Monday, March 7, 2022

வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்


மலன் ஸ்டேன்லி எழுதிய இந்த அபுதினம் -  memoir-எனும் நினைவுக் குறிப்பிலிருந்து, ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு படைக்கும் சுயசரிதை வகையை சார்ந்தது.

மேற்கத்திய நாடுகளில் பிரசத்தி பெற்ற இந்நாவல் வகை, தமிழில் அபூர்வம். தமிழ்நாட்டில் வாழும் எழுத்தாளர் ஒருவர்  memoir  எழுத முற்படுகையில், ஒன்று - அவரது வாழ்க்கையில் நிறைய சுவராஸ்யமான விடயங்கள் நடந்திருக்கவேண்டும். இரண்டு - கூர்மையான ஞாபகசக்தியும், நடந்தவற்றை எழுத்தில் வடிக்கும் திறனும் வேண்டும். மூன்று - இவ்விரண்டையும், தான் தேர்ந்தெடுத்த கருப்பொருளோடு கட்டி இணைத்து ஒரு செம்மையான வாழ்க்கை தரிசனத்தை முன்மொழியவேண்டும்.

 

இம்மூன்றும்  சிறப்பாய் அமையப் பெற்ற ‘வெறும் தானாய் நிலைநின்ற தற்பரம்’ நாவலின்  narrative - இயல்பானதாய், இலகுவானதாய் கைகூடி வந்தது போல்  படைத்தது சிறப்பென்றாலும், இப்படைப்பின் பின் உள்ள முயற்சியும், தன்முனைப்பு (egotism) இல்லாத நோக்கும் இந்நாவலுக்கு மேலும் வலு சேர்க்கின்றன.

Genetic lottery  என்று சொல்வார்கள் - பிறவியிலேயே கருணையுள்ளம் கொண்டவராக இருக்கிறார் அமலன். இதுவல்லாமல் அவரின் வளர்ப்பு அன்னையான சாந்தா அக்காளின் பழுதில்லா அன்பும், அவரது அகால மரணமும், அமலனின் ஆழ்மனதில் கருணையின் மகத்துவத்தையும், அதே சமயத்தில் இழப்பின் துக்கத்தையும்,  புதிரையும் இன்றளவும் மாறி மாறி வலியுறுத்துவதாக தொடர்கிறது.

சகலரிடத்தும் அன்புள்ளம் கொண்டு ஒழுகுபவர், உங்களை சிறுபிராயத்திலிருந்தே வளர்த்து வந்தால் - அவரே முதல் குரு. பின்னாளில் விபரமறிய ஒருவர் அறியவரும் தூரத்து மகான்களைக் காட்டிலும், ரத்தமும் சதையுமாக அணுக்கமாக இருந்து, தனது இயல்பான அன்றாட வாழ்வியல் நடப்பினாலேயே  - எழுத்து, சித்தாந்தங்கள் எதுவுமின்றி அமலனின் சிறுபிராயத்திலிருந்தே வாழ்வு பற்றி உணர்வு ரீதியாக ஆழமாக போதித்து சென்ற குருதான் சாந்தா அக்கா.  அமலனின் வாழ்வில் சாந்தா அக்கா - ஒரு  environmental lottery.

அமலனின் பதின்பருவத்தில் அவர் வாசிக்க வாங்கி வரும் நூல்களை அவர் படிக்கும் முன் அவரது தந்தை படித்துவிட்டு தன் கருத்துக்களையும் குதூகலத்துடன் பையனுக்கு தெரிவித்தால், கடுப்பாக இருந்தாலும் ஒரு வளரும் மாணவனின் உண்மையான கல்விக்கு எவ்வளவு பெரிய திறப்பாய் இருந்திருக்கும்? குடுப்பினை சிலருக்கே.

அமலன் மென்மையானவராக இருக்கிறார்; அவ்வப்பொழுது கை நீட்டவும் செய்கிறார்.   ‘I contain multitudes’  எனும் கூற்று ஒன்றுண்டு - ஒரு மனிதனுக்குள்ளேயே பன்முகத்தன்மை.  சூழ்நிலைகளுக்கேற்ப ரௌத்திரம் பழகவும், இதர நேரங்களில் அன்பு பாராட்டுவதும் முரணாக படவில்லை.

முதல் மனைவி இருக்கும் போதே, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்கிறார்.  சூழ்நிலைகளால் இந்நிலை வந்தடைந்ததை இயன்றவரை  objective-ஆக சொல்கிறார்.  நம் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் ‘நடந்திருக்கவே கூடாது’ என்று எவ்வளவு உத்தேசித்து முயன்றிருந்தாலும் - நடந்துதான் தொலைகிறது. அதன்பின், நேர்மையாக எதிர்கொள்வதே முறை. அவரது எழுத்தில் இந்த நேர்மையை காண முடிகிறது.

அமலன் முனைவராக - 30 வருடங்களுக்கும் மேலாக, மருந்து வடிவமைப்பு (Drug Development)  மற்றும் சூழல் சார்ந்த நச்சுயியல் (Environmental Toxicology) ஆகிய துறைகளில் அவரது ஆராய்ச்சி சார்ந்த அனுபவத்தின் மூலம் பல தளங்களில் அவர் பகிர்ந்து செல்வது - தமிழ் எழுத்தில் அரிது; புத்துணர்வு அளிப்பதாய் உள்ளது.

ஒரு சமுதாயம் வளர்வதற்கு, அச்சமுதாயத்தில் உள்ள திறன் மிக்க அனுபவம் வாய்ந்த அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் அனுபவத்தையும் தாங்கள் கற்றதையும் எழுத்தில் வடித்து வெகுஜன மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணி, மிக மிக அவசியம்.

இலக்கிய மற்றும் கல்வித்துறை சார்ந்த வல்லுனர்கள் இம்மாதிரி நூல்களை மதிப்புரை செய்து வாசகர்களிடையே பிரபலமாக்கி இருக்க வேண்டும்.  இந்நாவல் வாசகர்களை அடையவில்லையென்றால் அது அச்சமுதாயத்தின் இழப்பே.

நன்கு எழுதப்பட்ட புதினத்தின் கதை ஓட்டமோ சதியின் வசீகரமோ memoir வகை எழுத்தில் இருப்பதில்லை தான்.  ஆனால் சற்றேனும் அனுபவப்பட்ட வாசகனுக்கு, அதுவும் ‘தேடல்’ வேட்கை கொண்ட வாசகனுக்கு இந்நாவல் தரும் வாசிப்பனுபவம் வெறும் விறுவிறுப்புத் தன்மைக்கு மாற்றான ஆழமான மனநிறைவைத் தரவல்லது.

வாய் கட்டப்பட்டு, 2- சக்கர வண்டியின் பின்னர் கசாப்பு கடைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆட்டின் விதியை நினைத்து கவலை கொள்ள முடிகிறது;  எங்கோ நடந்து செல்லும்போது அங்குள்ள குடிசையில் வாழும் குடியானவர்களுக்கும் தனக்கும் என்ன உறவு என்று வினவ முடிகிறது;  மலைப்பகுதிகளில் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நிறுவனங்களின் மூலம் தன்னால் இயன்றவரை தொடர்ந்து பொருளுதவி செய்ய முடிகிறது;  கேட்பாரற்று தெருவில் அல்லலுறும் விலங்கினங்களுக்கு அடைக்களம் அளிக்கும் சரணாலயங்களோடு தொடர்புறுத்தி தன்னால் முயன்றவற்றை அயர்ச்சியின்றி  தொடர்ந்து உதவமுடிகிறது;

முத்தாய்ப்பாக,  அமலனின்  memoir-ல் மையச் சரடாக நான் காண்பது அவரது ஆன்மிகத் தேடலே.  நாவலின் ஆரம்பத்தில் இலக்கின்றி எய்யப் பட்ட அம்பு போல புறப்பட்டாலும் இறுதியில் சட்டென தேடலில் குவிமையம் கொண்டு தீர்க்கமாக நாவலெங்கும் ஸ்திரமாக வியாபிக்கும் ஒரு வாழ்க்கைத் தரிசனமாக நிலைகொண்டு முடிகிறது.  இவரது தேடல் சமயம் சார்ந்தது அல்ல.  அதே சமயத்தில் எந்த ஒரு முறையையும் (methodology) சார்ந்ததல்ல.

மேன்மை எங்கிருந்தாலும் எந்தப் பாரபட்சமுமின்றி திறந்த மனத்துடன் அணுகுவது அமலனின் சிறப்பு.  புத்தனின் ‘விபஸ்ன்னா’ தியான முறை, ஜென் துறவி பாஷோ, வள்ளலார், அருணகிரிநாதர் என பலவழிகளை அயராத முயற்சியுடன், முழு முனைப்போடு தேடும் அமலனின் உழைப்பு அசாதாரனமானது;  இவரது உழைப்பை தேடலில் ஈடுபடுவோருக்கு ஒரு reference bar-ஆக வைக்கலாம் என்றே தோன்றுகிறது.

‘நான்’ எனும் எல்லை பலருக்கு தன் தோலோடு முடிகிறது. சிலருக்கு அதன் எல்லை தன் குடும்பம் வரை விரிகிறது.  இன்னும் சிலருக்கு தன் சாதி, சனம், இனம் எனவும் நீள்கிறது.  வெகு சிலரே இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ‘நான்’ என்பதாக உணர்கிறார்கள். எவ்வுயிர் துன்பம் காண நேர்ந்தாலும், அது தன் துன்பமே.  மகிழ்ச்சியும் அவ்வாறே.  இவ்வகை மனிதர்களின் எல்லை, வெளி மற்றும் காலத்தை கடந்ததாக உள்ளது.  அமலன் இவ்வகையைச் சார்ந்தவர்.  

நாம் அடையும் பல துனபங்களுக்கே நமக்கு காரணம் தெரிவதில்லை.  அதுவும் மற்ற மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் துன்பங்கள் ஏன் என்ற கேள்விக்கு விடையும் இல்லை: விடை இருந்தாலும் அதனால் மனம் நிம்மதியும் கொள்வதில்லை.  

இந்த சிக்கலுக்கு பலரும் கண்ட மார்க்கம் ‘நான்’ என்பதையே கரைத்துவிடுவது தான்.

‘நான்’ என்பது யார் என்று தன்னையே கேட்டு கேட்டு உள்புகுந்து நோக்கினால் அங்கு ‘நான்’ என்பதே ஒன்றும் இல்லை. பரம் மட்டும் தான் எங்கும் விரவி உள்ளது.  இது ரமணரின் பாணி.

நம்முள் எழும் எண்ணங்கள் தான் ‘நான்’ என்னும் இல்லாத ஒன்றை, ஒரு தொடர்ந்த மயக்க நிலையை உருவாக்கி பரிணமிக்கவும் வைக்கிறது. சதா எழும் எண்ணங்களை முடக்கவோ திசை திருப்பவோ முயலாமல், வெறுமனே அதைக் கவனிப்பது மட்டுமே நாம் செய்யக் கூடிய ஒரே வழி என உணர்ந்து அவதானித்து ‘நான்’ என்பதை அவியச் செய்வது. இது ஜே கே-வின் வழி.

அமலனோ, ‘நான்’ என்பதைக் கடக்கும் விதம் எனக்கு அலாதியாகப் பட்டது.  

‘நான்’ என்பதிலிருந்து ஆரம்பிக்காமல், கடைசியாக வந்து சேர்ந்த இடத்திலிருந்து பின்னோக்கிப் பார்ப்போம். வந்தடைந்த நிலை - ஒரு மிக மேம்பட்ட நிலை, அதாவது தற்பரமான நிலை. எதையும் சாராமல், அதே நேரத்தில் எல்லா உயிர்களையும், மண்ணையும், விண்ணையும், உயிர்களின் துயரத்தையும், மகிழ்ச்சியையும் தனதுள்ளே அடக்கி நித்தமும் வளர் உருமாற்றம் கொண்டு, தானாகவே நிலை நின்ற தற்பரம்.

அமலன் தன்னுடைய வாழ்க்கையை,  தன் நண்பர்களை, சுற்றத்தாரை, கோடானு கோடி மனிதர்களை, ஏனைய உயிர்களை என அனைத்தையும் தற்பரத்துடன் ஒன்றிணைத்து தரிசிக்கும் போது ‘நான்’ என்பதே தேவையற்று அவிந்து போகிறது.

அமலனின் ஆன்மிகத் தேடல் வெறும் மெய்யியலோடு (metaphysics)  மட்டும் முடிந்துவிடுவதில்லை.  தனி மனித முக்தியே போதும் என ஒடுங்கிவிடுவதும் இல்லை.  சக மனிதன், கால் நடைகள், சுற்றுச்சூழல் என சமுதாயத்தின் அனைத்து தளங்களிலும், தனது ஆன்மிகத் தேடலில் காட்டும் அதே உழைப்பையும் உன்னதத்தையும் காண முடியும்.   சமுதாய நலன் தவிர்த்த ஆன்மிக ஈடுபாட்டால் உண்டாகும் கேட்டினை  நன்கு உணர்ந்தவர் போலும்.

தேடல் வேட்கை கொண்டவர்கள் தேடிக் கண்டடைய வேண்டிய நாவல் இது.

No comments:

Post a Comment