கண்ணீரைப் பின் தொடர்தல்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை
இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் பெரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, அமைப்புகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது. நவீன யுகத்தின் எதையும் அறிவுப்பூர்வமாக நோக்கும் ஆய்வு முறை, பல நூற்றாண்டுகளில் எந்தக் கேள்விக்கும் உட்படாத தொன்மையான மரபுவாத முறைகளை, யந்திரத்தன்மையுடன் சந்தித்த காலம். சுதந்திரம் மட்டும் அடைந்து விட்டால், மக்களும், மன்னர்களும் சமமாவார்கள் என்று லட்சியவாதிகள் கனவும், தினவும் கொண்ட - ஒரு தேசத்தின் வரலாற்றில் அபூர்வமாக மட்டுமே வரக்கூடிய- காலம். இந்தக் காலகட்டம் இந்தியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும், அரசன் முதல் ஆண்டி வரை, மிக அடிப்படையான விதங்களில் பாதித்தது. சமூகத்தில் பெரும் மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை உருவாகியது. இந்த மாற்றங்கள், இந்திய எழுத்தாளர்களுக்கு செறிந்த இலக்கியங்களைப் படைக்க அற்புதமான விளைநிலங்கள் ஆயின. பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.