Monday, December 24, 2012

இதுவா கணக்கு?




இதுவா கணக்கு?




ஜோ போளர்
வைகிங் பதிப்பகம்
ISBN 9780670019526




     ஜோ போளர், சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர்.  அதற்கு முன் ஸ்டான்போர்ட் பலகலைகழகத்தில் கணிதப் பேராசிரியையாக பணியாற்றியவர்.   பல விதமான கணிதக் கல்வி முறைகளில் கற்றுத் தேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்து ஆய்வு செய்பவர்.   அந்த  ஆய்வுகளின் முடிவுகளை சுருக்கமாக இந்த நூலில் எழுதியுள்ளார்.  

     உங்கள் குழந்தைகள் கணிதத்துடன் நடத்தும் போராட்டத்தை தத்தளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோராகவோ, எப்படி குழந்தைகளுக்கு கணிதத்தின் மேல் ஆர்வம் கொள்ள வைப்பது என்று தடுமாறும் ஆசிரியராகவோ இருந்தால், இந்தப் புத்தகம், உங்களுக்காக எழுதப்பட்டது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.  இந்தப் புத்தகத்தில், தற்கால கணிதக் கல்வி முறையின் குறைகள் பற்றியும் அவற்றைப் போக்குவதற்கான வழிமுறைகள் பற்றியும் படிப்படியாக விவரிக்கிறார் ஆசிரியர் ஜோ. இந்தப் புத்தகம் அமெரிக்க கணிதக் கல்வியை பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்டிருந்தாலும், இந்த நூலில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல நாட்டுக் கணிதக் கல்வி முறைகளுக்கும் பொருந்தும்.

     நம்  ஊரில், ஒரு சில இடங்களைத் தவிர, குழந்தைகளின் கல்வி முறை பெரும்பாலும் ஒரு திறம்பட தகவல் சேகரிக்கும் கருவியாக மட்டுமே கருதப்படுகிறது.  பல மாணவர்கள் தாங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்ற பாடங்களில் கூட உண்மையான ஆர்வம் இல்லாமல் இருப்பதைக் காண்கிறோம்.   இதற்கு பல காரணங்கள் உள்ளன.



      கணிதம் வகுப்பறைகளில் சொல்லிக் கொடுக்கப் படும் விதமே மாணவர்கள் கணிதத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார் ஜோ. இந்தப் பரிந்துரையில், ஆசிரியர் ஜோவின், முக்கியக் கருத்துக்களைத் தொகுத்து அளிக்க முயன்றிருக்கிறோம்.