மகாகவி பாரதியார்
ஆசிரியர்: வ. ரா
பரிந்துரை: சண்முகம்
காலம்: 1910.
ஊர்: புதுவை.
இடம்: பாரதி வசிக்கும் வீடு.
பாரதியை அதுவரை பார்த்திராத வ.ரா அவரை பார்க்கப் போய் இருக்கிறார். நமஸ்கரித்தவுடன் 'யார் ?' என்று வினவுகிறார். வ.ரா. இங்கிலீஷில் தன்னை அறிமுகப்படுத்தத் தொடங்குகிறார். உடனே பாரதி, 'அடே பாலு ! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா ! அவரிடம் நீ பேசு. எனக்கு வேலையில்லை' என்று உரக்கக் கத்திவிட்டு பின்னர் வ.ரா விடம் 'ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் ? ' என்று வருத்தப் பட்டிருக்கிறார்.
பாரதியின் பாடல்களை பத்து முதல் ப்ளஸ்-டூ வகுப்பிலிருந்த போது தான் பாடத்திலிருந்தும், பாரதியின் முழு கவிதைத் தொகுப்பிலிருந்தும் பரிச்சயித்துக் கொண்டேன். நான் பாரதி கவிதைகளை மொக்கையாய்ப் படித்தது போக, பாரதியின் கவிதையை பல தளங்களில் புரிந்து கொள்ளும் சாத்தியக் கூறினை பின்னரே அறியலானேன். உதாரணமாக இந்திரா பார்த்தசாரதி, 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்று பாரதி குறிப்பிடுவது 'சிருஷ்டிகரம்' என்றது பெரும் வியப்பை, உவப்பை என்னுள் உருவாக்கின. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான 'குவாண்டம்' இயற்பியல் தத்துவங்களை முன்வைத்து, கண்களால் காண்பவற்றை 'காட்சிப்பிழை' என்று பாரதி ஐயமுற்றது என்னை வெகு எளிதாய் லயித்துப் போட்டது.
கவியை, ஆளுமையைப் பற்றிப் பின்னரே மெது மெதுவாக உருவாக ஆரம்பித்தது. மற்றவர்களுக்குத் தெரிந்தது போல, பாரதி கஞ்சா அடித்தது, யானை தூக்கிப் போட்டது, 'பாரதி சின்னப் பயல்' என்பதை 'பார் அதி சின்னப் பயல்' என்று காந்திமதி நாதனுக்குத் தந்திர பதிலடி கொடுத்தது போன்ற உபரி விஷயங்களே முதலில் இந்த கவி பற்றின மனவரைபடத்தின் ஆரமபக் கோடுகளாய் உருவானது. பின்னர் ஞானசேகரனின் 'பாரதி' மூலமாக, அவர் காந்தியை சென்னையில் ஒரு கூட்டத்திற்கு பேசுமாறு அழைத்ததும் அதற்கு காந்தி வேறு தேதியை பரிந்துரைக்க, அதற்கு தனக்கு இயலாது' என்று பாரதி மொழிந்தது, மற்றும் பிரபஞ்சனின் 'மகாநதி' மற்றும் 'கண்ணீரால் காப்போம்' வாயிலாக, புதுவையில் அவர் அரவிந்தருடன் தொடர்பு கொண்டது, கடலூரில் சிறையிடப்பட்டு 'தான் இனிமேல் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்க்கு எதிராக எழுத மாட்டேன்' என்ற ரீதியில் சர்க்காருக்கு எழுதியது போன்றவை பாரதி என்ற ஆளுமையைப் பற்றின புரிதலில் வேறு பல பரிமாணங்களைப் புகுத்தியது.
இவ்வாறு இருக்கையில் தான், வ.ரா வின் 'மகாகவி பாரதியார்' யைக் கண்டெடுத்தேன். பின்னர் தான், பாரதி குறித்த எந்த ஆய்வு நூல்களுக்கும், வ.ரா வின் இந்த நூல், பாரதியின் புதுவை வாழ்க்கை குறித்த முக்கிய வரலாற்றுப் பதிவாக இன்றைக்கும் இருந்து வருகிறது என அறிந்தேன்.
பாரதியின் பால்ய காலக் குறிப்புகளுடன் தொடங்கி, புதுவையில் வ.ரா பாரதியுடன் இருந்த நாட்களை மிக சுவராஸ்யத்துடன் பயனித்து, ஒரு நூறு வருடங்களுக்கு முன் இருந்த தமிழ் மொழி, மற்றும் தமிழரின் (அவல) நிலையை நுட்பமாய் எடுத்துரைத்து, இந்த நிலை மாற பாரதி எப்படி தனியொரு மனிதனாய் ஒரு இயக்கமே செய்ய வேண்டிய வேலையை செய்து முடித்தார் என்று முடிக்கிறார்.
பாரதியின் தகப்பனார், கணித யந்திர சாஸ்திரத்தில் விற்பன்னர். பையனையும் எப்படியாவது இந்த இரண்டிலும் தேர்ச்சியடையச் செய்து, லட்சம் லட்சமாக பணமோ, அல்லது குறைந்த பட்சம் ஏதோ வெளிநாட்டிற்கு அனுப்பி சீமையில் படிக்கவைத்து ஜில்லா கலெக்டராகவாவது ஒப்பேற்றி விடலாம் என்ற முனைப்போடு தானே கணக்குப்பாடம் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார். ஆனால் பையானுக்கோ இயற்கையான ஆர்வம் தமிழ் மீது தான், அதுவும் சந்தத்தோடு அடுக்கிக் கொண்டே போவதில் அலாதி இன்பம். கணக்கு போடாமல் விழித்துக் கொண்டிருந்த பாரதியைப் பார்த்து கடுப்பான அவரது தந்தை 'இது என்ன விழி ?' என்று கேட்க, உடனே பாரதி, 'விழி, பழி, குழி, வழி, பிழி, சுழி' என்று கூறி கணக்கிலே 'சுழி' போட்டுவிட்டாராம். ஏதாவது திட்டினால், அந்தத் திட்டிற்கும் சந்த அடுக்குகளாய் பதில் வருமே என்று வேறு பயந்திருக்கிறார்.
சிறு பிராயத்தில், எட்டயபுர சமஸ்தானத்தின் பெரிய புலவர்களின் நட்பு பாரதிக்கு இருந்திருக்கிறது. இலக்கணத்தின் கடும் விதிகள் பலவற்றை வீசியெறிந்துவிட்டு கவிதைகள் புனையத் தொடங்கியிருக்கிறார். நன்னூல் இலக்கண சூத்திரங்களை பலவாறு கேலி செய்திருக்கிறார். பின்னர், 'சுதேசமித்திரன்' பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிக்கைத் தொழிலில் பழக்கமும் தேர்ச்சியும் நன்கு பெற்றிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து பிரசங்களை மொழிபெயர்த்திருக்கிறார். பாரதி இதைப்பற்றி: "இங்கிலீஷ் ரொம்ப நயமான பாஷையானதால், இங்கிலீஷ் எழுத்தின் கருத்துச் சிதைந்து போகாமல்,தமிழர்களுக்கு அதை ஸ்வாராஸ்யமாய்ச் சொல்லும்பொருட்டு, நேரான தமிழ்ச் சொற்களை நான் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. தமிழ் பாஷையின் கம்பீரமும் ரஸமும் அப்பொழுது எனக்கு இன்னும் தெளிவாகத் தெரிந்தன ". நாம் எழுதும் தமிழ் பெரும்பான்மையான தமிழர்களுக்குப் புரிய வேண்டும் என்ற திடமான கொள்கையைக் கொண்டிருந்தார். தாம் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் நண்பர்களுக்கு முத்லில் உரக்கப் படித்துக் காண்பிப்பார். படித்துகொண்டுப் போகும்பொழுதே கேட்போரின் முகத்தைக் கவனித்துக் கொண்டே போவார். கேட்பவர்களுக்கு விளங்காத வார்த்தைகளை, கடினமான கருத்துக்களை எடுத்துவிட்டு பொருத்தமான எளிய வார்த்தைகளை, உவமானங்களைக் கைகொள்ளுவாராம். எவரையும் எக்காலத்திலும் வசியப்படுத்தும் பாரதியின் சொல்லாட்சி எளிமையானதும் வலிமையானதுமாகும். (இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு கூட "அமானுல்லாகானைப்பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக்கொண்டு போக வேண்டும்" என்று கூறியது அவரது கடைசி வாக்கியமாம். முதல் உலகப்போரின் போது அமானுல்லாகான் ஆப்கானிஸ்தானக்கு அதிபராய் இருந்தவர்.)
பாரதியின், ஒரு மகாகவியின் சிருஷ்டிகரத்தை, நேரடியாக தரிசித்து அதை இயன்ற வரை எழுத்தில் அப்படியே படம் பிட்த்த வ.ரா பதிவுகள், சிருஷ்டிகரத்தையே படம் பிடித்ததற்கு ஒப்பானதும் அபூர்வமானதாகும் :
"மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப்பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறாற்போல் மார்பை வெளியேதள்ளி, தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்திப் பார்ப்பார்; ஸஸ்ஸ - ஸஸ்ஸ - ஸஸ்ஸ என்று மூச்சு விடாமல் உரக்கக் கத்துவார். வலக்காலால் தாளம்போடுவார்; தவறிப்போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மௌனம். 'சொல் ஆழி வெண் சங்கே ' என்ற கூக்குரல், கூப்பாடு; 'மத்தகஜம் என வளர்த்தாய் ' என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒரு முறைஸரிக-க-காமா. காலிலே தாளம்; கைகள் கொட்டி முழங்கும்.
உடல் முழுவதும் அபிநயந்தான். தேகமும்மனமும் அனுபவிக்கும் ஆனந்தத்தையும் சக்தியையும் கண்கள் வெளிக் காண்பிக்கும் .... குழந்தையை பெற்றெடுக்கும் பிரசவ வேதனைதான். உற்சாகமும் சோர்வும் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு வெளிவருவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
புதுப்பாட்டு வருகிற வேகத்தில், அது அவருடய கூட்டையே முறித்துவிடுமோ என்று தோன்றும். பாரதியாரின் கவிதைகளில் ரத்தப்பசை ஜீவ களை இருக்கிறது...
குழந்தை பிறந்தவுடன் சோர்ந்து நித்திரையில் ஆழ்ந்துவிடும் தாய்மார்களைப் போல, கவிதை பிறந்தவுடன் பாரதியார் சோர்ந்துபோய், மண்தரையில் படுத்துக்கொள்வார் ... தூக்கிவாரிப் போட்டாற்போல எழுந்திருப்பார். இத்தகைய சந்தர்ப்பங்களில் பாரதியாரின் முகவிலாசம் மிகவும் வசீகரம் கொண்டதாய் இருக்கும். அகம்பாவம்மாச்சரியம் முதலிய சேஷ்டை உணர்ச்சிகளின் சின்னத்தை முகத்தில் காணவே முடியாது.
ஆயிரம் வருஷங்கள் உயிரோடிருந்தாலும், பாரதியாரின் இந்த அற்புத முகத்தோற்றத்தை நான் மீண்டும் எப்போது பார்க்கப் போகிறேன் ? எனக்கு ஏற்பட்ட பாக்கியம் நூற்றுக்க்கனக்கான தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்று தான் என் நெஞ்சம் வருந்துகிறது."
ஒருமுறை பாரதியைப் பார்க்க யாரோ ஒருவர் 'பாரதி' என்று உரக்கக் குரல் கொடுத்து வருகிறார். பாரதியும் அவரும் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். வந்தவர் பாரதியை 'நீ, நீ' என்று உரிமை கொண்டாடுகிறார், தொட்டுப் பேசுகிறார். இருவரும் வேறு அழுது கொள்கிறார்கள். வ.ரா விற்கு ஒன்றும் புரியவில்லை. வந்தவர் ஆறு வருடம் கடுங்காவல் அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார். 'வரால் மீனுக்கும் மீசை இருக்கிறது. உங்களுக்கும் மீசை இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? ' என்று பொதுக் கூட்டங்களில் மக்களைப் பார்த்துக் கேள்வி கேட்டவர் தான் இந்த சுரேந்திரநாத் ஆர்யா. ஆர்யா சொல்கிறார்: "ஜெயிலிலிருந்து நான் வெளிவந்தபிறகு என்னிடம் ஒருவரும் பேசத் துணிய வில்லையே ! ... பிரசங்கத்திலே கை தட்டுகிறதும், வீட்டுக்குப் போனதும் பயப்படுகிறதுந்தான் ஹிந்துக்களின் வேலை". தான் கிறுஸ்தவன் ஆகி விட்டதாகவும், தத்துவ டாக்டர் பட்டம் வாங்குவதற்காக அமெரிக்கா செல்வதாக வேறு சொல்கிறார். அதற்கு பாரதி இப்படி பதறுகிறார்: 'ஹிந்து சமூகம் இருக்கிற நிலைமை இதற்கெல்லாம் இடங்கொடுக்கிறது. உயிர் அற்ற ஜன சமூகம் ! ... அமெரிக்காவுக்குப் போ, என்ன வேண்டுமானாலும் செய், தேசத்தை மட்டும் ஒரு நாளும் மறக்காதே. " ஆர்யா போன பிறகு மேலும் அங்கலாய்க்கிறார்: " ஆர்யா எவ்வளவுயோக்கியன் ! எதைக் கண்டும் அலுத்துக் கொள்ளமாட்டானே ! அவனுக்கு அலுப்பும் மனக்கசப்பும் வருகிறதென்றால் ! பராசக்தி ! நீ தான் இந்த தேசத்தைக் காப்பாற்ற வேண்டும்."
இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மகத்தான மனிதர்களில் அரவிந்தரும் பாரதியும் அடங்குவர். புதுவையில் பாரதி - அரவிந்தர் சந்திப்பு மிக்க விஷேசமானது. இவர்களின் சந்திப்பு ஆரம்பித்த காலம் முதல் (1910) அது முடிவுற்றது வரை (?) நடந்த சந்திப்புகள் இருவரும் எவ்வகை நிலைப்பாடுகளை கொண்டிருந்தனர், எதைநோக்கி சென்று கொண்டிருந்தனர் என்பதை தெளிவுறுத்துகிறது. 1910-ல் புதுவைக்குப் புதிதாக வந்திருந்த வ.ரா வை பாரதி அரவிந்தரிடம் கூட்டிச்சென்று 'தமிழ்நாட்டுத் தேசபக்தன்' என்று அறிமுகம் செய்கிறார். அப்பொழுது அங்கிருந்த ஒரு வங்காளி இளைஞன், எகத்தாளமாய் 'சர்க்காருக்கு மனுப்பண்ணிக் கொள்ள அவருக்கு தெரியுமல்லவா ?' என்று பகடி செய்கிறான். பளீரென பாரதி ஒன்று போடுகிறார் : "அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா ?".
தொடக்கத்தில் தேசம், விடுதலை, இந்து ஞானமரபு விளக்கங்கள் என்று பொறி பறந்த பேச்சுக்கள், நாளடைவில், 'ஆத்ம விடுதலையே மனித விடுதலை' என்ற அரவிந்தரின் நிலைபாடு தேச விடுதலையிலிருந்து விலகிப் போனதை பாரதி விரும்பினார் இல்லை. இந்தப் போக்கே, பாரதி அரவிந்தருடன் கொண்டிருந்த நட்பை துண்டிப்பதற்குக் காரணமாய் அமைந்தது என்று குறிப்பிடுகிறார் வ்.ரா. புதுவைத் தோழர் வ. சுப்பையா எழுதிய 'புதுச்சேரியில் பாரதி - சில நினைவலைகள்' நூலில் உள்ள பதிவுகளால் இது மேலும் துலக்கமாகிறது. அரவிந்தரைக் காண பாரதி சென்றிருந்த போது, அங்கு பலர் அரவிந்தரின் காலில் விழுந்து வணங்குவதைக் கண்டு பாரதி 'இது அடிமைத்தனத்தை அகற்றுகின்ற அடையாளமல்ல. இப்படி ஒரு வெறுப்பூட்டுகின்ற வழக்கத்தைச் செய்கின்ற ஆளாக உங்களை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கின்றது' என்றிருக்கிறார். அதற்கு அரவிந்தர் 'அவர்கள் என் காலில் விழ வில்லை. என்னுள் இருக்கும் கடவுளின் காலில் விழுகின்றனர்' என்றுரைத்த பதிலுக்கு உடன்படாத பாரதி வெறுப்புடன் வெளியேறி இருக்கிறார். அதுவே அவர்களுடய கடைசி சந்திப்பு.
(பெரியோரைத் துதிப்பது குறித்து ஒரு மகாகவிக்கு இருந்த ஞானம் ஒரு மகா ஞானிக்கு இல்லாமல் போயிற்றே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.)
இன்று இந்தியாவில் அநேகரைப் பீடித்திருக்கும் நோயான (அல்லது பொழுதுபோக்கா ?) பொது இடங்களில் எச்சில் துப்புதலைக் குறித்து, பாரதிக்கு இருந்த ஒரு விரும்பத்தகாத பழக்கத்தினை பதிவு செய்கிறார் வ்.ரா. அதுவும் பாரதி அமர்ந்த இடத்திலிருந்தே ஏவுகணைகளை செலுத்துவது போல தன்னைச் சுற்றிலும் உமிழ்ந்திருக்கிறார். ஆனாலும் பாரதியிடம் நேராகச் சொல்ல யாருக்கும் துணிச்சல் வரவில்லை. என்று மடியும் எங்கள துப்புதல் மோகம் ?
பாரதியைப்பற்றி சுவராஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறார் வ.ரா. சீட்டாட்டம் மற்றும் சதுரங்கம் ஆடுவதில் நிரம்பப் பிரியமாம். ஆனால் வெகு சுமாராகவே ஆடுவார் போலும். சதுரங்கத்தில் வ.வே.சு. அய்யர் பாரதியுன் காய்களை துவம்சம் பண்ணும் போதெல்லாம் " அய்யரே, இவ்வளவு கடுமையான கொலைத்தொழில் செய்யாதேயும். உமக்கு குழந்தைகுட்டிகள் பிறக்கா", என்று புலம்பித்தள்ளி விடுவாராம். சீட்டாட்டத்திலும் ஓரிரு ஜோக்கர்கள் அகப்பட்டால் வெளிப்படையாய் குதூகலித்தும், மற்றபடி சீட்டுக்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்திருப்பார் போலிருக்கிறது.
இந்நூலைப் படித்த பின்பு, பாரதி தன் கவித்திறனை செம்மையாக்குவதற்கு எத்தனை அரும்பாடு பட்டிருக்கிறார், எனப் புரிகிறது. (இதே உண்மையை கவிஞர் கண்ணதாசன், கணித மேதை ராமானுஜத்தின் சரிதையைப் படித்தவர்களும் உணர்ந்திருப்பர்.) பாரதியின் கவிதைகளை விட அவரது ஆளுமை எனக்கு பெரு வியப்பை ஏற்படுத்துகிறது. இன்றைய தேதியில், நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு கவியின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதால் என்ன ஆகப்போகிறது ?
நாம் வாழும் இந்நிலை எவ்வளவு கையறு நிலையாய்த் தோன்றினும், இந்தக் காலம் எவ்வளவு ஊழிக்காலமாய்த் தோன்றினாலும், உன்னத மனிதர்கள் அவதரித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இம்மனிதர்களை இனம் கண்டு தேடிக் கூடி உதவும் மனிதர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்ற தெம்பை, உண்மையை நான் உணர்கிறேன்.
பாடபுத்தகத்தில் உள்ள ஒற்றைப்படைத் தேசாபிமானியாக இல்லாமல், பல பரிமாணங்கள் கொண்ட, நிறையும் குறையுமுள்ள, நாம் இன்றைக்குப் புனையும் கவிதைக்கு, எழுதும் உரைநடைக்கு, தமிழ் மொழியில் பலமுக்கிய கூறுகளுக்கு புதிய வித்திட்ட ஒரு ஆளுமையாய், அவருக்குப் பின் தோன்றிய தமிழ் சமுதாயத்தையே தன் இனத்தின் மீது மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்த ஒரு மாபெரும் ஆளுமையாய் பாரதியைக் காண்கிறேன்.
துணை நின்ற பதிவுகள்:
4 comments:
பாரதியை மீண்டும் ஒரு தலைமுறைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.
அதற்கு இந்த நூலும், உங்கள் பரிந்துரையும் நிச்சயம் உதவும். பரிந்துரைக்கு நன்றி.
'என்னது, பாரதி பற்றி மற்றுமொரு புத்தகமா?' என்று இதை யாரும் கடந்து போய் விடும் ஆபத்து உள்ளது. அவருடனே அணுக்கமாக இருந்த ஒருவர் எழுதிய புத்தகமாகையால் ஊகங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. கையில் எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அத்தனை சுவாரஸ்யம்!
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
I will be thankful if I get mail id of Mr. Baski or any other book reviwers who contribute book review for this blogspot. swaminathan
Post a Comment