Monday, January 11, 2010

விஷ்ணுபுரம் - ஒரு விஸ்வரூபம்

அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings - மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.

நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,
பண்டிதர்களை, ஏகத்துக்கும் கிண்டல் செய்கிறது. ஒரு உதாரணம் இங்கே..
"ஆற்றோரமாக சிறு சிறு பலிதேவதைப் பீடங்கள் இருந்தன. அவற்றருகே மட்டும் அவ்வபோது நின்று, பின்னால் வந்த கார்மிகனின் கையிலிருந்த தாம்பாளத்திலிருந்து மலரும் அட்சதையும் எடுத்துத் தூவி வணங்கினார். 'பரதேசத்து நாய்தான் கல்லைக் கண்டால் அடையாளம் வைத்துப் போகும்' என்று ஒரு வித்யார்த்தி ரகசியமாகக் கூறினான்' மற்றவர்கள் கிளுகிளுவென்று சிரித்தார்கள் "


மூன்று காலக்கட்டங்களில் கதை நிகழ்வதாக, ஸ்ரீபாதம், கௌஸ்துபம், மணிமுடி என்று மூன்று பாகங்கள். ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் அந்தக் காலத்துக்கு முன்னர் அழிந்துபோன விஷ்ணுபுரத்தைத் தேடி ஒவ்வொரு சமயத்தைச் சார்ந்த இருவர் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து காலம் அப்படியே பின்னோக்கி நகர்ந்து விடுகிறது. அப்புறம் அற்புதமான பிளாஷ் பாக் கதை.

இந்த நாவல் மிகப் பிரம்மாண்டமாக, அதீத வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட மாளிகையைப் போலிருக்கிறது. காட்சிகளை மிக நுட்பமாக சித்தரிக்கும் பாங்கில் ஜெயமோகன் என்ற சிற்பியின் கடும் உழைப்புத் தெரிகிறது. கதை நிகழும் களம், தென் பாண்டி நாட்டில் இருக்கும் விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரம். கேரளம் போன்ற நில அமைப்பு, நகரின் நாடியாக ஓடும் செந்நிற சோனா நதி. பல்வேறு சமயத்தவரால் விஷ்ணுபுரம் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்டும் எழுப்பபட்டும் வருகிறது. சிற்ப சாஸ்திரம், குதிரை சாஸ்திரம், யானை சாஸ்திரம், என்று கதை முழுக்க மிக அடர்த்தியான தகவல்கள் மற்றும் அற்புதமான வர்ணனைகள். ஆயாசப்படாமல் கூர்ந்து அவதானித்தால் நல்ல தகவல் களஞ்சியமாகவும் விளங்கும். காவியங்களில் வர்ணனைகளை ரசிப்பவர்களுக்கு இது அற்புதமான நூல். உ.ம். "மிக ரகசியமான ஒரு பெட்டியிலிருந்து அறியா பொருள்களை எடுத்துப் பார்க்கும் உலோபி போல, ஒவ்வொரு நினைவாகத் தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.."

நேர்த்தியான ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சி போல, முதல் பாகம் 'ஸ்ரீபாதம்' ஆரம்பிக்கிறது. எப்போதோ தொலைந்து போன விஷ்ணுபுரத்தைத் தேடி, வெகு தூரத்திலிருந்து, மணல் வெளியில் நடந்து வரும் கதை மாந்தர், பின் அவருடன் சேர்ந்து கொள்ளும் வேறொருவர், என Horizon level -லில் ஆரம்பித்து, அப்படியே நிலத்தை விட்டு எழும்பி, crane-shot போல, landscape அப்படியே நம்முன் விரிகின்றது. யந்திரச் சக்கரம் மூலம் விஷ்ணுபுரம் இருந்த இடத்தை இவர்கள் கண்டு பிடித்தவுடன் நாவல் அப்படியே பிளாஷ் பாக் காட்சியாக அந்த நகரம் ஓஹோ என்றிருந்த நாட்களுக்குப் பின்னோக்கிப் போய் விடுகிறது.

மக்கள் எளிதில் நெருங்க முடியாத, கண்டாலே அச்சமூட்டும் மிகப் பிரம்மாண்டமான ஆலயம், அது ஏற்படுத்தும் அச்சத்தின் மூலமும், ஐதீகங்களின் மூலமாகவும் மக்களை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது, என இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கும் வாடிகன் கத்தோலிக்கத் தலைமை போல விஷ்ணுபுரத்துக்கு ஸூரியதத்தர் என்ற ஞான குரு. இவர் பாண்டியனுக்கும் குலகுரு. விஷ்ணுபுரத்தின் கட்டுப்பாடு, ஞானகுரு, மற்றும் காவல் அதிகாரியின் கைகளில். ஞானகுருவுக்கு உண்மையில் எவ்வித ஞானமும் தேவையில்லை. அது ஞானத்தோல் போர்த்திய அரசியல் பதவி. இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகார சதுரங்கப் போட்டி, இன்றைய அரசியல் விளையாட்டுகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை. எந்த வகை அரசியல் அமைப்பு ஆனாலும், மதம், மொழி அல்லது 'தேசப் பற்று'. என்ற மாய வார்த்தைகளின் மூலமாக 'தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரே' நாடாளும் வாய்ப்பைத் தம் வசமே வைத்துக் கொள்கிறார்கள்.
பின்வரும் உரையாடல், காவல் தலைமை அதிகாரி, மற்றும் அடுத்த அதிகாரிகள் நிகழ்த்துவது.
"மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்"..
"மக்கள் மரபுகளை வழிபடுகிறவர்கள். எதிர்காலம் பற்றிய அச்சத்திற்கு மாற்றாக வாழ்க்கையை ஒரு சடங்காக மாற்றி வைத்திருக்கிறார்கள். .... புதிதாக ஏதும் நிகழாது, அதாவது நிகழ விடக்கூடாது. நமது கடமை அதுதான் "

இன்றைய நவீன உலகத்திலும் ஆட்சியாளர்கள் எந்த விதமான மாற்றங்களையும் கொண்டு வர அச்சப்படுகிறார்கள்.

முதல் பாகத்தில், சங்கர்ஷணன் என்ற கவிஞன், பிங்கலன் என்ற குடுமி அறுத்து நைஷ்டிகம் துறந்த ஒரு வேதியன் மற்றும் திருவடி என்ற ஒரு வாத்தியக்கார இளைஞன் ஆகியோர், கதையை நகர்த்திச் செல்லும் முக்கியப் பாத்திரங்கள். கதை மாந்தர்கள் அவ்வப்போது நிறைய இடைவெளி விட்டு வருவதால் ஒரு சரடு கதையில் ஊடே செல்லாத குறையாக இருக்கிறது.

கவிஞன் சங்கர்ஷணன், தன் மனைவி மற்றும் இரு மக்களுடன், தன்னுடைய வித்தை என்ற கர்வத்துடன், கலை உலகத் தலைநகரான விஷ்ணுபுரத்துக்குள் நுழைகிறான். அரை வேக்காடுகள் நிறைந்த வித்வத் சபையில் புதியதாக ஒரு காவியத்தை அரங்கேற்ற முயலும்போது, அங்கே கவிச் சபையில் நிலவும் அரசியலும், அதிகார விளையாட்டுக்களும் அவனை அவமானத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்குகிறது. பின்னர், தான் ஒரு அதிகார விளையாட்டின் சதுரங்கக் காய் என்று தெரியாமலே பாண்டிய மன்னன் முன் தன் காவியத்தை அரங்கேற்றம் செய்கிறான்.
பிங்கலன், கணிகையர் இல்லத்தில் சில காலம் வாழ்கிறான். குழம்பிய தன் மனம் அலைக்கழிக்க, பல்வேறு தேடுதல்களில் ஈடுபட்டுக் கடைசியில் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப உதவும்படி தன் குருநாதரை நாடுகிறான்.
திருவடி, ஒரு கணிகையைக் காப்பாற்றி, அவள் மீது தொலை தூரக் காதல் கொண்டு, அதைச் சொல்ல இயலாமல் சுய இன்பம் நாடி, தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் கோழை. தன் கோழைத்தனத்துக்கு, இசைப்பித்து என்ற ஒரு போர்வை போர்த்திக்கொண்டு அலைய, கடைசியில் ஒரு குலத்தவர் அவனை ஆழ்வாராகவே ஆக்கி விடுகின்றனர்.
இன்று போலவே, அன்றும் உயர் கணிகையர் திலகங்களின் அரசியல் செல்வாக்கும், மற்ற கணிகையரின் அவலமும் மிக நேர்த்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. ஒரு கணிகை பின்னர் குருவாகவும் ஆகின்றாள்.
இது தவிர, சிற்பி, காளாமுகர், நகரத் தலைவர்கள் என்று வித விதமான சுவாரஸ்யமான பாத்திரங்கள்.
கதாசிரியர், அங்கதச் சுவைக்குக் குறையே வைக்கவில்லை. ஒரு புத்தி பேதலித்தக் கிழவரை, ஆழ்வார் என்று கதை கட்டி, ஊர் ஊராக சுமந்து சென்று மக்களை ஏமாற்றும் வைதிக குண்டர்கள், அடியாட்கள் புடை சூழ மாமூல் வலம் வரும் தாதாக்களைப் போல, அல்லக்கை சீடர்கள் அலம்பலுடன் வலம் வரும் பண்டிதர்கள், சோற்றுக்கு அடித்துக் கொள்ளும் பல்வகை சாஸ்திரிகள் என்று கதை நெடுக நையாண்டிதான். "நாமத்தைச் சாத்திக் கொண்டு ஆளாளுக்கு எப்படி இருக்கிறான்கள் பார்; அனந்தன் சப்பரம் மாதிரி. இவன்களுக்கு சோறு போட்டே நாடு வறண்டு விடும் போலிருக்கிறது..."
பாண்டிய மன்னனின் இடை குறுகி, தோல் விரிந்தெல்லாம் இல்லை. மாறாக, வழக்கமான மன்னர்களைப் போல பெண் போகத்தில் அளவுக்கதிகமாகத் திளைத்து உடம்பெல்லாம் 'பொம்பள சீக்கு' பிடித்துக், காய்ந்து, கறுத்து, கூன் விழுந்திருக்கிறான். மஞ்சத்தில் மங்கையர் புடைசூழ, காவலதிகாரியுடன் அவன் நடத்தும் சதியாலோசனையை எத்தனை நக்கலாக ஜெமோ எழுதியுள்ளார் என்று படித்துப் பாருங்கள்.
சில அசைவங்களும் உண்டு. "அதுவா; அது அந்த காப்பிரிகளைப் பற்றித்தான். அத்தனை பெரும் கணிகையர் வீதிக்குத்தான் போகிறார்கள். அங்கே இவர்கள் போய்விட்டுத் திரும்பினால், வீட்டு வாசல்கள் எல்லாம் பெரிதாக ஆகிவிடுமாம். நாமெல்லாம் போனால் வாசலைத் தட்டி சிரமப்பட வேண்டாமாம்".

இரண்டாம் பாகம் கௌஸ்தபம். இதில், இரண்டு பௌத்த பிட்சுகள், அழிந்து தொலைந்து போன விஷ்ணுபுரத்தைத் தேடி வருகிறார்கள். பின்னர் அங்கிருந்து கதை பின்னோக்கிச் செல்கிறது. இந்தக் கதை நிகழ்ந்த காலம், ஸ்ரீபாதத்துக்கு பல நூற்றாண்டுகள் முன்னாள் நிகழ்ந்ததாக அமைக்கப் பட்டிருக்கிறது. பௌத்தர்கள் விஷ்ணுபுரத்தின் ஞானசபையை கிருஷ்ணபட்சிப் பரீட்சையின் மூலம் கைப்பற்றுவது இந்த பாகத்தின் சாரம். இதன் பெரும் பகுதி ஆதி வைதிகம், சைவம், வைணவம், வேதாந்தம், மீமாம்சை மார்க்கங்கள், அவற்றின் கிளைகள் ஆகியவற்றுக்கிடையே நடக்கும் நீண்ட விவாதங்கள் கொண்டது. சிந்தை சிதறாமல் படிப்பது சற்று சிரமம்தான். கூர்ந்து படிக்க நீண்ட நேரமும், வேதாந்த விவாதங்களில் ஆர்வமும் வேண்டும். சமண பிட்சு அஜிதன் வாதிடுகிறான் "வேதம் என்ன கூறுகிறது? நம்பச் சொல்லவில்லை; தேடச் சொல்கிறது. ஆராயச் சொல்கிறது. அவற்றை யாகவிதிகளாக மாற்ற விரும்பும் வைதீகர்களே சுருதி வாதத்தை உண்டு பண்ணினார்கள். "

