Friday, September 23, 2022

கொஞ்சம் பொறுமை…


ஒரு வரலாற்று ஆய்வு எப்படி நடத்தப் படுகிறது எனபதன் ஒரு சின்ன சாம்பிள் தான் இந்தப் பதிவு.

வரலாற்று ஆய்வு என்றால் பிரத்தியேக நிபுணத்தனம் தேவையாக்கும், அது நமக்கு இருக்கிறதா, என்ற ஐயம் வந்தது. ஆனால் இந்த ஆய்வை படிக்கப் படிக்க ஒரு விறுவிறுப்பான துப்பறியும் நாவலை வாசிப்பது போலிருந்தது.

சிந்து சமவெளி நாகரிகம் (4700 வருடத்திற்கும் முற்பட்டது) திராவிட நாகரிகமே, என தமிழகத் தொல்லியல் துறை நிபுணரான ஐராவதம் மகாதேவனின் வரலாற்று ஆய்வின் அணுகுமுறையே இந்தப் பதிவு.

 

1920-வாக்கில், சிந்து சமவெளி நகரத்தில் கிடைக்கப் பெற்ற 4500 வருடங்களுக்கும் முந்தைய சித்திரக் குறியீடு தான் மேலே உள்ள படம். ஒரு மனிதன்; வெறுமனே மனிதன் அல்ல, இரு புறமும் பாரத்தைத் தாங்கும் மனிதன். மொத்தமாய் 450 குறியீடுகளைக் கொண்ட ஒரு மொழி. இது என்ன மொழி என்று இதுவரை தெரியவில்லை. சில எழுத்துக்கள் மேலே உள்ள சித்திரக் குறியீடு போல; அதனால் அதன் பொருள என்ன என்பதை ஊகிக்கலாம். ஆனால் மற்ற எழுத்துக்கள் ஒலியைக் குறிப்பதாகும். இதனாலேயே புரிந்து கொள்வதில் சிக்கல்.

இப்படியிருக்க, தமிழ்நாட்டிற்கு வருவோம். 2006-ல், குற்றாலத்திற்கு அருகில் செம்பியன் கண்டியூர் என்னும் ஊரில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது கொல்லையில் வாழை பயிரிடுவதற்கு தோண்ட அங்கு இரண்டு கற்கோடாலிகள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்றில் நான்கு சின்னங்கள் பொறிக்கப் பட்டிருந்த.

 

அதிர்ஷ்டவசமாய், பள்ளி ஆசிரியர் தொல்லியல் ஆர்வம் உள்ளவர். அதனால் கிடைத்தது அரியது, மகத்தானது என உணர்ந்து அதைத் தொல்லியல் துறையில் ஒப்படைக்க, அவை கடைசியில் தொல்லியல் ஆய்வாளரான ஐராவதம் மகாதேவனிடம் வந்தடைந்தது.

ஐராவதம், 1977-லேயே சிந்து வெளி நாகரிகத்தின் 450 எழுத்துக்களையும் ஆய்ந்து வரிசைப் படுத்திய வித்தகர். கற்கோடலியில் உள்ள நான்கு குற்யீடுகளும் சிந்து வெளி குறியீடுகளை ஒத்திருந்தது எனக் கண்டுகொண்டார். மேலும் இந்தக் கற்கோடலிகள் தென்னிந்திய பாறை வகையே ஒத்திருந்த படியால், இவை வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஐராவதம்.

மேலும் இந்தக் கற்கோடலிகள் நான்காயிரம் வருடமாவது பழமையான என ஊகிக்கிறார். ஏனெனில், இக்குறியீடுகள் தமிழ்-பிராமி எழுத்து வடிவிற்கும் முந்தையது என்பது தெளிவு. அதாவது ஆதி திராவிட மொழியாய், தமிழ் மொழிக்கு மிகுந்த தொடர்புடையதாய் இருக்கவேண்டும் என்கிறார்.

மேலே செல்வதற்கு முன், தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பழமையான எழுத்து முறை (script) பிராமி ஆகும். இந்தியாவில் நமக்குக் கிடைக்கப்பெற்ற மிகப் பழமையான கல்வெட்டுக்கள் மௌரியப் பேரரசின் அசோக-பிராமி எழுத்து முறையே (2300 வருடத்திற்கும் முந்தையது). தமிழிலும் பிராமி எழுத்து முறை இதே கால கட்டத்தில் உருவாகி வந்துள்ளது, ஆனால் இது அசோக பிராமி எழுத்து முறையிலிருந்து மாறுபட்டது. இந்த தமிழ் பிராமியிலிருந்து கி. பி. 4-ம் நூற்றாண்டில் வட்டெழுத்து (தமிழ்-மலையாள மொழிகளின் முன்னோடி) வந்தது. அதற்கு பின் பல்லவ-கிரந்த எழுத்து முறை (தமிழோடு சமஸ்கிருத எழுத்துக்கள்) உருவாயிற்று. 11-ம் நூற்றாண்டில் தற்போது நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்து முறை உருவாயிற்று.

இப்போது மீண்டும் கற்கோடலியில் பொறிக்கப் பட்ட எழுத்துக்கு வருவோம். இது தமிழ் பிராமியிலும் முந்தையது.  (ஒப்பீட்டிற்கு, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் 2600 வருடங்கள் பழமையானவை)

பண்டைய கால வரலாற்றை அறிந்து கொள்வதில் பாரம்பரியமாக இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று: தொல்லியல் (Archaeology), அதாவது பழங்காலத்துப் பொருட்கள் , நகரங்கள், செப்பேடுகள், அரசவைக் குறிப்புகள், வானியல் பதிவுகள், இப்படி பல பல. இரண்டு: மொழியியல் (Linguistics), அதாவது ஒரு சமுதாயத்தின் நீண்ட மரபில் வழங்கி வந்த இலக்கண, இலக்கியப் படைப்புகள். மூன்றாவது வழியும் ஒன்று உண்டு. இது மிக சமீபத்திய (1985-லிருந்து) ஆய்வு முறையான தொல்லியல் மரபணுவியல் (Archaeological genetics). அதாவது, பழங்காலத்து மனித எழும்புக்கூடு மற்றும் தானிய வகைகளின் DNA-வைக் கொண்டு ஆராய்வது.

தமிழ்நாட்டில், கற்கோடலியில் கிடைத்த குறியீடுகள் (archaeological) சொற்பமே. அதற்கு மேல் அவை நம்மிடம் எதுவும் பேசப் போவதில்லை.

என்ன நடந்தது என்பதை அறிய, அடுத்த படி நம் இலக்கியப் படைப்புகள் (Linguistics) தான். சித்திரக் குறியீடு காட்டும் உலகை நமது பழந்தமிழ் இலக்கியம் பேசுகிறதா ? ஐராவதம், ஒரு detective போல, மொழியிலாளராக அதைத்தான் நம் சங்க இலக்கியங்களில், குறிப்பாக புறநானூற்றில் தேடுகிறார்.

 கீழே படம் A-வை பார்க்கவும். காவடித் தண்டைக் கொண்டு இருபுறமும் கலங்களைத் தாங்கும் ஒரு மனிதனை காண்கிறோம்.

 


இப்போது மேலே, படம் B-யை பார்க்கவும். கலயங்களை தாங்கும் மனிதன், சிரத்தின் மேல் அம்பையும் தாங்குவது தெளிவு.

 

கடைசியில் படம் C-யை பார்க்கவும். இப்பொழுது சிரத்தின் மேல் ஒரு கைப்பிடி வைத்த சாடியைத் தாங்குவது புலனாகும்.

வெறும் உணவைச் சுமக்கும் கூலியாள் என்பதை தவிர்த்து நோக்கினால், ஒரு வேளிர்குல அல்லது இனக்குழு தலைவன் கடவுளுக்கு அளித்த படையல் உணவை இருபுறமும் கலயங்களில் தாங்கும் தலைவனாகவே இருக்கக்கூடும்.

இப்பொழுது பண்டைய தமிழகத்திற்கு வருவோம். ஆதி திராவிடத் தமிழில், ஒரு தலைவனுக்கு பொறுப்பை சுமப்பவன் என்னும் பொருளில் ‘பொறை’ என்பது வழக்கம். புறநானூற்றில் ஒரு பாடலில், பாரதப் போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெருஞ்சோற்றை (அதாவது பெருமளவு உணவு) அளித்த சேர மன்னன் இரும்பொறை என்பதை அறிகிறோம். இதில் இரும்பொறை என்பது இரு பக்கமும் சோற்றை சுமப்பது அல்லது பொறுப்பது எனும் பொருளில் கொள்ளலாம். பாரம் சுமப்பவன், பொறுத்து ஆள்பவன் என்னும் பொருள்படும் ‘பொறை’ என்பதே சேர மன்னனுக்கு இடுகுறிப் பெயராய் மாறியது.

பொறையன் - பொறுப்பவன் என்பதற்கு பழந்தமிழில் ‘காவுதல்’ என்னும் பெயரும் உண்டு. காவடி தூக்கி, இறைவனுக்கு படையல் உணவை சுமக்கும் (இன்று வரை தொடரும்) பழந்தமிழர் மரபு ஞாபகம் வருகிறதா?

இந்தப் ‘பொறை’ தான் பின்னாளில் ரிக் வேதத்திலும் இதர வடமொழி இலக்கியங்களிலும் ‘bhr’ என்னும் அடிச்சொல்லாய் நேர்பெயராகவும் (சுமப்பது), உருவகப் பெயராகவும் (பொறுப்பது), ‘bhartr’ - அதாவது ‘பரதர்’ என்று ‘குடும்பப் பொறுப்பை சுமப்பவன்’ என்னும் பொருளில் உருமாறியது.

பொறை -> bhr -> பரதர்

படையல் உணவை சுமந்து செல்லும் தலைவன் (தமிழில் - சத பொறை, சத என்பது சாதம்) தான் சமஸ்கிருதத்தில் ‘பரத்வாஜ’ (பரதர் + வாஜ; வாஜ என்பது உணவு) என்றாகியது.

அம்பை சுமந்து செல்லும் அம்பு பொறையன் (தமிழில்), சமஸ்கிருதத்தில் ‘பரந்த’ என்று அழைக்கப்படுகிறது.

இப்படியெல்லாம் சிந்து சமவெளி சித்திரக் குறியீட்டுக்கும் நமது தமிழ் நாகரிகத்துக்கும் தொடர்புருத்திப் பார்ப்பது , சுத்தி வளைத்து மூக்கைத் தொடுவது போல், சற்றே far-fetched-ஆக உள்ளதே என்று நினைத்தேன்.

ஆனால், நாம் மேலே பார்த்த மூன்று சிந்துவெளி சித்திரக் குறியீடுகளும் - சிந்துவெளி தொடங்கி, திராவிட, வேத, ஆந்திர மற்றும் பழந்தமிழ் நாகரிகங்களின் வாழ்வியலில், கருத்தாக்கங்களில் எப்படியெல்லாம் வழங்கிவந்துள்ளது என்பதை கீழே ஒரு glance பார்த்தீர்களானால், ஐராவதம் மகாதேவனின் சரித்திரத் துப்பு துலங்கும் வீச்சின் அகலமும் ஆழமும் புரியும்.

 

 

பி.கு:

இவ்வளவு தூரம் படித்திருந்தால், உங்களுக்கு உண்மையாகவே பொறுமை இருந்திருக்கிறது. அதற்கு காரணம் ஒரு தேர்ந்த துப்பறிவாளன் போல, ஐராவதம் தன் கருதுகோளுக்குக் கொண்ட இந்த ஆய்வு, அதன் அணுகுமுறை, அதனால் அவர் வந்தடைந்த இடம்.

வெறும் இந்த மூன்று குறியீடுகளை வைத்து மட்டும், ஐராவதம் இந்த முடிவிற்கு வரவில்லை. நான் இந்தப் பதிவிற்கு எடுத்துக்கொண்டது இந்த ஒரு சிறு sample மாத்திரமே. பலப்பல குறியீடுகள், இலக்கியங்கள், உசாத்துணைகள் என விரிந்து நீள்கிறது அவரது ஆய்வு.

 Interesting, right?

 மூன்றாவது ஆய்வு முறையும் ஒன்று உண்டு, என்று சொன்னேனே. 2015-ல் புராதன சிந்துவெளி நகரமான ராக்கிகிரியில் (தற்போதைய ஹரியானா) கண்டுபிடிக்கப்பட்ட 4500 ஆண்டுகள் பழமையான 4 முழு மனித எழும்புக்கூடுகளின் DNA பகுப்பாய்விலிருந்து, அவை திராவிட மக்களின் மரபணுக்களையே கொண்டுள்ளன என்பது: சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே - என்பதை archaeological genetics வழியாகவும் முத்தாய்ப்பாய் நிறுவுகிறது.

 இவ்வாய்வை வெளியிட்ட போது, மேலே கூறிய மரபணுத் தடயங்களை மகாதேவன் அறிந்திருக்கவில்லை.

 ஒருவேளை, இந்த மரபணுத் தடயங்கள் நமக்குக் கிடைக்காமல் போனதாகவே இருக்கட்டும். அப்பொழுதும், நமக்குக் கிடைத்த தொல்லியல் (archaeological) மற்றும் மொழியியல் (linguistics) ஆதாரங்களைக் கொண்டு, பகுத்தறிவின் பாற்பட்டு அறிவியல்பூர்வமாக, ஐராவதம் மகாதேவன் கையாண்ட இந்த அணுகுமுறை, நம் வரலாற்றுப் புரிதலை மேலும் துலக்கி, உண்மையை நோக்கி உந்தும் ஒரு செம்மையான முயற்சி என்பதாய் சிலாகிக்கலாம்.

 உசாத்துணை:

அம்மா’ என்ற சொல் ஆதி பிராமி எழுத்து முறையிலிருந்து தற்காலம் வரை எப்படி வழங்கி வந்துள்ளது என்பது காண்க:

 

ஐராவதம் மகாதேவன்