Saturday, April 25, 2015

மாதொருபாகன் - 2


மாதொருபாகன் - 1 இன் தொடர்ச்சி...

மாதொருபாகனின் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம் அந்த கால கட்டத்து குடியானவனின் வாழ்க்கையை ஆவணப் படுத்துவது.  குடியானக் கவுண்டனும்கள்ளிறக்கும் சாணானும்காட்டில் வேலை செய்யும் சக்கிலியும் ஒரே காற்றைச் சுவாசித்து வாழ்ந்தாலும்அவர்களுக்கிடையே இருக்கும் சமுதாய வேறுபாடுகளை பெருமாள் முருகன் மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார்.    குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும்வாரிசும்  முக்கியப் பங்கை வகிக்கின்றன.  


'பணத்தச் சேத்து வெச்சு என்ன செய்யப் போறீங்கநல்லா சாப்புட்டுதுணிமணி வாங்கி உடுத்திச் சந்தோஷமா இருங்க', 

என்று முத்துவின் தங்கை நங்கை சொல்கிறாள்.   இரண்டாம் மாமனின் மனைவியிடம் (கதிர்வேலுவின் அம்மா) சண்டை போடும் போது


'கொழந்த இல்லாதயே போயி சொத்தக் கண்டவுங்களுக்குக் கொடுத்தாலும் அவளுக்கு மட்டும் ஒரு பைசா கொடுக்கக் கூடாது', 

என்று பொருமுகிறாள் பொன்னா. 'எதுக்கு இப்படி கஞ்சத்தனம் பன்னிச் சேத்து வெக்கறீங்கபுருஷனில்லாத பொம்பளயும்பிள்ளையில்லாத சொத்தும் ஒன்னும்பாங்க', என்று சொல்கிறாள் பொட்டுப்பாட்டி.  காளியின் சொத்துஉன் வாரிசுகளுக்குத் தான் என்று முத்துவிடம் அவன் கூட்டாளிகள் சொல்கிறார்கள்.  இப்படிக் கதை நெடுகேசொத்து ஒருவனின் வாரிசுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் குணம்குடியானச் சாதியின் குணம்.  அந்தக் குணாதியசத்தைத் துலங்க வைக்கும் பாத்திரமாக,  நல்லுப்பையன் சித்தப்பா படைக்கப்பட்டிருக்கிறார்.  அவர் செய்யும் சேட்டைகளைப் படிக்கும் போது வெடித்துச் சிரித்து விட்டேன்.    

தீண்டாச் சாதிக்காரனைப் பற்றிய கவலை காளிக்கு மட்டுமல்லபொன்னாவுக்கும் உள்ளூர இருக்கிறது.  


" எங்கயாச்சும் போயீ ஒரு குழந்தையக் கொண்டா.  தீண்டாச் சாதி வீட்டில இருந்து எடுத்துட்டு வந்தாலுஞ் சரி.  இந்தச் சொந்தப்புள்ள இல்லாத சொத்துன்னு நாளைக்கு ஒருத்தி சொல்லக் கூடாது"

என்று ஆவேசமாக காளியைத் தொண்டப்பட்டியிலிருந்து தள்ளுகிறாள் பொன்னா (ப 184).  அது ஒரு குடியானவச்சி வாரிசுக்காகசாதியை(க் கூட)ஒதுக்கி வைக்க ஒத்துக்கொள்ளும் தருணம். 

காளிகுடித்து விட்டு மண்டையனின் பிறக்கவிருக்கிற குழந்தையைத் தான் தத்து எடுத்துக் கொள்ள தயாராக இருப்பதாகச் சொல்லும் போதுகாத்தாயி


'குடிச்சுப்பிட்டா பிய்யவா தின்னுருவபோதையில கவுண்டரு கிட்ட சொல்லீர்ர.  நாளைக்கு வந்து கேட்டார்னா என்ன சொல்வே?  பெத்த குழந்தைய அப்பிடித் தூக்கிக் கொடுக்க முடியுமாகுடுத்தாலுந்தான் கவுண்டரூட்ட சாணாப் பிள்ள வளர முடியுமா?', 

எனத் தன் கணவன் மண்டையனைக் கடுமையாகச் சாடுகிறாள்.  அந்தச் சாடலில் தெரிவது ஒரு தாயின் கவலை மட்டுமல்லஅன்று நிலவிய சாதிக் கட்டமைப்பின் நிதரிசனமும் தான். 

பொன்னா, திருவிழாவுக்குப் போகக்கூடும் என்பதைக் காளியால் ஏற்றுக் கொள்ள முடியாததற்குக் காரணம், அப்படிப் போய்க் குழந்தை பிறந்தால், தன்னை வறடன் என்று பொன்னா நினைத்து விடுவாளே என்ற அச்சமும், அந்தக் குழந்தை கீழ்சாதிக் காரனால் உருவானால், அதைத் தொட்டுத் தூக்கக் கூட முடியாதே, என்ற அச்சமும் தான்.  அப்படிப் போனால் தன் பொன்னாவை இன்னொருவன் தொட்டு விடுவானோ – அதுவும் ஒரு கீழ் சாதிக்காரன் கூடத் தொடும் சாத்தியம் உள்ளதே – என ஆணாதிக்க மனம் கொள்ளும் பதற்றமும் தான்.

கடைசியாக, இந்த நாவலில் எனக்குப் பிடித்த அம்சம், பொன்னா பண்டிகைக்குப் போவதைப் பெருமாள் முருகன் சித்தரித்திருக்கும் விதம்.   பொன்னா14 ஆம் நாள் பண்டிகைக்கு  பயணம் செய்யும் போதுகக்கத்தில் துண்டை வைத்துக் கொண்டுமிகப் பணிவாக வண்டியில் இடம் கேட்கும் சக்கிலியனின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.  சக்கிலியனின் குழந்தைகளை ஆசையுடன் பார்க்கிறாள். சக்கிலியன் யாரையும் தீண்டாமல்தன் குடும்பத்தை வண்டியினுள் சாமர்த்தியமாக அமர்த்துவதையும்தன் தந்தையை விட மிகத் திறமையாக வண்டியை ஓட்டுவதையும் கவனிக்கிறாள். இந்தக் குழந்தைகளைப் போல, "துரு துருவென  இருக்கும் குழந்தைகளைத் தர வேண்டும்"எனக் கடவுளை வேண்டுகிறாள்.  பொன்னாவின் மன நிலைகடவுளிடம் இறைஞ்சும் ஒரு யாசகனின் நெகிழ்ந்த மன நிலையாக இருக்கிறது.  மனிதனைக் கடவுளாகப் பார்க்கப் பிரயத்னப்படுபவளின் மன நிலை.  ஓர்ஃபிக் (Orphic)/பாக்கிக்(Bacchic) சடங்குகளில் விதிகளை மீற எத்தனிப்பவனின் (Enthusiasmous) மன நிலை.  அன்று அவளிருக்கும் மனநிலையில் சாதி பெரிதாகத் தெரிவதில்லை.  அந்த மனமாற்றம் நேராவிட்டால்அந்தப் பண்டிகையில் அவளால் பங்கு கொண்டிருக்கவே முடிந்திருக்காது.  இதைக் குறிப்பிடவின்றிஅந்தச் சக்கிலியன்அந்தப் பயணத்தில் பங்கு கொள்வதாகக் கதையில்  சித்தரிக்க எந்தக் காரணமும் இல்லை என்றே என் மனதிற்குப் பட்டது. 

பண்டிகைக்குப் போகும் வரை மனக்கிலேசத்துடன் இருக்கும் பொன்னாபண்டிகையில் தனித்து விடப் பட்ட பின்னர்முதலில் கொள்ளும் தடுமாற்றமும்,  அந்தப் பண்டிகையில் நிகழும் கோயிலாட்டமும்சிறுத்தொண்டர் கதாகலாட்சேபமும்,  முன்பின் அறியாத ஜனத்திரளுள் பயனிக்கும் போது கிடைக்கும் சுதந்திரமும், அவளை ஈர்க்கிறது. 
திருச்செங்கோடுத் தேர் திருவிழா

அவ்விரவில்ஒரு புறம்பொன்னா படிப்படியாகக் கொள்ளும் சுதந்திரமும்இன்னொரு புறம்பொன்னாவை பார்க்க ஆவலுடன் மண்டையனின் கள்ளுக்கடையில் இருந்து காடு/மேடைத் தாண்டி வரும் காளியின் மன நிலையையும் பெருமாள் முருகன் நாவலில்முன்னும் பின்னும் நகர்ந்து விவரித்திருந்ததுஒரு நல்ல சினிமாவின் உச்சக்கட்ச காட்சியைப் போல மனதில் நிற்கிறது. 

அந்த இரவில்பொன்னாவை நாடும் முதலிரண்டு பேரை பொன்னா உடனே நிராகரித்து விடுகிறாள்.  கடைசியாக பொன்னா, "தெரிவு" செய்தவன்நுட்பமானவனாக இருக்கிறான்.  நாலுகடையில் படி ஏறிஇறங்கிப் பார்த்துநல்ல புட்டாக வாங்கி வருவது அவளுக்குப் பிடித்திருக்கிறது.  அதே போல், "செல்விசாப்பிடுறியா?" என அவளைக் கேட்காமலேஅவளுக்குப் புதுப்பெயர் சூட்டி அழைக்கும்சூட்சுமமும், நெளிவு/சுளிவும் பிடித்திருக்கிறது.  அதிர்ச்சியை உருவாக்க எழுதிய எழுத்தல்ல - பெருமாள் முருகனதுஎன்பதில்இந்த நாவலைப் படித்த யாரும் சந்தேகம் கொள்ள முடியாது.   


மாதொருபாகனில் பெருமாள் முருகன் எந்த எளிய விடைகளையும் முன்வைப்பதில்லை.   மாதொருபாகன்சாதியமைப்பை விமரிசனம் செய்யவில்லை.  கதைக்களனில்  நிலவிய சாதியமைப்பை ஆரவாரமில்லாமல் ஆவணப்படுத்துகிறார்.  என் பார்வையில்அத்தகைய ஆவணப்படுத்தலே அத்தியாவசமான விமரிசனம் தான்.  இந்த நாவல்சினுவா அச்சேபேவின் "சிதைவுகளை" நினைவு படுத்தியது.  அந்த நாவலில் அச்செபே நமக்குநைஜீரிய பழங்குடிகளின் சில கொடிய பழக்கங்களைக் கூட மிகுந்த கரிசனத்துடன்உள்ளபடி விவரித்து ஆவணப்படுத்துவார்.   அந்தக் கரிசனத் தொனி சற்று மிகையானால் கூடஉணர்ச்சிக்குழம்பாகி கதையின் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.  அதேத் தரத்தில் இந்த நாவலை  நிறுத்தலாம்.

இந்த நாவலில் என் மனதை நெருடியசில விஷயங்களும் உண்டு.  பல இடங்களில்show don’t tell”, என்ற அடிப்படை கதை சொல்லும் விதியை பெருமாள் முருகன் கடைப்பிடித்திருக்கலாம். உதாரணமாக, "புட்டு சாப்புடுறயாசெல்வி"என்று கேட்பதோடு நிறுத்தியிருக்கலாம்.  அடுத்த வரியிலேயேஅவன் கேட்டது ஏன் பொன்னாவுக்குப் பிடித்திருந்தது என விளக்கி விடுகிறார். அதே போல்இரண்டாவதாகப் பார்த்தவன்சக்தியின் சாடையைக் கொண்டவனாக இருந்ததால் பிடிக்கவில்லை என்பதோடு நிறுத்தியிருக்கலாம்.  அது ஏன் பொன்னாவுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் அடுத்த வரியிலேயே விளக்கி விடுகிறார்.  தன் வாசகர்கள் பெருமாள் முருகனுக்கு நம்பிக்கையில்லையா, என்ன? அதே போல், 1938/39 இல் திருச்செங்கோட்டில் நடந்ததாக சொல்லப்படும் கதையில், பக்கத்து ஊரில் பிறந்து பெரும் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்திய பெரியாரைப் பற்றி ஒரு வரி கூட இல்லாதது, கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்தது.  

எப்படி இருந்தாலும், வெறும் 175 பக்கங்களில், இந்த நாவல் ஒரு எழுபத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குடியாவனின் வாழ்க்கையை நம்பகத் தன்மையோடு சித்தரிக்கிறது.  நவீன உத்திகளைக் கொண்டு கருத்தரிக்கும் வசதிகள் இருக்கும் காலத்தில் கூட, குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினருக்கு, இந்தியச் சமுதாயம் அளிக்கும் கலாசார நெருக்கடி இன்றைக்கும் குறிப்பிடத்தக்கது தான்.  அந்த நாவல் பேசும் சாதிக்கட்டமைப்பு இன்றும் தமிழ் நாட்டில் வலுவாகத் தான் இருக்கிறது.  நாவலில் மலைப்பிரசங்கங்கள் இல்லைஅதிமனிதர்கள் இல்லை; பிரபஞ்ச தரிசனங்கள் இல்லை. 

பெண்ணைத் தன் சமபாகமாகக் கொண்ட மாதொருபாகனை வழிபடும் இந்தியச் சமூகம், அந்தப் பெண் தாயானால் மட்டுமே அவளுக்குரிய சமுதாய அந்தஸ்தை தரத் தயாராக இருக்கிறது என்பது நகைமுரண்.  இந்த அபத்தத்தின் மீது கவனத்தைக் குவிக்கிறார் பெருமாள் முருகன்.  இவ்வளவு நுட்பமாக எழுதப்பட்ட நாவலுக்கு எழுந்த சர்ச்சை சமகால, அரசியலின் வெளிப்பாடே என்று கருத வேண்டி உள்ளது.  மாதொருபாகன், சமீபகாலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த புதினங்களில் ஒன்று.   

கடைசியாக, மாதொருபாகன் மனதைக் கவர்வதற்கான காரணம், இந்த நாவல் தொடும் தளங்கள் பல.  தனிமனித நேசத்தை ஒரு தளத்திலும்,  குடியானவ சமுதாயத்தின் பண்பாட்டு விழுமியங்களை, கட்டுப்பாடுகளை மற்றொரு தளத்திலும்,  சந்ததியின் தொடர்ச்சிக்காக சமுதாயம் மறைமுகமாக அவ்வப்பொழுது நெகிழ்ந்து கொடுக்கும் "திருவிழாத்தனங்"களை இன்னொரு தளத்திலும்,  இவற்றை ஒருங்கே எதிர்கொள்ள நேரும் ஒரு சாதாரண குடியானவனுக்கு உள்ள சவால்களையும், திண்டாட்டங்களையும் ஆர்ப்பாட்டமே இல்லாமல் முன்வைப்பது தான்.  வெறும் 170 சொச்சம் பக்கங்களில்,  'பெரும் இலக்கியம் படைக்கிறேன் பார்'  - என்ற எந்தத் தோரணையும் இல்லாமல்,  போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனது போல் எழுதியிருப்பது நாவலின் மிகப் பெரிய பலம்.
இந்த நாவலுக்கு எதிராக எழுந்த சர்ச்சைகள்  பலரை - சாதிபுத்தியினரை, மதவெறியர்களை,  தன் நாவலுக்கு இத்தகைய சர்ச்சை உருவாகமல் போய்விட்டதே என வெளிப்படையாகவே அங்கலாய்க்கும் 'முற்போக்கு' எழுத்தாளர்களை, பெருமாள் முருகன் ஊர் பேர்/சாதி பேர் போடாமல் எழுதியிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்று கூட தெரியாத எழுத்தாளராக இருக்கிறாரே என பூடகமாக தங்களை முன் நிறுத்துபவர்களை, இதெல்லாம் எழுத்தே அல்ல என்றாலும் கருத்துரிமைக்காக ஆதரிக்கிறேன் என்ற தோரனையில் ஜம்பமடிக்கும் 'நுட்ப'மான வாசகர்களை - அடையாளம் காட்டியது.  வெகு சிலரே, இந்த நாவலெலுப்பும் கேள்விகளுக்குச் சர்ச்சையைக் கடந்த  ஒரு ஆக்கப்பூர்வமான விவாதத்தை முன்வைத்தார்கள்.  

பல தமிழ் நாவல்கள், நடுத்தர வர்க்க, படித்த பிராமணக் குடும்பத்தின் வாழ்க்கையை ஏதோ ஒரு கோணத்தில் சொல்பவை.  காவல் கோட்டம், கொற்கை, வெள்ளை யானை போன்ற நாவல்கள், இதுவரை அதிகம் எழுதப்படாத தமிழ் சமுதாயத்தின் கதைகளைச் சொல்கின்றன.  பெருமாள் முருகனின் நாவல் சாதி/வர்க்கம் சார்ந்து குறுகுவதில்லை.   தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் அடிப்படை விழுமியங்களை, "மாதொருபாகனை வழிபடும் சமூகம், பெண்ணுக்கு நடைமுறையில் கொடுக்கப்படும் இடம் என்ன?", போன்ற கேள்விகளை எழுப்புகிறது.  இந்தக் கேள்வி, 1930 களில் மட்டுமல்ல, 2010 இலும் முக்கியமானதே.  அதனாலேயே, காலத்தைக் கடந்து நிற்கும் எழுத்து - மாதொருபாகன் !

No comments:

Post a Comment