Tuesday, March 9, 2010

குள்ளச் சித்தன் சரித்திரம்

குள்ளச் சித்தன் சரித்திரம் :
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்

சில மாதங்களுக்கு முன்பு ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தபோது, தற்கால எழுத்தாளர் ஒருவரை சிபாரிசு செய்யக் கேட்டேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் யுவன் சந்திரசேகரைக் குறிப்பிட்டார்.சமீபத்தில் உயிர்ம்மையில் யுவன் எழுதிய சிறுகதை வெளி வந்தது.சரியாகப் புரியா விட்டாலும், கதை என்னவோ மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. 'குள்ளச்சித்தன் சரித்திரம்' ஏதேச்சையாக அகப்பட்ட போது, இம்முறை யுவனின் மாய உலகத்திற்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் எனக் கறுவிக்கொண்டேன்.
'மாற்று மெய்ம்மை' என அடிக்கடி தட்டுப் படுகிறதே என்று தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி. http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction). இது என்னவெனில், நாம் காணும் உலகத்தைப் போல், இன்னும் பல உலகங்கள் ஒரே சமயத்தில் சஞ்சரிக்கும் சாத்தியக்கூறை, கதை சொல்லும் உத்தியாகக் கையாள்வதைப் பற்றியது.


இந்நாவலின் மையக் கதையை நான் கூறப்போவதில்லை. மாற்று மெய்ம்மையை, ஒரு மர்ம நாவலைப் போன்று, மிகவும் ரசிக்கும் படியான உத்திகளைக் கையாண்டு, யுவன் கதை சொல்லும் போக்கை வாசகன் எந்தவித முன் பரிச்சயமும் இல்லாமல் எதிர்கொள்வதே சிறப்பானது.

இருவகை சித்தர்களை இந்த பூமி கண்டிருக்கிறது. ஞானத்தேடலை, உண்மையைக் கண்டு உரைப்பவர் ஒரு வகை. சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்படும் குறைகளைத் தீர்க்கும் அவதூதர்கள் மற்றொரு வகை. இவை இரண்டிலும் சேராத நித்தி- ஜக்கி கார்ப்பரேட் சித்தர்கள் தனி வகை. இதில் அவதூதர் வகையைப் பிரதானமாய் முன்னிருத்தி சிருஷ்டிக்கப்பட்டது தான் 'குள்ளச் சித்தன் சரித்திரம்'; க.நா.சு.வின் நாவல்களைப் படித்தவர்களுக்கு இந்த அவதூதர்கள் நன்றாகப் பரிச்சயம் ஆகியிருப்பார்கள்.

'குள்ளச் சித்தன் சரித்திரம்' என்னும் புத்தகத்தை, இந்த நாவலில் வரும் ஹாலாஸ்மைய்யர் என்பவர் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தை இந்த நாவலில் வரும் ராம.பழனியப்பன் வாசிக்கிறார். ராம. பழனியப்பன் வாசிக்கும் அதே பக்கங்களைத்தான் வாசகனாகிய நானும் வாசிக்கிறேன் என்பது எனக்கு வெகு சுவராஸ்யமாய்ப் பட்டது. நாவல் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்து ''70 வரை செல்கிறது.

இந்நாவலில் எனக்குப் பிடித்த அம்சங்கள்:
அ) ஃபேன்டஸி ஆ) நாவல் யுக்திகள் இ) உயிரூட்டமுள்ள பாத்திரங்கள் ஈ) கவித்துவமான விவரணை. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நாவலின் தொடக்கத்திலிருந்தே கவித்துவம்:
'வெளிச்சம் சிறுகச் சிறுக வஸ்துக்களாக மாறிக்கொண்டே வருகிறது.
கம்பிக் கிராதியாக.
ஆல மரமாக.
ஊருணிக் கரையாக.
வாசல் தெளிக்கும் பெண்களாக.
பார்வை கொள்ளும் கண்களாக ...
வெளிச்சம் யோசனைகளாக மாறுகிறது.'

மேலும்,
'விழிப்புத் தட்டியவுடன் ... இடவலம் குழம்பிக்கிடந்த பிரக்ஞைவெளியில் மின்னல் வேகத்தில்
யாவும் அதனதன் இடத்தில் பொருந்தி அமர்கின்றன'.

குறுகிய பக்கங்களில் நிறைய உத்திகள் கொண்ட யுவனின் எழுத்து அலாதியானது. இந்த நாவலின் அழகே, வெறும் 238 பக்கங்களில் பல பிறவிகளையும் பல சம்பவங்களையும் யுவன் கோர்த்த விதத்தில்தான இருக்கிறது. இன்னும் முப்பதே பக்கம்தான் இருக்கிறது, எப்படிக் கோர்க்கப்போகிறார் என்று மலைத்திருக்கும் போது, 'அட' என்று உரக்கவே சொல்லும் படி கதை சங்கம்மாகிறது.

ஒரு பிறவியில் கழுகு இவ்வாறு யோசிக்கிறது:
'ஆகாயத்திலிருந்து ஒரு பார்வை.
பூமியை நோக்கி ஒரு பாய்ச்சல்.
பிராணன் நீங்கும்முன் அவஸ்தையின் உச்சத்தில் இரையின் அலறல்...
அதிக கிளர்ச்சி தருவது ஒரேயடியாய் கொன்றுவிடாமல்,
இரையின் ஒவ்வொரு அங்கமாய் பியித்து எறிவது'

கழுகு இவ்வாறெல்லாம் யோசித்திருக்குமா என ஒரு கணமேனும் நம்மை ஆச்சர்யப்பட வைப்பது யுவனின் வெற்றி. ஞானி, சித்து, பிறவிகள், மாற்று மெய்ம்மை, ஜோதிடம் என்று பகுத்தறிவில் அடங்காத விஷயங்களைப் பற்றியதாய் கதையோட்டம் இருப்பினும் கதையின் மாந்தர்கள் உணர்வும், யதார்த்தமும் கலந்த நிஜ மனிதர்கள்:
வட்டித்தொழில் செய்யும் பர்மா வெங்கடேஸ்வரைய்யர், கணக்குப்பிள்ளையாக வேலை செய்து வரும் ராமநாதனுக்கு வியாதி வரும் போது பண உதவி செய்ய மறுக்கிறார். (மனமுடைந்துபோன ராம்நாதன் எல்லாவற்றையும் துறந்து தேசாந்திரம் போகிறார்). இதனால் மனம் மாறியதாலோ என்னவோ, அய்யர், ராமனாதனின் மகனுக்குப் பின்னாளில் உதவி செய்கிறார். அது மாத்திரம் இல்லாமல் சமுதாயத்துக்கே பயன்படும்படி தன் சொத்துக்களை ஒரு நாலகம் நிறுவுவதில் செலவிடுகிறார். மற்றும் இதே அய்யர் வேம்பு எனும் ஒரு பையனையும் "வைத்துக்" கொண்டிருக்கிறார்.

இந்நாவலில் வரும் பலவேச முதலியாரின் வார்த்தைகளிலேயே மற்ற முக்கிய பாத்திரங்களை பற்றி....
சென்னகேசவன்:'...நல்லவந்தான். என்ன, கை கொஞ்சம் சுணக்கம். சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் இடையிலே சின்னக் கோடு தாங்க இருக்கு. எல்லாருக்கும் தெரியுறதில்லே அந்தக் கோடு.'
நீலகண்டன்: .. கொஞ்சம் வியாபார மூளை. ஆனா, ஆள் உபகாரி. ஏதொண்ணுக்கும் ஒத்தாசையா இருப்பாரு.'

இப்படி, நல்லதும், கெட்டதும், விஷேசங்களும் கலந்த ரத்தமும் சதையுமான மனிதர்கள்.

சரி, பிள்ளைப்பேறு இல்லா தம்பதியருக்கு பிள்ளை பிறக்க வைப்பதும், மணமாகாத பெண்ணின் பிள்ளையை காணாமல் போகச் செய்வதும், மற்றும் இத்யாதி இத்யாதி 'சித்து' வேலைகளையும் மீறி பரந்துபட்ட உயர்ந்த நோக்கம் என எதுவும் இல்லையா? அதை இந்த நாவலில் வரும் ஆலாஸ்யமே கேட்கிறார்:

'இத்தனை விஷயங்கள் சொல்கிறீர்கள் ... இந்தியதேசம் முழுதும் இந்த மாதிரி ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் குறைச்சலேயில்லை ... அப்படியிருந்தும் சாப்பாட்டுக்கில்லாமல் மனிதர்கள் சாகிறார்கள்... ஒருத்தரையொருத்தர் கொன்று கொள்கிறார்கள்..நீங்கள் எல்லாரும் சேர்ந்தால் இதையெல்லாம் சரி செய்துவிட முடியாதா?'

அதற்கு இந்நாவலில் கிடைக்கும் பதில் விவாதத்திற்குறியது. அப்பதிலை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆனால், சித்தர்கள் ஞானிகள் (அசலும், போலியுமாய் அருகியும் பெருகியும்) மலிந்திருக்கும் இந்திய சமுதாயத்தில், சாமன்ய மக்கள், இவர்களை எப்படி வகுத்துக் கொள்கிறார்கள் என்பது நிதர்சனமாய் சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் போக்கு அமானுஷ்யமாய் போய்க்கொண்டிருந்தாலும் கதையின் எந்தப் பகுதியிலும் வரும் சூழல் விவரணை நெருடலேயில்லாமல் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. உதாரணமாக ஒரு விவரணை:

'சுப்பிரமணியசுவாமி கோவிலின் ஆலாட்சமணி திசைகளை அதிர்விக்கிறது. மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் வண்டியில் பூட்டிய மாடுகளின் கொம்பிலிருந்து கிளம்பும் குறுமணிச்சப்தம் கோவில் மணி ஓசையுடன் இசைகிறது. சீரான லயத்தில் மாறி மாறி ஒலிக்கும் மணிகளின் ஒத்திசைவில் தோய்கிறது அந்தி.'

இந்த நாவலின் பின்னுரையில் யுவன் சுவராஸ்யமான உண்மை நிகழ்வு ஒன்றைச் சொல்கிறார்.தனக்கு வேலை மாற்றம் வேண்டி, தன் நண்பருக்குத் தெரிந்த ஒருவரிடம் குறி கேட்கப்போகிறார்.இவரைப் பார்த்த மாத்திரத்தில் இவர் மட்டுமே அறிந்திருக்கக் கூடிய விஷயங்களையெல்லாம் பிட்டுப் பிட்டு வைக்கிறார் அவர். பகுத்தறிவை நம்பும் எவரையும் ஆட்டம் காண வைக்கக்கூடிய நிகழ்ச்சி அது. ஒத்துக்கொள்ளவும் முடியாது. ஒதுக்கவும் இயலாது. "தான் வேண்டிய மாற்றம் அவ்வருடத்திலேயே கிடைக்கும்" என்கிறார். ஆனால் உண்மையில் பல வருடங்கள் கழித்து அதுவும் வேறு ஏதோ ஊருக்குத் தான் மாற்றலாகிறது.

நிகழ் வாழ்க்கை என்னும் மஹா 'சித்து' வை விளங்கிக் கொள்ளமுடியாமல் தான் என்னவோ, எதிர்வினையாக மாற்று மெய்ம்மைக்குள் புகுந்து, புரியாத புதிர்களையெல்லாம் அதனதன் இடத்தில் கச்சிதமாய்ப் பொருத்தியமர்த்தி விளங்கிக்கொள்ளும்படியான 'குள்ளச் சித்தன் சரித்திரத்தை' யுவன் எழுதினாரோ என்றும் என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மேலும் தொடர்கிறார் யுவன்: 'மாற்றுமெய்ம்மையின் மெய்த்தனத்தை விட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறது'. இந்த ஃபேன்ட்டஸி அம்சம் சிறப்பாகவே கைகூடியிருக்கிறது. சுவராஸ்யமான வாசிப்பு. கட்டாயம் படிக்கலாம், படியுங்கள்.

4 comments:

Jegadeesh Kumar said...

பதிவுக்கு நன்றி, வாங்கப் போகும் புத்தகங்களின் பட்டியலில் நிச்சயம் இதுவும் உண்டு

இனியாள் said...

வெகு நாட்களுக்கு பிறகு, இதை போன்ற ஒரு கதையை வாசிக்க நேர்ந்த அனுபவம் அலாதியாய் இருந்தது, நல்ல படைப்பு. மாற்று மெய்ம்மை குறித்த உங்கள் விளக்கம் அவசியமானஒன்று.

clayhorse said...

ரொம்ப நன்றிங்க. உங்க ஊர் அம்பாசமுத்ரம் எனக்குப் புடிச்ச ஊருங்க லிஸ்ட்ல முக்கியமான இடத்துல இருக்குதுங்க.
http://baski-lounge.blogspot.com/2009/05/blog-post_14.html

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment