Friday, December 12, 2014

பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?


பாரதி நினைவுகள்
யதுகிரி அம்மாள்
சந்தியா பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு, 2014
விலை 60 ரூ



பாரதியார் ஆசிரியராக இருந்த ‘இந்தியா’ பத்திரிக்கையை நடத்தியவர் ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியார்.  பாரதியாரும், ஸ்ரீ ஸ்ரீநிவாசாச்சாரியாரும் புதுச்சேரியில் அடைக்கலமடைந்திருந்த காலத்தில், இருவரது குடும்பங்களும் நெருங்கிப் பழகினர்.  ஸ்ரீநிவாசாச்சாரியரியன் மகள், ஸ்ரீமதி யதுகிரி அம்மாள்.  அவரது வார்த்தைகளில் சொல்லப்போனால், “பாரதியாரின் அபிமான புத்திரி”.  யதுகிரி அம்மாள், சிறுமியாக இருந்த போது பாரதியுடன் நெருங்கிப் பழகிய காலங்களின் நினைவுகளே இந்தப் பொக்கிஷம்.  பாரதியைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் படிக்க வேண்டிய புத்தகம். 

அதிலிருந்து ஒரு அத்தியாயம்.


விட்டு விடுதலையாகி


ஒரு வெள்ளிக்கிழமை சாயங்கால வேளையில் சுவாமி நாத தீட்சிதரின் பெண் மீனாவும் நானும் ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவில் இருக்கும் பாரதியாரின் வீட்டிற்குப் போனோம். எப்போழுதும் போல் செல்லம்மா கலகலப்பாக இல்லை. மாதக் கடைசி.

நாங்கள் எல்லோரும் சாதரணமாகப் பேசிக் கொண்டு இருந்தோம்.  மணி ஆறு ஆனதும் மீனா வீட்டிற்கு போய் விட்டாள்.  பின்னர் பாரதியாரும் வெளியே போய் விட்டார்.  வீட்டில் இருந்தவர்கள் நானும் செல்லம்மாவும் மட்டுமே.  சிறிது நேரம் பேசாமலேயே இருந்தோம்.  ஐந்து நிமிஷம் பொறுத்துப் பேச ஆரம்பித்தேன். 

நான்: செல்லம்மா, உடம்பு சரியாக் இல்லையா?  எப்படியோ இருக்கிறீரே?

செல்: உடம்புக்கு ஒன்றும் இல்லை, யதுகிரி.  மனத்திலே புழு அரிப்பதைப் போல் அரிக்கிறது.  யாரிடமாவது சொன்னால் தான் இம்சை தீரும் போல இருக்கிறது.  நீ குழந்தை. உன்னிடம் சொல்லி என்ன பிரயோசனம்?

நான்: பரவாயில்லை.  என்னவென்று சொல்லுமே.  நான் பாரதியாரைக் கேட்கிறேன்.  ‘பெண்கள் விடுதலையை வாயால் கொண்டாடுகிறீரே.  காரியத்தில் இப்படிப் பண்ணலாமா?’, என்று கேட்டு விடுகிறேன்.

செல்லம்மா சொன்னார். “உன் உள்ளம் ஒன்றும் அறியாது.  இப்போ மாதக் கடைசி. போன மாச பாக்கியை பால்காரனுக்கு இன்னும் கொடுக்கவில்லை.  அவன் நேற்று வந்து கேட்டான்.  வருகிற மாதம் கொடுப்பதாகச் சொன்னேன்.  அவன் முடியாது என்றான்.  நான் ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பினேன்.”

“இவர் பார், இன்று ‘சுதேசமித்திரன்’ பத்திரிக்கைக்கு அனுப்ப வேண்டிய கட்டுரையை அனுப்பவே இல்லை.  அவன் எப்படிப் பணம் அனுப்புவான்? இன்று காலையிலே குளித்து, காப்பி குடித்து, வெற்றிலை பாக்கு எல்லாம் கிரமமாக ஆனபிறகு, எவ்வளவோ சொல்லி மேஜை மேல் காகிதம், பேனா, இங்கி புட்டி எல்லாவற்றையும் கொண்டு போய் வைத்து விட்டு, அரிசியைப் பொறுக்கி வைத்தேன்.  பிறகு மடி உடுத்திக் கொள்ளப் போனேன்.  இவருக்கு எழுத முடியவில்லை.  முறத்தில் இருந்த அரிசியில் ஒரு பங்கை எடுத்து முற்றத்தில் இரைத்து விட்டு அதைத் தின்ன வரும் குருவிகளைக் கண்டு பாடிக் கொண்டிருந்தார்.”

“அரிசியைக் களைந்து உலையில் போடுவதற்காக வெளியில் வந்து பார்க்கிறேன். அரிசியில் கால் பங்கு இல்லை.  எனக்கு அழுகை வந்து விட்டது.  இதைப் பார்த்த அவர், “வா செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன!  நாமும் அதைப் போல் ஏன் இருக்கக் கூடாது?  நீயும் சதா தொந்தரவு செய்கிறாய்; நானும் எப்போதும் எரிந்து விழுகிறேன்.  நமக்கு இந்தக் குருவிகள் ஒற்றுமை கற்றுக் கொடுக்கின்றன.  நாம் அதைக் கவனியாமல் கண்ணை மூடிகொண்டிருகிறோம்.  நம்மைக் காட்டிலும் மூடர்கள் உண்டா?”, என்றார்.

“எனக்குப் பொறுக்கவில்லை.  ‘என் கோபத்தை ஏன் கிளப்புகிறீர்கள்?  குழந்தைகள் அண்ணியம்மா (பொன்னு முருகேசம் பிள்ளையின் மனைவி) வீட்டிலிருந்து வருகிற வேளைக்குச் சமைத்து விடலாம் என்று அடுப்பை மூட்டினால் பொறுக்கின அரிசியைக் குருவிக்குப் போட்டு விட்டீர்களே! திரும்பப் பொறுக்கப் பத்து நிமிஷம் ஆகும்.  உங்களுக்குப் பணம் வர இன்னும் எவ்வளவு நாள் ஆகுமோ? நீங்களோ இன்னும் கட்டுரை எழுதியாகவில்லை.  பால்காரன் மானத்தை வாங்குகிறான். வேலைக்காரி இரண்டு நாளாய் வரவே இல்லை.  நீங்கள் இதை யோசிக்க வேண்டாமா?  என்னைக் குருவியைப் போல் சந்தோஷமாக இரு என்கிறீர்களே.  கடவுளுக்குக் கண்ணே இல்லை. இந்தக் குழந்தைகளைக் கொடுத்து வதைக்கிறார்”, என்று சொல்லிக் கொண்டே போய் ஒரு விதமாகச் சமையல் வேலையைச் செய்து முடித்தேன்.

“வெளியே வந்தால், இவர் சகுந்தலா பாப்பாவுக்கு ‘விட்டு விடுதலையாகி’ என்று துவங்கும் பாட்டைப் பாடிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.  குழந்தை சந்தோஷத்தில் குதிக்கிறாள்!  இவர் பாட்டு ஆனந்தத்தில் மெய் மறந்திருக்கிறார்.  குருவிகளே அரிசியைக் கொத்தித் தின்ற வண்ணம் இருக்கின்றன.  தங்கம்மா பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள்.
“இந்த வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது நம்மால் ஏன் நிம்மதி கெடவேணும்?” என்று நானும் உட்கார்ந்து விட்டேன். 

“ஆட்டம் பாட்டு எல்லாம் முடிய மணி பன்னிரண்டு மணி ஆயிற்று.  சகுந்தலா, “அப்பா பசிக்கிறது.  வா சாப்பிடலாம்”, என்றது.  அவரும் எழுந்து வந்து பேசாமல் சாப்பிட உட்கார்ந்தார்.  என்னைப் பார்த்து, ‘செல்லம்மா, இன்னும் கோபம் போகவில்லையா? இதோ பார். இந்தக் குருவிப் பாட்டையே அனுப்பப் போகிறேன். முதல் தேதி உன் கையில் பணம் வந்து விடும். பயப்படாதே’, என்றார்.

“அவர் நல்லவர். கள்ளம், கபடு இல்லை.  கையில் இருந்தால் வஞ்சம் இல்லை.  ஆனால், அவர் சரியாக கட்டுரை அனுப்பாவிட்டால் பத்திரிக்கைக் காரன் சும்மா பணம் அனுப்புவானா? அதுதான் எனக்கும் பிடிக்கிறதில்லை.”

நான் ஒரு பதிலும் சொல்லவில்லை.  என்னால் என்ன சொல்ல முடியும்?  ஆனாலும் சமாதானமாக, “இன்றைக்கு ஒன்று தபாலில் போயிருக்கிறதே!  பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?” என்றேன்.

நீயும் அவருக்குச் சரியான பெண் தான்.  அவர் எது செய்தாலும் சரி என்று சொல்வாய்.  உன்னிடம் சொல்லியதால் கொஞ்சம் இம்சை குறைந்தது.  அதுவே போதும்”, என்றாள் அந்த உத்தமி.

பாரதி வந்தார்.

பாரதி: “யதுகிரி இன்றைக்குப் புதிய பாட்டுப் பண்ணியிருக்கிறேன்.  பார்த்தாயா?”

நான்: “இல்லை.  செல்லம்மா சொன்னார்.  எங்கே காட்டும்?”

பாரதி: மேஜையிலிருந்து பேப்பரை எடுத்தார்.

செல்: உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு பதத்தையும் யதுகிரி அப்படியே பொறுக்கி விடுகிறாள். உலகம் தெரியாத குழந்தை!  காலையில் நடந்ததைச் சொன்னேன்.  “பாட்டானால் என்ன, கட்டுரையானால் என்ன?”, என்று சொல்கிறாள்!

பாரதி: அவள் சொன்னது மிகவும் சரி.  இப்போது நான் சொல்வது உனக்கு ருசிக்காது. இதோ பார், யதுகிரி நான் பார்க்கிறோனோ இல்லையோ, நீ கட்டாயம் பார்ப்பாய்.  இந்தச் சின்னப் பாட்டுக்கள், எல்லோராலேயும் புகழப்படுவதையும், துதிக்கப்படுவதையும் பார்க்கவே போகிறாய்.  இன்னும் தமிழுழகம் கண் திறக்கவில்லை.  திறந்தாலும் குழந்தைப் பருவத்தில் இருக்கிறது.

இப்படிச் சொல்லிவிட்டு, “இந்தா பாட்டு எழுதிய காகிதம்”, என்று என்னிடம் காகிதத்தைக் கொடுத்து விட்டு, ஒருமுறை பாடியும் காண்பித்தார். 
இந்தப் பாட்டின் முதல் சரணத்தின் கடைசி அடி நான் மனனம் செய்தது, “வான ஒளியின் மதுவின் சுவையுண்டு” என்று.  அச்சில் வெளிவந்திருப்பது, “வானொளி யென்னு மதுவின் சுவையுண்டு’ என்று இருக்கிறது.  ஒருவேளை பாரதியே பிற்பாடு மாற்றியிருக்கலாம்.

யதுகிரி அம்மாள்


தொடர்புடைய பதிவு:

1. மகாகவி பாரதியைப் பற்றிய வ. ராவின் புத்தகம் பற்றிய குறிப்பு.


1 comment:

clayhorse said...

Available at : http://www.newbooklands.com/new/product1.php?catid=26&&panum=3312

Post a Comment