Friday, December 12, 2014

பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?


பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
சந்தியா பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு, 2014
விலை 60 ரூ



பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிக்கையை நடத்தியவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார்.  பாரதியாரும், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமடைந்திருந்த காலத்தில், இருவரது குடும்பங்களும் நெருங்கிப் பழகினர்.  ஸ்ரீநிவாசாச்சாரியரியன் மகள், ஸ்ரீமதி யதுகிரி அம்மாள்.  அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், “பாரதியாரின் அபிமான புத்திரி”.  யதுகிரி அம்மாள், சிறுமியாக இருந்த போது பாரதியுடன் நெருங்கிப் பழகிய காலங்களின் நினைவுகளே இந்தப் பொக்கிஷம்.  பாரதியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். 

அதிலிருந்து ஒரு அத்தியாயம்.

Wednesday, December 3, 2014

புரிதலை நோக்கிய பயணம்



கால்கள்*

ஆர். அபிலாஷ்
உயிர்மை பதிப்பகம்
ISBN: 9789381095577



ஒரு வெள்ளைத் தாளில் சின்னக் கருப்புப் புள்ளியை வைத்து, இந்தத் தாளில் என்ன தெரிகிறது என்று கேட்டால், பெரும்பாலானோர், “ஒரு கருப்புப் புள்ளி தெரிகிறது” என்று தான் சொல்வர்.  ஏன். ஒரு கருப்பு புள்ளி, நம் கவனத்தை சுற்றியிருக்கும் வெள்ளைத் தாளில் இருந்து குவிக்கிறது. இந்தக் குவியல் நம்மைச் சுற்றியுள்ள உலகைச் சாரப்படுத்த தேவையான மன நிலை.  ஆனால், முழுமையற்றது.  உள்ளதை உள்ளபடி பார்க்கும் வழக்கமுள்ள ஒரு சிலரால் மட்டுமே, “ஒரு வெள்ளைத் தாளில், சின்னக் கருப்புப் புள்ளி இருக்கிறது”, என்று சொல்ல இயலும். இந்த இரண்டு பார்வைகளுக்கும் உள்ள வித்தியாசம் பெரிது.

இதை மனதில் வைத்துக் கொண்டு ஒன்றை யோசித்துப் பாருங்கள். உடல்சிதைவுற்றவர்களை, பெரும்பாலானோர் அவர்களது உடல்குறையைக் கொண்டு மாத்திரமே அடையாளப்படுத்துவது இந்த மன நிலையின் வெளிப்பாடு.  அறியாமையில் இருந்து விளையும் ஒரு வன்முறை.  இந்த வன்முறை கேலியாக, பரிவாக, அருவருப்பாக, ஒதுங்கிப் போகும் மனோபாவமாக, பன்முகம் கொண்ட பிணியாக நம் சமூகத்தில் உறைந்துள்ளது.  மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கிடைக்கக் கூடிய  எளிய அங்கீகாரங்களைக் கூட, உடல் சிதைவுற்றவர்கள் பெற தினமும் போராட வேண்டி உள்ளது.  உடல் சிதைவுற்றவர்களின் பார்வையில், அவர்களது தினசரி போராட்டங்களை மிகையுணர்ச்சி இன்றி, சித்தரிக்கும் முதல் தமிழ் நாவல், கால்கள்.

இந்த நாவலின் மையப்பாத்திரமான மதுக்க்ஷரா மற்ற 19 வயதான கல்லூரிப் பெண்களைப் போன்றவள் அல்ல.  இலக்கியம் படிக்கிற அறிவுஜீவி.  தன் வாழ்க்கையை தர்க்கப் பூர்வமாக புரிந்து கொள்ள முயல்பவள்.  சின்ன வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இடது கால் முற்றிலும் வலுவிழந்து போய் விட்டது.  நடக்க கனமான கேலிப்பர் கருவிகளை அணிய வேண்டும்.  அணிந்தாலும் நடப்பது சிரமமே.   மதுக்ஷராவின் இந்த உடற்குறையே அவள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கிறது.  இந்த உடற்குறை நிர்ணயித்த உறவுகள், வாழ்க்கைச் சங்கடங்கள், சங்கடங்களைப் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள ஒரு பதின்பருவப் பெண்ணாய் அவள் கொள்ளும் முயற்சிகள் என்ற மூன்று மைய இழைகளைக் கொண்டு இந்தப் புனைவை நெய்துள்ளார், ஆசிரியர் அபிலாஷ். 

நாவலின் முதலிழை, மதுவுக்கும் அவள் பெற்றோருக்கும் இடையேயான உறவு. மது, தன் பெற்றோர்களிடம் – குறிப்பாக தன் அப்பாவிடம் – விட்டேத்தியாக நடந்து கொள்கிறாள்.  தன் உடல்குறைக்குக் காரணம், சின்ன வயதில் பெற்றோர்கள் தனக்கு போலியோ தடுப்பூசி போடாதது தான் என்ற நம்பிக்கை தான் மதுவுக்கும் அவள் பெற்றோர்களுக்கும் இடையிலான உறவின் முக்கியச் சிடுக்கு.  மதுவின் தந்தை தன் குற்ற உணர்வை, ஊரிலிருக்கும் எல்லா ஆயுர்வேத வைத்தியர்களின் எண்ணைப் பிளிச்சலையும், பத்தியச் சோறையும் மதுவுக்கு அளிப்பதின் மூலம் தீர்த்துக் கொள்ள முயல்கிறார்.  அவரது சுயகழிவிரக்கம் அவ்வப்போது எம் ஜி ஆர் பாடல்களாக, குடித்த பின்னர், பீரிட்டெழுந்து குடும்பத்தையே நனைக்கிறது.  சுயகழிவிரக்கத்தில் பாட்டுப் பாடி தீர்த்துக் கொள்ள முயல்கிறார்.  மதுவின் அம்மா, பூசை/புணஸ்காரங்களில் ஈடுபடுவதின் மூலம் தன்னைச் சமாதனப் படுத்திக் கொள்ள முயல்கிறார்.  அவரது வாழ்க்கை குருகி விடுகிறது – “சூம்பிப் போன இடது கால் தான் அம்மா”,  என நினைக்கிறாள் மது.  குற்ற உணர்வால் பிணைக்கப்பட்ட இந்த உறவை, அபிலாஷ் அற்புதமாக, அங்கதம் நிறைந்த மொழியில் விவரிக்கிறார். 

பெற்றோர்களை அடுத்த நிலையில் இருக்கும், நெருங்கிய உறவுகளிடமும் கூட அவர்களைச் சீண்டிப் பார்க்கும் தன்மையுள்ளவளாகத் தான் மது சித்தரிக்கப்படுகிறாள்.  அவள் ஏன், அப்படி நடந்து கொள்கிறாள் என்பது நாவலின் ஒரு முக்கியச் சரடு.  தன் உடல்குறையின் காரணமாக உலகம் அளிக்கத் தயாராக இருக்கும் எந்தச் சலுகையையும் மது ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை.  அச்சலுகைகளை வழங்கும் சமுதாயத்தை அவநம்பிக்கையுடன் பார்க்கிறாள். அச்சலுகைகளைக் கோபத்துடன் புறக்கணிக்கிறாள்.  உதாரணமாக, அவளுக்கு இலவசமாக ஆட்டோ ஒட்டுகிறேன் என்று சொன்னவரிடம், “எனக்கு இலவசமாக வேண்டாம்.  உரிய காசு தருவேன்” என்று முதலில் சண்டையிடுகிறாள்.  ஆட்டோக்காரர், “சரிம்மா 60 ரூபாய் கொடு,” என்று கேட்கும்போது, “என்ன 60 ரூபாயா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? பாதி தான் தருவேன்” என்று ஆட்டோக்காரரிடம் சண்டை போடுகிறாள்.  தாமதமாக வகுப்பிற்கு வந்தால், அட்டெண்டன்ஸ் கொடுக்கும் பேராசிரிகளின் வகுப்புகளுக்கு இன்னும் தாமதமாகச் செல்கிறாள்.  கறாராக, ஆப்செண்ட் போட்டு விடும், மதுசூதனன் எனும் பேராசிரியரின் வகுப்பிற்குச் சரியான நேரத்தில் செல்கிறாள்.  மது, உலகிடம் கோருவதும் அதுவே.

நாவலாசிரியர்: ஆர். அபிலாஷ்


இந்த நாவலின் இரண்டாவது சரடு, இளம்பிள்ளை வாதத்தால் (போலியாவால்) பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உள்ள நடைமுறைச் சங்கடங்களை – தாயின் உதவியின்றி வெளிக்குப் போவதில் இருந்து, வண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது வரை- எந்த சுய பச்சாதபமும் இல்லாமல், இயல்பாக முன்வைப்பது தான். அவளது முதல் பஸ் பயண அனுபவம், முதன் முதல் சேலை கட்டிய அனுபவம், முதல் ஸ்கூட்டர் ஓட்டிய அனுபவம், எல்லாமுமே ஒரு சாகசச் செயலை செய்தவனுக்கு இருக்கும் நினைவைப் போல் ஆழமாக அவளுள் பதிந்து விடுகிறது. அதே சமயம், இதையெல்லாம் செய்ய எத்தனிப்பதில் உள்ள முஸ்தீபுகள் உருவாக்கும் சலிப்பும் இருக்கிறது.  உடம்பால் செய்ய இயலாத ஒன்றை, மனது உதாசீனப் படுத்த முயல்கிறது.  தன் புத்தி சாலித்தனத்தால் வாழ்க்கையைப் பிரித்துப் போட்டு, அலசி, புரிந்து கொள்வதன் மூலம் வெல்ல நினைக்கிறது.  மதுவின் நண்பன், கார்த்திக், “ஆபரேஷன் கத்தியை வைத்து காய் நறுக்க முயற்சிக்கிறாய்”, என்று சுட்டிக் காட்டுகிறான். அவள் எவ்வளவு தர்க்கரீதியாக தன் உடல்குறைவைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தாலும், அவள் கால்கள் தரும் சிக்கல்கள் அவளுக்கு, உதாசீனப் படுத்த முடியாத பூதாகாரமான ஒன்றாக இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த நாவலின் இன்னொரு முக்கிய இழை, ஒரு பதின் பருவத்துப் பெண், தன்னை, உலகில் தன் இடத்தைக் கண்டடைய கொள்ளும் முயற்சிகளை பற்றியது (coming of age story).  உடல் ரீதியாக, மதுவின் பதின் பருவத்தில் அரும்பும் காமத்தை, கார்த்திக்குடன் கொள்ளும் பதின் பருவக் காதலை, ஒரு பூவை வருடும் கையின் மென்மையுடன் சித்தரித்திருக்கிறார் அபிலாஷ்.  இயல்பாக அரும்பும் காமத்தையும், அது எப்படி தன் வாழ்வில் பரினாமிக்க இயலும் என்ற ஆழ்மனக் கேள்வியையும், பல கனவுகள் வாயிலாக சித்தரித்திருத்திருக்கிறார்.  இந்தக் கனவுகள், எளிதில் புரிந்து கொள்ள முடியாதவையாக இருந்தாலும், மனதில் ஒரு அபாரமான படிமத்தை (image) உருவாக்குகின்றன.  நடைமுறை தளத்தில், பதின் பருவத்துக்கே உரித்தான நிச்சயத்துடன் மது கொண்டிருக்கும் முடிவுகளை, வாழ்க்கை தொடர்ந்து பரிசோதிக்கிறது.  உதாரணமாக, மதுவிடம் யாராவது அவளது காலைப் பற்றிக் கேட்டால் கோபமடைகிறாள்.  அது ஏன் எனக் கேட்கும் கார்த்திக்கிடம், “என்னோட காலை விசாரிக்கிறவன் என் காலைப் பத்திக் கவலைப்படல. அவன் தன் காலைப் பத்தித் தான் முழுக்க யோசிக்கிறான்.  என்னோட காலோட ஒப்பிட்டுப் பார்க்க அவனோட காலைப் பத்தி நிறைவு கொள்றான். பூரிப்படையிறான்.  அவன் என்னோட காலைப் பயன்படுத்தி சுயமைதூனம் பண்றான்.  நான் இதை ஏன் அலவ் பண்ணணும்?  I can’t be a dildo for this fucked up society”, என்று கோபத்துடன் தன் தரப்பை வலுவாக முன் வைக்கிறாள்.  அந்த வாதத்தில் உண்மையிருந்தாலும், அது சமுதாயத்தைப் பற்றிய ஒரு ஆழமான அவ நம்பிக்கையை பூரணமாக உள் வாங்கிய, வெறும் தர்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நெகிழ்வற்ற வாதம். அதே போல், தன் பேராசிரியர் மதுசூதனனிடம் அவர் பையன் பாலுவுக்குக் கொடுக்கும் சிகிச்சையின் தரம் சரியில்லை என்று தயங்காமல் குற்றம் சாட்டுகிறாள் மது.  பேராசிரியர் மதுசூதனனும் சரி, நண்பன் கார்த்திக்கும் சரி, வாழ்க்கையின் கஷ்டத்தில் ஆன்மிகத்தை நாடுவதை, கொஞ்சம் இளப்பமாகத் தான் பார்க்கிறாள்.  ஆனால், அதே மது, தன் சுய அனுபவத்தில் வலியைப் பற்றிப் புரிந்து கொள்ளும் போது, மதுசூதனனிடம் தான் நடந்து கொண்டது தவறோ என மறுபரிசீலனை செய்கிறாள்.  தன் வாழ்க்கையின் ஆதாரமாக இருந்த கோபத்தின் அடிப்படையிலே கூட, ஒரு நிச்சயமற்ற தன்மை இருப்பதை அவள் புரிந்து கொள்ளும் போது (அது எப்படியென்று நாவலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்), தர்க்கத்தின் எல்லையை உணர்கிறாள்.   அந்தப் புரிதல் அளிக்கும் விடுதலை தான் மது வளர்ந்தடையும் இடம்.  கதையெங்கும், போகிற போக்கில், நிறைய தத்துவ விவாதங்கள் – குறிப்பாக கார்த்திக்கிடம்/கண்ணனிடம் மது செய்யும் விவாதங்கள் – கதையின் போக்கோடு ஒட்டி இருப்பதால்- சுவாரசியமாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.  இந்த விவாதங்களை, இன்னும் கொஞ்சம் விரித்து, அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கலாமோ என்று எண்ணத் தூண்டபவை. 

இந்த நாவலின் குறைகளென சிலவற்றைக் கூறலாம்.  அமைப்புரீதியாக, இந்த நாவலில் 100க்கும் மேற்பட்ட பாத்திரங்களை அவர்களது குணாதியசங்களோடு அறிமுகப்படுத்தும் நாவலாசிரியர், வெகு சில பாத்திரங்களை – மதுவின் அப்பா, கார்த்திக், மதுசூதனன், கண்ணன், சேர்த்தலம் வைத்தியர் – மாத்திரமே ஆழமாகப் படைத்துள்ளார்.   நல்ல விவரணைகளுடன் ஆரம்பிக்கும் பல பாத்திரங்கள் – பிளேடு, ஈஎம்எஸ், பினாய், ஷீனா, ஹரிஹர அய்யர், அப்பு டெய்லர், மார்க்கண்டேயன், சுமலதா, கணேசன் என – துலங்கவில்லை.  மதுவின் அப்பா, வெகு சீக்கிரமே ஒரு கோட்டுச்சித்திரம் (caricature)  போலாகி விடுகிறார்.  அது போல், மது கல்லூரியில் இலக்கிய இதழ் தயாரிப்பதில் ஈடுபடுவதைப் பற்றிய தகவல்கள் - சினிமாவில் கதைக்கு சம்பந்தமில்லாத வடிவேல்/கவுண்டமணி நகைச்சுவை ட்ராக் போல - சுவாரசியமாக இருந்தாலும் தவிர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.  இந்த நாவலின் அளவை ஒரு தேர்ந்த எடிட்டர் துணை கொண்டு, குறைத்திருந்தால் இன்னும் கச்சிதமான, ஆழமான நாவலாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.  உயிர்மை பதிப்பகத்தின் நாவல்களில், தட்டச்சுப் பிழைகள் இருக்காது என்ற என் நம்பிக்கை, இந்த நாவலில் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட்டது.  என்னத்தைச் சொல்ல?


எல்லா திசைகளிலும், நிதானமாக பரந்து, விரிந்து செல்லும் இந்த நாவல், வாசகனின் கவனத்தையும், நுண்வாசிப்பையும் கோருகிறது. இந்த நாவலின் களமும், உளவியல் சார் கதை சொல்லும் விதமும், அபிலாஷை தமிழில் முக்கியமாக கவனிக்க வேண்டிய, தனித்துவம் மிக்க இளம் எழுத்தாளராக முன்னிருத்துகின்றன. 

*2014 யுவபுரஸ்கார் விருது பெற்ற நாவல்.