Thursday, August 5, 2010

கானல் வரி - தமிழ்நதி


கானல் வரி
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: உயிர்மை
பரிந்துரை: சண்முகம்தமிழ்நதியை நான் "ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்" என்னும் காத்திரமான கட்டுரையினூடாகத் தான் அறிந்துகொண்டேன். இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உள்ள தார்மிகச் சீற்றமும் நியாயமும் என்னை வெகுவாக கவர்ந்தன.

என் வரையில், சீரிய இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர் வரிசையில் அம்பையை மட்டுமே நான் அறிந்திருந்தேன். சீரிய பெண் எழுத்தாளர்கள் அருகிப் போன நம் சமூகத்தில், பெண்ணின் மனவோட்டத்தை பெரும்பாலும் ஆண்களே பதிவு செய்யும் இந்த அவல நிலையில், 'கானல் வரி' யின் வாயிலாக, ஒரு பெண்ணின் உலகை, அவள் காணும் உலகை தரிசிக்க ஆவலாய் நுழைந்தேன்.இந்நாவலில் என்னைக் கவர்ந்த இருபெரும் காரணிகள்:

1) அசலான பார்வை / நாவல் உத்தி.
2) கவித்துவமான மொழி நடை.

இந்நூலை, கவித்துவம் மிகுந்த உரைநடை என்று கொள்வதா அல்லது நாவல் வடிவிலிருக்கும் நீண்ட கவிதை என்று கொள்வதா என்கிற சம்சயம் உண்டாயிற்று. மேற்கொள் காட்டுவதென்றால், பக்கத்திற்குப் பக்கம் கை நிறைய காட்டிக்கொண்டே போகலாம். எண்பது பக்கங்களே என்றாலும், கணம் பொருந்தியது, கவித்துவம் மிளிர்வது.

மாதவியும் மௌலியும் காதலிக்கிறார்கள். இருவரும் ஏற்கெனவே மணமானவர்கள் (வேறொருவருக்கு). சமுதாயத்தின் பார்வையில் இது கள்ளக்காதல் என்றாலும், மாதவியைப் பொருத்த வரை, இது உண்மையான உக்கிரமான காதலே ! மௌலியும் தொடக்கத்தில் மாதவியை ஆராதனை செய்தாலும், ஒரு சராசரி இந்திய ஆண்மகனைப்போல் அவனால் மாதவியை தன் உடைமைப் பொருளாகத்தான் பாவிக்க முடிகிறது. மேலும், நாளடைவில் மாதவியின் உடலும் அலுத்துப்போக தனது பாதுகாப்பான குடும்ப வட்டத்திற்குள் நண்டு போல திரும்பிப் பொருத்திக் கொள்கிறான். இத்தனைக்கும் மௌலி, இலக்கிய ரசனை உள்ளவனாகவும், மேலை நாடுகளுக்கு சென்று சம்பாதனை செய்பவனாகவும் இருப்பது வியப்பான விஷயம் (அல்லது வியப்பதற்கு ஒன்றும் இல்லையோ ? படிப்பு, உத்தியோகம், ரசனையும் மீறியது தான், இந்த சமுதாயம் கட்டிக் காத்துப் பேணும் தொன்மையான "ஆண்" குணங்களோ ?)

இப்படியெல்லாம் முடிந்து போக, மாதவி தனது காதலின் தீவிரத்தை, தனது ஆற்றாமையை ஒரு கடிதமாக எழுதுகிறாள். முதல் அத்தியாத்தில் துவங்கும் இந்த கடிதம் முடிந்து கதைக்கு வந்து விடுவோம் என்று தொடர்ந்து படித்தால் எல்லா அத்தியாங்களிலும் இந்தக் கடிதமே நீள்கிறது என புலப்படத் தொடங்கியது. இந்தக் கடிதத்தின் வாயிலாகவே கதைக்களன் விரிவடைகிறது. கடிதத்தின் இறுதியில், உடைந்து போன தன்னை மீண்டும் ஒருங்கினைத்து, வெறுப்பிலிருந்து தன்னையே மீண்டெடுத்து, மானுட நேசத்துடன் கண்ணியமாய் உயர்ந்து எழுகிறாள் மாதவி. நாவலின் கடைசி வரிகள், வாசிப்பனுபவத்தை முழுமையானதாக ஆக்குகின்றன. ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட நீண்ட கடிதம் தான் இந்த நாவல் என்பது அசலான பார்வை. ஒரு பெண் எழுதுவதாய் இருந்தாலும் ஆணின் தரப்பும் உயிரூட்டமாகவும், பாரபட்சமின்றியும் சொல்லப் பட்டிருப்பது பொருத்தமானது.

திருமண பந்தத்தை மீறி வேறு ஒருவரை காதலிப்பதை (ஆண்கள் ஆண்டாண்டு காலமாய் செய்து வந்ததை) ஆணித்தரமாகவும் நிமிர்ந்த பார்வையுமாய் எழுத்தில் பதிவு செய்கிறார் தமிழ்நதி. இது பாராட்டுதற்குரியதே. நம் தெய்வங்கள் முதல் மாண்புமிகு முதல்வர் வரை மனைவி, துணைவி என்று ஜமாய்க்கையில், மாதவி அவள் யாசிக்கும் அன்பு, அவள் கணவனிடம் கிடைக்கப் பெறாததாலேயே சமுதாய பந்தத்தை மீறுகிறாள். சமுதாயம் என்றும் குடும்பம் என்றும் பெண்ணை முடக்கிப்போட்டு, ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தச் சமூகத்தை நோக்கி மாதவி கேட்கும் கேள்விகள் கசையடிகளுக்கு ஒப்பானவை.

(ஒரு பெண் தன் கணவனிடம் மட்டுமல்லாது, துணைவர்களிடமும் காதல் கொள்வதை, பெண்ணே எழுத்தில் பதிவு செய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இது சரியா தவறா என்பதல்ல கேள்வி, ஒரு ஆண் கொண்டாடும் உரிமையை பெண்ணும் செய்வாள், அதை எழுத்தில் பதிவும் செய்வாள், அவ்வளவே.)

இந்நாவலில், தமிழ்நதி சுயப்பிரக்ஙையோடு (அம்பையைப் போல் பெண்ணியவாதியாக மாறாமல்) ஒரு உன்னத மனுஷியாகவே சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.

இந்த நாவலுக்கு பிரபஞ்சன் ஒரு அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார். நாவலைப் படித்த பின்பு இந்த முன்னுரையை வாசிப்பது உசிதம்.

இந்நாவலின் கவித்துவ மொழிக்காகவே படிக்கலாம், ரசிக்கலாம்.
.

3 comments:

Jegadeesh Kumar said...

நாவல் வடிவில் அமைந்த நீண்ட கவிதை என்று நீங்கள் கொடுத்து இருக்கும் குறிப்பு படிக்கத் தூண்டுகிறது. தமிழ் நதி ஒரு ஈழத்தமிழர் என்று அவர் தளம் சென்று அறிந்து கொண்டேன். பெண்ணின் உணர்வுகளை பெண்களே வெளிப்படுத்தும் போதே அதில் உண்மை ஒளிர்கிறது. அருமையான பரிந்துரை.
சண்முகம் நீங்கள் டெக்சாஸில் தானே இருக்கிறீர்கள்?
சமீபத்தில் டெக்ஸாசைப் பின்புலமாகக் கொண்ட the great debaters என்றொரு படம் பார்த்தேன். டென்செல் வாஷிங்க்டனும், ஃபாரஸ்ட் விடேகரும் நடித்தது. அற்புதமான படம். முடிந்தால் பாருங்கள்.

kathir said...

||இந்த நாவலுக்கு பிரபஞ்சன் ஒரு அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார். நாவலைப் படித்த பின்பு இந்த முன்னுரையை வாசிப்பது உசிதம்.||

இதைத்தான் நான் செய்தேன்

மிக அருமையானதொரு படைப்பு

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment