Thursday, August 18, 2011

தீராக்காதலி - டெலிபோன் டைரக்டரி

தீராக்காதலி
ஆசிரியர் : சாரு நிவேதிதா
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ 80 


"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார்.  போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது.   ஏதோ விஷயம் இருக்கிறது என்றும், சாரு கட்டுரைகளை நன்றாக எழுதுவார் என்று நம்பியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.


 இந்நூல் தமிழ் சினிமாவின் முன்னோடி நடிகர்களான பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா,, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா போன்றோரின் எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.  ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் அற்புதமாக இருக்கிறது.  ஆனால், உள்ளடக்கத்தில் சாதனை மனிதர்களின் வீழ்ச்சியின் சோகத்தைச் சொல்லக் கிடைத்த அருமையான வாய்ப்பைத் தவற விட்டிருக்கிறார் எழுத்தாளர்.  தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்ற இந்த வரம் சாருவுக்குக் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது.  நூல்  முன்னுரையில், இக்கட்டுரைகளுக்காக ஓராண்டு காலம் ரோஜா முத்தையா நூலகத்திலேயே பழியாகக் கிடந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.  அந்த உழைப்பின் பலன் புத்தகத்தில் தெரியவில்லை.  ஒரு கோனார் நோட்ஸ் போல, நடிகர்களின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு என்று பாயிண்ட் பாயிண்ட் ஆகக் குறிப்பிடுகிறார்.  உயர்வு, வீழ்ச்சி ஆகிய அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை விவரிக்கும் நடையை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.  பேசும் படம், அறந்தை நாராயணன்,  பிலிம் நியூஸ் ஆனந்தன் கட்டுரைகள், மற்றும் தினமலர்  வாரமலர் இதழ்களில் வரும் கட்டுரைகளைப் போலவே இக்கட்டுரைகளின் நடை இருக்கிறது.

பாகவதர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர்.  ஆகியோரின் விரிவான வாழ்க்கையைப் பல புத்தகங்களிலும் பேட்டிகளிலும் அனைவரும் படித்திருக்கக் கூடும் என்பதால் இதில் தட்டையாக மீண்டும் வாசிப்பது சோர்வாக இருக்கிறது.    இத்தொகுப்பில் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்று பார்த்தால் அது புனைவை மிஞ்சும் கே.பி.சுந்தராம்பாள்-கிட்டப்பா காதல் கதைதான்.  கே.பி.எஸ். தனது காதல் கணவர் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்களை இவர் மாற்றாமல் அப்படியே கொடுத்திருப்பது பெரிய சேவை.  மேலும், மிக இளம் வயதில் மறைந்த சின்னப்பா, கிட்டப்பா ஆகியோரது சாதனைகள் மலைக்க வைக்கிறது.

என்ன வியாதியோ தெரியவில்லை, வழக்கம் போல, கிடைத்த இடைவெளியில் எல்லாம் இளையராஜா, சிவாஜி கணேசன், கமல் ஆகியோரை சம்மந்தமில்லாமல் இழுத்து மட்டமாக விமர்சித்திருக்கிறார் சாரு.  பேருந்துப் பயணத்தின் போது படிக்கலாம்.
இந்த விமர்சனம் நான் வாசித்த வகையிலானது.  இந்நூல் பிறருக்குப் பிடித்திருக்கலாம்.  எதையும் வாசிப்பதில் தவறில்லை.

5 comments:

Jegadeesh Kumar said...

போச்சு எண்பது ரூபாய்!

Anonymous said...

naan iduvari pakiavillai. iniyum padikkamatten.

Victor Suresh said...

சிறியதாக இருந்தாலும், சுருக்கென்று சொல்லப்பட்ட அருமையான விமர்சனம். சாரு நிவேதிதா எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் ஒரு காவியம் என்பது போல சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதையும், தான் எழுதுவதை வாசிக்காத, விமர்சனம் செய்யாத தமிழ்நாட்டு மக்களைப் பழிப்பதையும் குறைத்துக் கொண்டு, உருப்படியாக எழுத ஆரம்பிக்க வேண்டும். நான் இந்த நூலை வாசித்து விட்டு என் தந்தையிடம் கொடுத்தேன். அவர் வாசித்து விட்டு நூலை சாரமில்லாத சரக்கு; இது வரை எழுதப்படாதது எதையும் இந்த எழுத்தாளர் எழுதி விடவில்லை என்று நிராகரித்து விட்டார்.

Anonymous said...

charu...has he written anything good so far? or should i be illiterate to like his so called classics? his vaasagar vattam is like power star rasigar mandram. he can never be an ultimate writer. to me he is like T rajendar . he is a power star in literary world.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment