Saturday, July 24, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்

நாவல்      : யாமம்
ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்.

உயிர்மை வெளியீடாக வந்திருக்கும்  எஸ். ராமகிருஷ்ணனின்  நாவலான 'யாமம்' சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின்  அவ்வீட்டின்  விளக்குகளின்  சுடர்கள்  அனைத்தும்  ஒன்று  கூடி  அம்மனிதர்களின் குண  இயல்புகளையும்,  ஆசைகளையும்  ஏக்கங்களையும்  பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று   நாவலின்  முன்னுரையில்   எஸ்.ரா.  குறிப்பிடுகின்றார்.  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரமாவதுப் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது.  யாமம் என்பது ஒருவகை  அத்தரின் பெயர்.  எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும், காமத்தைத் தூண்டும் வல்லமை கொண்டது யாமம்.  நாவலின் பெயர்தான் யாமமே தவிர, இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல.


நாவல், நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் கதா பாத்திரங்களில் பெரும்பாலானவர்களை  இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர் இருக்கிறது.  வெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த  வாசிப்பில் கதைமாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குண இயல்புகளின், மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை, ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்குள் வணிகம்செய்வதற்காக
 நுழைந்ததும், அதன் பின்னர் அவர்கள் சிறிது சிறிதாக நிலஆக்கிரமிப்புகளைச் செய்து குடியேற 
ஆரம்பித்ததும் நாவலின் துவக்கத்தில் சொல்லப்படுகின்றன. இந்தியாவிலிருந்து மிளகு
இறக்குமதி செய்வதற்காக மகாராணியிடம் அனுமதி கேட்டு இந்தியா வருகின்றனர்  வெள்ளையர்கள். அனுமதி கேட்பவர்களிடம் மகாராணி, இந்தியாவில் உள்ள நீலக்கிளிகள் அனைத்தும் தனக்கு வேண்டுமென்றும் அவற்றின் இறகுகளைத் துண்டித்து மேலாடை செய்து கொள்ள வேண்டுமென்றும் சொல்கிறாள். அப்படியே இறக்கை முளைத்த வெள்ளை நிற யானைகளையும் கொண்டுவரச் சொல்கிறாள்.

வெள்ளையர்கள் வரும் இடத்தில் ஷாஜஹானின் மகளுக்குத் தீ விபத்தில் முகத்தில் ஏற்பட்ட காயத்தை ஒரு ஆங்கிலேயன் குணப்படுத்த, மகிழ்ந்து போன  ஷாஜஹான், அவர்களுக்கு  இந்தியாவில்  வணிகம் செய்யும் உரிமையை அளிக்கிறான்.  ஆங்கிலேயர்கள், கடலோரம் குடியிருந்த மீனவர்களை வன்முறையாக வெளியேற்றி அங்குக் குடியேறுகிறார்கள். 
ஒரு பரத்தையைப் போல் எல்லாரையும் மகிழ்வித்துக் கொண்டும் ஆனால் தன் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமலும் மெல்ல மெல்ல  மதராப்பட்டினம்  உருவாகிறது.

யாமம் ஒரு புனைகதையை வாசிப்பது போன்ற அனுபவத்தைத் தரவேயில்லை.
பட்டணத்து வாசிகளின் சரிதம் என்கிற தலைப்பில் மதராப் பட்டணத்தைச்  சுற்றி வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும், வீழ்ச்சியும், ஏக்கங்களும், ஆசைகளும்,
உறவுப்  பிறழ்வுகளும்,   நம்பகமான வரலாற்றுக்  குறிப்புகளைப் போல  அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அக்குறிப்புகளின் வாயிலாகவும், தனது எளிமையானதும், நேரடியானதும், குறியீட்டுத் தன்மை கொண்டதுமான  மொழிநடையின் உதவியோடும் எஸ்.ரா தன் பார்த்த உலகத்தை நமக்கு  அறிமுகப் படுத்துகிறார்.  நம்மீது ஆதிக்கம் செலுத்தியவர்கள் என்ற நிலையைத் தாண்டி நமக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இருந்த உறவு  விவரிக்கப்படுகிறது.

அப்துல் கரீம் என்ற வணிகர் நகரத்துப் பிரமுகர்கள் பலரும் உபயோகிக்கும் யாமம் என்றஅத்தரைத் தயாரிக்கிறார்.  அதைத் தயாரிக்கும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.  அவரது குடும்பத்துக்குப்  பதினாலு தலைமுறைகளாக அல் அசர் முசாபர்   என்ற  பக்கீர்தான்  வழிகாட்டிவருகிறார். அவர்  யார் முன்பும் தோன்றியதில்லை.  அக்குடும்பத்தின் மூத்த ஆண்மகனின் கனவில் தோன்றி வழி நடத்துவார். பல தலைமுறைகளுக்கு முன்பாக கரீமின் முன்னோரான மீர்காசிமின் கனவில் முதன் முறையாகத் தோன்றி  மர்மமானதும் புதிரானதுமான  பல  கேள்விகளைக் கேட்கிறார் பக்கீர். அக்கேள்விகள் பல்வேறு தத்துவ அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றன. பதில்களுக்கான தேடல் மீர்காசிமுக்குப் பல்வேறு புரிதல்களை உண்டாக்குகிறது. வாசனையை அதன் ஊற்றுக் கண்ணிலேயே கண்டுபிடித்து விடும் திறமை படைத்த காசிமுக்கு யாமம் தயாரிக்கும் ரகசியத்தைச் சொல்கிறார் பக்கீர். அதன்பின் தலைமுறை தலைமுறையாக யாமம் தயாரிக்கும் ரகசியம் அந்தக் குடும்பத்து ஆண்களிடம் மட்டுமே இருந்து வருகிறது.

ஆண் வாரிசு இல்லாத கரீம் மூன்றாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தும் பயனில்லை. யாமம் தயாரித்தல் தன்னோடே முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறார். விரக்தியடைந்த அவர் மனம் அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்கிறது. சொத்தெல்லாம் இழக்கிறார். மூன்று மனைவியரையும் பிரிந்து எங்கோ சென்றுவிடுகிறார். மனைவியர் மூவரும் அவர் இல்லாது பட்டணத்தில் அல்லாடுகிறார்கள்.

மற்றொரு கதை ஆங்கிலேயரின் நிலவரைபட ஆய்வுப் பணியிலிருக்கும் பத்ரகிரியினுடையது. சிறுவயதில் தாயை இழந்த அவன் தன் தம்பியைப் பாசமாய் வளர்க்கிறான். மேற்படிப்புக்காக லண்டன் அனுப்புகிறான். அவன் தம்பியின் மனைவி அவன் வீட்டில் இருக்கிறாள். பத்ரகிரியின் மனைவிக்குத் தெரியாமல் அவனுக்கும் தம்பி மனைவிக்கும் உறவு ஏற்படுகிறது. அவள் பத்ரகிரிக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். பத்ரகிரியின் மனைவி அவனைப் பிரிகிறாள். இது எதுவுமே அறியாமல் லண்டனில் படிக்கும்போதே கணிதத்துறையில் புகழ் பெற்று நாடு திரும்பும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

திருச்சிற்றம்பலத்தின் லண்டன் வாசம் மூலமாக நமக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இங்கிலாந்து ஒரு அழகான ஓவியத்தைப் போலக் காணக் கிடைக்கிறது. லண்டன் மாநகரின் விஸ்தாரமான பழமை கொஞ்சும் பிரம்மாண்டமான தெருக்கள் மட்டுமல்லாது, அவற்றின் அழுக்கு படிந்த வீதிகள், அந்நகரின் உழைக்கும் கருப்பின மக்களின் வலிகள், ஒடுக்கப்படுதலுக்கெதிராய் அவர்களது போராட்டங்கள் ஆகியன நம்முன் விரிகின்றன. திருச்சிற்றம்பலத்துடன் உடன் பயணம் செய்த சற்குணம் உழைக்கும் மக்களுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை செல்கிறான். அவனுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். திருச்சிற்றம்பலம் தன் கணிதத் திறமையை லண்டனில் நிலைநாட்டி மிகுந்த புகழ் பெறுகிறான். அவனது பாத்திரப் படைப்பு எனக்கு கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தை நினைவூட்டியது.

இன்னொரு கதை சதாசிவப் பண்டாரத்தினுடையது. வாழ்வின்மீது பற்றற்ற பண்டாரம் வீட்டைத் துறந்து கோயில் வாசலில் போய் உட்கார்ந்து கொள்ளுகிறது. அம்மா வந்து அரற்றியும் மனம் இரங்குவதில்லை. நாய் ஒன்று பண்டாரத்தையே பார்த்துக் கொண்டு நிற்கிறது. நீ சோறு தின்று சோம்பிக் கிடக்கத்தான் சன்யாசியானாயோ? என்று அந்த நாய் கேட்பதைப் போலிருக்கவே, எழுந்து உறுதியுடன் நாயையே பின் தொடர்கிறது பண்டாரம். நாய் பண்டாரத்தை கிராமம் கிராமமாகக் கூட்டிச் செல்கிறது. ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தியுடன் அவருக்குத் தொடர்பு ஏற்படுகிறது. அவள் கர்ப்பமுறுகிறாள். நாய் அங்கிருந்து நகராததால், பண்டாரமும் அங்கேயே வீட்டு வேலைகளை செய்து கொண்டு தங்கிவிடுகிறது. அவள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நாய் அங்கிருந்து ஓடுகிறது. பண்டாரமும் அதன்பின்னேயே புறப்பட்டு விடுகிறது. நாய் அவரைப் பட்டினத்தார் சமாதியான இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. ஒருநாள் பண்டாரம் களிப்போடு, குதித்துக் கொண்டாடியபடியே அருகிலிருக்கும் மடம் ஒன்றில் புகுந்து தாழிட்டுக் கொள்கிறது. அதற்கப்புறம் அடைத்த கதவு திறப்பதே இல்லை.

அடுத்த கதை குடும்பச் சொத்தைக் காப்பாற்றுவதற்காய் பங்காளியிடம் போராடிக் கொண்டிருக்கும் கிருஷ்ணப்பக் கரையாளருடையது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான எலிசபெத்தை அழைத்துக் கொண்டுபோய் மேல்மலையில் தங்கி இருக்கிறார். மலைவாசம் அவர் மனதை மெல்ல கனியச் செய்கிறது. வழக்கு முடிந்தால் சொத்து முழுவதையும் இழந்து விடுவோம் என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்த மேல் மலையையாவது காப்பாற்றி விட வேண்டுமென்று உறுதியோடிருக்கிறார். பங்காளியிடம் சமாதானம் பேசி மேல்மலை தவிர அனைத்தையும் அவனுக்கே கொடுத்து விடுகிறார். மேல்மலையை எலிசபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆங்கிலேயர் தேயிலை பயிரிடுவதற்கு அது ஒரு துவக்கமாக அமைந்து விடுகிறது.

மலையின் வசீகரங்களும்,காட்டின் ரகசியங்களும் எஸ். ராவின் வருணனையில் உயிர் பெறுகின்றன. இரவை மட்டுமல்ல, வெயிலையும் பல்வேறு கோணங்களிலிருந்து உற்றுநோக்கித் தன் வருணனைகளால் அடர்ந்த குறியீடுகளாக மாற்றி விடுகிறார் எஸ். ரா. ஆனாலும் திரும்பத் திரும்ப படிமங்களை உள்ளடக்கிய வருணனைகள் வருவது ஒரு சாதாரண வாசகனான எனக்குச் சலிப்பையூட்டியது. நாவலில் ஆங்காங்கே நிறைய எழுத்துப் பிழைகள் தென்படுகின்றன. பாத்திரங்களின் பெயர்களில் கூட வரும் எழுத்துப் பிழைகள் பாத்திரத்தின்  உண்மையான பெயர் எது என்பதை நாமேதான் ஊகித்துக் கொள்ளவேண்டும் என்ற அளவிற்கு இருந்தது சற்று எரிச்சல்தான். அடுத்த பதிப்பில் தவிர்த்து விட வேண்டும்

நாவலின் தொடர்ந்த வாசிப்பில் சுதந்திரத்துக்கு முந்தைய மதராப் பட்டிணம் கண்முன் உருக்கொள்கிறது. பட்டிணத்தை ஒயிட் டவுன், பிளாக் டவுன் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தியர்கள் பிளாக் டவுனில் உள்ள ஏழுகிணற்றிலிருந்து வெள்ளையர்களுக்கு நீர் எடுக்கப் போவதை எதிர்த்துப் போராடும் இந்தியர்கள் மீது நடக்கும் தாக்குதல் ஜாலியன் வாலாபாக்கை நினைவூட்டியது. போதையூட்டும் நீலாவரணச் செடிகளும், ஒளிரும் ஸ்வேதாமிணிச் செடிகளும், கிளர்ச்சியூட்டும் தி கிராண்ட் விர்த் சர்க்கஸ் போன்ற ஸ்வாரசியமான விஷயங்களும் நாவல் நெடுக சிதறிக் கிடக்கின்றன. சதாசிவப் பண்டாரத்தின் கதை தவிர எல்லாக் கதைகளிலும் வரும் யாரோ ஒருவருக்கு யாமம் பிடித்தமான அத்தராக இருக்கிறது. பண்டாரத்துக்கும் இந்த நாவலுக்கும் என்ன தொடர்பு என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன். மனைவி துரோகம் செய்த உண்மை அறிந்து விரக்தியில் அமர்ந்திருக்கும் திருச்சிற்றம்பலம் ஒரு நாய்க்கூட்டத்தைப் பார்த்து அதன் பின்னேயே போய்விடலாமா என்று நினைக்கிறான். இது பண்டாரத்தை நினைவுபடுத்தியது. வேறு ஏதேனும் தத்துவ ரீதியிலான கயிறு எல்லாக் கதாபாத்திரங்களையும் இணைக்கிறதா என்று தெரியவில்லை.  அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
 

5 comments:

Raja M said...

நல்ல பரிந்துரை. யாமத்தைப் படிக்கத் தூண்டும் பதிவு. முகலாயர் காலத்தின் முடிவிலும், ஆங்கிலேய ஆதிக்கத்தின் தொடக்கத்திலும் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிக்கும் நாவல் போலும். உங்கள் பரிந்துரையைப் படித்த வுடன் என் மனதில் எழுந்த கேள்வி. ஏன் பண்டாரத்தை, அது என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்? எஸ்.ரா வும் அப்படித்தான் சொல்கிறாரோ? நாய், பண்டாரத்தின் மனநிலைக்கான உருவகம் எனப் படுகிறது.

சுவராஸ்யமான பதிவு. மிக்க நன்றி.

clayhorse said...

பண்டாரத்தை 'அது' ,'இது' என்றுதான் க.நா.சு.வும் 'பொய்த்தேவு' நாவலில் குறிப்பிட்டுள்ளார். அதுதான் வழக்கம் போலிருக்கிறது.

Jegadeesh Kumar said...

எஸ்.ரா பண்டாரத்தை அது என்றுதான் குறிப்பிடுகிறார். எதனால் என்று தெரியவில்லை. ஒருவேளை ஆண், பெண் பேதம் தாண்டிய ஞானிகளை அது என்று விளிப்பதுதான் பொருத்தமோ?(கதையில் பண்டாரத்துக்கு அந்த பேதம் நன்றாகவே தெரிகிறது)

தன்னுடைய குருவே நாய் உருவில் தனக்கு வழிகாட்டுவதாக நினைக்கிறது.

பொய்த்தேவு படித்ததில்லை பாஸ்கர். கொஞ்சம் எழுதுங்களேன்.

Nattu said...

Hi..yeah..i aslo read that novel...
//நாவல், நான்கு பெருங்கதைகளின் தொகுப்பாக இருப்பினும் கதா பாத்திரங்களில் பெரும்பாலானவர்களை இணைக்கும் மெல்லிய சரடாக யாமம் என்கிற அத்தர் இருக்கிறது. வெளிப்படையாகப் பார்க்கும் போது நான்கு தனிக் கதைகளைப் படிப்பது போலவே இருப்பினும் ஆழ்ந்த வாசிப்பில் கதைமாந்தர்களுக்கிடையே ஊடாடும் ரகசியங்களின், குண இயல்புகளின், மனத்திரிபுகளின் ஒற்றுமைகளை, ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கிறது.//

nice comment!!

Anonymous said...

buy this book @ http://www.myangadi.com/yamam-uyirmmai-pathippagam

Post a Comment