Sunday, March 22, 2015

வெட்டுப்புலி

வெட்டுப்புலி
தமிழ்மகன்
பக்கங்கள் 375
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ 220
பரிந்துரை: சண்முகம்/ராஜா


1960 களில் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட கட்சிகள் இன்று வரை தமிழக அரசியலில் பெரும் பங்கை வகித்து வருகின்றன.   20 ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியலைப் பற்றிப் பேசினால், "பெரியார் பிராமண துவேஷத்தைப் பற்றி மட்டும் பேசினார்", "பெரியாரை இகழ்வதா", "ராஜாஜி மட்டும் இருந்திருந்தால்..", "இந்த திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லாதிருந்தால்...", என்ற ஒற்றைப்படையான டீக்கடைப் பெஞ்சு விவாதங்கள் மட்டுமே எஞ்சுகின்றன .  முதல் பார்வையில் சமநிலையுடன் எழுதப்பட்டதாகத் தோன்றும் அலங்காரமான எழுத்துக்கள் கூட, உற்று நோக்கும் போது இத்தகைய ஒற்றைப்படையான கருத்துக்களையே முன்வைப்பதைப் பார்க்கலாம்.  வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்களை எழுதுவது, அதுவும் அண்மைக்கால/சமகால அரசியல் வரலாற்றை எழுதுவது, சிரமமான காரியம்.



வரலாற்றின் முக்கியமான  நிகழ்வுகளில் நேரடியாக பங்குபெற்ற ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டுபுனைவது ஒரு வகை.  இன்னொரு வகை, சாதாரண மக்களின் வாழ்க்கையில் இந்த அரசியல் மாற்றங்கள் எந்த அளவிற்கு ஒரு பாதிப்பை உருவாக்கின என்று பதிவு செய்வது.  முந்தையது, அதிகாரத்தின் பார்வை; மேலிருந்து கீழ் நோக்கும் பார்வை. பிந்தையது மக்களின் பார்வையில் எழுதப்படுவது;  சாதாரண மக்களுக்கு என்ன வந்து கிடைத்தது என்பதைப் பதிவு செய்வது.

மக்களின் பார்வையில் 1930 களில் இருந்து, 2010 வரை உள்ள தமிழக அரசியல் வரலாறும், அந்த அரசியலை மக்களிடத்து எடுத்துச் செல்ல உதவிய ஊடகங்களின் (சினிமா/பத்திரிக்கை) வரலாறும் தான்  இப்புனைவின் முக்கியச் சரடுகள்.  தமிழக அரசியலைப் பொறுத்த வரை திராவிட ஆதரிப்பு/எதிர்ப்பு என்று எந்த நிலைப்பாட்டில் நீங்கள் இருந்தாலும், இந்தப் புத்தகம் உங்களது நிலைப்பாட்டின் அடிப்படையை மறுபரிசீலனைச் செய்ய வைக்கும் அல்லது விஸ்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திராவிட இயக்கத்தின் சமூக பங்களிப்பை மூர்க்கத் தனமாக நிராகரிப்பதும், கேலி செய்வதும் தற்கால மோஸ்தராக உள்ளது.  இத்தகைய எழுத்துக்களை மட்டுமே படிக்கும் வாய்ப்புக் கொண்ட ஒரு புது தமிழ் வாசகனுக்கு (உதாரணமாக, கணினி யுகத்தில் பிறந்த தலைமுறைக்கு) தம் பெற்றோர்கள் தலைமுறையைச் சார்ந்தவர்கள் பெரியார் போன்ற திராவிடத் தலைவர்களிடம் கொண்டிருந்த மரியாதைக்கும், அதே தலைவர்கள் மீது தற்போது வைக்கப்படும் கடுமையான விமரிசனத்திற்குமிடையே உள்ள இடைவெளி குறைந்தபட்சம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

"சோனியா காந்தியை காங்கிரசின் தலைவராகக் கொண்டு, காந்தியின் பங்களிப்பை எடைபோடுவது எவ்வளவு அபத்தமோ, அது போன்ற அபத்தம் தான் ஜெயலலிதாவை திராவிடத் தலைவராகக் கொண்டு  பெரியாரின் பங்களிப்பை மதிப்பிடுவதும்",

என்று முன்னுரையிலேயே வாசகனை எச்சரிக்கிறார் நாவலாசிரியர் தமிழ் மகன்.

ஆசிரியர் தமிழ் மகன்


அரசியல் என்பது, அடிப்படையில், ஒரு சமுதாயத்தின் முன்னிருக்கும் அத்தியாவசியமான பிரச்னைகளை, தீர்க்க உதவும் கருவி.  தமிழகத்தின் திராவிட அரசியலைப் புரிந்து கொள்ள, திராவிட அரசியல் எழுந்த காலத்தின் மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு சமுதாயம், தனக்கிருக்கும் பிரச்னைகளை ஓரளவிற்காவது உணர்ந்திருக்குமேயானால், அந்தப் பிரச்னைகளைக் குவிமையமாக்கி, அரசியல் ரீதியாக தீர்க்கவியலும்.  ஆனால், ஒரு சமுதாயம், தன்னுடைய பிரச்னைகளை, உணராதது மட்டுமில்லாமல், அந்த பிரச்னைகளுக்குக் காரணம், தன் முன்வினை தான் காரணமென்றும், தான் பிறந்த குலம் தன் வாழ்க்கையை முற்றிலும் நிர்ணயிப்பது சரியே என ஐயமற நம்பிக்கொண்டிருந்தும் இருந்தால், அந்த மக்களின் பிரச்னைகளத் தீர்க்கும் அரசியல்  சூழல் எழுவது கடினம்.   இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொள்வது, திராவிட அரசியலின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவும்.   துரதிர்ஷ்டவசமாக,  திராவிட அரசியலின் பின்புலத்தைப் பற்றி தரவுகளின் அடிப்படையில் நேர்மையாக எழுதப்பட்ட வரலாறுகளோ, அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படைப்புகளோ அதிகம் இல்லை.  அந்தக் குறையைத் தமிழ்மகனின் இந்தப் புத்தகம், ஒரளவிற்கு நிறை செய்கிறது.

20ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியலின் தலைப்புச் செய்திகள் என்னவென்று பார்த்தால் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட அரசியல், தினப்பத்திரிக்கைகள், சினிமா போன்ற புதிய ஊடகங்கள் மூலம் தம் இயக்கக் கருத்துக்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சென்று அதிகாரத்தை கைப்பற்றியதும், கைப்பற்றிய அதிகாரம் மூலம் என்ன செய்தது, என்ன செய்யத் தவறியது என்பது தான்.  சரி, நாவலுக்கு வருவோம்.

"என் தாத்தாவின் பெரியப்பா ஒரு சிறுத்தையை வெட்டினார்...", என்ற வரியில் துவங்கும் நாவல், 1930 களில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரையான தமிழக அரசியல் சூழலையும், தமிழக ஊடக வளர்ச்சியையும் (குறிப்பாக சினிமாவையும்) ஒட்டி படு சுவாரசியமாக விரிகிறது.  இந்த நாவல், சுதந்திரம் அடைவதற்கு முன்னிருந்த நிலப்பிரபுத்துவ கால தமிழகம் (30 கள்), தமிழ் சினிமாவின் வரவு/சுதந்திர இந்தியாவின் ஆரம்பம்/திராவிட அரசியலின் விதை (40 கள்), சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீது எழுந்த அதிருப்தி/திராவிட அரசியலின் ஆரம்பம் (50 கள்), சினிமாவும்/அரசியலும் இனைவது/தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றுவது (60 கள்),   திராவிட அரசியலின் வீழ்ச்சியின் ஆரம்பம் (70 கள்), இலங்கைப் பிரச்னை (80 கள்), திராவிட கட்சிகளின் வீழ்ச்சி (90 கள்), என ஒரு எழுபதென்பது வருட தமிழக வரலாற்றை மக்களின் வாழ்வுடாகச் சொல்ல எத்தனிக்கிற அநாசாயமான முயற்சி.  இந்த முயற்சியில் தமிழ் மகன் பெருமளவு வெற்றியடைந்திருக்கிறார்.

இந்த நாவலின் களம், ஒரு பெரும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் லட்சிய வாதத்தை மக்கள் எதிர் கொள்ளும் முறைகள் தான்.  எந்த லட்சியவாதத்தின் ஈர்ப்புவிசையும், நாம் இலட்சியத்தின் இலக்கை அடைந்தால் அதன் மூலம் உலகையே மாற்றி விடலாம் என்ற பெருங்கனவு தான். பெரியாரின் லட்சியத்தால் கவரப்பட்டாலும் அந்தக் கனவை நனவாக்குவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை உணர்ந்த லட்சுமண ரெட்டிகள் போன்றவர்கள் ஒரு தரப்பு.   உலகைப் புரட்டிப் போட தன் உயிரையே விலை கொடுக்கத் தயங்காத தியாகராஜன் போன்றவர்கள் இன்னொரு தரப்பு.  தாங்கள் நம்பிய லட்சியம் நீர்த்துப் போவதை அறிந்தும், அதிலிருந்து விலகவியலாமல் கலைஞர் மட்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் நல்லது நடக்கும் என்ற நப்பாசையுடன் இருக்கும் நடேச முதலிகள் போன்றவர்கள் இன்னொரு பக்கம்.  ஒரு குறிப்பிட்ட சாதியைச் (பார்ப்பன) சாடுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் இயக்கம் எந்த வகையில் சரி, என்று அதை முற்றிலும் நிராகரிக்கும் கிருஷ்ணப்ரியா போன்றவர்கள் இன்னொரு தரப்பு, என நாவல் ஒரு பல் முனைப் பார்வையை அளிக்கிறது.



திராவிடர் இயக்கம் மக்கள் மீது செலுத்திய  பாதிப்பை,  இயக்கத்தை முன்னெடுத்தி நடத்திய பெரிசுகளின் ஊடாகச் சொல்லாமல்,   இவ்வியக்கத்தில் தம் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்ட நடுத்தர வர்க்க மக்களின் ஊடாக சொல்லிச் சென்றது - சிறப்பான உத்தி.   எந்த ஒரு இயக்கத்தின் வெற்றியும்,  இயக்கத்தைத் தோற்றுவித்த  அதிமனிதர்களைக் காட்டிலும்,   இயக்கத்தைப் பின்பற்றி வாழ்ந்த ஏராளமான எளிய மனிதர்களின் வாழ்க்கையிலேயே அமைந்திருக்கிறது  என்று உணர்த்துவதாய் இருக்கிறது.


இந்த நாவலில் உள்ள பல கதா பாத்திரங்களை நான் என் வாழ்விலேயே பார்த்திருக்கிறேன்.  என் தந்தை, அடிப்படையில் தி.க காரராக இருந்து, தி.மு.க அனுதாபியாக சாகும்வரை இருந்தவர்.  தியாகராஜனைப் போல கட்சியே கதி என்று வாழ்ந்தவர்களையும், லட்சுமணரெட்டி போன்று பெரியாரைத் தம் வாழ்க்கையில் பின்பற்றியவர்களையும் பார்த்திருக்கிறேன்.  இந்த நாவல், இத்தகைய நிஜ மனிதர்களுக்குச் செலுத்தப்படும் உண்மையான மரியாதை என்றால் மிகையாகாது.

கொசஸ்தலை ஆற்றின் கரையில் இருக்கும் ஜெகநாதபுரத்தில் விவசாயம் செய்யும் தசரத ரெட்டியின் மகன் லட்சுமண ரெட்டியின் பார்வையில் இருந்து விரிவது நாவலின் ஒரு சரடு.  லட்சுமண ரெட்டி, பெரியார் அனுதாபி. பெரியாரின் கொள்கைகளை, மனதளவில் முற்றிலும் உள்வாங்கியவர்.  அதன் படி தன் வாழ்க்கையில் நடந்தவர்.  ஆனால், லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியையும் நன்கு அறிந்தவர்.

இன்னொரு சரடு, சென்னைக்கருகே உள்ள ஊத்துக் கோட்டையில், வியாபாரம் செய்யும் ஆறுமுக முதலியின் குடும்பத்தின் வாயிலாக விரிவது.  இச்சரடில் தமிழக சினிமாவும், திராவிட அரசியலை லட்சியமாக கொண்ட நடுத்தர மக்களின் வாழ்க்கைவிரிகிறது.  இந்த இரு சரடுகளும், சந்திக்கும் இடம் - சிறுத்தையை வெட்டிய நிகழ்ச்சி. சிறுத்தையை வெட்டிய சம்பவம் மக்களிடம் ஏற்படுத்திய பரபரப்பை, தங்கள் தீப்பெட்டியை விற்க ஒரு கம்பெனி, அதைப் படமாக வரைந்து தங்கள் இலச்சினையாக பயன்படுத்த ஆரம்பிக்கிறது.  காலத்தின் போக்கில் நேரும் கம்பெனியின் மாற்றமும் நாவல் நெடுகே வருகிறது.  ஒவ்வொரு சரடும் தன்னளவே தன்நிறைவைக் கொண்டும், எந்தவிதத்திலும் மற்ற சரடுக்கு புனைவிலோ,  வரலாற்றுத் தரவுகளிலோ,  சுவராஸியத்திலோ சளைக்காமல்  பிண்ணிப் பிணைந்து நாவலை நகர்த்திச் செல்லும் விதம்,  ஒரு சிறந்த  இசை நடத்தி  ( Music Conductor)  சிம்பொனியில்  கூட்டும் லயத்திற்கு ஒத்ததாக இருக்கிறது.

வெட்டுப்புலி லட்சினை கொண்ட தீப்பெட்டியின் மாற்றம். சிருத்தையை வெட்டிய ரெட்டியின் முதல் படத்திலிருந்து, தற்போதைய மெழுகுபூசிய குச்சிகளைக் கொண்ட தீப்பெட்டி வரை.


தசரத ரெட்டியின் மகன் லட்சுமண ரெட்டி, ஜமினீடம் கப்பம் வாங்க கிராமத்திற்கு வரும் ஒரு வெள்ளைக்காரனின்  குதிரையை  இரவில்  யாருக்கும் தெரியாமல் சவாரி செய்து விட்டு, திரும்பக் கொண்டு போய் மரத்தில் கட்டி விடுவதை  -  Indiana Jones போன்ற  ஒரு சாகஸப் படைப்பின் விறுவிறுப்புத் தன்மையோடு விவரிக்கிறார்.  அதே சமயம், லட்சுமண ரெட்டி, தான் செய்வதைஒரு வெள்ளையனை எதிர்க்கும் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக கருதிக் கொள்ள முடியுமா, என்று குதிரை மீது சவாரி செய்யும் போது நினைக்கிறான், என்று எழுதுகிறார் - தமிழ்மகன்.  அது தான், அன்றைக் கால தமிழகத்தின்  நிதரிசனம்.  சுதந்திரப் போராட்டம் என்பது, என்னவோ, எங்கோ நடக்கும் ஒன்று.  சாதாரண மக்களின் வாழ்வில் வெள்ளையர்களைப் பற்றிய கவலையோ, பிரக்னையோ, அவர்கள் தம் வாழ்வில் குறுக்கிடும் வரை இல்லாமல் தான் இருந்திருக்கிறது.

தன் பையன் குதிரை சவாரி செய்வதைக் கேள்விப்படும், தசரத ரெட்டி கொள்ளும் பதற்றம், தனக்கு உதவி செய்த ஜமீனுக்கு அவப்பெயரை தன் மகன் ஈட்டித் தந்து விடுவானோ என்ற, விசுவாசத்தில் இருந்து விளைவது தான்.  இந்த நிலப்பிரபுத்துவ விழுமியங்களை, சாதி/சம்பிரதாயங்களை முழுதும் உள்வாங்கிய சமுதாயத்தில், பெரியார் எழுப்பிய கேள்விகள் காத்திரமானவை. இன்று படிக்கும் போதும், புரட்சிகரமானவை.

பெரியார் எழுப்பிய கேள்விகளை எந்த மலைப்பிரசங்கங்களும் இல்லாமல், நாவலோடு ஒட்டித் திறம்பட சொல்லி விடுகிறார், தமிழ் மகன்.  உதாரணமாக, சுயராஜ்யம் குறித்த பெரியாரின் பார்வையை கோடிட்டுக் காட்டுகிறார்:

"தேசத்தில் செல்வர் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், ஹிந்துக்கள் அச்சமும், முஸ்லிம் ஐயமும், தாழ்ந்த வகுப்பார் நடுக்கமும் ஒழிய வேண்டும்.  இக்குறைகள் ஒழியப்பெற்றால், சுயராஜ்யமென்பது ஒருவர் கொடுக்க நாம் வாங்குவதல்லவென்பதும் அது உம்மிடமே இருப்பதென்பதும் செவ்வனே விளங்கும்". 

பெரியாரின் சுயராஜ்யம் என்பது அடிப்படையில் மக்கள் தம் மனமளவில் கொள்ள வேண்டிய மாற்றத்தைப் பற்றியது.  அதனால் தான் பெரியார் வெள்ளையனிடம் இருந்து விடுதலை அடைவதை மட்டும் தன் இலக்காகக் கொள்ளவில்லை.

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இருந்த மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை, சுதந்திர இந்தியா சுதந்திரம் அடைந்து பத்தாண்டுகள் ஆன பின்னரும்  பூர்த்தி செய்யவில்லை.
"கம்யூனிஸ்டுகள் உலக நியாயம் பேசிக் கொண்டும், காங்கிரஸ் காரர்கள் தேசிய நியாயம் பேசிக் கொண்டும் இருந்த காலத்தில், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம் மக்களுக்கு நெருக்கமான விஷயங்களை, மக்களுக்குப் புரிந்த மொழியில், புதிதாய் வந்த வலுவான ஊடகங்கள் (சினிமா) மூலம் பேசியது." 

அதனாலேயே திராவிட இயக்கம் மக்களிடையே வலுவடைந்தது.  வெகுஜன மக்கள், அண்ணா/கருணாநிதி எழுதிய நாடக/சினிமா வசனங்கள் மூலமும், எம்.ஜி.ஆர், போன்ற நடிகர்களாலும், கவரப்பட்டு திராவிட இயக்கத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ஆனால், வெகுஜன மக்கள், பெரியாரின் கருத்துக்களை முற்றிலும் உள்வாங்கியவர்கள் அல்லர்.  இந்த இடைவெளி, சமூக மாற்றத்தை கொண்டு வர நினைத்த இலட்சியவாத பெரியாருக்கும், அரசியல் அதிகாரத்தை முதலில் கைப்பற்றினால் தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்; அதற்கு வெகுஜன மக்களின் ஆதரவை சினிமா போன்ற ஊடகங்கள் மூலம் பெருவதில் தவறில்லை என்று கருதிய அண்ணாவுக்கும் இடையில் உருவான விரிசலை, குறைந்த வரிகளில் அற்புதமாக சித்தரித்திருக்கிறார் தமிழ் மகன்.  இதைப் படிக்கும் போது, இந்த சமரசமென்ற வித்து மாத்திரம் விதைக்கப்படாமல் இருந்திருந்தால், தமிழக அரசியல் எப்படி மாறியிருக்கக்கூடும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

பெரியாரும், அண்ணாவும் பிரிவதற்கு முன்


லட்சுமண ரெட்டியின் மகன் நடராஜனும், ஆறுமுக முதலியின் அண்ணன் கணேசமுதலியின்  இளைய மகன் தியாகராஜனும், அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் லட்சியவாதப் பிரதி நிதிகள்.  திராவிட இயக்கத்தின் லட்சியத்தையே தன் வாழ்க்கையாகக் கொண்ட தியாகராஜனால், கடவுள் நம்பிக்கையும், மூட நம்பிக்கையும் கொண்ட தன் மனைவி ஹேமலதாவுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த முடிவதில்லை.  மிசாவில் தியாகராஜன் கட்சிக்காக தன் உடல் நலத்தை பணயம் வைக்கிறான்.  அவன் வாழ்வு சீரழிகிறது.

தன் மனதிற்குப் பிடித்த பெண் (கிருஷ்ணப்ரியா), பார்ப்பணப் பெண், என்பதால் மட்டுமே அவளைக் கட்டிக் கொள்ள மறுக்கிறான் நடராஜன்.   நடராஜன் லட்சியவாதத்தின் கைதி. இலங்கைப் பிரச்னையில், எப்படியும் தமிழீழம் கிடைத்து விடும்.  அந்த ஈழம் தமிழர்களுக்கு ஒரு தேசத்தை கொடுத்து விடும் என உறுதியாக நம்புகிறான்.  தமிழீழத்திற்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கிறான் நடராஜன்.  திராவிட இயக்கத்திற்காக தம் வாழ்க்கைய பணயம் வைத்து, தம் வாழ்வில் பெரும் சோதனைகளைச் சந்தித்த பல்லாயிரக் கணக்கான மக்களின் பிரதி நிதிகள் இவர்கள்.

இன்னொரு சரடு ஆறுமுக முதலியின் சினிமா ஆசையில் ஆரம்பிக்கிறது. படமெடுக்க ஆரம்பித்த போது நேர்ந்த சிக்கல்களால் ஆறுமுக முதலியின் சினிமாஎடுக்கும் மோகம் தடைபடுகிறது.  ஊத்துக்கோட்டையில் ஒரு டெண்ட்டுக் கொட்டகையை மட்டும் கட்டுகிறார் ஆறுமுக முதலி.  அந்தக் காலத்தில் டென்ட்டு கொட்டகையில்  சினிமா பார்க்க வருபவர்களில் அநேகர் தாழ்த்தப்பட்டோர்.  அவர்களிடம் பணம் இருப்பதில்லை.  அதற்கு பதிலாக நெல்லையோ, கொள்ளையோ கொடுத்து, காசு கொடுக்காமல் கொள்ளைக் கொண்டு வந்ததற்கு முதலியிடம் திட்டையும் வாங்கிக்கொண்டு,  சினிமா பார்க்கிறார்கள்.  சினிமா பார்க்க வந்தவர்கள் முன்னால் இருப்பவர் உயரமாக இருந்தால், மணலைக் குவித்து அதன் மேல் உட்கார்ந்து பார்ப்பது, திரைக்குப் பின்னால் ஓடிச் சென்று ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பது, என சுவாரஸ்யமான தகவல்கள், நாவலில் கொட்டிக் கிடக்கின்றன.  ஆறுமுக முதலியின் சினிமா எடுக்கும் ஆசை பையன் சிவகுருவுக்கு வந்து சேர்கிறது.  அவனும், பாதிப் படம் எடுத்து நொடிந்து போய் விடுகிறான்.

1931 அக்டோபர் மாதம் தீபாவளியன்று வெளியான முதல் தமிழ்/தெலுங்கு படம் - காளிதாஸுக்கு சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வந்த விளம்பரம்.  படத்தில் 50 க்கும் மேற்பட்ட பாடல்கள் இருந்தன (அனைத்தும் தமிழில்)


சென்னையில் தமிழ் சினிமாவின் தொடக்கத்தை, கதையோடு ஒட்டி பதிவு செய்கிறார் தமிழ் மகன்.  ஆறுமுக முதலியின் கணக்குப் போடும் புத்தியையும் ("பையன் படிக்கச் செலவு செஞ்சா, போட்ட பணத்தையாவது திரும்ப எடுத்துடுவானா?" என தம் மனைவியிடம் விசாரிக்கிறார்),  தன் மனைவியுடன்  கலவி கொள்ளுமுன் கோவணத்தை நெகிழ்த்துவதையும், கலவியின் போது முதலிக்கும் அவர் மனைவிக்குமிடையே நடக்கும் நாசூக்கான பேச்சு வார்த்தையையும், கால இடைவெளியையும் (தற்கால ஃபேன்ஸி ஜட்டிகளையும் தாண்டி) நம்மால் ரசிக்க முடிகிறது.   அதே போல்,  காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஊருக்கு வரும்போது ஆறுமுக முதலியின் அண்ணன் கணேச முதலி சத்தியமூர்த்திக்கு  எதிர்ப்பு தெரிவிக்கவும்  அதே சமயம் காவல் துறையினரிடம் சிக்காமல் இருக்கவும்,   கருப்புக் கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு வந்தனர் என்ற குசும்புத்தனத்தையும் நம்மால் ரசிக்க முடிகிறது. நாவலும் சரளமாக நகர்கிறது.

1940 களில், முதன் முதலாக, இட்லி போன்ற பலகாரங்கள், ஆகாரங்கள் ஆன கதையும், முதன் முதலில் காப்பி குடித்தவர், அதன் சுவையை விளக்கத் தெரியாமல் ( "சும்மா தித்தீப்பா இருக்குது.  சிறுங்கசப்பாவும் இருக்குது") தடுமாறுவதும், பெரிய நைனா பெந்நா ஆன கதையும், வ.வு. சிதம்பரனார் செக்கிழுத்த சமாச்சாரம் பொதுமக்களிடையே வெள்ளைக்காரனைப் பற்றிய அச்சத்தை உருவாக்கியதும், எனச் சின்ன, சின்னத் தகவல்கள் மூலம் தமிழ் நாட்டின்  சரித்திரம் (குறிப்பாக செங்கல் பட்டு ஜில்லா சார்ந்த மக்களின்), பாத்திரங்களின் இயல்பான பேச்சு வார்த்தைகளிலேயே, உருத்தலில்லாமல் வெளிப்படுகிறது.  ஊர்களுக்கு முதன் முதலில் கரெண்ட் வந்தது, விவசாயத்திற்கு சுகுணா மோட்டார் வந்தது, டிவிஎஸ் ஃபேக்டரி வந்தது, இப்படி நாவல் நெடுகே நுட்பமான தகவல்கள் நிறைந்திருக்கும் நாவலிது.  கவனமாகப் படிப்பவர்களுக்கு கடந்த நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாறு மட்டுமல்ல, தமிழகத்தின் (குறிப்பாக சென்னையைச் சுற்றி உள்ள ஊர்களின்) மாற்றத்தை, வெட்டுப்புலியின் முன்னூற்றேழுவது பக்கங்களில் சித்தரித்திருக்கிறார் தமிழ் மகன்.

இந்த நாவலைப் படித்து முடித்தபோது  இரண்டு எண்ணங்கள் எழுந்தன.

முதலாவது, திராவிட இயக்கம், பெருமளவில் தமிழகத்தில் உள்ள ஆண்களைத் தான் பாதித்தது.  கலாசார சூழல் காரணமாக, பெண்கள் அதில் பெரும் பங்கு வகிக்கவில்லை. நடேச முதலியின் மனைவி மட்டும் தான், உண்மையில் தன் கணவனின், எண்ணங்களுக்கு ஒத்துப் போனவளாக இருக்கிறாள்.  லட்சுமண ரெட்டியின் மனைவி விசாலாட்சி சொல்கிறாள்:

 "(ராம கிருஷ்ண) மடமாக இருந்தாலும், (பெரியார்) திடலாக இருந்தாலும், எல்லாம் அளவோடு தான் இருக்கனும்",

இந்தமாதிரி எண்ணம் உள்ள பெண்மணிகளைக் கொண்ட குடும்பங்கள் தான் சிதையாமல் இருந்தன.  லட்சியவாதத்தால் பீடிக்கப்பட்ட இளைஞர்கள், சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்ட போது கூட, அத்திருமணங்கள் பொது மக்களால் வித்தியாசமாகப் பார்க்கப்பட்டன; இன்றும் பார்க்கப்படுகின்றன.  (தியாகராஜனின் திருமணத்திற்கு வந்த பெண்மணிகள், திருமணம் முடிந்து விட்டதா என்று கூடத் தெரியாமல் தடுமாறுகின்றனர்). தியாகராஜனின் மனைவி ஹேமலதாவும் சரி, விசாலாட்சியும் சரி, நடராஜனின் மனைவி தேவகியும் சரி, தம் கடவுள் பக்தியை விடுவதில்லை. வீட்டிற்குள் திராவிட லட்சியத்தை அண்ட விடுவதும் இல்லை.  இது தான், இன்று பெரும்பாலான, தி.மு.க/தி.க காரர்கள் வீட்டிலும் நடப்பது.

இந்தப் பிரச்னையை எதிர்பார்த்துத் தான் பெரியார், ஆரம்பத்தில் இருந்தே, பெண் விடுதலையை முன் வைத்தார். "ஒன்றே குலம். ஒருவனே தேவன்", என்று அண்ணா செய்த சமரசம், பெரியாரின் அடித்தளத்திற்கே வேட்டு வைத்து விட்டது.   இப்போது, திராவிடப் பெருசுகள், மஞ்சள் துண்டு போர்த்திக்கொண்டு வலம் வருகிறார்கள்.

(இடது) அறுபதுகளில் கருணாநிதி கருப்புத் துண்டுடன்; 90 களின் பிற்பகுதியில் மஞ்சள் துண்டு போர்த்திய கலைஞர்.



இரண்டாவது தமிழ் மகன், கட்டற்ற வளர்ச்சியின் காரணமாக, சூழல் பாதிக்கப்படுவதின் விளைவுகளை சுட்டிக் காட்டியுள்ளார். கொசஸ்தலை ஆற்றின் கரையில், இரண்டடியில் தண்ணீர் வந்த காலம், ஐம்பதே ஆண்டுகளில் நூறடியில் கூட தண்ணீர் வராமல் போனதைக் குறிப்பிடுகிறார்.  மணல் கிரமிட் (காண்ட்ராக்ட்) எடுத்தவர்கள் ஆற்றை நாசம் பண்ணுகிறார்கள்.
இரண்டடியில் தண்ணீர் வந்த காலத்திலேயே வசதிக்காக பம்பு வைப்பவனைப் பார்த்து ஒரு குடியானவன் கேட்கிறான்:

 "பம்பு வைத்து இப்படி ஆக்ரோஷமா, உறிஞ்சுனா என்னாகும்", என.

அதைப் போலவே, பெரும்பாலும் காடாக இருந்த சென்னை வெகு விரைவில் அடைந்த மாற்றத்தையும், கதையின் போக்கில் சுட்டிக் காட்டுகிறார்.  இந்தச் சரடை வெட்டுப்புலி தீப்பெட்டியின் சரடோடு, இன்னும் நன்றாக எடுத்துச் சென்றிருக்கலாம் எனப் படுகிறது.

நாவல் நெடுகே பல சுவாரசியமான சம்பவங்கள் - தசரத ரெட்டி மதினி தன்னை நோட்டம் விடுகிறாளா என்று யோசிப்பது, படவேட்டன் சாமர்த்தியமாக ஜமீனிடம் திருடுவது, சின்னா ரெட்டி சக்கரை நோயாளிக்கு வைத்தியம் செய்வது, ருத்ரா ரெட்டி சாகக் கிடக்கும் போது தன் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த மணிப்புறாவைப் பற்றி உளருவது, பூண்டி ஏரி வெட்டுவது, சிவகுருவின் சினிமாவில் நடிக்க வரும தெலுங்குக் கதாநாயகி, "கொற்றமென்ன செய்தேன் நாதா ..." என தமிழைக் கொலை செய்வது, கருணாநிதியை முதன் முதலில் கலைஞர் என்று அறிமுகப்படுத்திய பாஸ்கர் கருணாநிதியை பார்க்க வரும் போது அவரது செல்வத்தைக் கண்டு மிரள்வது/பார்க்க முடியாமல் திரும்புவது, மாறன் நடத்தும் வண்ணத்திரை பத்திரிக்கையில் நடிகைகளின் தொப்புள்களுக்கிடையே நடேசமுதலியின் மகன் தன் சுயமரியாதைக் கருத்துக்களை எழுத முயல்வது - சின்னச் சின்ன சிறுகதைகளைப் (vignettes) போல வருவது அற்புதமாக இருக்கிறது.  இந்த நாவல் சொல்லும் தகவல்கள்/சம்பவங்கள், தமிழக அரசியல்/சினிமா வரலாறைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குக் கூட, புதிதாக இருக்கலாம்.

நாவலின் குறைகள் என்று சொல்லப் போனால், இரண்டைச் சொல்லலாம்.

முதலாவது, லட்சுமண ரெட்டியின் பேரன் தமிழ்ச் செல்வன், மற்றும் அவன் நண்பர்கள் பிரபாஷ், ஃபெர்ணாண்டஸ், ஆகியோர், தம் தாத்தாவின் சகலை சிறுத்தை வெட்டியதை ஊர்ஜிதப்படுத்த முயற்சிக்கும் போது நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பாக நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு பத்து வருடங்களும், தனித்தனி பாகங்களாக வருகின்றன.  ஒவ்வொரு பாகத்திற்கு முன்னரும், இவர்களது பயணத்தைப் பற்றிய குறிப்புகள், ஒரு அத்தியாயமாக வருகின்றன.  இந்தக் குறிப்புகள், கதையோடு ஒன்றவில்லை எனத் தோன்றியது.  பிரபாஷின் பார்வை, பிரபாஷின் அப்பாவின் பார்வை போன்றவை, இன்னும் கோர்வையாக இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. பிரபாஷும், தமிழ்ச்செல்வனும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பங்கு பெறாத அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்கள்.  90களின் கடைசியில் நிகழ்ந்த மென்பொருள் சார் பொருளாதார வளர்ச்சியில் பங்கு கொண்டு வெகு, விரைவாக வளர்ந்தவர்கள்.  அவர்களின் பார்வையில் விரியும் உலகுக்கும், தருமபுரி போன்ற இடங்களில் சாதிக் கொடுமையை இன்றும் அனுபவித்து வ்ரும் இளைஞர்களின் பார்வைக்கும் உள்ள தூரம் ஆயாசத்தை ஏற்படுத்துவது.

இரண்டாவது, எண்பதுகளுக்கு அப்புறம், நாவல் வெகு சீக்கிரம் முடிந்து விடுகிறது.  பிரபாகரன் கொல்லப்படுவதையும். தி.மு.க அரசியல் குடும்ப அரசியலாக மாறுவதையும், ஓரிரு வரிகளில் சொல்லி முடித்துவிடுகிறார் நாவலாசிரியர்.  இதை, இன்னும் கொஞ்சம் விரித்தெடுத்துச் சென்றிருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

பெரியார், பார்ப்பனீயத்தை எதிர்த்ததன் காரணம் - அவர் அது சாதிக்கட்டமைப்பின் அடித்தளம் என்று கருதியதால் தான்.   பார்ப்பனீயத்தை எதிர்ப்பதன் மூலம், சாதிக் கட்டமைப்பை மாற்றியமைக்கமுடியும் என நம்பினார்.  கடந்த முப்பது ஆண்டுகளில், சாதியும், மூட நம்பிக்கையும் தமிழகத்தில் வலுப்பெற்று இருக்கிறது.  இன்று சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் கூட, தம்மை "தேவந்திர குல வெள்ளாளர்" என சாதிக் கட்டமைப்பினுள் ஒரு உயர் நிலைச் சாதியாகக் கருதக் கோரிப் போராடும் அவலம் தான் இருக்கிறது.  இந்தச் சூழலில், பெரியார் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.  வெட்டுப்புலியில் தமிழ் மகன் கீழ்க்கண்டவாறு எழுதியது குறிப்பிடத்தக்கது:

"கண்ணுக்கு நேராக அறியும் அனுபவங்களுக்கு என்றைக்கும் அவரிடம் முன்னுரிமை இருந்தது.  அதனால், கடவுள் நேரில் தோன்றினால் என்ன சொல்வீர்கள் என்று நாகப்பட்டிண கூட்டத்தில் ஒருத்தன் கேட்டதற்கு, "கடவுள் இருக்காருன்னு சொல்லிப்புட்டுப் போவேன்",

தான் கண்டதை, தனக்குச் சரியென்று பட்டதை, தயவு தாட்சண்யமின்றி தன் வாழ்நாள் முழுவதும் சொன்னவர் பெரியார்.  சரியான சான்றுகள் இருந்தால் தன் கருத்துக்களை மாற்றிக் கொள்ள தயங்காதவர் தான் பெரியார்.  இந்த நாவலின் சிறப்பம்சம், பார்ப்பணீய எதிர்ப்பின் பலகீனங்களை சுட்டிக் காட்டும் வலுவான பாத்திரங்களும் உயிர்ப்புடன் படைக்கப்பட்டிருப்பது தான்.

இந்தியாவில் உள்ள சாதி சார்ந்த சமூகச் சூழல் பல வகைகளில் தனித்துவமானது.  திராவிட அரசியல் என்பது, அந்தச் சமூகச் சூழலை எதிர்த்து உருவான, முற்றிலும் இந்திய/தமிழகச் சூழலிலேயே எழுந்த திராவிட இயக்கம்.  ஒரே அடியில், ஆயிரக்கணக்கான வருடங்களாக, ஊறிப் போயிருந்த கலாசார விழுமியங்களை புரட்டிப் போட்டு, படிப்பறிவு இல்லாத மக்களை எழுப்பி விடலாம் என்ற நம்பியது.  ஒரு இலட்சியவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஒரு இயக்கம், அரசியலதிகாரத்திற்காக செய்த சமரசங்கள், அதன் வரலாற்றையே திசை திருப்பி விட்டன (பிற இலட்சியவாத இயக்கங்களைப் போல).  நீர்த்துப் போயிருக்கும் திராவிட இயக்கங்களின், அடுத்த கட்டம் என்ன என்பது கேள்விக்குறி தான்.  இதை இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்லியிருக்கலாம் தமிழ் மகன்.  ஆனால், தரவுகளின்றி எழுதுபவர் அல்ல தமிழ் மகன் போலும். ஊகங்களுக்கு இடம் கொடுக்காமல், நடந்ததை அடிப்படையாகக் கொண்டு இப்புனைவைப் படைத்திருக்கிறார் போலும்.


இந்நாவலை வாசித்து முடித்தவுடன் தமிழ்மகன் எழுதிய மற்ற அனைத்து நாவல்களையும் படித்துவிட வேண்டும் என்ற அவா எழுந்தது.  எப்படி, இத்தனை நாளாக வெட்டுப்புலியைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்று நொந்து கொண்டாலும், நெடுநாட்களுக்குப் பிறகு வாசித்து ரசித்த ஒரு அப்பழுக்கற்ற  புதினம்  -  வெட்டுப்புலி !


1 comment:

Jegadeesh Kumar said...

வேறு இருதளங்களில் வெட்டுபுலி குறித்த மதிப்புரைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் உங்களது மதிப்புரை ஆழமாகவும், நாவலை வாசிக்கத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. உங்கள் விமர்சனத்தை வாசிக்கையில் என் பதின் பருவத்தில் நான் கண்ட எண்பதுகளின் நினைவு வந்தது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் காரர்களின் நூதனமான தேர்தல் பிரச்சாரமுறைகள், இலங்கைத் தமிழர் ஆதரவும், சிங்கள எதிர்ப்பும் (ஜெயவர்த்தனே கிட்டத்தட்ட ராவணனின் அவதாரமபோலவே சித்தரிக்கப்பட்டது. அவர் கொடும்பாவி எரிக்கப்படாத தெருவே இல்லை எங்களூரில்), ஆட்டோவிலும், காரிலும் ஒலிபெருக்கி வைத்து விற்கப்பட்டப் பல மாநில பரிசுச் சீட்டுகள், பத்தாம் நம்பர் பீடி வழங்கும் தெருமுனை ஆர்கெஸ்ட்ரா, லாரிப்பேட்டையின் குரூடாயில் வாசம் எல்லாம் நினைவுக்கு வந்தன.
தமிழக வரலாற்றில் திராவிட இயக்கங்களின் பாதிப்பு குறித்த புனைவுகள் குறைவே. அவற்றுக்கு அளிக்கப்படும் வெளிச்சமும் குறைவு. நீங்கள் அளித்துள்ள அறிமுகத்தை வைத்து நோக்கும்போது, இந்திரா பார்த்தசாரதி மற்றும் பி.ஏ. கிருஷ்ணன் எழுதியுள்ள அரசியல் நாவல்களின் வரிசையில் தமிழ்மகனின் நாவல்களையும் சேர்க்கலாம் என்று தோன்றுகிறது. வாசிக்க ஆவலாயுள்ளேன் உங்கள் அறிமுகத்தை அறிமுகத்தை வாசித்தபின். நன்றி.

Post a Comment