Thursday, December 22, 2011

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது


சு. வெங்கடேசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவலுக்கு இந்த விருது அளிக்கப் பட்டுள்ளது.  காவல் கோட்டம் மிகச் சிறந்த படைப்பு.   பிரம்மாண்டமான படைப்பு.  அரண்மனை ஆவணங்களை கொண்டு எழுதப்படும் வரலாறுகளில்  இறந்த மன்னர்களின் சடலங்களும், அரண்மனைச் சதிகளும், போர் வெற்றிகளும் மட்டுமே ஓங்கி இருக்கும்.  சு. வெங்கடேசன், மதுரையின் கடந்த அறுநூறு கால வரலாற்றை, பெரும் சாம்ராஜ்யங்கள் தோன்றியும் மறைந்தும் போன வரலாற்றை, தாதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையின் மூலம் விரித்துச் செல்கிறார்.   சு. வெங்கடேசன் நம்மை தாதனூர்காரர்களின் ரத்தமும், சதையும் கொண்டவாழ்க்கையோடு ஒன்றிப் பயணிக்கச் செய்கிறார்.  படித்து முடித்தவுடன், உண்மையிலேயே தாதனூர் என்ற ஊர் மதுரை அருகே இருக்கிறதா? என்று கேட்கத் தோன்றியது.   நுட்பமான தகவல்களும், நம் பண்பாட்டு விழுமியங்களும், இருளைப் பற்றிய விஸ்தாரமான விவரணைகளும், களவுக்கும் காவலுக்கும் இடையே உள்ளே உறவையும், எளிய வார்த்தைகளில், மிகையின்றிச் சொல்லும் நாவல் காவல் கோட்டம்.  தமிழ் வரலாற்று நாவல்களின் குறுகிய எல்லைகளை உடைத்தெறிந்து, சரித்திர நாவல்களின் தளத்தை காவல் கோட்டம் மிகவும் பெரிதாக்கி விட்டது என்று சொல்வது மிகையாகாது. 

சென்ற ஆண்டு நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகடெமி விருது.  இன்றைக்கு சு. வெங்கடேசனுக்கு விருது.  இப்படித் தரம் வாய்ந்த எழுத்துக்களுக்கு விருது கொடுப்பதின் மூலம், சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக் கொண்டது என்று தான் சொல்ல முடியும்.  மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் முகவரி அல்லது மின்னஞ்சல் யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள். 

காவல் கோட்டத்தை தன் விரிவான விமரிசனம் மூலம் அடையாளம் காட்டியதற்கு ஜெயமோகனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

காவல் கோட்டம் பற்றிய விமரிசனங்கள்:










காவல் கோட்டம்; ஆசிரியர்: சு. வெங்கடேசன். பதிப்பகம்: தமிழினி.