சோற்றுப் பந்தலில் பிராமணர்கள் செய்யும் அட்டகாசம் பற்றி ஒரு தனி அத்தியாயமே இருக்கிறது. படிப்பவர் யாருக்கும் சிரிப்பை வரவழைக்கும். "கொடிக் கிழங்கு பிட்டை ஏனய்யா வாங்கினீர் கர்த்தபமே? உமக்குத்தான் வாயு பீடை ஆயிற்றே ! நேற்று மந்திர நேரத்தில் நவத் துவாரங்களிலும் ஓங்காரம் சொன்னீர் தெரியுமா ? "

தர்க்க விவாதங்கள் முன்னேறி, பௌத்தர் அஜிதன் வெற்றி பெறுவது உறுதியாகிக் கொண்டு வருகிறது. ஆட்சியையும் அதிகாரமும் தம் கையை விட்டு நழுவுவதை கால காலமாக அனுபவித்து வந்த சாஸ்திரிகள் தயாராகவில்லை. ( சிதம்பரம் கோயிலில் தமிழ் தேவாரம் பாடவே அனுமதிக்காமல் தீட்சிதர்கள் சமீப காலங்களில் செய்த ரகளைகள் சும்மா விட்ட குறை தொட்ட குறை.) அசாத்திய கோபம் கொள்கிறார்கள்.
"சாஸ்திர விரோதியை எங்களூர் சத்திரியர் வெட்டிக் கொல்வார்கள்"
"உங்கள் ஊர் சத்திரியர் சாஸ்திரம் அறிந்தவர்களோ? "
"சாஸ்திரத்தை பிராமணர்கள் விளக்குவோம். அது நமது கடமையல்லவா? "


கடைசியில், எதிர்பாராத திருப்பங்கள், பிராமணர்கள் சதி, கலவரம், பௌத்தர்கள் விஷ்ணுபுரத்தைக் கைப்பற்றுவது என்பதில் இரண்டாம் பாகம் முடிவுறுகிறது.

கடைசிப் பாகம் மணிமுடி. இது அஜிதரின் கடைசி காலத்தில் தொடங்குகிறது. பாண்டிய மன்னர்கள் சவ சமயத்தைத் தழுவி வைணவம் தொய்வடைகிறது. பின்னர், வரலாற்றின் ஏராளமான மாநகரங்களைப் போல விஷ்ணுபுரமும் படிப்படியாக சிற்றூராகி, சிதிலமடைந்து, குடும்பங்கள் சீரழிந்து, எஞ்சியிருந்த சிலரும் ஊரை விட்டு வெளியேற, பிரளயம் வந்து அழியும்போது, நமக்கும் மனது கடினமாகிறது. மறுபடியும் கதை, தொடங்கிய இடத்துக்கே வருகிறது.

தமிழின் தலை சிறந்த 25 புதினங்களில் விஷ்ணுபுரம் கண்டிப்பாக இடம் பெறும். அவசியம் படியுங்கள். அற்புதமான அனுபவம் காத்திருக்கிறது. பரவசத்தில் ஆழ்த்திய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள்.

10 comments:

Raja M said...

அன்புள்ள பாஸ்கர்:

அற்புதமான மதிப்புரை! விஷ்ணுபுரத்தைப் பற்றி இயல்பான நடையில், நகைச்சுவை உணர்வோடு, எளிதாகப் படிக்கக் கூடிய வகையில் அழுத்தி உள்ளீர்கள். எனக்கு விஷ்ணுபுரத்தை மீண்டும் சுருக்கமாக படித்து போல இருந்தது. மற்ற கடினமான மதிப்புரைகளை படித்து விட்டு, இதை படிக்கலாமா என்று யோசிப்பவர்களை படிக்கத் தூண்டும். விஷ்ணுபுரத்தை சரியாகப் படிக்காமல் ஹிந்துத்வா புத்தகம் என்று பொத்தாம் பொதுவாக சொல்பவர்களைக் கேட்டு படிக்காமல் இருப்பவர்கள் உங்கள் முகப்புரையை படித்து மனம் மாற நிச்சயம் வாய்ப்புண்டு. குறைந்த வார்த்தைகளில், விஷ்ணுபுரத்தை படிப்பதற்கு, ஒரு கோனார் நோட்ஸ் போன்ற குறிப்பையும் கொடுத்து இருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் படித்து சில மாதங்கள் ஆகி விட்டது. உங்கள் மதிப்புரை, என் நினைவில் வந்ததை எழுதத் தூண்டியது.

விஷ்ணுபுரத்தில் மனவியலைச் சார்ந்த ஒரு சரடும் ஒவ்வொரு பாத்திரத்திலும் வருவது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக பிங்கலனை எடுத்துக் கொள்ளுவோம். அவன் குணாதிசயம் புத்திசாலித் தனம் மட்டும் இல்லை - எதையும் பரிசோதித்துப் பார்த்து அறிந்து கொள்ளும் வழக்கம் உடையவன். அதை அழகாக நேரடியாக சுட்டிக் காட்டி விட்டு (கை நீட்டி நெருபைத் தொடும் குணம் கொண்டவன் என்று) அவனது மன நிலையை பல விதமாய் குறிக்கிறார். உதாரணமாக, மிகவும் கட்டுப்பாடான வைதீக வழியில் வாழும் இள வயது பிங்கலனை அந்த வயசுக்குரிய காமம் பிடித்து இழுக்கிறது. ஆசிரம வாழ்க்கையும், அவன் இது வரை கற்ற பாடங்களும் அவனை அவன் இச்சை இழுப்பது போல செய்ய முடியாமல் தடுக்கின்றன. சுயமாக முடிவு எடுத்து ஆசிரம வாழ்கையை உதறிச் செல்லவும் அவனால் முடியவில்லை. என்ன செய்கிறான்? தான் முடிவெடுத்தால் தானே தவறு? தன் முடிவெடுக்கும் சக்தியை ஒரு பச்சைக்கல்லுக்கு தந்து விடுகிறான். அது அவனை அங்கும், இங்கும் அலைக்களிக்கிறது. அந்த பச்சைக் கல் சொல்வதை செய்வதாகவும், அதிலிருந்து விடுபட முடியாதவனாகவும் தன்னை கற்பித்துக் கொள்கிறான். இந்த projection அவன் கட்டுப்பாடான ஆசிரம வாழ்க்கையில் இருந்து வெளியேறத் துடிக்கும் இள வயதின் முதிர்ச்சியற்ற துடிப்பு. அதே போல் ஆசிரமத்தில் இருந்து கட்டுப்பாடான வாழ்க்கையை விட்டு வெளியே வந்தவுடன், வெளி வாழ்க்கையின் கட்டற்ற சுதந்திரத்தில் அவனுக்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. ஆசிரமக் கட்டுப்பாடுகள் அளித்த சுருங்கிய வாழ்க்கையின் தின்னங்களின் சுகத்தை இழந்து தடுமாறுகிறான். தடுமாறும் போது வழில் உள்ள பெரிய சமையல் பானையில் உள்ளே உட்காருகிறான். அவனது மன ஏக்கத்தை - ஒரு பெரிய சமையல் பானையில் உட்கார்ந்தான் என்று - அழகாக குறிப்பால் உணர்த்துகிறார். இப்படி ஒவ்வொரு பாத்திரமும் கொஞ்சம் கனமானவையே.

...

Raja M said...

...

நீங்கள் எழுதியதில், பிங்கலன் மீண்டும் பழைய வாழ்விற்கு வருவதற்கு தன் குருநாதரின் உதவியை நாடுகிறான் என்று எழுதி இருந்தீர்கள். என் நினைவில் அது வேறு மாதிரி இருக்கிறது. பிங்கலனின் குருநாதர் பிங்கலனைப் போலவே துறவைத் துறந்து பிற வழி நாடுவார் என்று படித்ததாக நினைவு. இம்மாதிரி விஷ்ணுபுரத்தில் உள்ள பல குருநாதர்களும் எந்த அகவெளிச்சமும் (enlightenment?) அடையாமல் பல்லாண்டு கால சதகங்களுக்குப் பிறகு அம்போ என்று சாவது பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார். இப்படிப் பற்ற குருமார்களின் எண்ணிக்கை விஷ்ணுபுரத்தில் அதிகம், உதாரணமாக, பிங்கலனின் குரு, அஜிதனுக்கு உதவிய ஜாக்கி சான் புத்த பிக்ஷுவின் குரு, அஜிதன், கடைசிப் பாகத்தில் வரும் பவதத்தரின் வாரிசு, அனைவரும் மிகச் சாதரணமான மக்களைப் போல எந்த மன அமைதியும் இல்லாமல் இறப்பது குறிப்பிடத் தக்கது. இந்த குருக்கள் எல்லாம் அவரவர்க்குப் பிடித்த தர்க்கத்தை உண்மை என்று நம்பி வாழ்நாளை வெட்டியாக கழித்தவர்களோ என்ற கேள்வியை எழுப்பிகிறது இவர்கள்ளது அமைதியற்ற மரணம் எழுப்பிகிறதுஅல்லவா? அவ்வாறு தர்க்கத்தை நம்பி வாழ்க்கயை விட்டவர்கள் எதைக் கொண்டு உண்மையை உணர்வது என்ற கேள்விக்கு அந்த தலைச் சிற்பி பிரச்சேனன்(?) பதில் சொல்லுகிறான் - "எந்த விஷயத்தையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி - அப்போது உண்மை புலப்படும் என்று'. "There is only subjective reality. There is no non-causal objective reality" என்பது போல இதுவும் ஒரு தர்க்க வாதம் தான்.

இன்னொன்றும் என் மனதில் பட்டது. பிரளயம் வரும் போது அனைத்தும் அழிகிறது. உண்மையில் அதில் இருந்து அதிகம் பாதிக்கப்படாமல் தப்புவர்கள், நகர் வாழ் சாராத அந்த மலை வாழ் மக்கள் மட்டுமே. அவர்களுக்கு மட்டுமே செல்லும் வழி புலப்படுகிறது. மாபெரும் நகரமும், பிரமாண்டமான கோயிலும், அதி நுட்பமான தர்க்கங்களும், அரச மரபுகளும் இடம் தெரியாமல் அழிந்து விடுகின்றன. நீலியையும், மலையனையும் கும்பிட்டு வாழும் மலை மக்களின் வாழ் வழி மட்டும் அதிகம் மாற்றமில்லாமல் தொடர்கிறது. இது, ஒரு இயற்கையோடு ஒத்து வாழும் எளிய வழிமுறைக்கும் பெரும் நகரங்களுக்கும் இடையே இருக்கும் இறுக்கத்தையும் சுட்டிக் கட்டுகிறது. (இந்த இறுக்கத்தை ஜெயமோகனின் பல புத்தகங்கள் கோடிட்டு காட்டுகின்றன - உதாரணம்: காடு, ரப்பர், போன்றவை. எது நிரந்தரம் என்பது நாம் பார்க்கும் கால நோக்கின் அளவைப் பொறுத்தது என்பதே.

குறையாகச் சொல்ல வேண்டும் என்றால், சில சின்ன விஷயங்களைக் குறிப்பிடலாம்.

ஒன்று, இந்த நாவலை இன்னும் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம். குதிரை வாங்கும் போது குதிரை சாஸ்திரத்தைப் பற்றியும், பின்னல் அந்தக் குதிரை ஆழ்வாரைத் தூக்கிக் கொண்டு ஓடுவதும், அதற்கென்று ஒரு ஐதீகம் உருவாவதும் சுவாரஸ்யமாக இருந்தாலும், முதல் முறை படிப்பவர்களுக்கு அந்தச் சாரத்தை கோற்றுச் செல்வது சிரமமானதே. ஜெயமோகன் கடின உழைப்பால் இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார். அதைப் படிக்க வாசகர்களிடமும் கொஞ்சம் முயற்ச்சியை எதிர்பார்க்கிறார். அது தவறில்லை. அந்த முயற்ச்சியை அளிக்கும் வாசகர்களுக்கு நல்ல விருந்து காத்துக் கொண்டு இருக்கிறது விஷ்ணுபுரத்தில்.

இரண்டாவது, நிறைய சமஸ்க்ருத வார்த்தைகள் - இதற்கு பின்னல் ஒரு அட்டவணை போட்டிருந்தால், என்னைப் போன்ற சாதாரண சமஸ்க்ருத மண்டுகளுக்கு உதவி இருக்கும்.

மூன்றாவது, ஜெயமோகனின் கற்பனாசக்தியால், விஷ்ணுபுரம் நம் கண் முன் எழுகிறது. சோனா நதியும், கோபுரங்களும், விவாத மேடையும், அந்த ஊர் மக்களின் வாழ்வும் நம் கண் முன் நிற்கிறது. அந்த உணர்வை வெளிப் படுத்தும் சில படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது நாவல் முறையில் சாத்தியம் இல்லை என்றாலும், அந்த நுண்ணுணர்வை வெளிக்கொண்டு வரும் திறமையுள்ள தமிழ் ஓவியர்கள் இருக்கிறர்களா?

தமிழில் சீரிய இலக்கியம் படிக்கும் யாரும் விஷ்ணுபுரத்தில் நுழையாமல் இருக்க முடியாது.
பலரை விஷ்ணுபுரத்திற்குள் செல்ல அழைக்கும் மென்மையாய் அழைக்கும் வாசல் தோரணமாக உங்கள் மதிப்புரை அமைந்துள்ளது. அழகான மதிப்புரை. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்,
ராஜா

ஜெயமோகன் said...

விஷ்ணுபுரம் குறித்த மதிப்புரைக்கு நன்றி. விஷ்ணுபுரத்தில் உள்ள முக்கியமான அம்சம் அது நிகழ்ந்தது அல்ல சொல்லபப்ட்டது என்பதே. இது நம் காவியங்கள் பலவற்றுக்கும் இருக்கும் வடிவம். சிலப்பதிகாரம் கூட சிலப்பதிகாரத்திலேயே சொல்லபப்ட்ட கதையே. இது மெடஃபிக்ஷன் என்று சொல்லபப்டும் நவீன வடிவுக்கு மிக நெருக்கமானது.

இந்த விஷயத்தின் சிறப்பு என்னவென்றால் சொல்லபப்டுவது என்பது மீண்டும் மீண்டும் மாற்றி சொல்லபப்டுகிறது என்பதே. நான் சமீபத்தில் விஷ்ணுபுரத்தை வாசித்தபோது உணர்ந்தது எல்லா கதைக்கும் பல வடிவங்கள் அதில் உள்ளன என்ற விஷயம்தான்

நன்றி
ஜெயமோகன்

utham said...

This review shows deepness of reading,depth of analytical mind,lucidity of presentation ,wide sweep of comprehension.Best wishes to your blog.
Thanks.

T.Duraivel said...

தத்துவ விவாதத்தில் வெற்றிபெறுவது சமணமா பௌத்தமா? பௌத்தம் என்று என் ஞாபகத்தில் இருக்கிறது.
த.துரைவேல்

குப்பன்.யாஹூ said...

பாஸ்கர் இங்கு ஜெயமோகனது புத்தகங்கள், எழுத்துக்கள் மட்டும் விமர்சனம் செய்து வெளியிடும் எண்ணமா அல்லது எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்து எழுத போகிறீர்களா.

எல்லா எழுத்தாளர்கள் குறித்து என்றால் , யாழிசை ஒரு இலக்கிய பயணம்- பதிவில் பல அறிய சிறந்த பதிவுகள் தகவல்கள் உள்ளன,
உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.

Krishnan said...

Good beginning. Always wanted to read Vishupuram but its "very tough to read" reputation scared me off many times. Hoping to read it soon.

சங்கர் said...

விஷ்ணுபுரத்தை குறித்த, மத ரீதியான கோணல் பார்வைகள் அற்ற விமர்சனங்களை (அல்லது திட்டுகளை) இதுவரை நான் கடந்து வந்ததில்லை, அந்த வகையில் நல்லதொரு துவக்கம்.

எளிமையாய் சொல்லப்பட்ட கதைச் சுருக்கம்,

நன்றி, தொடர்ந்து எழுதுக

பின்தொடரும் வசதி (Follower Link Gadget) ஏற்படுத்தினால் நன்றாயிருக்கும்,

clayhorse said...

>தத்துவ விவாதத்தில் வெற்றிபெறுவது சமணமா >பௌத்தமா? பௌத்தம் என்று என் ஞாபகத்தில் >இருக்கிறது.
>த.துரைவேல்

நீங்கள் சொல்வது சரிதான். என் கை தவறியதோ, கருத்துத் தவறியதோ தெரியவில்லை. பிழை திருத்தியமைக்கு நன்றி.

Anonymous said...

கனவு மூலம் மற்றவரின் நினைவுக்குள் நுழைதல் என்கிற கருத்தும் அருமை
Sripathi

Post a Comment