Sunday, January 31, 2010

புயலிலே ஒரு தோணி

'புயலிலே ஒரு தோணி' மற்றும் 'கடலுக்கு அப்பால்' என்ற இரு நூல்களை மட்டும் எழுதிய திரு . சிங்காரம், ஒவ்வொரு நூலையும் எழுதி, அதைப் பதிப்பிக்கப் பத்து ஆண்டுகள் அலைந்திருக்கிறார்ஒரு கசப்பான வாழ்க்கையைத் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். திரு சிங்காரம் பற்றிய மேலதிக விபரம், இவ்விரு நூல்களின் 'தமிழினி' செம்பதிப்பின் முகவுரையில் அவரிடம் திரு முருகேச பாண்டியன் எடுத்த பேட்டியில்  உள்ளது. 1950 -களில், சாண்டில்யன் வகை, மற்றும் தட்டையான எழுத்தைப் படித்துப் பழகியிருந்தவர்களுக்கு சிங்காரத்தின் நடை புரியாமல், பிடிக்காமல் போனதில் வியப்பு இல்லைஅனாவசியத்துக்கு ஒரு கால் புள்ளியைக் கூட விரயமாக்காமல், உயரிய அங்கதச் சுவையும் கதை வீச்சும் கொண்டுள்ளது இந்தநூல்.


இரண்டாம் உலகப் போரின்போது, தம் பதினெட்டு வயதில் இந்தோனேசியாவில் செட்டிமார் வட்டிக்கடையில் வேலை செய்யக் கப்பலேறிய எழுத்தாளர், தான் பட்டது, கண்டது, கேட்டது அனைத்தையும் வைத்து அதி அற்புதமான இலக்கியம் வடித்திருக்கிறார்.   பொருள் விரும்பியோ, வேறு வழியில்லாமலோ புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் பொருளீட்ட அயல்நாடு சென்றவர்கள்மிக மிக அவசியம் படிக்க வேண்டிய புதினம் இது.

கதை நடக்கும் களம், இந்தோனேசியா, மலேசியா, பாங்காக் போன்ற கீழைத்தீவு நாடுகள். கதாநாயகன் பாண்டியனின் பயணங்கள் மற்றும் சாகசங்கள் கொண்டது நிகழ் கதை. கதையின் பின்னணியில், ஊர் வர்ணனைகள், சுவாரஸ்யமான பல கதை மாந்தர்கள், அவர்தம் வாழ்வின் இலட்சியங்கள், அடைந்த அவலங்கள், வளங்கள் என சிறப்பான ரசானுபவமாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் யாரும் திணிக்கப்படாமல் வந்துபோகும்படி வடித்திருக்கும் விதத்தில் எழுத்தாளரின் நுணுக்கமான அவதானத்தைக் காணலாம்.  'புயலிலே ஒரு தோணி' படிக்கும் வாசகர்கள், இதில் வரும் நபர்களில் யாரையேனும், எங்கேனும் சந்தித்திருப்போம்.

இரண்டாம் உலகப் போரில், இந்தோனேசியாவில் டச்சுக்காரர்களை ஜெயித்ததும் ஜப்பானிய ராணுவம் மெடான்  நகர்ப் பிரவேசம் செய்வதில் கதை ஆரம்பமாகிறது. போர் முடிந்து, சட்டம் ஒழுங்கு இல்லாததால் , குஜராத் போல , நேற்று வரை சாதரணமாக இருந்த மக்கள் வாய்ப்பு கிடைத்ததும் அராஜகத்தில் இறங்குவது, பின்  நடக்கும் கொள்ளை, பொது இடத்தில் பட்டப் பகலில் நடக்கும் வன்புணர்வுகள், அவற்றை ஒரே நாளில் அடக்க ஜப்பான் ராணுவம் கையாளும் 'தலை வெட்டி கண்காட்சி', இதெல்லாம்  கதாநாயகன் பாண்டியன்  பார்வையாளனாக இருக்க  நடக்கிறதுசில நாட்கள் காண்ட்ராக்ட் வேலை செய்து அலுத்ததும் தன் பயணத்தைத் தொடர்கிறான்சில நாட்கள் நேதாஜியின் .என்.. விலும் லெப்டினன்ட் வேலை. பாண்டியன் ஐ.என்.ஏவில் நிகழ்த்தும் ஜேம்ஸ் பாண்ட் வகை சாகசங்கள், நேதாஜியை சந்தித்தல், விலாசினியை வீழ்த்துதல்,  என, கதை மிகவும் சுவாரசியமாகவே செல்கின்றது.  இந்தச் சிறிய படையிலேயே இத்தனை பிராந்திய ரீதியான குழுக்களும், அரசியலும், பணமும், ஊழலும்!
கொலம்போ  ஸ்ட்ராட்டிலிருந்து  செர்டாங்க்வேக்கு சடோ வண்டியில் பயணிக்கும் பாண்டியன் கண்களில் ராணுவ  வண்டிகளும், ஆங்காங்கே சில தமிழர்களும், வேசிகளும் தென்பட்டாலும், நினைவுகள் அப்படியே, பட்டினத்தார், கச்சியப்பர், மாவன்னா  கோவன்னா மார்க்கா கோவலன் செட்டியார்,  கண்ணகி ஆச்சி, தங்கச்சி மணிமேகலை, 'அத்தறுதி' முத்துக்கருப்பப் பிள்ளை,...  என அங்குமிங்கும் மிதந்து அலைபாயும் அழகைக் காணவாவது இந்த நாவலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும்.   


ஒவ்வொரு முறையும் அடுத்து முன் வைக்கும் பயணத்தின்போதும், 'ஆ, அந்த நாள் திரும்பி வருமா.. இதுதான் கடைசி, அடுத்து சொந்த ஊரைப்ப் பாக்கக் கிளம்பிருவோம்.. ' என்றபடி,  சிந்தனையில்  பாண்டியன் பின்னோக்கிப் பயணிக்கிறான். இவன்தான் ஆசிரியர் சொல்லும் தோணியோ? பாண்டியன் புழங்கி வரும் 'செட்டி ஸ்ட்ராட்வட்டிக்கடை முதலாளிகள், ஊழியர்களின் ஹயரார்க்கியில், பெட்டியடிப் பையன், அடுத்தாள், மேலாள், அவர்களிடையே நிலவும் பிணைப்புகள், வேலைக்கிடையே ஊர் பற்றிப் பேச்சுகள், என அற்புதமான வடிவமைப்பு.
"ஆதரவு வரவு மேற்படி வசம் வட்டி ரூபாய் இருநூத்தி அம்பது.
"
ம்ஹ்."
"
ஏண்ணே, எழா நம்பர் கிட்டங்கி வழுக்கு மண்டை ஒரு மாதிரியாக் காலை அகட்டிக்கினு திரியிறாரே என்ன சங்கதி, பஞ்சர் கிஞ்சர் ஆகிப் போச்சோ?"
"
அவுகளுக்கு ஆம்பிளை சீக்கு. மேற்படி சங்கதியில பணத்தை இறுக்கிப் பிடிச்சால் இப்படித்தான். அச்சின் ஓட்டல்ல ப்ராண்டான்காரி ஒருத்தி சிலுப்பிக்கினு திரியிராள்ள, ஒரு டரியல், அவகிட்டக் கொள்முதல். ம்ஹ்."
"
நூத்திப் பத்தொம்பதாம் நம்பர் பாஞ்சார்க்கார அப்துல் சுபேர் வரவு கணக்குத் தீர ரெண்டு மாதம் கிஸ்தி ரூபாய் இருபத்தி அஞ்சு."
"
ம்ஹ்."
........
.....


சேர சோழ பாண்டியரின் நாவாய்கள் இந்த முந்நீரை மொய்த்திருந்த காலம் கனவைப் போய், தமிழ் வீரர்களின் கொடி வழியில் வந்தோர், பிழைப்புத்தேடிபண்டைய ஸ்ரீ விஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து, மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர்... அந்தக் கப்பலில், 'ஆவன்னா' சொல்லும் 'தான் வளர்ந்து வந்த கதை', நம் நெருங்கிய உறவினர் நமக்கு அருகே உட்கார்ந்து சொல்வது போலிருக்கிறது. எத்தனை செட்டிமார்கள், எத்தனை வைப்புகள்..
 "ஏன் அயித்தான், கீழராச வீதியிலதானே அந்த வீடு?"
"
அது 'ஏரப்ளான்' சூனாப் பானா எடுத்து வச்சிருக்கிற பொம்பளையி - பார்சி லேடி. இது பல்லவன் குலத்துப் பக்கமுங்குறேன்முத்து மீனாச்சியிருக்காளே, அவளைக் கண் கொண்டு பார்க்க முடியாது - சூரியப் பிரகாசம்"..
"
தீனா மூனா ரூனாத் தீனா மார்க்காவைப் போல ஒரு கடை இனிமேல் இல்லை! விடாக்கண்டன் செட்டியாரைப் போல ஒரு முதலாளி இனி இல்லை "
 அதில் ஓரிடத்தில் அவர் தன் பெண் குழந்தைக்கு வளையல் வாங்கித்தர வக்கில்லாமல், அடித்து விட்டு வந்ததை நினைத்துக் கேவி அழும்போது படிக்கும் வாசகருக்கும் உள்ளம் கலங்குகிறது. என்னைப் பொறுத்தவரை இது இந்தப் படைப்பின் உச்சம்.

பாண்டியன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கேளிக்கைக்குச் செல்லும் இடமெல்லாம் சங்க இலக்கியங்கள், குறிப்பாக சிலப்பதிகாரம், விளையாடுகிறது. பட்டினத்தாரையும் விட்டு வைக்கவில்லை. தமிழர்களின் 'சுரணையும்' விரிவாக அலசப் படுகிறது.
"எல்லோரும் காலையில் வேலை தொடங்குமுன் மணியக்காரனிடம் போய் ஆளுக்குமூன்று செருப்படி வாங்கிக்கொள்ள வேண்டுமென்று அரசு ஆணையிட்டதுமறுநாள்கருக்கலில் ஊருக்கு ஊர் மணியக்காரன் வீட்டுக்கு முன்னே வீரத் தமிழ்க் குடிமக்கள் கூடிநிறு 'விரசாய் அடிச்சுவிடுங்கையா, வேலைக்குப் போகணும், நேரமாகுது' என்றுமுதுகைக் காட்டி கொண்டிருந்தனர்.'

 வீரத் தமிழர் மரபில் வந்தோரெல்லாம் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று அடிகளார் வினவ, குழுவில் இருக்கும் மற்றவர் சொல்வதைப் பாருங்கள்..
"
மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்."
"
இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள் "
"
பர்மாவில் மூட்டை தூக்குகிறார்கள் "
.......
"
பரத கண்டம் எங்கும் பரவிப் பிச்சை எடுக்கிறார்கள் "
........
"பண்டைய பெருமை பேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்காலச் சிறுமைகள் மிகுந்திருக்கும்..."

பாண்டியன் பயணப்படியே, நிகழ் கதையில் இருந்து, அவ்வபோது, காலச் சக்கரத்தில் பின்னே அழைத்துப் போய்விடுகிறார் சிங்காரம். ஒவ்வொரு பின்-பயணமும் இதமான மயக்கமாகவே இருக்கிறது
"அலை அலையாய், ஒன்றன் பின் ஒன்றாய், ஒன்றன் காரணமாய் உதித்த மற்றொன்றாய் வந்த அலைகள் தொங்கானில் மொத்து மொத்தென்று மோதிச் சீறி உருட்ட முயன்றன; முடியாமல் புலம்பின. காற்றின் விசையால் செலுத்தப்பட்ட தொங்கான் பினாங் துறைமுகத்தைத் தேடிச் சென்று கொண்டிருந்தது."
மேற்கண்ட வரிகளின் வலி புரிகிறதா? புலம் பெயர்ந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
மதுரை  நகரம், மற்றும் சின்ன மங்கலம் கிராமத்துக்குள், நம் கையைப் பிடித்து அழைத்தது சுற்றிக் காட்டுவது போல் இருக்கிறதுமொழி வீச்சு அபாரம். பெரிய கடை, சந்தைக் கடை, இரவுக்கடை, சினிமா கொட்டகைஎத்தனை விதமன இடங்கள், மனிதர்கள்..

 நெல்லை, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் என அந்தந்த ஊர் வட்டார வழக்குகளில் கதாபாத்திரங்கள் உரையாடுவதுசிங்காரம் எந்தளவு உலகை உன்னித்து கவனித்திருக்கிறார் என்று தெரிகிறது.
சாதாரணமாக சாலையில் நடந்து போகும்போது நாம் சுற்றுப்புறத்தை எப்படி கவனிக்கிறோம்? சிங்காரம் கதாபாத்திரங்கள் மூலம் அதை  அற்புதமாகச் செய்கிறார்
"அடக் கூதறைப்பலே, மேல் தட்டுல இருக்கிற போத்தல்ரா, ஊதாப் போத்தல். பெண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுற பயல்ங்கிறது சரியாப் போச்சுதுல.."

கதாநாயகன் பாண்டியனுக்கு மாணவப் பருவத்திலேயே எத்தனை  எத்தனை மேற்படி அனுபவங்கள்.
".. வெண்கலக் கடைச் சந்து நாகமணி, மஞ்சனக்காரத் தெரு சொர்ணம்...... பணம்குறைந்து போனால் ஒன்னாம் நம்பர் சந்து மலையாள பகவதிகள் -ஓமன, பாருக்குட்டி, சரோஜாம்மா....
....... .. ஞே இவிட நோக்கே "


மேல்தட்டு தாசிகளுக்கும் குறைவில்லை. "அய்யய்யோ நா டா ரா !......  அப்பவே நினைச்சேன். மேற்படி ஆள் போல இருக்கேன்னி . அம்மா கிண்டிக் கிண்டிக் கேட்கும். வாயை விட்ராதிங்க்யசாதி போச்சு, குலம் போச்சின்னு குதிச்சிப்பிடும் குதிச்சு. இந்தக் காலத்தில சாதி குலமெல்லாம் பார்க்க முடியுதா ..?   "

மேலும், இரண்டாம் உலகப் போர்.என்.. படையில் பாண்டியன் நிகழ்த்தும் சாகசங்கள், சுமத்ரா கொரில்லாப் படை உருவாக்குதல் என்று கதையை வேகமாக நகர்த்திக் கொண்டு போகிறார்.

கதாநாயகனையும், பெரும்பாலான கதை மாந்தர்களையும் விதி புரட்டிபோட, இந்நாவலின் எழுத்தாளர் வாசகர்களைப் புரட்டிப் போட்டு வெகு நாட்களுக்கு அதன் தாக்கத்தை அசை போட வைக்கிறார். இன்னும் வாசித்திராதவர்களுக்கு ஓர் அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது. 'இலக்கிய உலகின் தலை சிறந்த படைப்புகள் பட்டியலில்  தயங்காமல் சேரக்கூடியவை இந்த இரட்டை நாவல்கள்' என, பிரபல எழுத்தாளர்களாலேயே வெகுவாக சிலாகிக்கப் பட்டதுசேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் படித்தபோது , இந்த நூலை என் கையில் கொடுத்துப் படிக்கச் சொன்ன, உடன் படித்த ஈழத்தமிழ் நண்பர்களை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

2 comments:

Baski.. said...

புத்தகத்தின் மொழி நடை படிக்க கொஞ்சம் சிரமப்படுத்துகிறது... 2008 புத்தக கண்காட்சியில் வாங்கி இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறேன்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment