Tuesday, February 23, 2010

பிரபஞ்சனின் "மானுடம் வெல்லும்"


தமிழில் எழுதப்பட்ட சாண்டில்யன் வகை 'வரலாற்று' நாவல்கள் பெரும்பாலும் எந்தவிதமான ஆதாரங்களின் அடிப்படையிலும் அமைக்கப்பட்டவை அல்ல.  திரண்ட தோள் கொண்ட வாள் வீரர்கள், கச்சுக்குள் அடங்கா தனங்களைக் கொண்ட இளவரசிகளைக் கட்டிலில் வீழ்த்தும் சாகசங்கள், உறையூர் ஒற்றர்கள், மற்றும்
எண்ணிலடங்கா ஆச்சர்யக்குறிகளைக் (!!) கொண்ட கற்பனைக்  கதைகள்.   விதிவிலக்காக வந்த சொற்ப நாவல்களில் மிகவும் முக்கியமானவை, தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன், புதுச்சேரியின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதி கவிதா பப்ளிஷர்ஸ் வெளியிட்ட  'மானுடம் வெல்லும்', வானம் வசப்படும், 'கண்ணீரால் காப்போம்' என்ற மூன்று புதினங்கள்.

'இந்தியாவின் பெப்பிஸ் (Pepys)' என்று அழைக்கப்படும் ஆனந்த ரங்கப்பிள்ளை, தாம் கண்டு, கேட்ட அரசியல் நிகழ்ச்சிகளை 1736 தொடங்கி 1761 வரை தினமும் தொடர்ந்து எழுதி வைத்திருக்கிறார். ( http://en.wikipedia.org/wiki/Ananda_Ranga_Pillai )  தமிழுக்குக் கிடைத்த மாபெரும் செல்வமான அவரது தினக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்டவை  இந்தப் புதினங்கள்.  பிரபஞ்சனே குறிப்பிடுவது போல "இக்காலக் கட்டத்து உழைக்கும் மக்கள், நிலச்சுவான்தார்கள், அதிகாரிகள், தாசிகள் ஆகியோரது வாழ்வு எவ்வாறு இருந்தது என்கிற கலாபூர்வமான, இலக்கிய ரீதியான விமர்சனமே இப்புதினங்கள்".

தாம் வளர்ந்து வந்த மண்ணின் மீது அக்கறையும், அதன் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது. மேலும் பிரபஞ்சனின் மிகவும் வசீகரமான மொழி ஆளுமைக்காகவும் அவசியம் வாசிக்கப் பட வேண்டிய நூல்.   ஒரு நிகழ்வு முடிந்ததும், அதை அடியொற்றி, அதன் தொடர்ச்சியை, அடுத்தக் காட்சியில், நிகழ் கதையில் விவரிப்பதாக ஓர் அற்புதமான நடை.  மக்கள் பேசிய அன்றைய வட்டார வழக்கு, நம்மை அப்படியே ஒன்றிவிடச் செய்யும் வர்ணனைகள்.
"குழந்தையின் ஸ்பரிசத்தைப் போன்ற காலைக் காற்று.  தென்னங்கள்ளைப் போல வெளுத்தது அந்தக் காலைப் பொழுது"
"குளிர் தாங்க முடியாத வயோதிகன், கரும் போர்வையில் சுருட்டிக் கொண்டு உறங்குவது போல, வானம் கறுத்து, சில்லென்றிருந்தது."
மனித நுண் உணர்வுகள், அரசியல் சூழ்ச்சிகள், சமூக அவலங்கள்,  எனப் பலத் தளங்களில் இயங்கும் இந்த நாவல், எழுத்தாளரின் மொழிவீச்சை மோகிக்க வைக்கிறது.  நாவலில் அங்கங்கே, ஆனந்தரங்கரின் வாய் மூலமாகவே, அவர் தினக்குறிப்பைப் படிக்க வைக்கிறார் ஆசிரியர். தினக்குறிப்பின்  அந்தக் காலத்து மணிப்பிரவாள நடை படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.   ஒரு சதவீதம் கூட வாசகனுக்குச் சோர்வு ஏற்படுத்தாத புத்தகம்.

முதலாவது பாகம் 'மானுடம் வெல்லும்', 'பியேழ் துமாஸ்' பிரெஞ்சுக் காலனியின் கவர்னராக இருந்த காலக்கட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஒட்டிய புனைவு.  இந்தக் காலக்கட்டத்தில்தான் வெள்ளையர்கள் தஞ்சை மற்றும் ஆற்காட்டு அரசியலில் சந்தர்ப்ப வசத்தால் நேரடியாக நுழைகிறார்கள்.  குவர்னர் துமாஸ் கத்தியின்றி ரத்தமின்றி தம்முடைய ஏழாண்டு துரைத்தனத்தை நடத்துகிறார்.  அப்போது அவருடைய துபாஷ் (மொழிபெயர்ப்பாளர் ) கனகராய முதலியார் மற்றும் சின்ன துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளை மூலம்தான் சுதேசி மக்களை நிர்வகிப்பது, மற்றும், முதல் நோக்கமான கடல் வாணிபம் ஆகியவற்றைச் செய்தார். குவர்னருக்கு உதவியாக இருந்த மற்ற முக்கிய அதிகாரிகள், தங்கசாலைப் பொறுப்பு - சுங்கு சேஷாசலச் செட்டி மற்றும் சாவடி முத்தையாப் பிள்ளை.  பறங்கித் துரையாக இருந்தாலும், குவர்னர் துமாஸ், நல்லது கெட்டது அறிந்து, துலாக்கோல் தவறாது, வினையாற்றுபவராக இருந்திருக்கிறார்.  அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கசாலைப் பொறுப்பு - சுங்கு சேஷாசலச் செட்டி, சாவடி முத்தையாப் பிள்ளை என கதை நெடுக வரும் நிஜப்  பாத்திரங்கள்.

வேதபுரீஸ்வரர் கோயில் தாசி கோகிலாம்பாள் வழக்குடன் கதை ஆரம்பமாகிறது.  ராஜ ராஜ சோழன் காலத்தில் துவக்கப்பட்ட இந்த தேவதாசி முறை, ஒரு ஐம்பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஒழிக்கப்பட்டது என்பதை நினைக்கும்போது, ஒரு சமூக இழிவு ஒழிய எத்தனைக் காலம் ஆகிறது என்ற மலைப்பு ஏற்படுகிறது.  அதே போல ஆண்டை அடிமை முறைகள் அற்புதமாக விவரிக்கப் படுகிறது.  ஓரிடத்தில், பண்ணை அடிமைகளையும், உயர்ந்த ஜாதி மாடுகளையும் வாங்கிச் செல்லும் உறவினரிடம், அடிமைகளை எப்படி சாணிப்பால் புகட்டி தண்டிப்பது என்பதையும், மாடுகளை எப்படி அன்புடன் பராமரிக்க வேண்டும் என்பதையும்     சுப்ரமணிய முதலியார்   விளக்கும் பகுதிகள் சோகமான அங்கதம்.  
இதனிடையில், சேசு சபை பாதிரியார்கள் நடத்தும் மிகத்தீவிரமான மதப் பிரச்சாரம், அதனால் ஏற்படும் குடிமக்கள் கலகம், என சமூக உரசல்கள் மிகத் துல்லியமாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளது.
"பல நூறு ஆண்டுகள் முன்னமேயே நாங்கள் அறிந்து தெளிந்த ஒரு விஷயத்தை, அறுவடைக்குப் பிறகு எருவிட வந்தவனைப் போல, மிகக் காலம் தாழ்த்தி வந்து உபதேசிக்கிறீர்களே சுவாமி.."

அன்றைய சாதிய முறையில், இடங்கை வலங்கை அரசியல் சமூகக் கட்டுகளையும் சண்டைகளையும் ஆசிரியர்  மிகவும் சுவைபடவே விவரித்துள்ளார். 
"...சட்டி செய்பவனுக்கு நாற்காலி செய்பவன் கீழ். நாற்காலி செய்பவனுக்கு முடி வெட்டுபவன் கீழ். முடி வெட்டுபவனுக்குக் களை எடுப்பவன் கீழ். அவனுக்குப் பறை அடிப்பவன் கீழ். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவன் அவனுக்கும் கீழ். துணி வெளுப்பவன் கீழ்.  இப்படி ஒருவனுக்கு ஒருவன் கீழ்ப்பட்டுக் கீழ்ப்பட்டு, நரகத்தையும் தோண்டிக் கொண்டு கீழே போகிறார்கள்....   "
அன்றைய சமூக வரலாற்றைப் பார்த்தால், பல விஷயங்களில்  நாம் எவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்று தெரிகிறது.
தாசி வாழ்வை விரும்பாமல் ஊர்ப் பெரிய மனிதர்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டு ஊரை விட்டே வெளியேறும் கோகிலாம்பாள்;   பிரெஞ்சுக்காரர்களைப் பார்த்து அவர்கள் போலவே வாழ விரும்பும் சிப்பாய் வரதன்; என்று சுவாரஸ்யமான படைப்புகள்.  கதை நெடுக அங்கங்கே பண்ணையார்கள், குறு விவசாயிகள்,  அடிமைகள் முறைமைகள் அழகாக விளக்கப்படுகிறது. 'தண்டுக்கீரை, கொடுக்காப்புளி, தொப்புளான், வெள்ளைப் பூண்டு, சின்ன வண்டி,  கூடைக்காரி, மானங்காத்தாள்', இதெல்லாம் பாவப்பட்ட சாதியில் பிறந்தவர்கள் பெயர்கள்.

வியாதியஸ்தரான துபாஷ் முதலி செத்தால் அந்தப் பதவி தமக்குக் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் ரங்கப் பிள்ளைக்கு, இந்த முதல் பகுதியில் ஆசை நிறைவேறவே இல்லை.  அதுவுமன்றி முதலியாருக்கு மேன்மேலும் அரச அங்கீகாரம் கிடைத்தவண்ணம் இருக்கிறது.  குவர்னர் திரும்ப பாரீசுக்குக் கப்பல் ஏறும் வரை ரங்கப்பிள்ளைக்குப் பதவி கிடைக்காத ஏமாற்றம் இருக்கிறது.  அரசாங்க அதிகாரம் என்றால் சும்மாவா!  இந்த விஷயத்தில் மட்டும் எந்த நாளிலும் எந்த நாட்டிலும் மாற்றம் இருக்காது.

ராஜாக்கள், சிப்பாய்கள், என்ற கொள்ளைக்காரர்கள், படையெடுப்பு என்ற பேரில் நடத்தும் கொலைகள், கொள்ளைகள், கடந்து செல்லும்போது எதிர்ப்படும் ஊரை எரிப்பது, பெண்களைக் கெடுக்கும் கயவாளித்தனங்கள் மக்களுக்கு வழக்கமான ஒன்றாகிப் போனது.  இதில், ஆற்காட்டுப் படை, தஞ்சைப் படை, பிரெஞ்சுப் படை, மராத்திப் படை என வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஒன்று போலவே மக்களுக்கு அழிவை ஏற்படுத்தியுள்ளனர்.  ஒரு முறை மராத்திய தளபதியின் இளம் மனைவி, கொய்யாப்பழத்தின் பருவம் கெட்ட நேரத்தில் அதைக் கேட்க, ஒரு பெரிய படையே கிளம்பிப் போய் வழியில் இருக்கும் சோலைகளை எல்லாம் நாசம் செய்து விட்டு வருகிறது.

தந்தையை, சகோதரனை, மைத்துனனைக் கொன்று மாறி மாறி அரியணை ஏறும் ஆற்காடு, கர்நாடக அரசியல் படுகொலைகள்.....
அதே காலக்கட்டத்தில், மதுரை மற்றும் தஞ்சை அரசியலில் நடக்கும் அரியணைப் படுகொலைகள்,  சூழ்ச்சிகள் தில்லி சுல்தான்கள் பாணியில் நடக்கிறது. http://en.wikipedia.org/wiki/Thanjavur_Marathas
இவர்களின் சண்டைகளால், கட்டிய வீட்டை இழந்தும், காடு கழனிகளைத் துறந்தும், பரதேசிகள் போல் ஜனங்கள் அல்லல் பட்டு சீரழிவது வழக்கமாயிருக்கிறது.

தஞ்சை மன்னன் பிரெஞ்சு கவர்னருக்கு வாக்களித்துப் பின்னர் தர மறுத்த காரைக்கால் பட்டினத்தால், ஆற்காட்டு அரசியலும் புதுச்சேரி அரசியலில் கலக்கிறது.
தஞ்சை மன்னனோ, தினம் ஒரு புதுப் பெண்ணை சுகித்தும், இரவும் பகலும் சம்போகம் செய்தும் வாழும்  நீசன். அவன் தளபதி சையத்கான் , குடிமக்களைப் பணம் கேட்டுக் கொடுமைப்படுத்தும் தண்டனை முறைகள், இந்த மக்களை யாராவது  வந்துக் காப்பாற்ற மாட்டார்களா என வாசகர்களையும் ஏங்க வைக்கிறது.

"தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் அல்லவோ நமக்கு ராஜாவாக வாய்த்திருக்கிறார்கள்.  தினம் தினம் செத்துப் பிழைக்க வேண்டியிருக்கிறதே  ".
"அது சரி, நம்மை ஆளுகிற ராஜாதான் யார்?"
"யாருக்குத் தெரியும்.சிம்மாசனத்துக்கே தன்மேல் உட்கார்ந்திருப்பவன் பெயர் தெரியவில்லை..."
"... வயசுப் பொண்ணு பதி இழந்தா வழியில் போகிறவனும் வருகிறவனும் கையைப் பிடிச்சு இழுப்பான்னு சொல்றது சரியாத்தானே இருக்கு. ஜனங்கள் பாதுகாப்பு அத்துப் போனால், கன்னக்கோல்தானே செங்கோலாகும்."
"ராஜ்யத்தின் இருப்போ, வரவோ, செலவோ அறியாத ராஜா, கூத்தியார் கூந்தலில் தம்மைக் கட்டிகொண்டோரை, வேத்தியார வந்து விளங்க வைக்க முடியும்...."

திருச்சியை ஆளும் சந்தா சாயபு, காரைக்காலை வெகு எளிதாகப் பிடித்து புதுச்சேரி கவர்னருக்குக் கொடுத்து, அவரது அழியாத நட்பைப் பெறுகிறார்.  பின்னாளில், மராத்தியரால் சந்தா சாயபு  சிறைப் பிடிக்கப்படும்போது, அவர் மனைவி அத்தர், புதுச்சேரியில் தஞ்சம் அடைந்து  வசிக்க நேரிடுகிறது.   மராத்திய தளபதியின் மிரட்டல்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் அஞ்சாது, தன்னிடம் தஞ்சமென்று வந்தவரை விட்டுக் கொடுக்காத கவர்னர் துமாஸின் உத்தம குணம் சுதேச ஆட்சியாளர் ஒருவருக்கும் இல்லாமல் போனது கேவலம்தான்.  அத்தரின் செல்வத்துக்காக வந்த மராத்திய தூதரிடம் கவர்னர் துமாஸ் சில கடினமான கேள்விகள் கேட்கிறார்;
 "தாங்கள் தங்கள் ராஜதானியில் இருந்து படை எடுத்து வந்தது, இந்தப் பெண்மணியிடம் இருக்கும் பணத்தை மீட்கவோ அல்லது திருச்சியை சந்தா சாயபு அவர்களிடமிருந்து மீட்கவோ .. தங்கள் ராஜதானி அன்னியர் வசப்பட்டு, தளபதியின் மனைவியார் அடைக்கலம் கேட்டு நம்மிடம் வந்திருப்பார் எனில், நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை எவ்வாறாக இருக்கும்?"
"எங்களிடம் இரும்பு மண்ணில் இல்லை.  அத்தனையும் மனதில் இருக்கிறது.  நாங்கள் துப்பாக்கி மருந்தை நம்பி இருக்கவில்லை; மனுஷர்களை நம்பிக்கொண்டு இருக்கிறோம்... எங்களின்  நாடு என்பது
எங்களின்  பேரறிஞர்கள் எழுதி வைத்திருக்கிற அறிவுப் பொக்கிஷங்கள்தாம் !; எங்கள் சிற்பிகளின், கலாவிற்பன்னர்களின் சேமிப்பே எங்கள் செல்வம்.."

பிரான்ஸ் மன்னர் அழைப்பின் பேரில் கவர்னர் துமாஸ் ஊருக்குத் திரும்ப கப்பல் ஏறுவதோடு முதல் பாகமான 'மானுடம் வெல்லும் ' முடிவடைகிறது.
ஆனந்த ரங்கர் வசித்த வீடு, இன்றும் பாண்டிச்சேரியில், 'ரங்கப்பிள்ளை வீதி' யில் அரசுப் பராமரிப்பில் நினைவில்லமாக இருக்கிறது.  மேலும், துமாஸ் வீதி, கனகராய முதலியார் வீதி, என்றெல்லாம் சரித்திரச் சான்றுகளாக இருந்தாலும், பெரும்பாலான வீதிகள், சரித்திர அறிவோ, சமூக அறிவோ இல்லாத, அரசியல்வாதிகளால், 'அண்ணா சாலை ', நேரு வீதி, இந்திரா வீதி, ராஜீவ் நகர், என்றெல்லாம் பெயர் மாற்றப்பட்டு விட்டன.  பாரதியார் குயில் பாட்டுப் பாடிய சித்தானந்த சுவாமி தோப்பு பிளாட் போட்டு விற்கப்பட்டு விட்டது.

ஆனந்த ரங்கப்பிள்ளை தம் டயரியில் விவரித்துள்ள அவர் காலத்திய வித விதமான உணவு வகைகள், நெல் வகைகள், பழங்கள்,  இவற்றை எல்லாம் இனிமேல் கலைக்களஞ்சியத்தில்தான் தேட வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் பிற ஊர்க்காரகளுக்கு,  'அட,  நம்  ஊரைப் பற்றி  இவ்வளவு விவரமான வரலாற்றுப் பதிவு இல்லையே' என்ற ஏக்கம் தோன்றும்.
http://en.wikipedia.org/wiki/Ananda_Ranga_பிள்ளை

3 comments:

Raja M said...

பாஸ்கர்:

தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள் யாரும் படிக்க வேண்டிய புத்தகம் - மானுடம் வெல்லும். இந்தப் புத்தகங்களைப் பற்றி அரசல், புரசலாக கேட்டு படிக்க வேண்டும் என நினைத்து உள்ளவர்களை உங்கள் அழகான முன்னுரை படிக்கத் தூண்டும். முன்பு எப்போதோ படித்தது மானுடம் வெல்லும். அதற்கு இன்னும் இரண்டு பாகங்கள் உண்டு என்பது இப்போது தான் தெரியும். அடுத்த இரண்டு பாகங்களையும் படிக்க வேண்டும் என்று குறித்து வைத்து உள்ளேன்.

பாரதி குயில் பாட்டு பாடிய தோப்பைக் கூட பாதுகாக்க இயலாத சமூகச் சூழல் உள்ளத்தை நெருடிய விஷயம். அங்கே கட்டி விற்கப்பட்ட இடத்திற்கு பாரதி காலனி என்று பெயர் வைத்தாலும் வைத்திருப்பார்கள். என்னத்தைச் சொல்வது?

நீங்கள் கொடுத்திருந்த வலைச்சங்கிலிகளை (links) ஆர்வமுடன் சொடுக்கி படித்தேன் - இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. சரளமான நடையில் அழகாக எழுதி உள்ளீர்கள். அடுத்தது வானம் வசப்படும் முன்னுரையா?

clayhorse said...

இது முதலில் தினமணி கதிரில் தொடராக வந்தது. நூலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் கிழிந்தும் கிழியாத பாதி இதழ்களைப் படித்தபோதே இந்தக் கதை மீது மிகவும் ஆர்வம் வந்து விட்டது. பிறகு புத்தகமாகப் பதிப்பித்த போது, 'சபரிமலைக்கு மாலை போட்டிருந்த தமிழன், விரதம் முடிந்ததும் ஒயின் ஷாப் நோக்கி ஓடுவது போன்ற' ஆர்வத்துடன் ஓடிப் போய் வாங்கிப் படித்தேன். சொந்த ஊர் பாசமாகக் கூட இருக்கலாம். பாரதி பாண்டிச்சேரியில் காவியங்கள் இயற்றிய குயில் தோப்பு, நான் படித்த பள்ளிக்கு எதிரில் இருந்தது. அங்குதான் மதிய வேளைகளில் விளையாடுவோம். அது பற்றிய எனது வேறு புலம்பலைக் கீழ்வரும் பதிவில் பார்க்கலாம்.
http://baski-lounge.blogspot.com/2009/05/blog-post_7831.html

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment