Saturday, February 6, 2010

நாளை மற்றும் ஒரு நாளே!

முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான  நாவல் இது.  எழுத்தாளர் ஜி. நாகராஜனின் எழுத்தின் நேரடித் தன்மை, இன்றைய வாசகனைக்கூடத் திகைக்க வைத்து, பரவசத்துக்குள்ளாக்கும். அவர் எழுத்து, எந்த முலாமும், வார்த்தை ஜாலமும் இல்லாதது.  தமிழில் தனித்தன்மை கொண்ட அவரது எழுத்து, எந்தக் கட்டுப்பாட்டுக்கும் தலை சாயாதது.

கதையின் நாயகன் கந்தன் ஒரு குடிகார ரௌடி. தன் மனைவியையே 'வியாபாரத்துக்கு' அனுப்புவன். ரௌடித் தனம் செய்யும் அவன் வாழ்க்கையில் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, கதாநாயகன் கந்தனைப் பற்றி வாசகர்களாகிய நாம் கொள்ளும் முன்தீர்மானங்களை மறு பரிசீலனைச் செய்யத் தூண்டும் கதை. கதாமாந்தர்கள் மூலம் நம் சமூகக் கட்டுப்பாடுகளின் அடித்தளத்தைப் பற்றிய வினாக்களை இந்தக் கதை எழுப்புகிறது. இவை அனைத்தையும் விட,
கந்தன் தன் மனைவியிடம் கொண்ட காதலை மென்மையாய் உணர்த்தும் அழகான காதல் கதையாகவும் அமைகிறது.  "அட பொண்டாட்டியை 'விற்று' வாழ்க்கை நடத்துபவனுக்கு அப்படி என்ன பொண்டாட்டி மேல் காதல்?" என்ற உங்கள் கேள்விக்கு எழுத்தாளர் அளிக்கும் நுட்பமான விடையை, "நாளை மற்றும் ஒரு நாளே"யில் படித்து அனுபவியுங்கள்.

ஒரு திறமையான ஓவியன், சின்னஞ்சிறு கோடுகளால் ஒரு தத்ரூபமான காட்சியை சித்தரிப்பதைப் போல, கொஞ்சம், கொஞ்சமாக, மிதமான, எளிமையான வார்த்தைகளில், கந்தனின் முழு  பரிமாணத்தையும் ஜி. நாகராஜன் வெளிக்கொணர்வது அற்புதமான எழுத்தாக்கம்.
இந்தக் கதையை மூன்று முக்கிய சரடுகள் கொண்டு நெய்து இருக்கிறார் ஜி. நாகராஜன்.  முதல் சரடு, கந்தன் போன்ற சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மனிதர்களின் உலகத்தின் நிரந்தரமற்ற தன்மையை விவரிப்பது.  அவனோடு குடிசைப்பகுதியில் வசிக்கும் குடிசை வாசிகளின் வாழ்வு மிகவும் கொடுமையானது.  எந்தவகை 'மினிமம் கியாரன்ட்டியும்' இல்லாதது.  கந்தனின் இடப் பக்க வீட்டில் இருக்கும் பெண்ணின் மகள், ஜீவா (கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவை கிண்டல் செய்கிறாரா, என்ன?),  ஒரு வண்டி இடித்ததனால், பேசும் சக்தியை இழந்து ஊமையாய் ஆகி விடுகிறாள். கந்தனின் வலப் பக்க குடிசையில் இருக்கும் நாவிதன்  பரமேஸ்வரன், சாதியை எதிர்த்து அக்ரகாரத்தில் கசாப்பு கடை வைத்தவனின் பெண்ணைக் காதலிக்கிறான்.  நாவிதனாவது, தன் பெண்ணைக் காதலிப்பவாவது? என்று கசாப்புக் கடைக் காரன், பரமேஸ்வரனை உத்தரத்தில் தூக்கு போட்டு சாகும் நிலைக்கு அனுப்புகிறான்.  கந்தனின் மகள், கீதா, சின்ன விஷக்கடிக்கு சரியாக மருந்து கொடுக்க முடியாமல் செத்துப் போகிறாள்.  கந்தனின் மகன், சந்திரன், சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விடுகிறான்.  இப்படி, இவர்களின் வாழ்க்கைக்கு, உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை.  கந்தன் காலையில் எழும் போதும் சரி, மதியம் மொட்டைத் தூக்கம் போடும் போதும் சரி, இரவில் சிறையில் தூங்கும் போதும் சரி, அவனுக்கு பல கனவுகள் வருகின்றன.  எந்தக் கனவிலும், அவன் பெரிய பணக்காரனாகவோ, வசதியாக வாழ்வதாகவோ இல்லை. எல்லாம் அவன் அன்றாட வாழ்க்கைப் பாட்டின் எதிரொலியாகவே இருக்கின்றன.  எந்த உத்தரவாதமும் இல்லாத வாழ்க்கையில், இம்மாதிரி கனவுகள் தவிர வேறென்ன இருக்கும்?

இரண்டாவது சரடு, கந்தனைப் போன்றவன் எப்படி, எதைக் கொண்டு, இந்த விளிம்புகளில் தங்களை நிலை நிறுத்திக்  கொள்கிறார்கள் என்பதை விளக்குவது.  கதையின் முதல் சில பக்கங்களிலேயே கந்தனின் வாழ்க்கையை எந்த மிகையுணர்ச்சியும் இல்லாமல் யதார்த்தமாக விவரிக்கிறார். காலையில் விழித்தெழும் கந்தனுக்கு, சரக்கு இல்லாமல் கை, கால் நடுங்குகிறது, வலி தாங்க முடியவில்லை. தரையில் இருந்து எழ முடியவில்லை.  அப்போது நினைக்கிறான், " இது குடிக்கிறதுனால வர்ற வியாதி இல்லை; குடியாததனாலே வர்ற வியாதி", என்று. அந்த சமயத்தில் கந்தனின் நண்பனின் மனைவி  ராக்காயி கந்தனிடம் தனக்கும் 'ஆள்' பிடித்து கொடுக்க அடி போடுகிறாள். எப்படிக்  கதை ஆரம்பிக்கிறது பாருங்கள்!  வீட்டில் மனைவி மீனா, கவரிங் வளையல்கள் வாங்க, தெருவில் பொருக்கி எடுத்து வைத்திருக்கும் சீசாக்களை எடுத்து ராக்காயியிடம் கொடுத்து, அதை விற்று, சரக்கு வாங்கி வரச் சொல்கிறான் கந்தன்.  எங்கே, அவள் தன் கைநடுங்கும், பலஹீனமான நிலையை பார்த்து விடுவாளோ என்று, வாங்கி வந்த சரக்கை ராக்காயி முன்னால் குடிக்காமல் அவளை விரட்டி விட்டு, கைகள் நடுங்க சரக்கைக் குடிக்கிறான். நடுக்கம் குறைகிறது.  இதைப் படிக்கும் போதே , இந்தக் கந்தன் சாதா ஆள் இல்லை என்று நமக்குத் தெரிகிறது.

சவரக் கடைக்கு போகும் கந்தனை, கடையில் உள்ள சிறுவன் தொட்டு சவரம் செய்யும் போது ஏற்படும் கிளர்ச்சியை, "... கந்தனுக்கு ஒரு ஆணுக்குரிய  ஆசை ஏற்பட்டது" என்று நுணுக்கமாக கவனித்துச் சொல்கிறார்.  அந்தக் கிளர்ச்சியின் ஆரம்பம், அவன் வீட்டுக்கு சென்றவுடன், தன் மனைவியுடன் நிகழ்த்தும் பகல் நேரப் புணர்ச்சியில் முடிகிறது.  புணர்ச்சிக்கு முன் நெகிழ்ந்திருக்கும் சமயத்தில் கந்தன் தன் மனைவியிடம் கேட்கிறான்: "ஆமா, நைட்டிலே அக்கா வூட்டுக்கு கண்டவனெல்லாம் வர்றானே, அப்பவும் ரொங்கிக் கிடந்திருக்கயா?" என்று.  என்ன கேள்வி பாருங்கள்? அந்த சமயத்தில் கணவன் கந்தனும், மனைவி மீனாவும் எந்த நெருடலும் இல்லாமல் அந்தரங்கமான விஷயங்களை இயல்பாய் பரிமாறிக் கொள்வதைப் படிக்கும் போது, நாம் அந்த வீட்டில், ஒரு சுவரில் இருக்கும் பல்லி போல உணர்கிறோம். ஜி. நாகராஜன், நம் சமூகத்தில் யாரும் கேள்வி கேட்கத் துணியாத அடித்தள வரம்புகளை, எந்த சட்டையும் செய்யமால் இலகுவாகத் தாண்டிப் போகிறார் - சில வார்த்தைகளில்.

சரி, கந்தன், எந்த நுட்பமும் இல்லாத, அன்னாடங்காச்சி முரடனாய் இருப்பானோ என்று நாம் நினைக்கும் போது, ஜி. நாகராஜன், அதை ஓரிரு வரிகளிலேயே பொய்யாக்கி விடுகிறார்.  கந்தன் குளித்து, சலவை செய்த துணிகளைப் போட்டுக் கொண்டு வெளியே போகிறான். வேலைக்கு கும்பலாகக் காத்திருக்கும் கூலி ஆட்களில் ஒரு சிறுமியை யதேச்சையாய் பார்க்கிறான்.  அவள் வயிற்றைப் பார்த்தவுடன், அவள் மாசமாய் இருக்கிறாள் என்று அவனுக்குத் தெரிந்து விடுகிறது.  அந்தக் கதையிலேயே அந்த ஒரே இடத்தில் மட்டும் தான் கந்தன் பதட்டப்பட்டுக் கேட்கிறான், "ஏம்பிள்ளே, இந்த அளவுக்கா விட்டிடுறது?" என்று.  கத்தியை வைத்து குடித்த ரவுடி குத்த வரும் போது, கோர்ட்டில் போலி வழக்கில் சிக்க வைக்க முயற்ச்சிக்கும் ஏட்டையாவை குறுக்கு விசாரணை செய்யும் போது, தன் கண் முன்னால் நடக்கும் கொலையை பார்க்கும் போது, எல்லாம் இல்லாத பதட்டம், அந்த பதினைந்து வயதுப் பெண் மாசமாய் இருப்பதைப் பார்க்கையில் அவன் குரலில் தெரிகிறது.  நம்மாலும் கந்தனின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

கந்தனுக்குத் தான் செய்யும் ரௌடித் தனம் நன்றாகத் தெரிகிறது.  அதற்கு எந்த அரசியல் முலாமோ, எந்த ஜோடனைகளையோ அவன் தேடுவதில்லை. கந்தனிடம், அண்ணே நீங்கள் செய்யும் தப்புக்கெல்லாம் என்ன காரணம் என்று முத்துச்சாமி கேட்கும் போது, கந்தன் வார்த்தைகளை மெல்லாமல், "கொழுப்புதான்" என்று நேரடியாகக் கூறுகிறான்.  கந்தனுக்குக் கட்சிகளிலோ, கொள்கைகளிலோ, கோஷங்களிலோ, எந்த நம்பிக்கையையும் கிடையாது.  அவனுக்கு ஒரு அடிப்படை நியாய உணர்வு இருக்கிறது.  அதைக் குறிக்கும்  அழகான இடம், கந்தனைக் கோர்ட்டில் பிடித்து விசாரிக்கும் இடம்.  கந்தன் மேல் போலி வழக்கு சுமத்துகிறார் ஏட்டைய்யா; கந்தன் தன் சார்பால் தானே வாதாட முற்படுகிறான். (அவன் சாதுர்யமாக வாதாடுவதை படிக்கும் போது நீங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது).  ஏட்டய்யாவுக்கும் தனக்கும் உள்ள முற்பகையை சுட்டிக் கட்டுகிறான். ஜட்ஜ், கந்தா, நீ அவர்கள் பண்ணிய தப்பை பற்றி சொல்லாமல், நீ செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல் என்கிறார். கந்தன் சொல்கிறான், "எசமான் சொல்றதும் சரிதானுங்க. நாங்களும் தப்பு பண்றோம் அவங்களும் தப்பு பண்றாங்க. இதுலே யாரு மொதல்லேன்ட்யாருங்க சொல்றது? குத்தத்த ஒத்துகிறேங்க எசமான்.  ஏட்டையா சொன்னபடி ஏதாச்சும்  சின்ன பைனா போட்டு விடுங்க", என்கிறான்.  கோர்ட்டில் போலிக் குற்றச்சாட்டை ஒத்துக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது,  அதைத் தன் வாழ்க்கையின் மொத்த சாரத்தில் நிறுத்திப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் நோக்கு, மனப்பக்குவம், அடிப்படை நேர்மை அவனுக்கு இருக்கிறது.  தான் யார் என்பதை முழுமையாக உணர்ந்த, போலித்தனமற்ற வாழ்க்கை நோக்கு தான் கந்தனின் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கிறது.  கந்தனை இப்படி மெல்ல, மெல்ல நம் மனதில் நம் அனுமதியில்லாமலேயே நுணுக்கமாக நுழைத்து விடுகிறார் ஜி. நாகராஜன்.
மூன்றாவது சரடு, கந்தனின் அகவயப் பட்ட நுண்ணிய உணர்வுகளை குறிப்பது.  கந்தன் படித்தவனல்ல.  கந்தனுக்கு தன் தேவைகளை பற்றிய ஸ்திரமான உணர்வு இருக்கிறது.  தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சாதுர்யமும், தைரியமும் அவனிடம் இருக்கிறது.   அவன் வீணாக சிக்கலான மன உளைச்சல்களுக்கு ஆளாவதோ, எந்த விஷயத்தைப் பற்றியும் விரிவாகப்  பேசுவதோ இல்லை.  அவன் நடத்தை மூலமாகவே அவனது நுண்ணிய உணர்வுகளை, கதை செல்லச் செல்ல, விரிவு படித்துக் கொண்டே போகிறார் ஜி. நாகராஜன்.

கதை முழுக்க கந்தனின் மனைவி மீனா மிகச் சில வாக்கியங்களே பேசுகிறாள்.  அவள் பேசும் எதுவும் மனதில் நிற்பதில்லை.  (இந்த ஒன்றைத் தவிர.  தன் மகனுக்காக சண்டை போட்டு வரும் போது, பக்கத்து வீட்டுக்காரி, மீனாவை, வேசி என்று வைக்கிறாள். அதற்கு மீனா "பொம்பளையா பொறந்துட்டாலே தேவடியாச் சிறுக்கி தான்; ஒருத்தனோட படுத்தா என்ன, பத்து பேர்க கிட்ட படுத்தா என்ன?" என்று).  கந்தன் தன் மனைவியிடம் கொண்ட தீராக் காதலை கதையின் ஒரு மெல்லிய, கண்ணுக்கு எளிதில் புலப்படாத ஆதாரச் சரடாக இழைத்துச் செல்கிறார்.  மீனாவைக் கண்டவுடன் காதல் கொள்ளும் கந்தனுக்கு, மீனா ஒரு வேசி, என்று தெரிந்ததும் அந்தக் காதல் எந்த வகையிலும் குறையவில்லை.   தன் ஒரே சொத்தான வீட்டை விற்று, புரோக்கர் சோலையிடம் பணம் கொடுத்து மீனாவை அடைகிறான்.   தன் உடல் பலஹீனம் அடைவதை உணரும் போது, தான் முற்றிலும் அழிவதற்கு முன், எப்படியாவது மீனாவுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்து விட வேண்டும் என விரும்புகிறான்.  அதற்காக தன்  பழைய நண்பர் தரகர் அந்தோணிசாமியின் உதவியை நாடுகிறான்.  அந்தோணிசாமி புதியதாய் வளரும் ஷெனாய் நகரில் வாழ்கிறார். கந்தன், அவரிடம் மீனாவுக்கு, ஒரு வில்லங்கம், சங்காத்தம் இல்லாத இடம் பார்க்க வேண்டுகிறான்.  "மீனா எங்காச்சும் நல்லா இருந்தாப் போதும்; நான் எப்படியும் போறேன்", என்கிறான்.  அவர் நயமாக பேசி, நழுவி கொள்வது கந்தனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.  அந்தோனியின் வீட்டை விட்டு வெளியே வந்தவன், புதிதாக கட்டப் பட்ட வீடுகளையும், வேலை செய்து களைத்து வரும் ஆண்களையும், பெண்களையும் பார்த்து, நினைக்கிறான்: "எல்லோரும் அவனை விட்டுவிட்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தனர்.  அவர்களுக்கு எல்லாம் எங்கு செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரிந்திருந்தது.  அவனுக்கு மட்டும் தெரியவில்லை. மீனாவுக்கும் தெரியவில்லை. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததெல்லாம் 'இன்று' மட்டுந் தான்' 'நாளை' கூடப் பிடிபடவில்லை".  அது வரை, சாதுர்யமாய், தன்னம்பிக்கையுடன், இருந்த கந்தனுக்கு, தன் மனைவிக்கு என்ன ஏற்பாடு செய்வது என்று தெரியாத போது, ஒரு கணம், அவன் கொள்ளும் கழிவிரக்கம், வாசகர்களை உலுக்கி விடும்.

கதை முழுவதும், பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், சம்பவங்கள்; கதையில் செக்ஸ் உண்டு; அரசியல் வாதிகளைப் பகடி செய்வது உண்டு; முதிரா வயதில், அரசியல் வாதிகள் விடும் அறிக்கைகளை படித்து விட்டு உணர்ச்சிபூர்வமாக வாதிக்கும் இளைஞர்கள், சுய உணர்வே இல்லாமல், தான் 'வைத்திருக்கும்' ஆங்கிலோப் பெண்ணின் 'கற்பை' சந்தேகிக்கும் வியாபாரிகள், அப்படி சந்தேகிக்கும் வியாபாரிகளை நைச்சியமான ஏமாற்றும் பலே பெண்கள், இப்படி சமுதாயத்தின் பல தளங்களைத் தொய்வில்லாமல் தொட்டுச் செல்கிறது ஜி. நாகராஜனின் அற்புதமான எழுத்து...

இன்று படித்தாலும் புதியதாய் இருக்கிறது. அவசியம் படியுங்கள்!!

ஜி. நாகராஜன் படைப்புகள்,
காலச்சுவடு பதிப்பகம்.

2 comments:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Anonymous said...

Thanks... I loved it too... Awesome book... Thanks again for writing this

Post a Comment