மாதொருபாகன்
பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்
மூன்றாம் பதிப்பு 2012
திருச்செங்கோட்டில் இருந்து ஏழெட்டு கல் தொலைவில் உள்ள
ஆனங்கூர் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் குடியானவன் காளியும் அவன் மனைவி
பொன்னாவும் தான் மாதொருபாகனின் மையப்பாத்திரங்கள். கதையில் வரும் தகவல்களைக் கொண்டு, கதை நிகழ்ந்த
காலம் 1938/39 என ஊகிக்க முடிகிறது. இலகுவான
நடையில் நேரடியாக கதையைச் சொல்லும் எளிய நாவல் போல தோற்றமளித்தாலும்,
இது பல அடுக்குகள் கொண்ட நாவல்.
திருமணமாகி
பனிரெண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது தான் காளியின்/பொன்னாவின் பெரிய
குறை. குழந்தைப் பேறு இல்லாத குடியானவனின் வாழ்க்கையையும், அக்குறையைப்
போக்க மேற்கொள்ளும் முயற்சிகளுமே நாவலின் மையக்கரு. ஆனால், அதைச் சொல்லும்
விதத்தில், பெருமாள் முருகன் ஆர்ப்பாட்டமின்றி பல தளங்களைத் தொட்டு நாவலை எழுதியுள்ளார்.
கல்வியிலோ, பிறதொழிலிலோ தேர்ச்சியடைய வாய்ப்பற்ற குடியானவனின்
வாழ்க்கை அவன் வாழும் நிலத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது. அவன் இந்தியாவில், கணிக்கவியலா பருவ மழையின்
கருணையை நம்பியிருப்பவன். குடியானவனின் வாழ்க்கை
இயல்பிலேயே பாதுகாப்பற்றது.
அவனது பாதுகாப்பு, ஒன்று அவனது சொத்தைச் – நிலபுலம், மனைவி,
மக்கள் – சார்ந்தது. மனைவியும்,
குழந்தைகளும், ஆணாதிக்க சமுதாயத்தின் இயல்பான சொத்துகளாகத் தான்
கருதப்பட்டனர். இரண்டாவது, அவனது குழு
சார்ந்த சமுதாயக் கட்டமைப்புகள் – சாதி, சடங்கு/சம்பிரதாயங்கள் –தரும் பாதுகாப்பு. குழந்தைப் பேறு இல்லாதவன், எதற்கு சொத்து
சேர்த்த வேண்டும் என அவன் இருப்பையே சமுதாயம் கேள்விக்குறியாக்குகிறது. ஒரு சாதியில் பிறந்ததனாலேயே ஒருவனுக்குக்
கிடைக்கக்கூடிய சாதி/சடங்குகள் வழி கிடைக்கும் இயல்பான பாதுகாப்புகளை அடைவது கூட சந்ததியில்லாத
குடியானவனுக்குச் சிரமம் தான்.
குழந்தையில்லாதவனுக்கு சடங்கு, சம்பிரதாயங்களில் முக்கிய இடமளிப்பதுமில்லை.
இந்தச் சிக்கலைத் தான் பெருமாள் முருகன் நாவலில்
முன்வைக்கிறார். குழந்தைப் பேறுக்காக தனி
மனிதன் எவ்வளவு தூரம் செல்லக் கூடும் என்ற கேள்வியையும், எந்த அளவிற்கு
தனிமனிதனின் அம்முயற்சிக்கு சமுதாயம் நெகிழ்ந்து கொடுக்க்க் கூடும் என்ற
கேள்வியையும் எழுப்புகிறது. இந்தப்
பிரச்னையை எதிர்கொள்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வேறுபாடுகளையும், அதையொட்டி
எழும் கேள்விகளுமே மாதொருபாகனின், அடி நாதம்.
இது பற்றிப் பின்னர் பார்ப்போம். முதலில்,
நாவலைப் பற்றி ஒரு சில வரிகள்.
காளியின் பாத்திரத்தையும், பொன்னாவின்
பாத்திரத்தையும் பெருமாள் முருகன் படைத்திருக்கும் விதம் அலாதியானது. தான் வைத்த மரத்தில் பூத்து குலுங்கும் பூவரசம்
பூவை ஆசையுடன் தாவிப் பறித்து நுகர்ந்தவுடனேயே, "அட,
மரத்திலேயே விட்டிருக்கலாமே! ஈர்க்கும் எதையும் தன்வசமாக்கும்
உணர்வை தவிர்க்க முடியவில்லையே: என சுயபிரக்னை உள்ளவனவாகத் தான் அறிமுகமாகிறான் காளி. பூவரச மரத்தை வீட்டுக்கு முன்னால் எங்கே
நட்டால், கிளைகளை விரித்து வசதியாக வளரும் என சரியாக
கணிக்கும் திறன், கரிக்குருவிகள் இருக்கும் பனைமரத்தின்
அடியில் கோழிக் குஞ்சை வளர்த்தும் நுணுக்கம், தொண்டுப்
பட்டியை நருவிசாக வைத்திருக்கும் விதம், தன் மனைவிக்குப்
பிடிக்கும் என்பதற்காக வீட்டின் வாசலில் பூச்செடி வைக்கும் அனுசரனை, பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசும் குணம், - என
காளியின் பாத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக விரியும் போது, வாசகனுக்கு அனுக்கமானவனாகி
விடுகிறான்.
காளியின் மீது கட்டற்ற அன்பைப்
பொழிபவளாக, பற்றி வைத்தச் சரவெடியெனத் துடுக்காகப் பேசும் பெண்ணாக
பொன்னாவின் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார் - பெருமாள் முருகன். பொன்னாவுக்கும், காளிக்குமிடையே
இருக்கும் உறவை ,
என காளியின் மனதில் ஓடும் ஓட்டத்தின் மூலம் பெருமாள் முருகன் வர்ணிக்கும் போதே, அவர்களுக்கிடையே இருக்கும் அன்னியோன்யம் நமக்கும் பிடித்து விடுகிறது. பொன்னா கொஞ்சம் துடுக்குக்காரியாக இருந்தாலும், மாமன் காளி மீது கட்டற்ற காதல் கொண்டவள். அவர்களிடையே இருக்கும் அன்னியோன்யமான உறவு நம்பகத் தன்மையோடு இருப்பது தான், இந்த நாவலின் வலு.
'புதிதாகக் கல்யாணமாகி வந்து சேர்ந்திருக்கிற மாதிரி ஒரு துள்ளாட்டத்துடன் வீட்டுக்குள் அவள் நடமாடுவதை உணர்ந்தான். எங்கிருந்தாலும் அவள் என்ன செய்வாள்? எப்படிச் செய்வாள்? என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. ... கொஞ்ச நேரத்தில், 'மாமா மாமா' என்று எழுப்பினாள். அவள் முகத்தில் சிரிப்பு. கண், மூக்கு, கண்ணம், நெற்றி, எல்லாம் ஒருசேரச் சிரிக்கும் சிரிப்பு இவளுக்கு எங்கிருந்து தான் வருகிறதோ',
என காளியின் மனதில் ஓடும் ஓட்டத்தின் மூலம் பெருமாள் முருகன் வர்ணிக்கும் போதே, அவர்களுக்கிடையே இருக்கும் அன்னியோன்யம் நமக்கும் பிடித்து விடுகிறது. பொன்னா கொஞ்சம் துடுக்குக்காரியாக இருந்தாலும், மாமன் காளி மீது கட்டற்ற காதல் கொண்டவள். அவர்களிடையே இருக்கும் அன்னியோன்யமான உறவு நம்பகத் தன்மையோடு இருப்பது தான், இந்த நாவலின் வலு.
காளிக்கும், பொன்னாவுக்கும் உள்ள ஒரே பிரச்னை, திருமணமாகி 12 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காதது தான். அவர்களுக்கு குழந்தை இல்லாதது சுற்றியுள்ள அனைவருக்கும்- வாரிசில்லாத கவலை காளியின்
அம்மாவிற்கும், பேரக்குழந்தை இல்லாத கவலை பொன்னாவின்
பெற்றோர்களுக்கும், காளிக்கு குழந்தை இல்லாவிட்டால் அவன்
சொத்து தனக்கு வந்து விடாதா என்று ஆசையுடன் நாக்கைச் சுழற்றும் சுற்றத்தாருக்கும்-
உருத்துகிறது. சுற்றியுள்ள மனிதர்கள்
மட்டுமல்ல, நட்டு வைத்த பூவரசச் செடி மரமாகிப் பூத்துக்
குலுங்குவதும், வாங்கி வந்த பசு வருடம் தவறாமல் ஈவதும், பக்கத்து வீட்டுக் குழந்தைகள்
விளையாடுவதும் கூட, காளிக்கும், பொன்னாவுக்கும்
குழந்தை இல்லாத குறையை நினைவுறுத்திக் கொண்டே இருக்கின்றன. அவர்களுக்குக் குழந்தை இல்லாததை, கிராம
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை விட்டுப் போகவோ,
சககிராமத்தார் வாயில் இருந்து தப்பிப் போகவோ வழியில்லாமல் காளி/பொன்னாவின் வாழ்வு
இருக்கிறது.
திருமணத்திற்கு முன் நண்பர்களுடன், கோயிலாட்டம்,
பனங்கள் குடிப்பது என பொழுது போக்கிய காளி, குழந்தை
இல்லாமல் போனதும், கொஞ்சம் கொஞ்சமாக தன் நண்பர்களிடம்
இருந்து விலகி, தன் வாழ்க்கையைத் தன் தொண்டுப் பட்டி தரும்
அமைதியில் சுருக்கிக் கொள்கிறான். அதற்கு
நேர் மாறாக, பொன்னா தன் துடுக்கான பேச்சால், தன் குறையைச் சுட்டிக் காட்டும் அனைவரிடமும், "நறுக்'காகப் பேசி உறவைக் கத்தரித்து விடுகிறாள். குழந்தை இல்லாததால் இருவரது உலகமும், சுருங்கி விடுகிறது.
இரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொள்,என்று
சுற்றம் சொல்லும் போது, இரண்டாம் கல்யாணம் பண்ணினால் பொண்ணா
எப்படி எடுத்துக் கொள்வாள்? என காளி கொள்ளும் கவலையையும்,
இரண்டாம் கல்யாணம் பண்ணியும் குழந்தை பிறக்காமல் போய் விட்டால்
வறடன் என்ற பெயர் நிலைத்து விடுமேயென்று காளி உள்ளூர அஞ்சுவதையும், எங்கே காளி இரண்டாவது கல்யாணத்திற்குச் சரி என்று சொல்லி விடுவானோ என்று
பொண்ணா மருகுவதையும், மிகையின்றி இயல்பாகச்
சித்தரித்திருத்திருக்கிறார், பெருமாள் முருகன்.
கடவுளின் கோபம் தீர்ந்தால் குழந்தை பிறக்கும் என்ற
நம்பிக்கையுடன், பல்வேறு நேர்த்திக் கடன் களை (சுயவதைகளை) காணிக்கையாகத்
தருகிறாள், பொன்னா. வேப்பந்தழையை
அரைத்துக் குடிப்பதில் ஆரம்பித்து, மாதொருபாகனுக்கு படிகளில் விளக்கேற்றுவது,
பாவாத்தாவுக்கு பொங்கல் வைப்பது, கரணம் தப்பினால் மரணம் என உச்சியில்
இருக்கும்வரடிகல்லைச் சுற்றுவது எனப் படிப்படியாக தன் படையலின் உக்கிரத்தை அதிகப்
படுத்திக் கொண்டே போகிறாள். இந்த
இடத்தில், பழங்குடி நம்பிக்கைக்கும்,
இந்து மதம் கட்டமைத்த கடவுளின்
நம்பிக்கைக்கும் குடியான மக்களிடையில் இருந்த வேறுபாட்டை திறமையாக பெருமாள்
முருகன் முன் வைக்கிறார். உதாரணமாக, பாவாத்தாவுக்கும்,
வறடிகல்லுக்கும் செய்யும் பூசை அளிக்கும் நம்பிக்கையை, மலை மேல்
உறைந்திருக்கும் மாதொருபாகனுக்கு செய்யும் பூசை, காளிக்கோ, பொன்னாவுக்கோஅளிப்பதில்லை. பல தலைமுறைகளாக மாதொருபாகனுக்குப் பூசை செய்யும்
புரோகிதருக்குக் கூட, பாவாத்தாவின் ஐதீகம் பற்றித்
தெரிவதில்லை. ஆனால், சுத்து வட்டாரத்தில் இருக்கும் எல்லா வயசான பெண்களுக்கும் இந்த ஐதீகங்கள்
அத்துப் படியாக இருக்கின்றன. இந்து மதக்
கட்டமைப்புக்குள்ளே இருந்து கொண்டே, பழங்குடி ஐதீகங்கள் மேல்
நம்பிக்கை வைத்திருக்கும், பல நூறு குழுக்களுள் ஒன்று தான்
அந்த நிலத்தைச் சார்ந்த கவுண்டர்கள்.
கதையின் முக்கிய முடிச்சு தான் பெரும் விவாதத்துக்குள்ளானது
என்பதால், அதை இங்கே சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன். திருச்செங்கோட்டு செங்கோட்டையனின் தேர்விழா
முடியும் கடைசி நாளிரவில், நிகழும் கோலகலங்களில் ஒரு பண்பாடு சார்ந்த சமுதாய நெகிழ்வு
இருக்கிறது. குழந்தைப் பேறு இல்லாத
பெண்கள், அந்தக் கோலகலங்களில் கலந்து கொண்டு, தனக்குப் பிடித்த ஒரு 'சாமியோடு' உறவு கொண்டால், குழந்தை பிறக்கும் என்ற ஐதீகம்
இருக்கிறது. இரண்டாம் கல்யாணம் செய்வதற்கு ஒத்துக் கொள்ளாத காளியிடம், அந்த ஐதீகத்தைச் சொல்லி, பொன்னாவை அந்த கடைசி நாள்
திருவிழாவிற்கு அனுப்பு என்று காளியின் அம்மா சொல்கிறாள். அதற்கு பொன்னாவின் அம்மாவும் கூட்டு. இந்த விஷயம் தான் பெரிய
சர்ச்சைக்குள்ளாகியது. இதைக் கொஞ்சம்
கூர்ந்து பார்ப்போம்.
முதல் கேள்வி, கோவில் திருவிழாவில் இப்படி நடப்பதற்கான சாத்தியக்
கூறு இருக்கிறதா? என்பது. அந்தக் கேள்விக்கு, “இருக்கிறது”, என்று துணிவாகச் சொல்ல
முடியும். உலகில் உள்ள எல்லா கலாசாரங்களிலும்,
எல்லாப் பழங்குடி சமுதாயத்திலும் குழந்தைப் பேறுக்கான சடங்குகள் (Fertility rites) இருந்துள்ளன. பண்டைய
கிரேக்கர்கள், தங்களைச் சுற்றியிருந்த த்ரேஸிய/பாக்கிய (Thracians/Bacchians) மக்களின் கட்டற்ற குடி, நடனம், கலவி ஆகியவற்றை வெளியில் பெரும் சந்தேகத்துடனும்
அருவருப்புடன் பார்ப்பதாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளூர அம்மக்களின் கட்டற்ற
சுதந்திரம் அவர்களை ஈர்த்த்து.
பிற்காலத்தில், அந்தப் பழக்கங்களை, சடங்குகளாக்கி ஒரு சில தினங்களில்
மாத்திரம் இப்படிப் பட்ட சுதந்திரமான கலவியை வைத்துக் கொள்ளலாம் (முகமூடி அணிந்து)
என்று அனுமதித்தர். பிற்கால ரோமர்களின்
ஆட்சியில் இது ஒரு பண்டிகையாக்க் கொண்டாடப்பட்டது (Saturnalia). இது போன்ற கலவிச் சுதந்திரத்தை,
இன்றும் பரந்து, விரிந்திருந்த ரோம ராஜ்யத்தை வீழ்த்திய “நாகரீகமற்ற” ஜெர்மனியில்
கொண்டாடப்படும் கார்னிவால் போன்ற பண்டிகைகளில் காணலாம். இந்தியாவில், சிந்து சமவெளி நாகரீகத்தில்
காணப்பட்ட, பெரும் குளியலறைகளில், குழந்தைப் பேறுக்கான சடங்குகள் நடந்திருக்கலாம்
என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பண்டிகைக்
கால கலாசார நெகிழ்வு என்பது பழங்குடி கலாசாரத்தின் எச்சம். சாதாரண நாட்களில் வீட்டிலிருப்பதே தெரியாமல்
இருக்கும் பெண்கள் கூட, திருவிழாவின் போது ‘சாமி’ வந்து தெருவில் ஆடுவதும், ஈரப்
புடவையுடன் தீ மிதிப்பதும், தீச்சட்டி எடுப்பதும், கூட ஒரு கலாசார நெகிழ்வு
தான். அந்த நெகிழ்ச்சியான கூத்தாடும்,
பித்த மன நிலைக்கு மக்களைக் கொண்டு செல்ல உதவுவது தான் விழா சார்ந்த
மேள/தாளங்களும்.
சாட்டர்னாலியா என்ற ரோமானியத் திருவிழாவில் அனுமதிக்கப்படும் கலாசார நெகிழ்வு பிற நாட்களில் இருப்பதில்லை. |
இரண்டாவது கேள்வி.
“அதெப்படி, பொன்னாவின், அம்மாவும், மாமியாருமே இப்படிப் பட்ட ஒரு செயலில் ஈடுபடத் தூண்டுவார்கள்?”, என்பது. பொன்னா, கடும்
விரதங்களையும், நோண்புகளையும் செய்தும், குழந்தை பிறக்கவில்லை என்பதையும், பொன்னாவும்/காளியும்
இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதையும், அறிந்த பின்னரே, இதை
ஒரு நேர்த்திக் கடனாக, சடங்காக மட்டுமே பொன்னாவிடம் முன்வைக்கிறார்கள். இந்த இடத்தைப் பெருமாள் முருகன் மிகவும்
நுட்பமாகக் கையாண்டு இருக்கிறார். தன்
மகனிடம் இதைப் பற்றிப் பேச்செடுக்கத் தயங்கித் தடுமாறும் காளியின் அம்மாவையும், இந்தப்
பேச்சால் பொன்னாவுக்கும்/காளிக்குமிடையேயான உறவில் எழும் விரிசலையும், நண்பனுக்காக, அதீத உரிமையெடுத்து, முடிவெடுக்கும் முத்துவையும்,
இந்த விஷயமே தெரியாமல் காளி இருப்பதையும், பெருமாள் முருகன் மிகுந்த
கரிசனத்தோடு பெருமாள் முருகன் சித்தரித்திருக்கிறார்.
கடைசியாக, “அதெப்படி, பொன்னா போகக் கூடும்?”, என்ற கேள்வி. குழந்தைப் பேறு இல்லாமல் ஒரு ஆணால் தன்
வாழ்க்கையைக் கடத்தி விட முடியும். அதற்கு
உதாரணமாகத் தான், நல்லுப்பையன் சித்தப்பாவின் பாத்திரம் இருக்கிறது. ஆனால்,
குழந்தையில்லாத பெண்களின் நிலைமை, அதை விட மோசம்.
இந்திய சமூகத்தில், ஒரு பெண் தாயாகும் போது தான், ஒரு ‘மதிப்பிற்குரிய’
பெண்ணாகிறாள். குழந்தை பெறாதவள், ஒரு
அமங்கலச் சின்னமாகத் தான் கருதப்படுகிறாள்.
பொன்னா, விதை தூவியது கூட, “வறடி தூவியது எப்படி விளையும்”, என்ற பேச்சை
உருவாக்குகிறது. பொன்னாவும், காளியும், 12
வருடங்கள் ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாக இருந்து விட்டவர்கள். கதையைப் படிக்கும் யாருக்கும், பொன்னா
காளியிடம் காணாத உடல் சுகத்திற்காக போனாள் என்று கருதுவதற்கோ, கள்ள உறவு தரும்
கிளர்ச்சிக்காகப் போனாள், என்று கருதுவதற்கோ, எந்த முகாந்திரமும் இல்லை என்பது
புலனாகும். பொன்னாவைப் பொருத்த வரையில், இதுவும் குழந்தையைப் பெற அவள் செய்யும் இன்னொரு தீவிரமான சடங்கு தான். இத்தகைய நுட்பமான மன நிலைகளை பெருமாள் முருகன் எளிய மொழியில் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.
No comments:
Post a Comment