Friday, July 30, 2010

சாப்பாட்டுப் புராணம்


சாப்பாட்டுப் புராணம்
ஆசிரியர்: சமஸ்
பதிப்பகம்: தான் பிரசுரம்
பரிந்துரை: சண்முகம்இந்த சாப்பாட்டைப் பற்றிய புராணமெல்லாம் இலக்கியமாகுமா ? இதற்கெல்லாம் ஒரு பரிந்துரையா ? இந்த கேள்வி எனக்கும் இருந்தது. இந்த கேள்வியை முன் கூட்டியே உணர்ந்தார்போல், இந்நூலின் முகப்புரையில் பதிலுரைக்கிறார் சமஸ்:

"... இரண்டு ஊர்க்காரர்கள் சந்தித்துக்கொண்டால், ஊரைப்பற்றி, உணவைப்பற்றி மனதார, வாயார பேசிப் பூரிப்படைகிறோம். ஆனால் எழுத்து என்று வரும்போது அதன் முக்கியத்துவத்தை நிராகரித்து விடுகிறோம். உணவைப்பற்றி எழுதுவது இலக்கியமாகாது என்கிற தாழ்வான அபிப்பிராயம் நம்மிடத்தில் படிந்திருக்கிறது.... "ஒரு நாகரிகத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதில் உணவு ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, ஒரு சமூகத்தினுடைய பண்பாட்டின், மரபின் அடையாள்முமாகும். ஒரு இடத்தின் உணவுப்பழக்கம், உணவின் மூலப் பொருட்கள், செய்முறை மற்றும் உணவின் ருசி அம்மண்ணின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகத்தான் அமையும். முக்கியமாக அம்மண்ணில் பாயும் நதியின் தாக்கம் உணவின் ருசியில் தெரியும். அது மட்டுமல்லாமல் ஒரு பகுதியில் பாரம்பரியமாக வந்த உணவு அம்மக்களின் உடல் நலத்திற்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் "இதுபோன்ற தமிழக உணவுக் கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவு மிக அரிதானது." என்கிறார்.


மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று உணர்த்தும் காவிய பாத்திரமான ராமனைத்தான், சாப்பாட்டு விஷயத்திலும் எப்படி ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று உணர்த்துவதற்காக "சாப்பாட்டு ராமன்" என்கிறோமா ?

காவிய காலத்தில், வனம் புகுந்தபோது ராமன் வேட்டையாட சீதைக்கு அரிசியும் மான் இறைச்சியும் காய்களும் கலந்து சமைத்த உணவு மிகப் பிடித்ததாம். மகாபாரதத்தில், யுதிஷ்டிர மகாராஜா பத்தாயிரம் பண்டிதர்களுக்கு மானும் பன்றிக் கறியும் சமைத்துப் படைத்திருக்கிறான் ! 'பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்' என வரும் புறநானூற்றுப்பாடல் வழியாக தேன் கலந்த பாலுணவு பிரசித்தம் போலும் ! இதே புறநானூற்றில் வரகரிசியை பாலில் அவித்து தேனோடு முயல் கறியைக் குழைத்துச் சாப்பிடும் வழக்கத்தையும் காணலாம். ப. சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி" நாவிலில் வரும் மதுரை இரவு வீதி சாப்பாட்டுக்கடைகள், உணவை மையமாகக் கொண்ட தி. ஜானகிராமனின் திவ்ய படைப்பான 'நளபாகம்', பலவிதமான மீனைப்பற்றியும், அதை எப்படி முறையோடு சமைத்துச் சாப்பிடவேண்டும் என்று வரும் பிரபஞ்சனின் சிறுகதை என இலக்கியத்தில், உணவும் சுவையைக் கூட்டித்தான் இருந்திருக்கிறது


நாம் சாப்பிடும் உணவைப்பற்றி நமக்கு எவ்வளவு தெரிகிறது என்று பார்ப்போம். தோசையும் வடையும் இரண்டாயிரம வருட தொன்மையானது. ஆனால் இட்லி வேறெங்கோ இருந்து இங்கு வந்து சேர்ந்த ஒன்று. அரிசி, துவரை ஆகியவையோடு அவித்து உண்ணும் நாம் விரும்பும் இட்லி, ஒரு முன்னூறு வருட தொன்மையானதுதான். தென் கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தேயிலை சீனாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்று, ஆங்கிலேயர்களால், இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தப்பட்டு, சுமார் ஒரு நூறாண்டுகளாகத்தான் நாம் ருசிக்கும் வகையில் பால் சர்க்கரையுடன் ஜமாய்த்து கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவிலிருந்து அரேபியா வழியாக 17-ம் நூற்றாண்டில் இந்தியா வந்த காப்பி, தமிழ்நாட்டில் நம்மாட்களை 19-ம் நூற்றண்டின் இறுதியில் தான் வந்தடைந்திருக்கின்றது. 1930 களில், காப்பிக்கும் டீக்கும் ஒரு பெரும் சண்டையே வந்து, பாட்டாளிகளின் பானமாய் தலையெடுக்க மோதிக்கொண்டன. நாமறிந்த ஐஸ்கிரீம் இருநூறு வருடமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் தேனையும், சில பழத்துண்டங்களையும் பனிக்கட்டிகளுடன் சேர்த்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.


உணவகங்கள் எப்படி உண்டாயின என்பதை அழகாய் விவரிக்கிறார் சமஸ். பண்டைய காலத்தில் புண்ணியஸ்தலம் செய்பவர்களுக்கு அன்னம் அளித்தால் பலன் என்று உருவானது அன்னச்சத்திரங்கள். பின்னர் ஆங்கிலேயரும், பிரெஞ்சியரும் நம்மை ஆண்டபோது, மாலை வேலைகளை அலுவல் முடிந்து இனிதே கழிக்க அவர்கள் 'கிளப்புகள்' உருவாக்கி மது அருந்தினர். பார்த்தார்கள் நம் மக்கள். மதுவெல்லாம் அபச்சாரம், காப்பியாவது குடித்துக் கதைப்போம் என்று காப்பி கிளப்புகள் உருவாக்கினர். இந்த காப்பி கிளப்புகளே பின்னர் சாப்பாட்டுக்கடைக்கு முன்னோடியாய் விளங்கின. சைவ சிற்றுண்டிகளும், பின்னர் சாப்பாடும் பரிமாறப்பட்டன. ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து திரும்பியவர்களுக்காக பின்னாளில் ஆரம்பித்தது தான் 'மிலிட்டரி ஓட்டல்கள்'.


மராத்திய மன்னன் பிரதாபசிம்ம மஹாராஜா தன் காதல் மனைவி யமுனாவைச் சந்தித்ததன் நினைவாக, காதல் பரிசாக வழங்கிய திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்களம் என்னும் ஊரில் இன்று கிடைக்கும் சுகமான பால் திரட்டைப்பற்றிக் கூறுகிறார் சமஸ். தென்னாற்காட்டில் சமைக்கும் உணவுகள், உதாரணமாக விருத்தாச்சலம் தவலை வடை, ஏன் ருசி மட்டுமின்றி சத்தாகவும் உள்ளது என்ற நலமான தகவலையும் கூறுகிறார். ' மைய சமையலறை முறை' மற்றும் 'நீராவி முறை' ஆகிவற்றை அறிமுகப்படுத்திய முன்னோடிகளான கோவை 'ஸ்ரீ அன்னபூர்ணா' வின் மகிமையை பதிவு செய்கிறார். சப்பாத்தி பற்றி கூறும்போது அதன் பூர்வீகத்திலிருந்து தொடங்கி, மொஹலாயப் பேரரசர் அக்பரைப்பற்றிய 'அயினி அக்பரில்' கூட சப்பாத்தி பற்றி குறிப்பைக் குறிப்பிட்டு தற்போது தரமான சப்பாத்தி எங்கே கிடைக்கும் என்று முடிக்கிறார். எவ்வளவோ தானிய வகைகள் இருந்தாலும், ஏன் அரிசியும் கோதுமையும் மட்டும் உலக அளவில் பிரபலமாயின என்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது இந்நூலில். நூறு வருடங்களுக்கும் மேலாக இன்றும் கிடைக்கும் சுவையான திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மற்றும் நாம் தொலைத்துவிட்ட ஆனால் இன்றும் சில கடைகளில் கிடைக்கும் நாட்டுச் சர்க்கரையையும் தானியங்களையும் பிரதானக் கலவையாகக் கொண்ட தரமான கமர்கட், கடலைமிட்டாய் வகையறாக்கள்; சுவையான அசைவ உணவுவகைகள் என்று நமது தமிழ்நாட்டின் பரந்த வளமையான உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டடுகிறார் சமஸ்.


