Friday, September 10, 2010

மறைவாய்ச் சொன்ன கதைகள் - நாட்டார் கதைக்களஞ்சியம்

மறைவாய்ச் சொன்ன கதைகள் 
தொகுப்பு: கி.ரா., மற்றும் கழனியூரன்
வெளியீடு: உயிர்ம்மை பதிப்பகம்


கி. ராவும், கழனியூரனும் தொகுத்த நூறு நாட்டுப்புறப் பாலியல் கதைகள் அடங்கிய இந்தப் புத்தகத்தின் பரிந்துரையில், அழகு கேட்டு விடாமலிருக்க,  பெரும்பாலும் கி.ராவின் வாக்கியங்களையே உபயோகித்து இருக்கிறேன்.  வேறுவகையில் justify செய்ய முடியவில்லை.  "பாலியல் மனக் கோணல்கள் எப்படியெல்லாம் இருந்தது என்று இவை சொல்கின்றன.  மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறர்கள்.  'பிள்ளை நல்லது, பீ பொல்லாது' என்ற சொலவடையை இவர்களுக்குச் சொல்லத் தோன்றுகிறது...  இந்த சேகரிப்பில் ஒரு கெட்ட வார்த்தை கூட இல்லை".   கி.ரா தமது முன்னுரையில், இந்தக் கதைகளை வெளியிட யாருமில்லாததால் தாமே செய்வதாகச் சொல்லுகிறார்.  இக்கதைகளின் காலக்கட்டத்தை, தி.மு, தி.பி. (திருமணம் என்ற மரபு வருவதற்கு முன்னால், பின்னால்  ) என்று கொள்ள வேண்டுமாம். 



சிறு வயதில் 'கெட்ட வார்த்தை' தாத்தா தமக்குச் சொன்ன ஏராளமான கதைகளை அப்போதே எழுதி வைக்காமல் போனதை எண்ணிக் கி.ரா. வருந்துகிறார். இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் இந்தத் தாத்தா சொன்னதுதான்.  மற்றவை, நாட்டார் கதைகள் பற்றிய ஆய்வின் போது பல ஊர்களுக்குச் சென்று தம் ஆய்வுக்காக திரு கழனியூரன் கேட்டுத் தொகுத்தவை.  இப்படிப் பிறர் சொன்ன கதைகளை எழுத்து வடிவில் கொண்டு வந்தது மட்டுமே தம் வேலை என்கிறார்கள் ஆசிரியர்கள்.  ஒரு மாதிரி, "பாம்பும் சாகாமல், தடியும் நோகாமல்" எழுத்தில் கொண்டு வருவது பெரும் பாடாகப் போய் விடுகிறது என்கிறார் கி.ரா.  பல பிரதேசங்களிலுருந்து சேகரித்தாலும், அவற்றைக் கரிசல் வழக்கில்தான் சுவைபட எழுதியுள்ளார்.  நாட்டார் கதைகளிலேயே, பாலியல் கதைகளைச் சொல்ல ஒரு வகை 'ஜாலக்' தேவைப்படும்.  வெகு சிலருக்கே இந்தத் திறமை இருக்கிறது.  தாத்தா நாயக்கரைப் போன்ற ஆண்களுக்கு நிகராகக் கெட்ட வார்த்தைக் கதைகள் சொல்லும் பொன்னரசி போன்ற பெண்ணரசிகளையும் கி.ரா. பார்த்திருக்கிறார்.

சிறு வயதில் கி.ரா.வின் சேக்காளி கிட்டான் தாத்தாவிடம், "கெட்ட வார்த்தைக் கதைகளைக் கேட்டா யாரும் கெட்டுப் போய் விட மாட்டார்களா" என்று கேட்டதற்குத் தாத்தா சொன்னது, "கெட்டுப் போறவன் எப்படியும் கெட்டே போவான். யாராலும் அதை நிறுத்த முடியாது.  சொல்லப்போனா, கெட்ட வார்த்தைக் கதைளை நிறைய்யத் தெரிஞ்சி வச்சிக்கிட்டவன் அவ்வளவு சீக்கிரமாக் கெட்டுப் போயிற மாட்டான்" என்று சொல்லி உதாரணமாக ரிஷ்யசிருங்கர் கதையை சொல்லுகிறார்.   கல்மண்டபத்தின் கூரையில் குந்திக் கொண்டு கம்மங்  கொல்லையைக் காவல் காக்கும் சீசன் முழுதும்,  தாத்தாவிடம் கி.ராவும். கிட்டானும் நிறையக் கெட்ட வார்த்தைக் கதைகளைக் கேட்டிருக்கிறார்கள்.   இந்தக் கதைகளால் ஏதும் பயன் உண்டா என்று கேட்டதற்கு, "மனுஷ கற்பனைகள், விகாரங்கள், ஆசைகள், கனவுகள், இப்படி எத்தனையோ இதுகளில் அடங்கி இருக்கிறது.   இதைக் கேட்கிற காதுகளையும் மனசுகளையும் பொறுத்திருக்கிறது எல்லாம்"  என்று தாத்தா சொல்கிறார்.  "சில விசயங்களை சத்தம் காட்டாமல் தெரிந்து கொள்ளனும்  இவைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.  கோயில்களிலும் தேர்களிலும் செதுக்கி வைத்த முன்னோர்கள் விஷயம் தெரியாதவர்கள் அல்ல". இதைச் சொல்லி விட்டு, தேள் கடிக்கு வைத்தியம் செய்த கள்ளப் புருசன் கதையைச் சொல்கிறார் தாத்தா.  அப்போவெல்லாம் 'கள்ளப் புருசன் வெவகாரம் கொலையில  முடிஞ்சதில்ல' என்ற விஷயம் மட்டும் ஆறுதலாக இருக்கிறது.

மனுச உறவுகள் ஒழுங்குப் படுத்தப்படாத காலத்தில் நடந்த நடப்புகள், திருமணம் என்ற institution ஏற்படாத காலக்கட்டத்தில் நிலவிய வரைமுரையற்றப் பால் உறவுகள் என்பன பற்றிப் பூர்வீக நாட்டுப்புறக் கதைகள் மனம் திறந்து பேசுகின்றன.  கதைகளின் ஊடே அப்போது இருந்த சமூக, பொருளியல் சித்திரங்களும் ஆராயத்தக்கன.  நாகரீகத்தின் படிக்கட்டுகளில் மனித சமூகம் காலடி வைக்க, வைக்க, அடிப்படையான பசி மற்றும் பால் உணர்வுளில் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன.  வரைமுறைகளும் சட்ட திட்டங்களும் அவனை நெருங்க, அது சம்பந்தமான ஏக்கங்களும் கனவுகளும் அவனை வாட்டுகின்றன.  பொதுக் கழிப்பறை போன்ற இடங்கள் அளிக்கும் குறுகிய விடுதலையில் எழுதப்படும் ஆபாசமான வாசகங்கள், ஒரு இறுக்கமான சமுதாயத்தில் நிலவும் வக்கிர மற்றும் வடிகால் மனநிலையைக் குறிக்கிறது.  விடுமுறை நாட்களில், ஒரு பெண்கள் பள்ளியின் விடுதிக் கழிப்பறை சுவர்களில் பெரும் ஆண்குறிப் படங்களையும் வசனங்களையும் ஆய்வாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.  ஆண்கள் பள்ளிக் கூட கழிப்பறைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

ஒரு கரிச்சான்,  மூடக் கழுதைகளுக்கு அறிவுரை சொல்ல முயற்சிக்கும் 'நீதிக்' கதையுடன் இந்தத் தொகுப்பு ஆரம்பமாகிறது.  வேறு ஒரு கதையில், டவுன் கோர்ட்டுக்குப் போன ஒரு வழக்கில்,  "கழுதையோட கால் குணமாகிற வரைக்கும் இந்தப் பெருந்தனக்காரர் பொதி சொமக்கணும்.  கரு கலைந்ததற்குக் காரணமாக இருந்த ஏகாலியே அந்தக் கருவை உண்டாக்கித் தரணும்" என்ற நீதிபதியின் அளகானத் தீர்ப்பு, நமது நீதிமன்றங்களை கிராமத்து மக்கள் எவ்வளவு சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சி. 

'கள்ளன் பெரியவனா, காப்பான் பெரியவனா ' என்ற சொலவடைக்கேற்ப சவால் விட்டு 'நடத்திக் காட்டிய' பெண் பாத்திரங்களை ஏராளமாக இந்தக் கதைகளில் பார்க்கலாம்.  உதாரணம், 'புளி வெச்சி அடைச்ச ஜவான்',  அரிசி மாவை அடைத்து அதில் படமும் வரைந்து வைத்தவர்கள், 'திருவாளர் அத்தை கொண்டான்',  மற்றும் விக்கிரமாதித்தன் கதையில் வரும் இரத்தின வியாபாரி மகள் பவளக்கொடி போன்றவர்கள் சுவாரஸ்யமான பாத்திரங்கள்.  மேலும், கள்ளப் புருசன் வரும்போது வீட்டிலிருக்கும் சொந்தப் புருசனை சமாளிக்கும் மங்கையர் திலகங்கள் கதைகளில் நிறைந்திருக்கக் காரணம், ஆணாதிக்க சமூகத்தின் பங்களிப்பாக இருக்காலாம்.  ஆபத்துக்குப் பாவமில்லை என்று கிராமத்து முனிகளையும் பிசாசுகளையும் கதைக்குள் இழுத்து வருகிறார்கள்.  புராணப் பாத்திரங்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.  வெத்திலை பூலோகத்துக்கு வந்த வயனத்தைப் படித்துப்பாருங்கள்.  அத்துடன், பத்மாசுரனுக்கு வரம் கொடுத்து மாட்டியது போல, ஒரு வேசிக்கு வரம் கொடுத்து மாட்டிய பரமசிவனின் கதையையும் படித்துப் பாருங்கள்.

பொம்பள விசயத்துல 'இடுப்பு வெளங்காத' ஆண்களே நிறைய கதைகளில் வருகிறார்கள்.  கல்யாணமான மொத ராத்திரியில நல்லா கொறட்ட விட்டுத் தூங்குகிறார்கள்.  அப்போதுதானே கதைக்கு சுவாரஸ்யம் கூடும்!  அவர்களை மனைவிமார்கள் பிறகு வழிக்குக் கொண்டு வருகிறார்கள். ஒருமுறை, தாங்கள் அனுபவிக்கும் பிரசவ வலியை ஆண்களும் அனுபவிக்க வேண்டுமென்று வரம் வாங்கி வருகிறார்கள் பெண்கள்.   ராணியின் மகப்பேறு நேரத்தில், அரண்மனை வேலைக்கார்கள் பிரசவ வலியில் துடிப்பது கண்டு, என்னடா இது, பேரும் குழப்பம் உண்டாகுதே என்று பெண்கள் அந்த வரத்தை வாபஸ் வாங்கினார்களாம்.

நாட்டார் கதைகளுக்கு அழிப்பான்களும் (விடுகதை) பழமொழிகளும் கதைக் காரணிகளாக இருக்கின்றன.  உதாரணமாக, 'கொழுத்துப் போயி கொசத்திக்கி கிட்டப் போனா, அவ இழுத்து வச்சி சூளையில வச்சிருவா' என்ற பழமொழி வந்த கதையை இந்தத் தொகுப்பில் காணலாம்.   இப்படிப் பழமொழியாகட்டும், ராஜா ராணி கதையாகட்டும்,  சாமியார் புராணமாகட்டும்,  குரு சிஷ்ய உறவாகட்டும், எல்லாவற்றுக்கும் பாலியல் கதைகள் வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கதைத் தொகுப்பு பாலியலை முன் நிறுத்தும் கதைகள் அல்ல.  நம் வரலாற்றை மக்களின் வார்த்தைகள் மூலமாக, நம் மக்களின் நாட்டார வழக்கை, நம் அடிமனத் தேடல்களை, நமக்கு அறிமுகப் படுத்தும் ஒரு முயற்சி.   மிட்டா மிராசுகள் செய்யும் பாலியல் சுரண்டல்களும், அன்று நிலவியிருந்த சமுதாயக் கட்டமைப்பு பற்றியும் நிறைய தெரிந்து கொள்ளலாம்.  இந்தக் கதைகளில் வருபவர்கள், உண்மையான மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் நிஜத்தை பிரதிபலிக்கின்றன.  அவர்கள் தங்கள் ஏக்கங்களுக்கு, சினிமாவை வடிகாலாகக் கொள்ளவில்லை.  நம் உடுப்பெல்லாம் மிடுக்காக மாறியிருந்தாலும், மனதளவில் நாம் மிகவும் பின்னோக்கிச் சென்று விட்டோமோ என்று எண்ணத் தூண்டும் புத்தகம்.

இந்த நூலின் பின்னிணைப்புகளில் தம் களப்பணி பற்றிக்  கழனியூரன் வெகு சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.  கி.ரா. தமது உரையில், பாலியல் கதைகள் அடங்கியப் புத்தகமே நஷ்டத்தில் போன விஷயத்தை ஆச்சரியமாகக் குறிப்பிடுகிறார். (ஒரு புத்தகம் வாங்கி ஒன்பது பேர் ஜெராக்ஸ் எடுப்பார்கள் ).

4 comments:

Raja M said...

நல்ல பதிவு. 'மறைவாய்ச் சொன்ன கதைகள்' நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம். இந்தியக் கலாச்சாரத்தில் பாலியல் சமாச்சாரங்களை வெளிப்படையாகப் பேசுவதில் ஒரு மூச்சடைக்க வைக்கும் இறுக்கமான சூழலே நிலவி வருகிறது. இயல்பாய் நாட்டார் வழக்கில் இருந்த விஷயங்கள் இப்போது, கலாசார முலாம் பூசப்பட்டு ஒளி காணா இடங்களில் - கழிப்பறைகளில் - மட்டுமே வெளிப்படும் விஷயங்கள் ஆகி விட்டன.

இதைப் படிக்கும் போது, அண்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதையின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
...

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

மறைவாய்ச் சொன்ன கதைகள், உங்கள் பரிந்துரையால் கொஞ்சம் வெளிச்சத்தில் மிளிரட்டும்.

Jegadeesh Kumar said...

அழகான பரிந்துரை.
வேசிக்கு வரம் கொடுத்து மாட்டிய பரமசிவன் கதையைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.
கிராவின் வெள்ளந்தியான சொல்முறையில் காமம் மட்டுமல்ல எதைச் சொன்னாலும் கேட்கலாம்.

வித்யாஷ‌ங்கர் said...

good attempt-vidyashankar

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment