரின் பெயர்.  எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும், காமத்தைத் தூண்டும் வல்லமை கொண்டது யாமம்.  நாவலின் பெயர்தான் யாமமே தவிர, இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல.

Friday, July 9, 2010

சுந்தர ராமசாமியின் புளியமரம்

ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்


தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்று கே.என். பணிக்கரால் குறிப்பிடப்படுகிற ஒரு புளியமரத்தின் கதையை நான் வெகு தாமதமாகத்தான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், 2000 ல் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய மொழிகளில் இருந்து அம்மொழிக்குச் சென்ற முதல் நூல் என்ற புகழ் கொண்டது. இத்தனைப் பெருமைகளையும் கொண்ட இந்த நாவல் சுந்தர ராமசாமியின் முதல் நாவல் என்று தெரியவரும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இதுவரை ஆங்காங்கே இலக்கிய இதழ்களில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதைகளில் மிகச்சிலவற்றையும், சில கட்டுரைகளையும் மட்டுமே வாசித்துள்ளேன். அவற்றில் பிரசாதம் கல்லூரிக் காலத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அந்த அறிமுகத்திலும் மற்றும் என் தமிழாசிரியையின் பரிந்துரையின் பேரிலும் நான் முதலில் படித்த அவரது நாவல் ஜே.ஜே. சில குறிப்புகள். அப்போதெல்லாம்

Wednesday, June 30, 2010

கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு


கண்ணீரும் புன்னகையும்
ஆசிரியர்:  முகில்
பதிப்பகம்:  கிழக்கு
பரிந்துரை:  ஜெகதீஷ் குமார்சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு.
கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில்

Wednesday, June 23, 2010

கடல்புரத்தில் - மாற்றத்தின் ஓயா அலைகள்

கடல்புரத்தில்  
ஆசிரியர்: வண்ணநிலவன்
பதிப்பகம்: கிழக்கு
பரிந்துரை: கரிகாலன்


பல நூற்றாண்டு காலங்களாக வல்லத்தில் (படகில்) ஏறி, கடலில் மீன் பிடித்து வாழ்ந்த  மணப்பாட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நாவல். நாவலின் முக்கிய கதா பாத்திரங்கள் பிலோமிக் குட்டியும், அவள் குடும்பமும்.  பிலோமிக் குட்டியின் அப்பச்சி குருஸ், அண்ணன் செபஸ்தி, அம்மை மரியா, அவர்களது வாழ்க்கையை ஒட்டி எளிய கதையாக தோன்றும் இந்த நாவல் பல தளங்களில் மனத்தைக் கவரும் நாவல்.ஒரு சிறு குடும்பப் பிரச்னையில் ஆரம்பிக்கறது நாவல்.  வாத்தியார் வேலைக்குப் படித்து பக்கத்து ஊரில் வேலை செய்யும் செபஸ்திக்கு ஒரு தொழில் தொடங்க முதலீடு தேவை.  அதற்காக அப்பச்சி குரூசிடம், வல்லத்தையும் வீட்டையும் விற்று விட்டுத் தன்னுடன் வரச் சொல்லி அடிபோடுகிறான்.  வர மறுக்கும் அப்பச்சியிடம் செபஸ்தி, கோபத்துடன் கேட்கிறான்,    "அப்பம், நீர் என்னை ஏன் படிக்க வச்சீர்?  ஒம்மப் போல மீன் பிடிக்க வல்லம் கட்டிக் கொண்டு கடலுக்கு போயிருப்பேனே.  ஏன் நீரு என்னையப் படிக்க வச்சிரு...",  

Friday, June 18, 2010

குள்ளச்சித்தன் சரித்திரம் - மற்றுமொரு வாசிப்பனுபவம்


குள்ளச் சித்தன் சரித்திரம்
ஆசிரியர்யுவன் சந்திரசேகர்
மதிப்புரை:  ஜெகதீஷ் குமார்
 

பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
 
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான்.

Wednesday, June 16, 2010

மத்தகம் - ஜெயமோகன்

மத்தகம்

ஆசிரியர்: ஜெயமோகன்

பரிந்துரை: சண்முகம்


குட்டியாய் இருந்தபோதே வெல்லம் கலக்காத சோற்றை சாப்பிடாது கேசவன். ஒரு ராஜ்ஜியத்திற்கே அதிகாரம் செலுத்தும் இளையதம்புரானின் செல்லப் பிராணியாக இருப்பதனால் தான் தனக்கு இந்த அதிகாரம் என்று வெல்லச் சோற்றின் ருசியை விட அதிகாரத்தின் ருசியை கேசவன் சிறுபிராத்திலிருந்தே நன்கு உணர்ந்து தான்வளர்ந்திருக்கும். தன்னை ஒருமுறை 'சனியன்' என்று திட்டிய மூத்த யானைப்பாகன் சீதரன் நாயர் என்கிற ஆசானை, தன் கால்களுக்கு இடையில் கிடத்தி, தன் காலை நிதானமாய் அசானின் கால் மீது வைத்து மூங்கில் குச்சியை ஒடிப்பது போல ஒடித்து அதிகார அடுக்கில், தன் நிலையைத் தெளிவுற உணர்த்துகிறது. ஆசான், கேசவனின் இந்த அதிகார வெளிப்பாட்டை மிக இயற்கையான, ஏன் தெய்வாம்சமான் ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு,

Sunday, June 6, 2010

தாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கரன்

தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை

பரிந்துரை: சண்முகம்

'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.   சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல்.

தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு.

Tuesday, May 25, 2010

கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்


கண்ணீரால் காப்போம் 
ஆசிரியர்:  பிரபஞ்சன்
பக்கங்கள் : 304


வரலாற்றுச் சான்றுகளின் உதவியுடன் புதுவையின் முன்னூறு வருட வரலாற்றை நான்கு பாகங்களாக (மூவாயிரம் பக்கங்கள்) எழுதினார் பிரபஞ்சன்.  அந்த வரலாற்றுத் தொகுப்பின் மூன்றாம் பகுதி தான் 'கண்ணீரால் காப்போம்'.  பிரஞ்சுக் காலனி ஆதிக்கம் புதுச்சேரியில் காலூன்றி  பரிணமித்ததை மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும்   புதினங்கள் அழகாய் சித்தரித்தன.  'கண்ணீரால் காப்போம்',  புதுவையின் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் (1890 - 1934) பற்றியது.   (பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டு வரை நடப்பவை நான்காம் பகுதியில் புனையப்பட்டிருக்கிறது).

Sunday, May 16, 2010

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உயிர்மை பதிப்பகம் 
 
மெயின்லேன்ட் தமிழகத்தில் பிறக்காத தமிழ் எழுத்தாளரின் படைப்பை வாசிக்கும் முதலும் புதியதுமான அனுபவம்.
அ.முத்துலிங்கம்,   இலங்கையின் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, பின்னர் கொழும்பு, சியாரா லியோன், சூடான், நைரோபி,   நமிபியா, சோமாலியா, அமெரிக்கா, கனடா, என்று உலகத்தின் எட்டுத் திக்குகளுக்கும் சென்று தனது ரசமான அனுபவத்தை, சுவாரஸ்யமான கலைச்செல்வமாய் இந்நூலில் கொணர்ந்திருக்கிறார்.

Friday, May 14, 2010

பாலகாண்டம் - இலட்சுமணப்பெருமாள்


பாலகாண்டம் 
ஆசிரியர்: இலட்சுமணப்பெருமாள்
பரிந்துரை: சண்முகம்
பதிப்பகம்: தமிழினி
பக்கங்கள்: 160


"என்னமாப் படம் பிடிக்கிறார் விசயங்களை"   என்று கி. ராசநாரயணனே வியக்கும் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள்.


இவரது சிறுவயதிலே,   இவருடைய முதிலித்தாய், காதில் வண்டிக்கம்மல் ஆட ஆட கதை கதையாய்ச் சொல்லி வளர்த்திருக்கிறாள்.    அதற்கு பின்னர் என்ன என்ன வேலையெல்லாம் செய்து வளர்ந்திருக்கிறார் பாருங்கள்:    கூலி விவசாயம்,    மைக்செட் தொழிலாளி,    பால் பண்ணையில வேல,    நிப்புக் கம்பெனி தொழிலாளி,    பஸ்ல கண்டக்டர்,    லாரியில கிளீனர்,    மேடையில வில்லிசைக் கச்சேரி,    தீப்பெட்டி  உற்பத்தியாளி,   பெட்டிக்கடை வியாபாரி...

Thursday, April 29, 2010

வானம் வசப்படும் (சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)

வானம் வசப்படும்
(சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
எழுத்தாளர்: பிரபஞ்சன்
பதிப்பகம் : கவிதா பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 706

புதுச்சேரி பற்றிய வரலாற்று நாவலான 'மானுடம் வெல்லும்' என்ற  நூலின் தொடர்ச்சியாக வந்தது 'வானம் வசப்படும்'.  இதைத் தனி நாவலாகப் படிப்பதை விட, தேவையான பின்புலங்கள்  அடங்கிய முதல் நாவலின் தொடர்ச்சியாகப் படிப்பது உத்தமம்.  சிறந்த நூலுக்கான இந்திய அரசின் சாகித்ய அக்காதமி பரிசுடன், மாநில அரசுகளின் பல்வேறு பரிசுகளையும்

Friday, April 23, 2010

கதைக்கலாம் வாங்க...

புத்தகங்களைப் பரிந்துரை செய்யும் எங்கள் முயற்சியைப் பற்றி...

நாங்கள் மூவரும் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த போது சந்தித்தோம். சில ஆண்டுகளுக்கு முன் காலத்தின் சுழற்ச்சியில்

Friday, April 9, 2010

உறுபசி (1) : தீரா வலியின் ருசி


உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-'நாற்பத்தி இரண்டே வயதில், கல்யாணமாகிய ஓரிரு வருடங்களிலேயே,  அரசாங்க ஆசுபத்திரியில் இறந்து போகிறான் சம்பத்', என அதிர்ச்சியுடன் நாவல் ஆரம்பம் ஆகிறது.  அவன் இறுதிக் காரியங்களை முடித்த கையுடன், அவனது நண்பர்கள் துரைசாமி, அழகர், மாரியப்பன், மற்றும் சம்பத்தின் மனைவி ஜெயந்தி ஆகியோரின்  நினைவுகளின் வாயிலாக (flashback), சம்பத்தின் வாழ்க்கைப் பரிணாமத்தைக்  கொஞ்சம், கொஞ்சமாக விவரித்துக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் எஸ்.ரா.

கதையின் முதல் தளம், புறவயமான நிகழ்வுகள்.  நால்வரும் கல்லூரியில் பெண்களே இல்லாத தமிழ்ப் பிரிவில், ஒன்றாகப் படித்தவர்கள்.  

உறுபசி (2) : மதிப்புரை: திருமதி. மீனா நா. சுவாமிஉறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-

பட உதவி: jungle cookie

ஒரு இளைஞன் ஒத்துதவி வாழாமல் இயற்கை நியதி, சமூக நியதியை விட்டு விலகி, தன உயிராற்றலை இழந்து மரணத்தை எட்டும் ஒரு சோகம் நிறைந்த கதை.  சம்பத், நம் மனதில் துன்பத்தின் உருவாக நிலைத்து விடுகிறான்.  'கசப்பின் கோப்பை' கை தவறிக் கவிழ்ந்து சம்பத் துன்பத்தையே அனுபவிப்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.

Friday, April 2, 2010

எட்டுத்திக்கும் மதயானை

எட்டுத்திக்கும் மதயானை
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன் கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன். ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

Thursday, March 25, 2010

கண்ணீரைப் பின் தொடர்தல்


கண்ணீரைப் பின் தொடர்தல்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை
இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன.   இந்தியாவில் பெரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, அமைப்புகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது.  நவீன யுகத்தின் எதையும் அறிவுப்பூர்வமாக நோக்கும் ஆய்வு முறை, பல நூற்றாண்டுகளில் எந்தக் கேள்விக்கும் உட்படாத தொன்மையான மரபுவாத முறைகளை, யந்திரத்தன்மையுடன் சந்தித்த காலம்.   சுதந்திரம் மட்டும் அடைந்து விட்டால், மக்களும், மன்னர்களும் சமமாவார்கள் என்று லட்சியவாதிகள் கனவும், தினவும் கொண்ட - ஒரு தேசத்தின் வரலாற்றில் அபூர்வமாக மட்டுமே வரக்கூடிய- காலம்.  இந்தக் காலகட்டம் இந்தியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும், அரசன் முதல் ஆண்டி வரை, மிக அடிப்படையான விதங்களில் பாதித்தது.  சமூகத்தில் பெரும் மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை உருவாகியது.  இந்த மாற்றங்கள், இந்திய எழுத்தாளர்களுக்கு செறிந்த இலக்கியங்களைப் படைக்க அற்புதமான விளைநிலங்கள் ஆயின.  பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.

Tuesday, March 9, 2010

குள்ளச் சித்தன் சரித்திரம்

குள்ளச் சித்தன் சரித்திரம் :
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

சில மாதங்களுக்கு முன்பு ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தபோது, தற்கால எழுத்தாளர் ஒருவரை சிபாரிசு செய்யக் கேட்டேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் யுவன் சந்திரசேகரைக் குறிப்பிட்டார்.சமீபத்தில் உயிர்ம்மையில் யுவன் எழுதிய சிறுகதை வெளி வந்தது.சரியாகப் புரியா விட்டாலும், கதை என்னவோ மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. 'குள்ளச்சித்தன் சரித்திரம்' ஏதேச்சையாக அகப்பட்ட போது, இம்முறை யுவனின் மாய உலகத்திற்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் எனக் கறுவிக்கொண்டேன்.
'மாற்று மெய்ம்மை' என அடிக்கடி தட்டுப் படுகிறதே என்று தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction). இது என்னவெனில், நாம் காணும் உலகத்தைப் போல், இன்னும் பல உலகங்கள் ஒரே சமயத்தில் சஞ்சரிக்கும் சாத்தியக்கூறை, கதை சொல்லும் உத்தியாகக் கையாள்வதைப் பற்றியது.

Monday, March 1, 2010

மரப்பாச்சி

மரப்பாச்சி
எழுத்தாளர்: உமா மகேஸ்வரி
பதிப்பகம்: தமிழினி

ஓர் அழகிய இளம்பெண், தலை நிலம் நோக்கி, ஆழ்ந்த அகத்தாய்வு செய்வதைப் போன்ற அழகான சித்திரம் அந்தப்  புத்தகத்தின் அட்டையில் இருப்பதைப் பார்த்து அதை வாங்கினேன். இதில் இருந்தே நான் புத்தகம் தேர்வு செய்யும் 'அளகை '  நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்!  உமா மகேஸ்வரியின் பெயரை இதற்கு முன் எங்கும் கேள்விப்படாததால், அவரது சிறு கதைத் தொகுப்பான 'மரப்பாச்சி' என்ற அந்தப் புத்தகம் பல நாட்களாக என் அலமாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.  இரண்டு நாட்களுக்கு முன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் random ஆக  "மரப்பாச்சி"யை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  படித்து முடித்ததும் அசந்து போய் விட்டேன்!

Tuesday, February 23, 2010

பிரபஞ்சனின் "மானுடம் வெல்லும்"


தமிழில் எழுதப்பட்ட சாண்டில்யன் வகை 'வரலாற்று' நாவல்கள் பெரும்பாலும் எந்தவிதமான ஆதாரங்களின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டவை அல்ல.  திரண்ட தோள் கொண்ட வாள் வீரர்கள், கச்சுக்குள் அடங்கா தனங்களைக் கொண்ட இளவரசிகளைக் கட்டிலில் வீழ்த்தும் சாகசங்கள், உறையூர் ஒற்றர்கள், மற்றும்

Wednesday, February 10, 2010

விஷ்ணுபுரம் - மற்றுமொரு விமர்சனம்

விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது.  இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்...

காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற - என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.

Saturday, February 6, 2010

நாளை மற்றும் ஒரு நாளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான  நாவல் இது.  எழுத்தாளர் ஜி. நாகராஜனின் எழுத்தின் நேரடித் தன்மை, இன்றைய வாசகனைக்கூடத் திகைக்க வைத்து, பரவசத்துக்குள்ளாக்கும். அவர் எழுத்து, எந்த முலாமும், வார்த்தை ஜாலமும் இல்லாதது.  தமிழில் தனித்தன்மை கொண்ட அவரது எழுத்து, எந்தக் கட்டுப்பாட்டுக்கும் தலை சாயாதது.

கதையின் நாயகன் கந்தன் ஒரு குடிகார ரௌடி. தன் மனைவியையே 'வியாபாரத்துக்கு' அனுப்புவன். ரௌடித் தனம் செய்யும் அவன் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, கதாநாயகன் கந்தனைப் பற்றி வாசகர்களாகிய நாம் கொள்ளும் முன்தீர்மானங்களை மறு பரிசீலனைச் செய்யத் தூண்டும் கதை. கதாமாந்தர்கள் மூலம் நம் சமூகக் கட்டுப்பாடுகளின் அடித்தளத்தைப் பற்றிய வினாக்களை இந்தக் கதை எழுப்புகிறது. இவை அனைத்தையும் விட,

Sunday, January 31, 2010

புயலிலே ஒரு தோணி

'புயலிலே ஒரு தோணி' மற்றும் 'கடலுக்கு அப்பால்' என்ற இரு நூல்களை மட்டும் எழுதிய திரு . சிங்காரம், ஒவ்வொரு நூலையும் எழுதி, அதைப் பதிப்பிக்கப் பத்து ஆண்டுகள் அலைந்திருக்கிறார்ஒரு கசப்பான வாழ்க்கையைத் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். திரு சிங்காரம் பற்றிய மேலதிக விபரம், இவ்விரு நூல்களின் 'தமிழினி' செம்பதிப்பின் முகவுரையில் அவரிடம் திரு முருகேச பாண்டியன் எடுத்த பேட்டியில்  உள்ளது. 1950 -களில், சாண்டில்யன் வகை, மற்றும் தட்டையான எழுத்தைப் படித்துப் பழகியிருந்தவர்களுக்கு சிங்காரத்தின் நடை புரியாமல், பிடிக்காமல் போனதில் வியப்பு இல்லைஅனாவசியத்துக்கு ஒரு கால் புள்ளியைக் கூட விரயமாக்காமல், உயரிய அங்கதச் சுவையும் கதை வீச்சும் கொண்டுள்ளது இந்தநூல்.

Tuesday, January 26, 2010

பிற தளங்களிலிருந்து..

இந்தப் பதிவில், பிற தளங்களிலிருந்து, பதிவர்கள் அனுமதியுடன் நூல் மதிப்புரைகளின் இணைப்புகள் கொடுக்கப்படும்.

1. சாருவின் "மலாவி என்றொரு தேசம்" நூலுக்கு, 'வள்ளியூர் ஞான பாஸ்கர்' அவர்கள் அளித்திருக்கும் மதிப்புரையைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.
மலாவி என்றொரு தேசம 

2 . வண்ண நிலவன் அவர்களின் 'ரெயினீஸ் ஐயர் தெரு' நூல் அறிமுகத்தை ஜெ.ஜெ. அவர்கள் மிகவும் அழகாக அளித்துள்ளார்.  அதனைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்
ரெயினீஸ் ஐயர் தெரு காணலாம்.

Monday, January 25, 2010

காவல் கோட்டம் - சுவாரஸ்யமான மதிப்புரைகள்

இது விமர்சனம் இல்லை.  விமர்சனகளின் தொகுப்பு.
நான் புதிதாக ஒரு புத்தகம் படிக்க நினைத்தால் படிப்பதற்கு முன் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நல்ல ஒரு மதிப்புரையையோ படித்த பின்தான் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன்.  சமீபத்தில் வெளி வந்த காவல் கோட்டம் ஆயிரம் பக்கத்திற்கும் மேலான நீண்ட புத்தகம்.  புத்தகத்தை எழுதியவர் சு. வெங்கடேசன். இளம் வயதுக் காரர், அவரது முதல் புத்தகம்.  கள்ளர்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பெரும் நாவல் என்று மட்டும் மேலோட்டமாகத் தெரிந்திருந்தது.

தமிழில் தரமான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் காவல் கோட்டத்திற்கு, முகப்புரை எழுதியிருந்தார்கள்.  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தை, ஆயிரம் பக்க அபத்தம் என்று ஒரே காய்ச்சு, காய்ச்சு விட்டார்.  எஸ்.ரா தன் முகப்புரையில் இந்தப் புத்தகத்தைப் கொஞ்சம் காட்டமாகவே எழுதியிருந்தார்.  எஸ்.ரா எழுதியது அவர் இயல்புக்கு மாறாக இருந்தது என்று எஸ். ராவின் எழுத்துக்களை ஆர்வமுடன் படிக்கும் என் நண்பர் ஒருவர் கூடக் கூறினார்)   எஸ். ராவின் விமரிசனத்தை மறுத்து கீற்று பத்திரிக்கையில் திரு. மணிமாறன் அதே காட்டத்துடன் எழுத்து வியாபாரியின் அபத்த அரசியல் என்று எதிர்வினை எழுதி இருந்தார்.  அட, இந்தப் புத்தக விமரிசனம் இவ்வளவு காட்டமாக இருக்கிறதே விமரிசகர்கள் மத்தியில் - என்று நினைத்தேன்.

அப்புறம் ஜெயமோகனின் விமரிசனம் வந்தது. காவல் கோட்டத்தைச் சிலாகித்து விரிவாக விமரிசனம் ( ஐந்து பாகங்கள்) செய்திருந்தார்.  தனக்கே உரித்தான முறையில் காவல் கோட்டத்தின் பல படிமங்களை முன் வைத்தார்.  அதைப் படித்தபின் அவசியம் காவல் கோட்டத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.  சமீபத்தில் இந்தியா சென்ற நண்பர் ஒருவரை வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன். படித்தவுடன் என் எண்ணங்களை எழுதுகிறேன்.

காவல் கோட்டத்தை படித்தவர்கள் என்ன நினைகிறீர்கள்?

குறிப்பு 1 :
புத்தக விவரம்:
காவல் கோட்டம்
சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்

குறிப்பு 2:

காவல் கோட்டத்தை எழுதிய சு. வெங்கடேசன், ஒரு காலத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை கிழி, கிழி என்று கிழித்து எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்.   பிறர் தன்னைப் பற்றிக் கூறும் சிறு குறைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத மெல்லிய தோல் கொண்டவர்களாக பல எழுத்தாளர்கள் இருக்கும் காலத்தில், ஜெயமோகன் போன்ற பாரபட்சமற்ற விமரிசகர்கள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கதே!

Monday, January 11, 2010

விஷ்ணுபுரம் - ஒரு விஸ்வரூபம்

அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings - மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.

நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,