ஹாஸ்யத்தையும் ஊறுகாய் போல இந்நூல் முழுக்க தொடுக்கொள்ள ஆங்காங்கே பரிமாறுகிறார் சமஸ். நெல் விளையும் வளமான தஞ்சை ஜில்லாவில், இசை வளர்க்கும் இசைக்கலைஞர்கள் தங்களுக்கே உரிய பாஷையில், நளபாகம் போஷிக்கும் சமையல் கலைஞர்களை எங்ஙனம் பாராட்டுகிறார்கள் பாருங்கள்: " ஓய், ஒரு ததிங்கினத்தோமே போட்டுட்டீர் ஓய் "

உணவுடன் தொட்டுக்கொள்ளும் பதார்த்தத்தை 'தொட்டுக்கை' என்று சொல்கிறார் சமஸ். இதற்குத்தான் எவ்வளவு பெயர்கள் ! தொடுகறி, காய்கறி, பொரியல், வெஞ்சனம் என !

வயிற்றின் சிறப்பு (அல்லது அக்கப்போர்) பற்றி அவ்வை அருமையாகச் சொல்லியிருக்கிறார்:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒரு நாளும்
என்றோ அறியாய் இடும்மைகள் என்னவாறே
உன்னோடு வாழ்தல் அரிது


அரிது தான். உணவு என்பது நாக்கை விட வயிறு சம்பந்தப்பட்டது என்பது வயதாகும் போதே நாம் காலம் கடந்து உணர்கிறோம். அதனால் எவ்வகை உணவாயினும் எவ்வளவு ருசியாயினும் கட்டுப்பாடுடன் உண்பது என்பது இன்றைய தேதியில் கட்டாயப் பொது அறிவு.


நாக்கு ருசி கொண்டவர்கள் இந்தப் புத்தகத்தை, எது எது எந்த ஊரில் கிடைக்கும் என்று ஒரு கைய்யேடு போல பயன்படுத்தலாம். ஏனையோர் நாம் சாப்பிடும் உணவை, அதன் வரலாற்றை, ஒரு எளிய அறிமுக நூலாக இதைப் படிக்கலாம்.

5 comments:

Jegadeesh Kumar said...

