தொலை கடல்
தமிழினி
பதிப்பகம்
உமா மகேஸ்வரி
சிறுகதைத்
தொகுப்பு
விலை: ரூ 50/-
பெற்றோர்
பார்த்து திருமணம் செய்து வைத்தவனாக இருந்தாலும் ஒரு முன்பின் தெரியாத ஆண்மகனுடன் முதலிரவைக்
கழிக்கும் பெண்ணின் தடுமாற்றம், தாம்பத்ய உறவில் கணவன் செய்யும் துரோகத்தை அறியும்
மனைவி கொள்ளும் துயரம், சகோதரிகளுக்குள் உள்ள போராட்டம், சொந்த மகன் இறந்ததால்
தாலியறுக்கும் மருமகளைக் கண்டு மாமியார் தன்னை அறியாமலே கொள்ளும் மகிழ்ச்சி என, சுவாரசியமான
கதைக்களங்கள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.
உமா மகேஸ்வரி சராசரி இந்தியப் பெண்களின் அகவுலகுக்குள் நம்மைக் கொண்டு செல்கிறார். இந்தப் பெண்கள் புழங்கும் உலகின் விதிகள் பிரத்யேகமானவை; பெரும்பாலான ஆண்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவை. இந்தக் கதைகளின் அடி நாதம் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் கொள்ளும் துயரமும், ஏமாற்றமுமே.

இந்தத் தொகுப்பில் குழந்தைகளின் பார்வையில் எழுதப்பட்டுள்ள நான்கு சிறுகதைகளும் அற்புதமானவை (மூடாத ஜன்னல், தொலைகடல், ரோஸ், என்றைக்கு?). தாம்பத்ய உறவில் நிகழும் துரோகத்தை பின்புலமாகக் கொண்ட கதைகள் இரண்டு– கணவன் மனைவிக்கு இழைக்கும் துரோகம் (மூடாத ஜன்னல்), மனைவி கணவனுக்கு இழைக்கும் துரோகம் (தொலை கடல்). இந்த இரண்டு கதைகளும், தாம்பத்ய உறவின் அடிப்படையான நம்பிக்கையில் விழுந்த விரிசலால் விளைந்த வலியை விட, அதை அறிவு ரீதியாகவோ, உணர்வு ரீதீயாகவோ, எதிர்கொள்ளும் திறனற்ற குழந்தைகளின் வலியைப் பற்றியவை. நம் மனதில் நிற்கும் கதைகள்.
சகோதரிகளுக்கிடையே இருக்கும் போட்டி, மகளுக்கும்/தாய்க்கும் இடையே உள்ள உறவு, கணவன்/மனைவி உறவு, என பெண்களின் எல்லா உறவுகளைப் பற்றியும் விரியும் கதைகள், இந்தக் கதைத் தொகுப்பில் உள்ளன. இந்தக் கதைகள் தம்மளவில், மிக நேர்த்தியாக படைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை படிக்கும் போது என் மனதை நெருடிய விஷயம் ஒன்று உண்டு. இந்தக் கதையில் வரும் ஆண்கள் எல்லாம் வெறும் உள்ளீடற்ற கோட்டுச் சித்திரங்களாக மட்டுமே இருக்கிறார்கள். தன் மனைவியை மேலாளருடன், இரண்டு நாட்கள் ‘அனுப்பி’ வைத்து தன் வேலையின் நிரந்தரத்தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறான் ஒரு கணவன். இரண்டு நாள் கழித்து வரும் மனைவியைப் எதிர் கொள்ளும் கணவனைத் தட்டையான, லௌகீக வெற்றியில் மட்டுமே குறியாக உள்ள மத்திய வர்க்க மனிதனாக மட்டுமே சித்தரிக்கிறார் உமா மகேஸ்வரி. ஏன், அந்தக் கணவனுக்கு அந்த வேலை அவ்வளவு முக்கியமானதாகிறது? வெறும் ஆளுமைக் கோளாறு மட்டுமா? இவன் செய்தது வெளியே தெரிந்தால், அவன் எப்படி உணர்வான்? இது போன்ற சிக்கலான தளங்களுக்குள் ஆசிரியர் உமா மகேஸ்வரி நுழைந்திருக்கலாமே என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
உமா மகேஸ்வரியின் முந்தைய தொகுப்பைப் போல (மரப்பாச்சி), இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளும் நம்மைப் பெண்களின் உலகிற்கு அழைக்கின்றன. இவரது கதைகளில் பாத்திரங்களின் மன நிலைகள், அவர்களது சூழலில் இயல்பாக பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, தன் அக்காவிற்கு துரோகம் செய்த தங்கை கோவிலுக்குள் நுழையும் போது, அந்தக் கோவிலின் ஒவ்வொரு அம்சமும், அவளுக்குத் தன் அக்காவை மட்டுமே நினைவுறுத்துகின்றது. பல கதைகளில், பின் நோக்கி (flashback) பார்ப்பதிலேயே கதையை இலகுவாக முன் நகர்த்திச் செல்கிறார். இவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி. இவரது எழுத்துக்களில் மிளிரும் அலாதியான கற்பனை வாசகனை ஈர்க்கும். உதாரணமாக, ரயிலில் முதல் முறையாகத் தனியாகப் பயணம் செய்ய நேர்ந்ததில் பயந்த பெண்ணின் மன நிலையை இப்படி வர்ணிக்கிறார்:
"இருட்டை வகிர்ந்து கொண்டு தலைதெறிக்க ஓடுகிறது ரயில். அதன் இருபுறமும் நெளியும் கூந்தலென கருமை அலை பாய்ந்து கொண்டிருக்கிறது. ரயிலின் கேவல் நீண்ட கேவலாகத் தொனித்தது. அந்தக் கேவலிலிருந்து அடுக்கடுக்காக விரியும் கோரக் காட்சிகள். விபத்து நேர்ந்த இடங்களின் கதறல்கள். மரண வீடுகளின் ஓலங்கள். இறுதிப் சடலங்களை வழிநடத்தும் சங்கொலி..."
ரயிலின் ஒவ்வொரு அசைவும், ஒலியும் அந்தப் பெண்ணுக்கும் உள்ளூர கலக்கத்தையே ஏற்படுத்துகின்றன. அவளுள் உறைந்திருக்கும் அச்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே ரயிலில், அதே பெட்டியில், எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டு வருபவர்களின் உலகம் பிறிதொன்றாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் அர்த்தமற்ற பயத்தைப் பற்றிய கதை என முதல் வாசிப்பில் பட்டாலும், வாழ்க்கையில் (ரயில் பயணம்) நாம் கொள்ளும் எல்லா அச்சங்களும் நம் அறியாமையின் விளைவுகள் தாமே என்று மறு வாசிப்பில் எண்ணத் தோன்றியது.

இவரது கதைகள், பெண்களுக்காகவே உற்பத்தி செய்யப்படும் வணிக எழுத்துக்களை மட்டுமே படித்து வரும் பெண்களை இன்னும் ஆழமான எழுத்தை நோக்கி இழுக்கும் சக்தி
வாய்ந்தவை. உமா மகேஸ்வரி, இந்தத் தொகுப்பில்
கையாண்டுள்ள கதைக் கருக்கள் வித்தியாசமானவை.
இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள், நம் சகஜ நிலையின் (comfort zone) எல்லைகளை மென்மையாக விரிவாக்கும் திறன் கொண்டவை. இவர் ஏன் இன்னும் நிறைய எழுதாமல் இருக்கிறார் என்பது
வியப்பாக உள்ளது.
தொடர்புடைய பதிவுகள்;
1. மரப்பாச்சி சிறுகதைத் தொகுப்பு
No comments:
Post a Comment