Wednesday, February 10, 2010

விஷ்ணுபுரம் - மற்றுமொரு விமர்சனம்

விஷ்ணுபுரத்தின் மீதான விமர்சனங்களையும் விவாதங்களையும் தொகுத்தாலே தனியாக ஒரு பெரிய புத்தகம் போடலாம் போலிருக்கிறது.  இதோ, அதன் தாக்கத்தால் உருவான மற்றுமொரு வாசகர் சண்முகம் (ஹ்யூஸ்டன்) அவர்களின் விமர்சனம்...

காலத்தின் பெருவெளியில் உயரத்திலிருந்து, விஷ்ணுபுரம் எனும் ஊரை மையமாக கொண்டு, மூன்று வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மானுடர்களின் ஞானத்தேடலைப் பற்றிய தரிசனமே விஷ்ணுபுரம். பலர் தேட, வெகு சிலரே கண்டடைய, தத்துவங்களைச் சுற்றி மதங்களும், அரசியலும் அதிகாரம் செலுத்த, ஆதி தெய்வ வழிபாட்டை வைதீகம் அபகரிக்க, வைதீகத்தை பௌத்தம் வெற்றி கொள்ள, வைதீகம் மீண்டும் மீள என மதங்கள் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்க, ஒரு காலத்தில் நடக்கும் அதர்மங்களும் அபத்தங்களும் பின்னர் ஐதீகங்களாய் மாற - என பன்முகமாய் பிரம்மாண்டமாய் விரிகிறது.


இந்த நாவல் விஷ்ணுபுரம் என்னும் ஊரைக் காட்டிலும், அங்கு வாழும் மனிதர்களைக் காட்டிலும், அந்த ஊரில் பல்வேறு மனிதர்கள் உண்மையையும் மோட்சத்தையும் தேடுவது பற்றியது. மதத்தின் வழியாகவும், தருக்கம் விவாதம் வழியாகவும், காமத்தில் திளைத்தும், காமத்தைத் துறந்தும், கருமத்தில் - சிற்ப சாஸ்திரத்தில் ஈடுபட்டும் என பல்வேறு தேடல்கள். இவையனைத்தும் இந்து ஞான மரபு கூறும் பல வழிகள்.

ஞானியோ இல்லையோ, தேடியதைக் கண்டார்களோ இல்லையோ, அனைவரும் பாகுபாடின்றி மடிகின்றனர். ஆக தேடுவதே சாஸ்வதம், மற்றும் தேடுதலுக்கான சுதந்திரத்தையும் பல்வேறு வழிகளையும் இந்து ஞான் மரபு அளித்திருக்கிறது என காட்டுவதே இந்நாவலின் முக்கிய தரிசனம்.

சுவராஸ்யமான விஷயங்களும், உபகதைகளும் ஏராளமாய் சொல்லப்பட்டிருக்கிறது. தன் பிஞ்சு மகனை இழந்த சங்கர்ஷணின் மனத்தவிப்பை, பிதற்றலை - வேறு எங்கும் இவ்வளவு உக்கிரமாக, உருக்கமாக படித்ததில்லை. விஷ்ணுபுரத்தில் விவாதங்கள் மட்டும் நடைபெறுவதில்லை, யானையின் கண்களில் பசும்பால் ஊற்றி வைத்தியம் பார்க்கப்படுகிறது, அப்பத்துக்கு அலையும் பரதேசி வண்டி முழுக்க இருந்த அப்பங்கள் மேலே விழுந்து 'இஷ்ட மோக்ஷம்' அடையும் அபத்தம், ஊரின் எல்லையில் வாழும் விளிம்பு நிலை மனிதர்களான ஓரினச் சேர்க்கையாளர்கள் வியாதியால் துன்புற்று வைத்தியம் பார்க்க வழியின்றி அலைவதும், வானளாவிய கோபுரங்கள் விஷ்ணுபுரத்தை அலங்கரித்தாலும், கீழ் நிலை மக்கள் வாழும் வசிப்பிடங்களின் பின்புறத்தில் மலக்குவியல்கள் மலை போல் நாறிக்கிடப்பதும், முன்பொரு காலத்தில் தளபதியாய், ஏகபோகமாய் வாழ்ந்த வல்லாளனின் வம்சவழி வந்த மாதவன் தான் விரும்பிய ஒரு சாதாரண பெண்ணைக்கூட மணமுடிக்காமல் போகும் முரண் என - நிறையவே சுவராஸ்யமான புனைவுகள். மற்ற வாசகர்களுக்கும் இதேபோல அவர்களைக் கவர்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும் என உறுதியாகச் சொல்ல முடியும்.

லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' நாவலை 'வடிவமற்ற வடிவம்' என சிலர் கூறுவதுண்டு. அப்படியானால், விஷ்ணுபுரத்தை 'கட்டற்ற வடிவமற்ற வடிவம் (?) ' எனச் சொல்லலாமா ! தத்துவம், வரலாறு, மதம், அரசியல் எனப் பல தளங்களைப் பின்னிப் பினைந்து புனைந்திருக்கிறார். இப்படி ஒரு முயற்சி, தமிழில் மட்டுமன்றி, வேறு ஏதாவது மொழியிலோ, ஏன் சர்வதேச அரங்கிலும் சாத்தியப்பட்டிருக்கிறதா என்ற எண்ணம் உண்டாகிறது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த நாவல் முறையாக ஆய்வுக்கு உட்பட்டு, விஷேச கவனமும் பெரும் புகழும் அடையலாம்.

இந்த நாவலின் பின்னால் உள்ள அபரிதமான உழைப்பு மீண்டும் மீண்டும் வாசகனை மலைக்க வைக்கக் கூடியது. தமிழில், கடந்த நாறாண்டுகளில் வந்த சிற்றிலக்கியப் படைப்புகளில், மிகத் தீவிரமான இலக்கியப் படைப்பு என தாராளமாய் கொள்ளலாம். மிகச் சிறந்த படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார் ஜெயமோகன். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். ஜெயமோகனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

நிற்க. 'விஷ்ணுபுரம்' இவ்வாறெல்லாம் அமையப் பெற்றிருந்தும், என்னைப் போன்ற வாசகனை வசீகரிக்க முடியாமல் போனது வருத்தமே. அதன் காரணங்களை இங்கே விளக்க முற்பட்டிருக்கிறேன்.

இந்த நாவலில் வரும் பாத்திரங்களே மூன்று வெவ்வேறு பாகங்களாய் இயற்றியது போல், ஒரு பாணனால் சொல்லப் படுகிறது. இடைக்காலம், முன்பகுதி, பின்பகுதி என்று (நேரான வரிசைக் கிரகத்தில் இல்லாமல்), இந்த நாவல் ஆரம்பம் முதலே சிக்கலுடனும் முடிச்சுகளுடனும் தொடங்குகிறது.

நிறைய யுக்திகள், உள்பிரிவுகள், படிமங்கள், தத்துவங்கள், விவாதங்கள், சாஸ்திரங்கள் என பல பரிமாணங்களில் பிரம்மாண்டமாய் விரவிச் சென்றாலும், மைய நோக்கம் என்று ஒன்று இல்லை. வாழ்க்கை மைய நோக்கமற்றது. ஆனால், என்னூறு பக்கங்களும், மூன்று பாகங்களும், வெவ்வேறு காலகட்டத்திலுள்ள மூன்று தலைமுறைகளையும், ஐந்நூற்றிக்கும் மிகையான பாத்திரங்களும் கொண்ட நாவல், மைய நோக்கமல்லாது இருப்பது பிரமிப்பூட்டுவதாய் இருந்தாலும் ஒரு நிறைந்த வாசிப்பனுபவத்தை அளிக்கத் தவறுகிறது. உண்மை மகத்தானது, தீ போன்றது தான், ஆனால் அதையே பட்டவர்த்தனமாக நாவல் முழுக்கத் தேடும் போது சலிப்பையே உண்டாக்குகிறது.

முதல் பாகத்தில் கடினத்தோடும் தயக்கத்தோடும் விஷ்ணுபுரத்தில் நுழைந்து அங்குள்ள மனிதர்களோடு கலந்து, ஊரையும் சுற்றி, இரண்டாம் பாகத்தில் ஞானசபையில் உற்சாகமாக நிமிர்ந்து கலந்திருந்து இன்னும் அங்கு மேலும் இருக்க யத்தனிக்கையில், மூன்றாம் பாகத்தில் விஷ்ணுபுரத்தில் இருந்து வலுக்கட்டாயமாக உந்தி வெளியே தள்ளப்பட்டது போல உணர்ந்தேன்.

கேள்விகளுடனும் குழப்பங்களுட்னும் பல இடங்களில் ஓடியும். பல இடங்களில் அற்புத சிருஷ்டிகரத்தில் லயித்தும், சில சமயம் ஓட முடியாமல் தனித்துத் தவிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக, கூடு விட்டுக் கூடு பாயும் காஸ்யப்பர் என்ன ஆனார் ? மேலும், தத்துவங்கள், விவாதங்கள், உரையாடல்கள் என மிக அடர்த்தியான விஷயங்கள் காட்டுப்பூக்களைப் போல வரையறையின்றி ஆங்காங்கே வருவது நாவலை ஒரு சாரமாக கோர்த்துச் செல்வதை தடை செய்கிறது. குறிப்பாக, மூன்றாம் பாகத்தில், திகட்டலையும் சோர்வையும் தர ஆரம்பித்து விடுகின்றன. கனமான உரையாடல்கள் நாவலின் சூழ்நிலையையும் மீறி, பீறிட்டு ஓடுகிறது. ஜெ வாசகனை சிந்திக்க விடுவதாய் இல்லை; ஏனெனில் வாசகனுக்கு இதையும் மீறி சிந்திப்பதற்கோ, தர்க்கம் செய்வதற்க்கோ ஒன்றும் விட்டு வைக்க வில்லை. இதனால் நாவலில் பங்கேற்க முடியாமல் வெறும் பார்வையாளனாகவே வாசகன் உணர்வது தவிர்க்க முடியாதது.

இந்த நாவலினூடே இரண்டு ஆதார சுருதிகளை நான் காண்கிறேன். ஒன்று, பிரம்மாண்டமான இலக்கியப் படைப்பை உருவாக்கும் நாவலாசிரியரின் அதீத தன்முனைப்பு. பிரம்மாண்டமாய் படைக்க வேண்டும் என்ற உத்வேகம் கட்டட்ற காட்டாறு போல இந்த நாவல் முழுக்க உணர்வது ஒரு செயற்க்கைத் தன்மையை உண்டாக்குகிறது. கடந்த நூறாண்டுகளில், உலக அரங்கில் வெளிவந்த சிறந்த இலக்கியப் படைப்புகளின் நாவல் யுக்திகள் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கக்கூடும். அபாரமான புனைவின் மூலம்,
இது வாசகனிடத்து பிரமிப்பை உருவாக்கினாலும், ஆசிரியர் அறிவின் தளத்திலேயே இயங்குகிறார். ஜெ நாவல் முழுதும் பாத்திரங்களை மீறி, மறைந்தோ, பூடக்மாகவோ, சூட்சமமாகவோ வியாபித்து இருக்கிறார். இதனால், ஒரு நுண்ணிய ஆனால் மறுக்கமுடியாத ஒரு இடைவெளியை உருவாக்கி, நாவலில் இரண்டறக் கலக்கும் ஒரு வாய்ப்பை அளிக்கத் தவறி விட்டாரோ ? நாவலில் வரும் மாந்தர்கள் தன்னிச்சையான பாத்திரத்திற்க்குப் பொருத்தமான இயல்போடு இல்லாமல், நாவலாசிரியரின் சொற்களையும், சிந்தனைகளையும் - பேசுகிறார்கள், சிந்திக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உதாரணமாக தன்னைப் பற்றிய சுய அறிவும் தன் தருக்கத்தின் எல்லையையும் உணர்ந்தவராக அஜிதரின் பாத்திரம் உருவாக்கப்படுகிறது. ஆனால் பௌத்தம் தளையெடுத்த பிறகு, சந்திரகிரியாரின் ஆட்சியில் விஷ்ணுபுரம் நலிவுற்று சோரமிழந்து போகும் வரையிலும், தான் சாகும் வரையிலும் ஒன்றும் செய்யாமல் வாளாவிருக்கிறார் என்பது அதுவரை கவனமாக செதுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஒவ்வாததாகப் படுகிறது. மூன்றாம் பாகத்தில், பெரும்பாலானோர் அவசியமின்றி கொல்லப் படுகிறார்கள். கதை மாந்தர்கள் ஓரளவு நமக்கு பரிச்சயமாகியபின் அவர்களோடு நடந்து செல்லளாமென முனையும் போது விலகிப் போகிறார்கள் அல்லது விலக்கப் படுகிறார்கள்.

இரண்டு, இந்து ஞான மரபையும், ஞானத் தேடல்களையும் தான் ஆசிரியர் பிரதானமாய் முன்னிருத்துகிறார். அதனால் அவசியமாகிறது பாத்திரங்கள். மதத்துக்காகவும் தத்துவங்களுக்காகவும் மனிதர்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த நாவலில் வரும் எந்த பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. மனதில் பதியும் படியான கதையும் அல்ல

உதாரணமாக, இந்நூற்றிண்டின் மாபெரும் இலக்கியப் படைப்புகளான 'போரும் அமைதியும்', 'கரமஸாவ் சகோதரர்கள்' ஆகிய நாவல்கள், மனிதர்கள் சக மனிதர்களுடன் கொள்ளும் உறவை ஆதாரமாகக் கொண்டு, வாழ்க்கையையும் அது சார்ந்த தத்துவங்களையும் அவதானிக்கின்றன. விஷ்ணுபுரம் - தத்துவங்களையும், மதங்களையும் ஆதாரமாகக் கொண்டு, உண்மையையும் மோட்சத்தையும் தேடும் மனிதனை அவதானிக்க முயல்கிறது. மனிதன், மனிதனோடு கொள்ளும் உறவு பற்றியதல்ல, இந்நாவல். என்னை ஈர்க்காமல் போனதற்கு முக்கியமான காரணமாய் இதையே நான் முன்னுரைப்பேன்.

ஏன் இப்படி படைக்கக் கூடாதா ? 'தத்துவம் எழுத்தாளனுக்கு உதவாது' என சிலர் கூறுவதுண்டு. தத்துவங்களே பிரதானமாக கொள்வது நாவலுக்கு உதவாது என்றே எனக்குப் படுகிறது. வாசகன் மனிதர்களோடு உறவாட முடியும்; தத்துவங்களோடு அல்ல. தத்துவங்களாய்ப் படைக்கப்பட்ட மனிதர்களோடும் அல்ல.

பாமர மக்களை ஏமாற்றும் வைதீகர்களை ஆங்காங்கே நன்றாக பகடி செய்திருந்தாலும், 'விஷ்ணுபுரம் அழியும்' என்ற ஐதீகம் முடிவில் உண்மையாவது முரண்பாடாய் தோன்றுகிறது. மேலும், பௌத்தம் சுருதிபேதமாய் வெரும் விவாத வடிவில் மட்டும் வந்து மறைகிறது. சமுதாயத்தின் பல அடுக்குகளில் நடக்கும் விஷயங்களை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருந்தும், சாதி ஆகிய ஸ்மிருத்திகள் எவ்வாறு அக்கால கட்டத்தில் இருந்தன என்பதை ஒதுக்கியது, இருட்டடிப்பு செய்வது போல இருந்தது.

இந்த நாவலில் மிகுதியாக உபயோகித்திருக்கும் சமஸ்கிருதம், முக்கியமாக ஞான சபை விவாதம் (ஐம்பது பக்கங்களுக்கும் மிகுதியாக) - பெரும்பான்மையான வாசகர்களை மலைத்திருக்கச் செய்யும்,  விவாதங்களை உள்வாங்க முடியாவிட்டாலும் கூட. ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள சமஸ்கிருத சொல்லின்  தமிழாக்கம் பின் குறிப்பாய் அந்தப் பக்கத்திலேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு நீண்ட விவாதம் ஒரு நாவலுக்கு அவசியம் தானா என்ற கேள்வி எழுகிறது. மனிதர்களைக் காட்டிலும் தத்துவங்களை முன்னிலைப்படுத்துவதால், தவிர்க்க முடியாமல் போகிறது போலும் இந்த நீண்ட தத்துவ விவாதம் ?!

ஆக, பிரம்மாண்டத்தையும் சுவராஸ்யமான புனைவையும் மீறி இந்த நாவலில் சிறப்பாக என்னால் எதையும் கூற முடியவில்லை. விரிவாய் இருப்பினும் ஆழமாய் இல்லையே என்ற எண்ணம் உண்டாகிறது. விஷ்ணுபுரம் - புனைவு மற்றும் எழுத்தாளுமையின் உச்சம். அபாரமான படைப்பூக்கம், தத்துவ விசாரணைகள், செதுக்கிய சிற்பம் போல் விவரணைகள். மகா பிரம்மாண்டம். ஆமாம், விஷ்ணுவே தான் ! ஆனால் அவதரிக்கத் தவறி விட்டாரோ ?

4 comments:

Raja M said...

சண்முகம்:

விஷ்ணுபுரம் படிக்கும் போது ஒரு வாசகனுக்கு ஏற்படும் உணர்வுகளை அழகாய் படம் பிடித்து இருக்கிறீர்கள். விஷ்ணுபுரத்தில் உள்ள எந்தப் பாத்திரமும் வாசகனிடம் ஒரு உணர்வுப்பூரனமான முதலீட்டைக் கோருவதில்லை என்பது ஒரு கூரிய கவனிப்பு. பல பாத்திரங்கள், அறிவு (intellectual), அகவய (psychological), தளங்களில் பலவானாகவும், உணர்வுத் (emotional ) தளத்தில் பலஹீனர்கலாகவும் இருப்பது ஒரு ஒவ்வாமை தான். ஒரு படைப்பை முழுமையாக மதிப்பிட, பற்பல வாசகர்களின் வேறுபட்ட விமரிசனங்கள்/பார்வைகள் மிகவும் உதவும். தேவையும் கூட.

நீங்கள் எழுதியதைப் போல, "இன்னும் சில ஆண்டுகள் கழித்து இந்த நாவல் முறையாக ஆய்வுக்கு உட்பட்டு, விஷேச கவனமும் பெரும் புகழும் அடையலாம்." திறனாய்வுகள், எழுத்தை ஒரு தொழில் நுட்ப ரீதியில் எடை போடும்; அவை ஒரு குறிப்பிட்ட வளையத்தை விட்டு (எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், என) எழுத்தை வெளிக் கொண்டு வர உதவாது. நீங்கள் எழுதியதைப் போன்ற நேரடி, வாசகர்களின் எண்ணங்கள், படிக்கத் தயங்கும் வாசகர்களை, விஷ்ணுபுரத்தைப் படிக்கத் தூண்டும் என்றே நினைக்கிறேன்.

விஷ்ணுபுரம், எழுதி பதிமூன்று வருடங்கள் ஆகிய பின்னரும், இன்றும், அதை பல வாசகர்கள் தேடிக் கண்டு பிடித்து, படிக்கிறார்கள். தத்தம் நண்பர்கள் குழாமுடன் விவாதிக்கிறார்கள். விஷ்ணுபுரத்தை எந்த ரகத்தில் சேர்ப்பது என்று தடுமாறுகிறார்கள்; திகைக்கிறார்கள். அதுவே, விஷ்ணுபுரத்தின் வலிவும் கூட.

அன்புடன்,
ராஜா

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Unknown said...

இதைப் படிக்கவும் ஒருவித மோனநிலையில் அப்பியாசம் செய்தபடியிருத்தல் அவசியம்.. ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலொழிய அல்லது கதையோட்டத்தில் இலயித்தாலொழிய இதனை தொடருதலென்பது இயலாததாகிவிடும்.. எத்தனை விதமான கள ஆய்வுகளை ஜெ செய்திருப்பாராயின் இத்தகையதொரு படைப்பிலக்கியத்தை நிறுவியிருக்கமுடியும் என்பதில் ஆகப்பெரிய வியப்பேற்படுகிறது.. விவரணைகள் வெள்ளமாய் பிரவகித்துக் கொண்டே போகிறது.. கதை மாந்தர்கள் கண்முன்னே நடமாடுகிறார்கள்.. வித்யாமண்டபத்திலும் கணிகையர்வீதிகளிலும் சோனாநதிக்கரையிலும் ஆதார் அட்டை இல்லாமலேயே நம்மை அலையவிட்டிருக்கிறார் ஜெ.. ௵பாதத் திருவிழாவில் கூடும் மாந்தர்களை விவரிப்பதிலாகட்டும் சங்கர்ஷணன் பத்மாட்சியிடையிலான தருக்க விவாதங்களாகட்டும்.. அனிருத்தனை இழந்து புலம்பும் சங்கர்ஷணன் மற்றும் லட்சுமியுடைய அவலப்பிழிவுகளாகட்டும் அவர்களோடு நம்மையும் சேர்த்து அழவைத்து விடுகிறார் ஜெ... கூடவே சூரியதத்தரின் ஆளுமைமிக்க கம்பீரத்தையும் அவரது மகன் அவரோடு செய்யும் தருக்கத்திலும் கணிகையர் வீட்டில் கன்னிப்பெண் ஒருத்தியை சீரழித்துவிட்டுக் கிளம்பும் வல்லாளனை விவரணை செய்வதிலாகட்டும் தேஜோமயமான தெய்வத்தைப் பிரஸ்தாபிப்பதிலாகட்டும் ஆஹா... அவ்வப்போது விஷ்ணுபுரம் பற்றிய வரலாற்றினை கதைதொடங்கி முடியும்வரை பொன்தூவலாய் அதேசமயம் சாமானியர்கள் புரிந்துகொள்ளமுடியாத வடமொழிப்பிரயோகங்களைப் பதிவிட்டு அந்த வார்த்தைக்கு என்ன அருஞ்சொற்பொருளாக இருக்கும் என நம்மையும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைத்து அகராதிகளை தேடி ஓடவைத்த பெருமையும் ஜெவையே சாரும்... ஞானசூனியமாய் இருக்கும் வாசிப்பாளர்களுக்கெல்லாம் இந்நூல் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. புரியவில்லை என்று சட்டென்று கடந்துபோகவும் இயலாமல் கதையோட்டத்திலேயே அமிழ்த்திவைத்து திரிசங்குவின் மனநிலையில் நம்மை வைத்துவிடுகிறார் ஜெ.. இந்நூலைப் படித்து முடித்து வைக்கும்போது ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் இறுதியில் புரண்டு படுக்கும் அந்த விஷ்ணுவைப் போலவே யதார்த்த வாழ்வின் பிடியிலிருந்து நம்மையும் ஒருகணம் பரட்டிப்போட்டு விடுகிறது இந்நூல்..
ஒரு சாமானியன் தொட முடியாத இலக்குகளை சர்வசாதாரணமாக ஜெ தொட்டிருக்கிறார் எனில் இந்நூலைப் படைக்க அவர் முன்னுரையில் கூறியுள்ளபடி ஆத்மார்த்தமான தத்துவார்த்தமான ஒரு மோனநிலையில் அல்லது தேவநிலையில் தனது புலன்களையடக்கிய துறவியின் மனோநிலையில் ஆழ்ந்து இலயித்தாலொழிய இது சாத்தியமாகி இருக்காது என்பது சத்தியம்...
வாழ்த்துக்கள் ஜெயமோகன் சகோதரரே...!

Unknown said...

இதைப் படிக்கவும் ஒருவித மோனநிலையில் அப்பியாசம் செய்தபடியிருத்தல் அவசியம்.. ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலொழிய அல்லது கதையோட்டத்தில் இலயித்தாலொழிய இதனை தொடருதலென்பது இயலாததாகிவிடும்.. எத்தனை விதமான கள ஆய்வுகளை ஜெ செய்திருப்பாராயின் இத்தகையதொரு படைப்பிலக்கியத்தை நிறுவியிருக்கமுடியும் என்பதில் ஆகப்பெரிய வியப்பேற்படுகிறது.. விவரணைகள் வெள்ளமாய் பிரவகித்துக் கொண்டே போகிறது.. கதை மாந்தர்கள் கண்முன்னே நடமாடுகிறார்கள்.. வித்யாமண்டபத்திலும் கணிகையர்வீதிகளிலும் சோனாநதிக்கரையிலும் ஆதார் அட்டை இல்லாமலேயே நம்மை அலையவிட்டிருக்கிறார் ஜெ.. ௵பாதத் திருவிழாவில் கூடும் மாந்தர்களை விவரிப்பதிலாகட்டும் சங்கர்ஷணன் பத்மாட்சியிடையிலான தருக்க விவாதங்களாகட்டும்.. அனிருத்தனை இழந்து புலம்பும் சங்கர்ஷணன் மற்றும் லட்சுமியுடைய அவலப்பிழிவுகளாகட்டும் அவர்களோடு நம்மையும் சேர்த்து அழவைத்து விடுகிறார் ஜெ... கூடவே சூரியதத்தரின் ஆளுமைமிக்க கம்பீரத்தையும் அவரது மகன் அவரோடு செய்யும் தருக்கத்திலும் கணிகையர் வீட்டில் கன்னிப்பெண் ஒருத்தியை சீரழித்துவிட்டுக் கிளம்பும் வல்லாளனை விவரணை செய்வதிலாகட்டும் தேஜோமயமான தெய்வத்தைப் பிரஸ்தாபிப்பதிலாகட்டும் ஆஹா... அவ்வப்போது விஷ்ணுபுரம் பற்றிய வரலாற்றினை கதைதொடங்கி முடியும்வரை பொன்தூவலாய் அதேசமயம் சாமானியர்கள் புரிந்துகொள்ளமுடியாத வடமொழிப்பிரயோகங்களைப் பதிவிட்டு அந்த வார்த்தைக்கு என்ன அருஞ்சொற்பொருளாக இருக்கும் என நம்மையும் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைத்து அகராதிகளை தேடி ஓடவைத்த பெருமையும் ஜெவையே சாரும்... ஞானசூனியமாய் இருக்கும் வாசிப்பாளர்களுக்கெல்லாம் இந்நூல் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. புரியவில்லை என்று சட்டென்று கடந்துபோகவும் இயலாமல் கதையோட்டத்திலேயே அமிழ்த்திவைத்து திரிசங்குவின் மனநிலையில் நம்மை வைத்துவிடுகிறார் ஜெ.. இந்நூலைப் படித்து முடித்து வைக்கும்போது ஒரு மிகப்பெரிய பிரளயத்தின் இறுதியில் புரண்டு படுக்கும் அந்த விஷ்ணுவைப் போலவே யதார்த்த வாழ்வின் பிடியிலிருந்து நம்மையும் ஒருகணம் பரட்டிப்போட்டு விடுகிறது இந்நூல்..
ஒரு சாமானியன் தொட முடியாத இலக்குகளை சர்வசாதாரணமாக ஜெ தொட்டிருக்கிறார் எனில் இந்நூலைப் படைக்க அவர் முன்னுரையில் கூறியுள்ளபடி ஆத்மார்த்தமான தத்துவார்த்தமான ஒரு மோனநிலையில் அல்லது தேவநிலையில் தனது புலன்களையடக்கிய துறவியின் மனோநிலையில் ஆழ்ந்து இலயித்தாலொழிய இது சாத்தியமாகி இருக்காது என்பது சத்தியம்...
வாழ்த்துக்கள் ஜெயமோகன் சகோதரரே...!
அன்புடன்
அழ. இரஜினிகாந்தன்
இந்த நூலைப் படிக்கும்வரை எழுத்தாளன் என்று இறுமாந்திருந்தவனும் தற்போது அவ்விதமான எண்ணம் கிஞ்சித்தும் இன்றி இருப்பவனுமாகியவன்

Post a Comment