உண்மை கலந்த நாட்குறிப்புகள்
உயிர்மை பதிப்பகம்
அ.முத்துலிங்கம், இலங்கையின் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து, பின்னர் கொழும்பு, சியாரா லியோன், சூடான், நைரோபி, நமிபியா, சோமாலியா, அமெரிக்கா, கனடா, என்று உலகத்தின் எட்டுத் திக்குகளுக்கும் சென்று தனது ரசமான அனுபவத்தை, சுவாரஸ்யமான கலைச்செல்வமாய் இந்நூலில் கொணர்ந்திருக்கிறார்.
அ.முத்துலிங்கத்தின் எழுத்துக் கலப்பை சற்று விஷேசமானது தான் - அகலமாகவும் உழ முடிகிறது, ஆழமாகவும் உழ முடிகிறது. அனுபவ நூலை, அதுவும் முந்நூறு பக்கத்திற்கு எழுத நிறைய பரந்துபட்ட அனுபவமும், அதை நுட்பமாக அவதானித்துச் சொல்லும் திறமை வேண்டும். இது இரண்டுமே அ.முவிடம் உண்டு. இதற்கு மேல் அவருடய தனித்துவமான எள்ளல், மேலும் உற்சாகத்தையூட்டுவதாக அமைகிறது. தன் பால்ய காலம் தொடங்கி, பணி ஓய்வு பெற்ற காலம் வரை பலதரப்பட்ட அனுபவங்கள் - ஆனாலும் இவ்வனுபவங்களுக்குப் பின் ஓர் ஆழ்ந்த ஓர்மை, நிறைவான இலக்கிய அனுபவத்தை அளிப்பதாய் அமைகிறது. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு இம்மாதிரி வாழ்க்கையனுபவம் அமையப் பெற்றது தமிழ் வாசகனுக்கும் லாபம் தான்.
பாகிஸ்தானியர், இலங்கையர், பாலஸ்தீனியர், ஆப்பிரிக்கர், கனாடியர் என பலநாட்டு மக்களை முத்துலிங்கத்தின் எழுத்து மூலம் நாம் பரிச்சயப்படுத்திக் கொள்கையில், அம்மக்களெல்லாம் ஒன்றும் அவ்வளவு அந்நியர்களாய் நமக்குத் தெரிவதில்லை.
*****
நல்ல புத்தகங்கள் படிப்பது பற்றி அ.மு விரிவாகவே சொல்கிறார்:
"நல்ல வாசகர்கள் இருக்கும் வரை நல்ல புத்தகம் வரும். நல்ல புத்தகங்கள் வரும்போது நல்ல வாசகர்களும் உருவாவார்கள். இதில் எது முதல் என்பதுதான் தெரியவில்லை."
நல்ல புத்தகங்களை தொடர்ந்து சுவராஸ்யம் குறையாமல் படிப்பதன் சூட்சமம் என்ன ?
"ஆயிரம் புத்தகம் படித்தால் ஆயிரத்தியோராவது புத்தகத்தில் வியப்பதற்கு விஷயம் குறைந்து கொண்டே வரும். எனக்கோ வியப்பு கூடிக்கொண்டு வருகிறது... ஒரு வேளை அனுபவம் கூடக்கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதற்குத் தெரிவு செய்யும் திறமை என்னிடம் அதிகமாகியிருக்கலாம்..."
சரி, ஏன் புத்தகங்களைப் படிக்க வேண்டும் ? அ.முவின் விடை:
"முன்னெப்போதும் இல்லாதமாதிரி தரமான புத்தகங்களின் வருகையும் அதிகமாகி இருக்கிறது. என்னுடைய எஞ்சிய வாழ்நாள் மட்டும் குறைந்து கொண்டே வருகிறது.."
*****
இலங்கைத் தமிழ் புத்துயிர் பெற்றத் தமிழாய்ப் படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது. மாஸ்ரர், ரீச்சர், மணித்தியாலம் (மணி நேரம்), விசர் (பைத்தியம்), கெதியாய் (வேகமாய்), கொய்யகம் (கொசுவம்), சப்பாத்து (காலணி). மனைவியை 'அவர்' என்றே விளிக்கிறார். அண்ணாவை 'அண்ணர்'. என்கிறார்.
அ.முத்துலிங்கம், நல்ல புத்தகங்களைப் படிக்கும் போதெல்லாம், 'நமக்கு ஏன் இவ்வாறு எழுதுவதற்கு தோன்றாமல் போனது ?' என தன் தலையில் குட்டிக் கொள்வாராம். தன் தலையில் குட்டிக் கொண்டே படிப்பதற்கு வாசகனுக்கு ஏராளமாகவே இருக்கிறது இந்தப் புத்தகத்தில்.
அதில் ஒன்று:
ஆப்பிரிக்காவில் இருக்கிறார். மலேரியாவால் படுத்து விடுகிறார். அசந்தர்ப்பவசமாக வீட்டில் ஒரு ஆப்பிரிக்க வேலைக்காரப் பையனைத்தவிர யாருமில்லை. காய்ச்சல் அதிகமாகிப் போய்க்கொண்டே இருக்கிறது. தன் உயிருக்கு ஆபத்தென்றால் கூட தந்தியடிக்க எட்டு மைல் நடந்து தான் போக வேண்டும். எல்லாவற்றையும் பையனிடம் முன்னெச்சரிக்கையாகச் சொல்லி விடுகிறார். அப்படியே சிறிது கண்ணயர்ந்தும் விடுகிறார். திடீரென்று காலில் ஒரு சுரண்டல். முழித்துப் பார்கிறார். காலருகில் பையன்.
'மாஸ்ட, தந்தியடிக்கக் காசு'
*****
முத்தாய்ப்பாய்:
அதே பையனால் ஒரு ஆப்பிரிக்கப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ளும்படியான ஒரு சூழ்நிலை. வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருத்தி கர்ப்பமாகி விடுகிறாள். பையன் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இதோ பஞ்சாயத்து:
'இந்தப் பெண் கர்ப்பம் என்று இவர்கள் கூறுகிறார்களே, உண்மையா ?' என்றேன்.
'எனக்கு எப்படித் தெரியும் ? என்றான். என்னுடைய ஆரம்பக் கேள்வியே பிழை.
'நீதான் காரணம் என்று சொல்கிறார்களே ?'
'அதுபற்றி நிச்சயமாக எதுவும் சொல்லமுடியாது.'
'நீ அவளுடன் எப்பவாவது பேசிப் பழகி இருக்கிறாயா ?'
'இல்லை'
'அவளுடன் உறவு கொண்டிருக்கிறாயா ?'
'அப்படித்தான் நினைக்கிறேன்'.
'எத்தனை தடவை ?' இது அவசியமில்லாத கேள்வி. ஆனால் மனித ஆர்வத்தை யார் தடுக்க முடியும் ?
'கணக்கு வைக்கவில்லை. பிடித்த தடவை எல்லாம்.'
'அது என்ன பிடித்த தடவை எல்லாம் ?'
'மாஸ்ட, இவள் முயல் பார்க்க அடிக்கடி வருவாள். நான் துரத்துவேன். தப்பி ஓடிவிடுவாள். சிலவேளை பிடிபடுவாள். பிடிபடும் சமயங்களில் மட்டுமே உறவு கொள்வேன்.'
'எங்கே உடலுறவு வைப்பீர்கள் ?'. இதுவும் தேவையில்லாதது.
'முயல் கூட்டுக்குள்தான்.'
6 comments:
நல்ல பகிர்வு. சமீபத்தில் அ.மு கதைகளின் முன்னுரையைப் படித்தேன். சமர்ப்பணம் பகுதியில்,தானும் ஒரு ஆஃப்ரிக்க நண்பரும் காட்டுக்குள் நின்றிருந்தபோது நடந்த நிகழ்வைச் சொல்கிறார்.ஒரு மரத்தின் உச்சியில் அமர்ந்த்ருந்த காக்கையை காட்டியிருக்கிறார் நண்பரிடம்.அதை அவர் குறிபார்த்து சுட்டுவிடுகிறார்.காக்கை பொத்தென்று கீழே விழுகிறது.இத்தனை மரங்களிருக்க அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் தன் புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறார் அ.மு.
"அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் தன் புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறார் அ.மு.".........
அருமை. இதுமாதிரி அவதானம்தானே அவரைப் போன்றவர்களை ஆசிரியர்களாகவும், எம் போன்றவர்களை வாசகர்களாகவும் வைக்கிறது.
பாஸ்கர் புத்தக அறிமுகங்களுக்கு நன்றி. தொடர்ந்து வர தூண்டுகிறது...
வருகைக்கு நன்றி திரு ஜெ.ஜெ. தங்களுடைய 'ரெயினீஸ் அய்யர் தெரு' நூல் அறிமுகத்திற்கு எங்கள் தளத்தில் சுட்டி (http://baski-reviews.blogspot.com/2010/01/blog-post_26.html)கொடுத்துள்ளோம்.
buy this book @ http://www.myangadi.com/kullansiththan-sarithiram-kizhaku-pathipagam
http://www.myangadi.com/unmai-kalantha-natkurippukal-uyirmmai-pathippagam
Post a Comment