Showing posts with label காவல் கோட்டம். Show all posts
Showing posts with label காவல் கோட்டம். Show all posts

Thursday, December 22, 2011

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது


சு. வெங்கடேசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவலுக்கு இந்த விருது அளிக்கப் பட்டுள்ளது.  காவல் கோட்டம் மிகச் சிறந்த படைப்பு.   பிரம்மாண்டமான படைப்பு.  அரண்மனை ஆவணங்களை கொண்டு எழுதப்படும் வரலாறுகளில்  இறந்த மன்னர்களின் சடலங்களும், அரண்மனைச் சதிகளும், போர் வெற்றிகளும் மட்டுமே ஓங்கி இருக்கும்.  சு. வெங்கடேசன், மதுரையின் கடந்த அறுநூறு கால வரலாற்றை, பெரும் சாம்ராஜ்யங்கள் தோன்றியும் மறைந்தும் போன வரலாற்றை, தாதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையின் மூலம் விரித்துச் செல்கிறார்.   சு. வெங்கடேசன் நம்மை தாதனூர்காரர்களின் ரத்தமும், சதையும் கொண்டவாழ்க்கையோடு ஒன்றிப் பயணிக்கச் செய்கிறார்.  படித்து முடித்தவுடன், உண்மையிலேயே தாதனூர் என்ற ஊர் மதுரை அருகே இருக்கிறதா? என்று கேட்கத் தோன்றியது.   நுட்பமான தகவல்களும், நம் பண்பாட்டு விழுமியங்களும், இருளைப் பற்றிய விஸ்தாரமான விவரணைகளும், களவுக்கும் காவலுக்கும் இடையே உள்ளே உறவையும், எளிய வார்த்தைகளில், மிகையின்றிச் சொல்லும் நாவல் காவல் கோட்டம்.  தமிழ் வரலாற்று நாவல்களின் குறுகிய எல்லைகளை உடைத்தெறிந்து, சரித்திர நாவல்களின் தளத்தை காவல் கோட்டம் மிகவும் பெரிதாக்கி விட்டது என்று சொல்வது மிகையாகாது. 

சென்ற ஆண்டு நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகடெமி விருது.  இன்றைக்கு சு. வெங்கடேசனுக்கு விருது.  இப்படித் தரம் வாய்ந்த எழுத்துக்களுக்கு விருது கொடுப்பதின் மூலம், சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக் கொண்டது என்று தான் சொல்ல முடியும்.  மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் முகவரி அல்லது மின்னஞ்சல் யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள். 

காவல் கோட்டத்தை தன் விரிவான விமரிசனம் மூலம் அடையாளம் காட்டியதற்கு ஜெயமோகனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

காவல் கோட்டம் பற்றிய விமரிசனங்கள்:










காவல் கோட்டம்; ஆசிரியர்: சு. வெங்கடேசன். பதிப்பகம்: தமிழினி.

Monday, January 25, 2010

காவல் கோட்டம் - சுவாரஸ்யமான மதிப்புரைகள்

இது விமர்சனம் இல்லை.  விமர்சனகளின் தொகுப்பு.
நான் புதிதாக ஒரு புத்தகம் படிக்க நினைத்தால் படிப்பதற்கு முன் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நல்ல ஒரு மதிப்புரையையோ படித்த பின்தான் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன்.  சமீபத்தில் வெளி வந்த காவல் கோட்டம் ஆயிரம் பக்கத்திற்கும் மேலான நீண்ட புத்தகம்.  புத்தகத்தை எழுதியவர் சு. வெங்கடேசன். இளம் வயதுக் காரர், அவரது முதல் புத்தகம்.  கள்ளர்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பெரும் நாவல் என்று மட்டும் மேலோட்டமாகத் தெரிந்திருந்தது.

தமிழில் தரமான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் காவல் கோட்டத்திற்கு, முகப்புரை எழுதியிருந்தார்கள்.  ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தை, ஆயிரம் பக்க அபத்தம் என்று ஒரே காய்ச்சு, காய்ச்சு விட்டார்.  எஸ்.ரா தன் முகப்புரையில் இந்தப் புத்தகத்தைப் கொஞ்சம் காட்டமாகவே எழுதியிருந்தார்.  எஸ்.ரா எழுதியது அவர் இயல்புக்கு மாறாக இருந்தது என்று எஸ். ராவின் எழுத்துக்களை ஆர்வமுடன் படிக்கும் என் நண்பர் ஒருவர் கூடக் கூறினார்)   எஸ். ராவின் விமரிசனத்தை மறுத்து கீற்று பத்திரிக்கையில் திரு. மணிமாறன் அதே காட்டத்துடன் எழுத்து வியாபாரியின் அபத்த அரசியல் என்று எதிர்வினை எழுதி இருந்தார்.  அட, இந்தப் புத்தக விமரிசனம் இவ்வளவு காட்டமாக இருக்கிறதே விமரிசகர்கள் மத்தியில் - என்று நினைத்தேன்.

அப்புறம் ஜெயமோகனின் விமரிசனம் வந்தது. காவல் கோட்டத்தைச் சிலாகித்து விரிவாக விமரிசனம் ( ஐந்து பாகங்கள்) செய்திருந்தார்.  தனக்கே உரித்தான முறையில் காவல் கோட்டத்தின் பல படிமங்களை முன் வைத்தார்.  அதைப் படித்தபின் அவசியம் காவல் கோட்டத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.  சமீபத்தில் இந்தியா சென்ற நண்பர் ஒருவரை வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன். படித்தவுடன் என் எண்ணங்களை எழுதுகிறேன்.

காவல் கோட்டத்தை படித்தவர்கள் என்ன நினைகிறீர்கள்?

குறிப்பு 1 :
புத்தக விவரம்:
காவல் கோட்டம்
சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்

குறிப்பு 2:

காவல் கோட்டத்தை எழுதிய சு. வெங்கடேசன், ஒரு காலத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை கிழி, கிழி என்று கிழித்து எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்.   பிறர் தன்னைப் பற்றிக் கூறும் சிறு குறைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத மெல்லிய தோல் கொண்டவர்களாக பல எழுத்தாளர்கள் இருக்கும் காலத்தில், ஜெயமோகன் போன்ற பாரபட்சமற்ற விமரிசகர்கள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கதே!