Tuesday, May 25, 2010

கண்ணீரால் காப்போம் - பிரபஞ்சன்


கண்ணீரால் காப்போம் 
ஆசிரியர்:  பிரபஞ்சன்
பக்கங்கள் : 304


வரலாற்றுச் சான்றுகளின் உதவியுடன் புதுவையின் முன்னூறு வருட வரலாற்றை நான்கு பாகங்களாக (மூவாயிரம் பக்கங்கள்) எழுதினார் பிரபஞ்சன்.  அந்த வரலாற்றுத் தொகுப்பின் மூன்றாம் பகுதி தான் 'கண்ணீரால் காப்போம்'.  பிரஞ்சுக் காலனி ஆதிக்கம் புதுச்சேரியில் காலூன்றி  பரிணமித்ததை மானுடம் வெல்லும் மற்றும் வானம் வசப்படும்   புதினங்கள் அழகாய் சித்தரித்தன.  'கண்ணீரால் காப்போம்',  புதுவையின் விடுதலைப் போரின் தொடக்கக் காலம் (1890 - 1934) பற்றியது.   (பிரெஞ்சு காலனி ஆதிக்கத்திடமிருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற 1954-ஆம் ஆண்டு வரை நடப்பவை நான்காம் பகுதியில் புனையப்பட்டிருக்கிறது).

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய உன்னதத் தலைவர்கள் பலர், பல்வேறு காலக்கட்டங்களில் புகலிடம் வேண்டி, சிலகாலம் புதுச்சேரியில் தலைமறைவாகத் தங்கிவிட்டுப் போவது வாடிக்கையாக இருந்தது.  பொது எதிரியான ஆங்கிலேயர்களை வெறுத்த பிரெஞ்சு அரசும் அந்தத் தலைவர்களின் வருகையை மறைமுகமாக ஆதரித்தது. புதுவையும் தன் பங்குக்கு மகத்தான மனிதர்களைப் பிரசவித்திருக்கிறது.  மேலும், திலகர், காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் புதுவைக்கு வருகை புரிந்துள்ளனர்.


பழுப்பு நிறத் தோல் கொண்டவர் வழக்கறிஞராகவே இருந்தாலும், வெள்ளையர் இருக்கும் நீதிமன்றத்திற்குள் சப்பாத்து அணிந்து வரக்கூடாது என்பது அப்போதைய நடைமுறை.  அதை எதிர்த்து, பிரான்ஸ் தேசத்து உயர்நீதி மன்றத்தில் வாதாடி, வென்று, ஐரோப்பிய மோஸ்தரில் சப்பாத்துக்களோடு மீண்டும் தலை நிமிர்ந்து நீதிமன்றம் பிரவேசித்தவர்,  தலித்துக்களுக்காகப் போராடிய பொன்னுத்தம்பி பிள்ளை.  இவரோடு  ''ஸ்வராஜ்யம்' லோகமான்ய திலகர்,   வ. வே.சு.  ஐயர்,   வெள்ளைக் கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன்,    மகாகவி சுப்ரமண்ய பாரதி,    அரவிந்த கோஷ்,   முதலாம் உலகப் போரின், போது,  சென்னைப் பட்டிணத்தில் குண்டு போட்ட ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்  'எம்டன்'க்குத் துணை அதிகாரியாகப் பணியாற்றிய செண்பகராமன் பிள்ளை,  தமிழக கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஹைதர் அலிகான்,    ஆசியாவிலேயே முதன் முதல் ஆலை ஊழியர்களுக்கு ' ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை'  என்ற உரிமையைப் பெற்றுத் தந்த சூத்திரதாரியான மக்கள் தலைவர் வ.சுப்பையா, மோகன் தாஸ் காந்தி,   வாத்தியார் கனக சுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் -  என்று பல உன்னதப் பிறவிகளைக் கடந்த இருபதாம் நூற்றாண்டு தரிசித்திருக்கிறது!  இவர்களனைவரும் இந்தப் புதினத்தில் உயிர்ப்போடு மறு அவதாரம் எடுத்தார்போல் வரலாற்றைத் திரும்பப் படைக்கிறார்கள் ! இப்படி வரலாறும்,  புனைவும் 'எங்கே, எப்படி' இணைந்தது என்று தெரியாத வண்ணம் படைக்கப்பட்டிருப்பது,  சிகரமாய் உயர்ந்து நிற்கும் பிரபஞ்சனின் சிருஷ்டிகரத்திற்குச் சான்று !


இந்த வரலாற்று நாவலின் பிரதம நாயகனாக, மக்கள் தலைவர் தோழர் வ. சுப்பையாவையே பிரபஞ்சன் முன்னிருத்துகிறார். காரணங்கள் நிறையவே.   அரசியல் விடுதலையா,    சமுதாய விடுதலையா என்று தலைவர்களே குழம்பிக் கலங்கி நின்ற காலத்தில்,   இரண்டையும் ஒரே சமயம் எடுத்து நடத்திய மாபெரும் செயல்வீரர் சுப்பையா. பதினேழு வயது தொடங்கி, வாழ்நாள் முழுவதும் ஓயாது உழைத்த மாமனிதர்.  வீ.எஸ். என்று புதுவை மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அவரது ஆளுமைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு:


புதுவையில் ஹரிஜன சேவா சங்கத்தைத் தோற்றுவித்த வ. சுப்பையா அதன் செயலாளராக,   நீலகிரியில் தங்கியிருந்த காந்தியை புதுவைக்கு அழைக்கும் பொருட்டு, குன்னூருக்கு செல்கிறார்.   மிக மிகக் கஷ்டப்பட்டு ஐயாயிரம் ரூபாய் நிதியை சேர்த்திருக்கிறார்.   காந்தியோ, 'பத்தாயிரம் சேர்த்து அனுப்பு. பிறகு,  வருவதா இல்லையா என்று தீர்மாணிக்கலாம்' என்று அசிரத்தையாகச் சொல்கிறார். காந்தி புதுவைக்கு வரவிரும்பாததன் காரணத்தை முன் கூட்டியே தெரிந்து கொண்ட சுப்பையா நிதானத்துடன் காந்தியை எதிர்கொள்கிறார்:


"மகாத்மாஜி. தங்கள் சொந்தப் பிரச்னை காரணமாக் புதுச்சேரிக்கு வர மறுப்பது தங்களுக்கு அழகல்ல. சொந்தப் பிரச்சனையை தேசியப் பிரச்ச்னையுடன் கலந்து குழப்புவது அரசியலுக்கு அழகல்ல."


மகாத்மாவுக்கு மகா கோபம். நெருப்பில் போட்ட பொரிகடலை போல் வெடித்து பதிலுரைக்கிறார். அந்தப் பதிலின் எதிர்பாராத் தன்மையால் படித்தவுடன் சிரித்தே விட்டேன்.


புதுச்சேரி பேருந்து நிலையம் அருகிலிருக்கும் 'சுதேசி மில்' -லில் '  அப்போதெல்லாம் தொழிலாளிகள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் வரைக் கடுமையாக வேலை செய்தனர்.  கொஞ்சம் சுணங்கினால்,  குழந்தைகள், பெண்கள் என்று பேதம் பாராமல் சாட்டையடி கிடைக்கும்.   சாதி மறுப்பாளரான வ.சுப்பையா, ஆசியாவிலேயே முதன் முதலாக, ஆலைகள், தொழிற்சாலைகளில், 'எட்டு மணி நேரமே வேலை நேரம்' என்ற உரிமையை வாங்கித் தந்தவர்.  இவரை ஏன் (தமிழ்நாட்டு)  வரலாற்றுப்பாடங்களில் நான் படிக்கவில்லை என்று வியந்தேன்.  அவர் 'புதுவைக்காரர், மற்றும் கம்யூனிஸ்ட் தோழர் என்பதனாலேயே'  என்பது என் அனுமானம்.   சுப்பையாவைப் பற்றி இன்னும் மிகுதியாக நான்காம் பகுதியில் பிரபஞ்சன் எழுதுவாரென நம்புவோம்.


சுதந்திரப் போராட்டத்தையே ஒரு பரிணாம வளர்ச்சியாகத் திலகர் காணும் தரிசனத்தை சுருங்கச் சொல்லி பதியவைக்கிறார் பிரபஞ்சன்.  1895-ம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டின் தலைமை உரையில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் பின்வருமாறு கூறியதாய் திலகர் சொல்கிறார்:
"நாம் பணியாற்றுவோம். பிரிட்டன் அரசுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லாத ராஜவிசுவாசத்துடன் இருப்போம்...  இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை நீக்குவது அல்ல எமது நோக்கம். அதை ஆழப்படுத்துவதாகும்..."


இப்படி இருந்த நிலைபாடு மாற்றம் கொண்டதையும் விளக்குகிறார் திலகர்:
"ஆனால் தேசியம் என்பதன் பொருள், இந்தப் பத்தாண்டுகளில் வெகுவாக மாறி விட்டது. மாற்றி  அமைத்திருக்கிறோம். நமக்கு எசமானர்க்ள் வேறு யாருமாகவும் இருத்தல் இல்லை. நம்மை நாம் ஆள்வோம்..."
இந்திய சமுதாயத்தைப் பீடித்திருக்கும் தொழு நோய் போன்ற சாதியைச் சளைக்காமல் சாடுகிறார் பிரபஞ்சன்.


ஏட்டில், சாத்திரத்தில் எவ்வளவோ உயரிய தத்துவங்களை முன்மொழிந்திருந்தாலும், நடைமுறை என்று வரும்போது, சமுதாயத்தில் சாதியும் சோதிடமுமே கோலோச்சியிருந்தன (இன்று வரையிலும் கூட). சாதி, சகமனிதனை நம்ப விடுவதில்லை.  சோதிடமோ, தன்னையே நம்ப விடுவதில்லை.  தனக்கு விழும் அடிகளையும் அவமானங்களையும் தனக்கும் கீழுள்ள சாதியினரிடம் பிரயோகித்தே ஒரு சராசரி இந்துவானவன்  ஜீவனம் செய்திருக்கிறான்.  கடை நிலையில் உள்ளவர்கள் அதற்கும் வழியில்லாமல் தங்கள் குடும்பத்துப் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.  கீழ்ச்சாதியில் பிறக்கும் ஒரு மனிதனுக்கு எந்தப் பாதுகாப்பையும் சுதந்திரத்துக்கு முன்பிருந்த இந்து சமுதாயம் வழங்கியதில்லை.  இந்துவாகப் பிறந்தவன் வேறு மதத்துக்கு மாறலாம், ஆனால் கீழ்சாதியில் பிறந்தவன் மேல் சாதிக்குச் செல்ல முடியாது.  பிற மார்க்கங்களுக்கு மாறிய மக்கள் அங்கும் இந்த சாதித் தொழுநோயைக் கொண்டு சென்று பேணுகின்றனர்.


மதில் மீதும், மரத்தின் மீதும் ஏறி பெருமாள் உற்சவத்தைத் தரிசிக்க விழையும் புலையர்களைச் சாடும் வைணவ்ர்களைக் கேளுங்கள்:
"...நீங்கள் எல்லாம் பெருமாளைப் பார்க்கிறதே அபசாரம்டா பாவிகளே. உங்களுக்குத்தான் மாரியாத்தாவும் காளியாத்தாவும் இருக்கிறார்களேயடா..."


நம்முடய சாதி அமைப்பு வனத்தில் விலங்குகள் வாழ்வதை ஒத்தது. வனத்தில் உள்ள விலங்கினங்கள் பலவாறெனினும்,   தன்னுடய இனத்தில் மட்டும் இனவிருத்தி செய்து கொள்கின்றன.   பலம் பொருந்திய மேல்நிலை விலங்குகள், கீழ்நிலை விலங்குகளை வேட்டையாடியும்,   சூறையாடியும் வாழ்கின்றன.  சிங்கம்,  புலி, கரடியாய் இருந்தால் பிரச்சனை இல்லை.   முயல், மான் அல்லது புழுவாகவோ இருப்பின் கஷ்டம் தான்.  வேட்டையாடுவதும்,   வேட்டையாடப்படுவதும் வனங்களின் மாறா விதி.   இவையனைத்தையும் இந்து சமுதாயம் இன்றுவரை, முடிந்தவரையிலும் பேணிப் பாதுகாத்துத்தான் வந்திருக்கிறது.


இதையே, அரவிந்த் அடிகா, தன்னுடய 'வெள்ளைப் புலி' (White Tiger) என்னும் புதினத்தில், இந்து சமுதாயம் ஒரு உயிரியல் பூங்காவைப் (Zoo) போன்றது எனக் குறிப்பிடுவார். 'ஒவ்வொரு விலங்கும் அதனதன் கூண்டில் வாழ்வது போல், ஒவ்வொரு சாதியும் அதற்கு விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அடங்கி இருந்தது.   இப்படி இருந்ததனால் ஒரு 'ஒழுங்கு முறை' இருந்தது என்னவோ உண்மை தான் ! ஆனால்,   சமீப காலமாக சாதிக் கட்டுப்பாட்டினை சட்டங்களும் அரசாங்கமும் தடை செய்ததால்,கூண்டுகள் அனைத்தும் திறந்து விட்டால்,  விலங்குகள் எப்படி ஒன்றையொன்று அடித்துக் 'கொல்'லுமோ,  அது போல மனித சாதிகளும் அடித்துக் கொல்கின்றனர்'  எனச் சொல்வார்.  (நல்ல வேளை, ஒரு குடும்பத்தில் பிறக்கும் அனைவரும், ஒரே சாதியில் இருப்பதால், குடும்பத்திற்குள்,  சாதிப் பிரச்னை இருப்பதில்லை !)


திண்ணைப் பேச்சாய் உருளும் ஹாஸ்யத்தின் ஊடாக அன்றைய சமுதாயத்தின் மாற்றங்களையும்,  அம்மாற்றங்களைக் கொணர்ந்த மாமனிதர்களையும், அழகான திரைக்கதைப் போல் படம் பிடிக்கிறார் ஆசிரியர் பிரபஞ்சன்.


இரண்டு முதலிகள் கதைக்கிறார்கள், இப்படி:
"கம்பன் ஒரு வெள்ளாழமுதலி ஓய். !  கம்பனை ஆதரிச்சவன் வெண்ணை நல்லூர் சடையன் என்கிற சடையப்ப முதலி... அவன் ஒரு வெள்ளாழ முதலி.  ஒரு வெள்ளாழ முதலி இன்னொரு வெள்ளாழ முதலியைத்தான் ஆதரிச்சிருக்க முடியும் மற்றவாளை ஆதரிக்க சடையனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு ?"


கம்பனை முதலியாக்கி, ஒட்டக்கூத்தனுக்குத் தாவுகின்றனர். ஒட்டக்கூத்தனும் முதலிதானாம். ஆனால் அவன் ஓரம்கட்டப் படுகிறான். ஏன் ?
"அவன் செங்குந்த முதலின்னா ! பேசப்பிடாது."


பின்னர், அவர்களின் வசவு புதிதாய் முளைத்த இரண்டு அராத்து பேர்வழிகளின் மீது திரும்புகிறது. அதில் ஒருவர் 'சூனா மானா  ராமசாமி  நாய்க்கர்'.

"...வெள்ளை மீசை வெச்சுண்டு கன்னா பின்னான்னு பேசறார்.  நாம் பிறக்கறதுக்கு அம்மா அப்பா காரணம்.  வாழறதுக்கு திங்கற சோறு காரணம்.   உழைச்சுப் பிழைக்கணும்.   மந்திரம் எல்லாம் தந்திரம்.   புராணம் எல்லாம் புளுகுமூட்டை...  அவர்கூட வரதராசுலு நாயுடுங்கறவன்,  அவனும் புழுத்துப் போறது மாதிரி பேசறான்..."
சோதிடத்தையும் நையாண்டி செய்யத் தவறுவதில்லை.   உதாரணமாக, தன் சோதிடருடன் வாக்குச்சாவடிக்கு வந்த வேட்பாளரின் வாக்குச் சீட்டைப் பறிக்கும் போலீஸ்காரன்,  சோதிடக்காரனைப் பார்த்துக் கேட்கிறான்:
". நீர்தான் முதலியார் குளிக்கவும், நக அழுக்கு எடுக்கவும், கால நேரம் குறிச்சிக் கொடுக்கிற ஆளா ?  அப்படியானால் அவர் அட்டையை மற்றவன் பறித்துக் கொள்ளாத நேரத்தைக் குறிச்சிக் கொடுக்கிறதுதானே ?"

கச்சிதமாய்ப் பொருந்தியமர்கிறபடி, ஆங்காங்கே அக்காலத்தில் நடந்த முக்கிய சுவராஸ்யமான நிகழ்வுகளை அழகாய்ப் பதிவு செய்கிறார் பிரபஞ்சன்:


1900-ம் ஆண்டுகளில் நடந்த புதுவை முனிசிபல் தேர்தலை  விவரிக்கும் போது, அங்கு  வசிக்கும் பிரெஞ்சு குடிமக்களின் ஓட்டுக்களை வாங்கும் பொருட்டு,  வேட்பாளர் மாளிகையில் வேட்பாளர்கள் வழங்கும் விருந்து வகைகள்  தான் எத்தனை விதம்!  ஆட்டுக்கறியும்,   சகல மது வகைகளும்,  'சம்போகம்' வேண்டுவோருக்கு 'அதுவும்'   வழங்கப்படுகிறது.   இன்றைய வாக்காளர்கள் கவனிக்க:   பிரியாணிப் பொட்டலம், குவார்ட்டர் குப்பி,   செல்பேசி என்று மலிவாய் விலை போகலாகாது !


இதே ஆயிரத்துத் தொள்ளாயிரத்து வாக்கில் தான்,  மின்சாரத் தெருவிளக்குகளும் முதன்முதல் புதுவையில் முளைத்தன.   வயர்களை இழுத்து, கம்பத்தை நட்டு, விளக்கைப் போட்டவர்களுக்கு, மக்கள் ஆட்டுக்கறி சமைத்து கறிசோறு போட்டிருக்கிறார்கள்.   மக்களெல்லாம் தெருக்களில் கூடியமர்ந்து "கரண்டு சோறு" சாப்பிட்டிருக்கிறார்கள்.  கரண்டு விளக்கு வந்ததால்,   ஊருக்கு கெடுதல் வருமா என்று பெரிசுகள் எல்லாம் விசனப்பட்டிருக்கிறார்கள்.


மற்றபடி, ரசிக்கும் படியான உவமைகளும் வழக்கொழிந்துபோன இரட்டைக்கிளவிகளும் நாவலில் விரவிக் கிடப்பது,   மேலும் சுகம்:
மாதச் சம்பளத்தைப் பறிகொடுத்த நல்ல குமஸ்தாவின் மனம் போல கடல் இரைந்தது..."

" ஆந்திர மாகாணத்திலே ஜாஜ்வல்யமாக 'சலேர், பிலேரென்று' வாழ்ந்து கொண்டிருந்த..."


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை முழு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த சாதிகள் முதன்முதலாக ஆட்டம் காணத் தொடங்கிய காலமும் இதுவே.   இன்றைய காலத்தில் சாதி மீண்டும் அதன் பழைய வீரியத்துடன்  தலையெடுக்கத் தொடங்குவது போலத் தெரிந்தாலும்,  சாதிகளும் சமரசம் செய்து தான்வாழ்கின்றன.  இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சமுதாயத்தில் ஆழ வேரூன்றியிருந்த சாதி நாம் விருப்பப்படுவது போல் எளிதில் சாகாது.   மிக மெல்லத்தான் சாகும்.

பிரெஞ்சு ஆதிக்கமோ,  பிரிட்டிஷ் ஆதிக்கமோ,  எல்லாமே மானுடச் சுரண்டல் தான்.  கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் மகத்தான மைந்தர்கள் கண்ணீர் விட்டு வளர்த்திய இந்த சுதந்திரப் பயிரைக் 'கண்ணீரால் காப்போம்' என்கிற பிரபஞ்சனின் அறைகூவலை இந்த நாவல் முழுக்க வாசகன் கேட்டுக்கொண்டே வாசிக்கலாம்.   கருகத் திருவுளமோ ?

வரலாற்றுப் புதினம் என்றாலும்,   இந்நாவல் விறுவிறுப்பான பக்கத் திருப்பி !

மக்கள் தலைவர் வீ.எஸ். பற்றி கீற்றில் வந்த அருமையான ஒரு கட்டுரை - பார்க்க : புதுச்சேரியின் கடைசிப் புலி

5 comments:

clayhorse said...

பாண்டிச்சேரியில் என் பள்ளிப் பருவத்தின்போது நாங்கள் குடியிருந்தது, வெள்ளாழ வீதியிலிருந்து மூன்றாவது தெரு. வீ.எஸ் அவர்களின் உறவினர் மகன் எனக்கு விளையாட்டுத் தோழன். அவனைப்பார்க்க அங்கு செல்லும்போது பலமுறை (அவர் அருமை பெருமை தெரியாத வயதில்) வீ.எஸ். அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு சாயலில் பாரதிதாசன் போல இருப்பார். அவர் வீட்டில் எப்போதும் ஜேஜே என்று கூட்டம் இருக்கும். இயக்கத் தோழர்கள், தொழில்முறை அரசியல்வாதிகள், சிபாரிசு கேட்டு வந்தவர்கள் என்று பல ரகம். பெரும்பாலான கம்யூனிஸ்ட் தலைவர்களைப் போல தம் பொருள் ஆவி அனைத்தையும் பொதுவுக்கே தந்தவர். மண்ணின் வரலாறோ பாரம்பரியமோ தெரியாத சில தலைவர்கள் 1978 வாக்கில் புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க முயற்சி செய்தபோது புதுவை அதற்கு முன்னரோ பின்னரோ சந்தித்திராத வகையில் கலவரங்களை சந்தித்தது. அதனுள் ஊடுருவிய சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்தியதோடு இணைப்பு முயற்சியைத் தோற்கடித்த 'கிரௌண்ட்-ஜீரோ' வீ.எஸ். அவர்களின் வீடுதான். 1993 (1994 ?..) அவர் மறையும் வரை கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு ஒரே விலாசமும் அதுதான். பின்னர் தொடர்ந்து வந்த புதுவை காங்கிரஸ் அரசுகள் அவரை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.
- பாஸ்கி

தமிழ்நதி said...

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு அருமையான மனிதரும்கூட. ஐம்பதாண்டு எழுத்து வரலாற்றைக் கொண்டிருக்கும் அவரது நூலைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Shazvan said...

பிரபஞ்சன் என்ற மகா கலைஞனின் அற்புதமான படைப்பு 'கண்ணீரால் காப்போம்'.

பிரெஞ்சு ஆளுகையிலிருந்த புதுச்சேரியின் (பாண்டிச்சேரி) சுதந்திர வரலாற்றை இந்த புதினம் சற்றே ஒரு முறை நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறது.

1850 தொடங்கி 1934 வரையில் புதுச்சேரி மண்ணில்; சுதந்திர தாகம் கொண்டு போராடிய போராளிகளின் வாழ்வின், அவர்கள் வலியின் எழுத்து சித்திரமாக இந்த நூல் உள்ளது. அன்றைய புதுச்சேரியின் சமூகச் சூழல் குறித்தும், சாதிய அடுக்குகள் குறித்தும் தெளிவு படுத்தும் விதமாகக் கதைக் களங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொன்னுத்தம்பி என்ற தமிழ் வழக்குரைஞர் வழக்கு மன்றத்திற்குக் காலணிகளோடு (Shoes) சென்றதால் பிரஞ்சு நீதிபதியால் தண்டிக்கப் படுகிறான். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் உலகுக்குப் பாடம் எடுத்த பிரெஞ்சு மக்கள் அவர்களுக்குக் கீழ் இருந்த தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக நடத்தினார்கள் என்பதை முதல் கதையே நமக்குத் தெளிவு படுத்துகிறது.

கிருத்துவ மதத்திற்கு மாறிய பின்பும் மக்கள் சாதியைப் பற்றிப்பிடித்திருப்பது பற்றியும் பிரபஞ்சன் பேசுகிறார். தாழ்ந்த சாதியில் பிறந்த குழந்தைக்கு ஞானஸ்தனாம் செய்ய முயலும் பாதிரிக்கு உயர் சாதியினரால் வரும் இடைஞ்சல்கள்; அதை மீறிச் செயல்பட அவர் நினைத்தாலும், சபையின் பொருளாதாரச் சூழல் அவரை பின் இழுப்பதையும், ஏசு கோவில் மணியை சின்னக்குருசு என்ற தாழ்ந்த சாதி மகன் அடித்ததற்காக உயர் சாதியினரால் அவன் கொடூரமாகத் தாக்கப்படுவதையும்; இந்த நூலில் பிரபஞ்சன் படம் எடுத்துக் காட்டுகிறார்.

ஆறு வயது குட்டியம்மாள் தீமிதி திருவிழாவிற்கு தன் தந்தையோடு செல்கிறாள். குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு தந்தை தீ மிதிக்கும்போது; சிறு குழந்தை தீயில் விழுந்து சாகிறாள். இதனால் பிரஞ்சு அரசு தீமிதி தடை செய்கிறது.

சண்முக வேலாயுதம் முதலியார் என்ற தலைவர் பிரஞ்சு அரசிடம் பேரம் பேசி தீமிதி மேல் உள்ள அரசின் தடையை நீக்கி விடுகிறார். பின் அதையே காரணமாகக் காட்டி இந்து மக்களின் தலைவராக மாறி; பல ஆண்டுகள் பிரஞ்சு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்.

திலகரின் புதுச்சேரி வருகை பற்றிய செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. திலகருக்குப் பிரிட்டிஷ் அரசின் மீது இருந்த வெறுப்பையும் அதே நேரம் பிரஞ்சு அரசு மீது அவர் நல்ல எண்ணம் கொண்டிருந்ததையும் பிரபஞ்சன் பதிவுசெய்கிறார்.

புத்தகத்தின் அதிக பக்கங்கள் பாரதியைப் பற்றியதாக இருக்கிறது. புதுச்சேரிக்கு பாரதி வருவதையும் அங்கு அவருக்கு இருக்கும் இடர்களையும் நமக்குக் கதையாகச் சொல்கிறார் பிரபஞ்சன்.

பாரதியின் முண்டாசுக்குக் கீழ் இருந்தது வழுக்கைத் தலை என்ற செய்தியை வேறு எந்த வரலாற்றுப் புத்தகமாவது சொல்லி இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பிரபஞ்சன் என்ற கதை சொல்லி அதை அழகு நயத்துடன் சொல்லிக் கடக்கிறார்.

வாஞ்சிநாதன் - ஆஷ் துரையைச் சுட்ட சம்பவம் இந்நூல் காட்சிப் படுத்தப்படுகிறது. அரவிந்தர் பற்றியும் பல செய்திகள் இந்நூலில் உள்ளன. இருவர் பேசிக்கொள்வது போன்ற உரையாடலில் பெரியார், வா.ஊ.சி போன்ற தலைவர்கள் பற்றிய செய்திகள் வந்து போகின்றன. இரண்டாம் உலகப் போரின் பல அறியப்படாத தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாரதிதாசனின் சுதந்திர உணர்வு, வீரம், தமிழ் அறிவு ஆகியவற்றை விளக்கும் சம்பவங்கள் இந்நூலில் பேசப்படுகிறது. காந்தியின் மகாத்மா என்ற பிம்பத்தை உடைக்கும் ஒரு செய்தியும் இந்நூலில் உள்ளது.

மாணவர் இயக்கம், ஆளைத் தொழிலாளர்கள் இயக்கம் எனப் பல இயக்கங்களின் செயல்பாடுகள் சமூக மாற்றத்தை, விடுதலையை எப்படி ஏற்படுத்தியது என முழுமையாக இந்நூல் பேசுகிறது.

வெவ்வேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை; சின்னசின்ன ஒப்புமைகள் மூலம் இனைத்து பிரபஞ்சன் கதை சொல்லும் நடை நிச்சயம் நம்மை ஈர்க்கும்.

பிரபஞ்சனின் எழுத்தின் வழியே வரலாற்றையும் தமிழையும் மட்டுமல்லாது; போன்மூர்- காலை வணக்கம், முசே - மிஸ்டர், மெர்சி - நன்றி என பல பிரஞ்சு வார்த்தைகளையும் கற்றுக்கொள்ள முடிந்தது.

வரலாற்றை இந்த ஆண்டு இந்த சம்பவம் என்று படிக்காமல் உணர்வுப்பூர்வமாக உள்வாங்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான நூல் "கண்ணீரால் காப்போம்".


-சே.ச.

பா.யூனூஸ்அலி said...

தோழர் நான்காவது புத்தகத்தின் பேர் என்ன

Post a Comment