ருசியான, பயனுள்ள பதிவு. சாப்பாட்டைப் பற்றி எழுதினால் இலக்கியமல்ல என்று யாரும் சொல்லி விட முடியாது. எல்லா நல்ல எழுத்தாளர்களுமே சாப்பாடு பற்றித் தங்கள் படைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிலாகித்திருக்கிறார்கள்.
இவை என் நினைவில் வருபவை,
அறிஞர் அண்ணா ஒரு கட்டுரையில் தன் மனைவியிடம்கொத்தமல்லி, இஞ்சி எல்லாம் போட்டு தயிர் தயாரிப்பது எப்படி என்று சுவைபடச் சொல்வார்.
ஜெயகாந்தன் ஒரு குறுநாவலில் கள்ளுக்கடையில் வைக்கப்பட்டிருக்கும் ஐட்டங்களுக்கு ஜொள்ளு விடுவார்.
பிரபஞ்சன் வானம் வசப்படுமில் ஆப்பம் சுடுவது பற்றி அழகாய் விளக்குவார்.
ஹாரிபாட்டரில் ஹாரி, ஹெர்மயனி, ரான் மூவரும் பள்ளியில் தினம் உண்ணும் உணவு வகைகள் பற்றி ஒவ்வொரு பாகத்திலும் சிலாகித்து எழுதியிருப்பார்.
சாப்பாடு என்றதுமே நமக்குள் ஒரு ஆர்வம் பிறப்பது இயற்கைதானே.
அழகாக எழுதியுள்ளீர்கள். பரிந்துரைக்கு நன்றி.

clayhorse said...

இதற்கு எதிர் சாரியில் புதுமைப்பித்தன் எழுதிய இலைக்குணம் கட்டுரை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று
-- http://ta.wikisource.org/wiki தளத்தில் 'இலைக் குணம்' என்று தேடுங்கள்.

Raja M said...

படிக்கும் போதே நாக்கில் எச்சி ஊற வைத்த பதிவு. நம் ஊரில் காப்பித் தண்ணி முதலில் அறிமுகப் படுத்திய போது நேர்ந்த மாற்றங்களை இரா. முருகன், தனது அரசூர் வம்சம் புத்தகத்தில் உற்சாகத்துடன் எழுதியுள்ளார்.

மான் கறியை சீதையும், ராமனும் உண்டது நல்ல துணுக்கு. கருணையின் வடிவமான கடவுள்கள், தயங்காமல் மானையும், முயலையும் (வள்ளி), மீனையும் தின்பதும், கடவுள் வழிபட்டு முறைகளைப் பேணிக் காக்கும் அந்தணர்கள் (பெரும்பாலும்) சைவமாக இருப்பதும் சிந்தனையைத் தூண்டும் முரண்.

clayhorse said...

பாண்டிச்சேரியில் 'மீன் கவாப்பு' வெகு பிரசித்தம். உள்ளங்கை நீளமுள்ள கடல் மீன்களைத் தோல் நீக்கிக் காரம் கலந்த கடலை மாவில் தோய்த்து பஜ்ஜி போல பொரித்துத் தருவார்கள். நான் பள்ளியில் படித்தக் காலங்களில், மாதா கோயில் தெருவில் பெத்தி செமினேர் பள்ளிக்கு எதிரிலிருந்த ஒரு திண்ணைக்கடை மிகவும் பிரசித்தம். சமூகத்தின் மேல்மட்ட மனிதர்களின் கார்கள் ஒரு தெரு தள்ளி நிறுத்தப்பட்டு, அவர்களின் டிரைவர்கள் அந்தக் கடைக்கு அனுப்பப்படுவார்கள். சமீபத்தில் சென்றிருந்தபோது கடை காணமல் போயிருந்தது. மீன் கவாப்புப் பற்றி பிரபஞ்சன் சில கதைகளில் சப்புக்கொட்டிக் கொண்டே விவரித்திருப்பார். அதைப்போல, பாண்டிச்சேரி கடற்கரையில் பலகாலம் கோலோச்சிய 'சுண்டல் தாத்தா'. தினசரி மாலை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் இரண்டு மூங்கில் கூடைகளில் சுண்டல் கொண்டு வருவார். அவருக்கு முன்பே நிறைய வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். கொண்டு வந்த ஓரிரு மணி நேரங்களில் தீர்ந்து விடும். இரண்டு கூடைகளுக்கு அதிகமாகக் கொண்டுவரவே மாட்டார். அத்தகைய ருசியான சுண்டலை நான் எங்குமே சாப்பிட்டதில்லை. பிரபஞ்சனுடைய ஒரு கதையில் இவரும் குறிப்பிடப்பட்டிருப்பார்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment