Saturday, April 25, 2015

மாதொருபாகன் - 2


மாதொருபாகன் - 1 இன் தொடர்ச்சி...

மாதொருபாகனின் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம் அந்த கால கட்டத்து குடியானவனின் வாழ்க்கையை ஆவணப் படுத்துவது.  குடியானக் கவுண்டனும்கள்ளிறக்கும் சாணானும்காட்டில் வேலை செய்யும் சக்கிலியும் ஒரே காற்றைச் சுவாசித்து வாழ்ந்தாலும்அவர்களுக்கிடையே இருக்கும் சமுதாய வேறுபாடுகளை பெருமாள் முருகன் மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார்.    குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும்வாரிசும்  முக்கியப் பங்கை வகிக்கின்றன.  

மாதொருபாகன் - 1

மாதொருபாகன்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு 2012
திருச்செங்கோட்டில் இருந்து ஏழெட்டு கல் தொலைவில் உள்ள ஆனங்கூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் குடியானவன் காளியும் அவன் மனைவி பொன்னாவும் தான் மாதொருபாகனின் மையப்பாத்திரங்கள்.  கதையில் வரும் தகவல்களைக் கொண்டு, கதை நிகழ்ந்த காலம் 1938/39 என ஊகிக்க முடிகிறது.  இலகுவான நடையில் நேரடியாக கதையைச் சொல்லும் எளிய நாவல் போல தோற்றமளித்தாலும், இது பல அடுக்குகள் கொண்ட நாவல்.   

Sunday, March 22, 2015

வெட்டுப்புலி

வெட்டுப்புலி
தமிழ்மகன்
பக்கங்கள் 375
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ 220
பரிந்துரை: சண்முகம்/ராஜா


1960 களில் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட கட்சிகள் இன்று வரை தமிழக அரசியலில் பெரும் பங்கை வகித்து வருகின்றன.   20 ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியலைப் பற்றிப் பேசினால், "பெரியார் பிராமண துவேஷத்தைப் பற்றி மட்டும் பேசினார்", "பெரியாரை இகழ்வதா", "ராஜாஜி மட்டும் இருந்திருந்தால்..", "இந்த திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லாதிருந்தால்...", என்ற ஒற்றைப்படையான டீக்கடைப் பெஞ்சு விவாதங்கள் மட்டுமே எஞ்சுகின்றன .  முதல் பார்வையில் சமநிலையுடன் எழுதப்பட்டதாகத் தோன்றும் அலங்காரமான எழுத்துக்கள் கூட, உற்று நோக்கும் போது இத்தகைய ஒற்றைப்படையான கருத்துக்களையே முன்வைப்பதைப் பார்க்கலாம்.  வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்களை எழுதுவது, அதுவும் அண்மைக்கால/சமகால அரசியல் வரலாற்றை எழுதுவது, சிரமமான காரியம்.

Sunday, March 8, 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு


சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.
       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

Monday, February 2, 2015

கொற்கை நன்றே

கொற்கை

ஆசிரியர் : ஜோ.டி.குருஸ்

காலச்சுவடு பதிப்பகம்

சாகித்ய அகாடமி பரிசு பெற்றது                                                                       
வணிகக் கப்பல் கழகம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் ஜோ.டி.குரூஸின் இரண்டாவது நாவல் கொற்கை   இவரது முதல் நாவலான 'ஆழி சூழ் உலகு'ம்  பரதர் வாழ்வு பற்றியதே.  இந்த நாவல்களில் சாமியார்கள் மற்றும் ஊர்ப் பெரிய மனிதர்களின் 'யோக்கியதையை' விவரித்து இருந்ததால் இவரை ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கிறார்கள்.

Sunday, January 11, 2015

வெல்லிங்டன்

வெல்லிங்டன்
ஆசிரியர்: சுகுமாரன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 275/-

பதின் பருவம் குழப்பங்கள் நிறைந்த பருவம்.  சிறுவனாய் இருப்பதில் உள்ள சாதகங்களை விட்டு விட விருப்பமில்லா  மனதிற்கும், ‘பெரியவனா’வதில் உள்ள கட்டற்ற ஆர்வத்திற்கும் இடையிலான ஊசல் நிறைந்த பருவம்.  சின்ன வயதில் “கட்டிலுக்கடியில் பேய் ஒளிந்து கொண்டிருக்கிறதோ”, என்று அஞ்சி நடுங்குபவன், அது தேவையற்ற பயம் என்பதை உணரும் தருணத்தில் இழப்பது பயம் நித்தம் தந்த இம்சையை மட்டுமல்ல, ஒவ்வொரு புதிரான இரவையும் எதிர்கொண்டு மீள்வதில் உள்ள சாகசக் களிப்பையும் தான்.  பெரும்பாலானோருக்கு, ஏதோ ஒன்றை அடையும் வேகத்தில், நாம் எதை இழக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லாமல் வாழ்க்கை ஓடி விடுகிறது.  சுருங்கச் சொன்னால் இந்த நாவலின் கரு – வளர்தலின் வலி.