Sunday, June 6, 2010

தாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கரன்

தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை

பரிந்துரை: சண்முகம்

'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.   சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல்.

தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு.
அதிலும் வெகுஜன ஊடகங்களில் சாதாரண மக்களை சென்றடையும் விதம் எழுதுவோர் இன்னும் குறைவு. தியடோர் பாஸ்கரன் இந்த அரிய செயலைத் திறம்படச் செய்கிறார்.  தி. பாஸ்கரனின் ஆழ்ந்த தமிழறிவு இந்தக் கட்டுரைகளைத் தரமான இலக்கியமாக மாற்றுகிறது.  இயற்கைச் சூழலைப் பற்றிய எழுத்துக்கள் (நான் பார்த்த வரையில், எந்த மொழியிலுமே) பெரும்பாலும் வறட்சியான நடையிலான பூரண அறிவியல் எழுத்துக்களாய்த் தான் இருக்கின்றன. தி. பாஸ்கரனின் எழுத்து இந்த நடைமுறைக்கு  விதிக்கு ஒரு நல்ல விதிவிலக்கு. சூழியல் குறித்த கட்டுரைத் தொகுப்பு என்றாலும் இந்த நூல் நல்லதொரு இலக்கியத்தை வாசித்த அனுபவத்தையும் வழங்கியது !

உதாரணமாக,  தியடோர் பாஸ்கரன்,  பூநாரையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதும்போது, புறநானூற்றிலிருந்து பூ நாரை பற்றிய குறிப்பைச் சுட்டிக்காட்டுகிறார்.  ஒட்டகத்தைப் பற்றிய கட்டுரையில், தொல்காப்பியம் மற்றும் அகநானூற்றிலிருந்து ஒட்டகம் பற்றிய குறிப்புகளைக் காட்டுகிறார். தெருநாய் பற்றி எழுதுகையில், அவைகளால் ஏற்படும் பிரச்சனை பற்றி காந்தி எடுத்த நிலைபாட்டை விவரிக்கிறார்.  குற்றாலத்தைப் பற்றி எழுதும்போது, பொருத்தமாய் தேவாரத்திலிருந்தும்,   தேனருவியைப் பற்றி விவரிக்கும்போது 'குற்றாலக் குறவஞ்சியையும் சுவைபடக் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில், குற்றாலத்தில் தற்போது விளையும் மங்கூஸ்தான் பழத்தைப் பற்றிய வரலாற்றை விவரிக்கிறார்.
தேவைக்கேற்ப பொருத்தமான அழகிய தமிழ் வார்த்தைகளை பிரயோகிக்கிறார். சில உதாரணங்கள்:  சூழியலாளர்கள் (Environmentalist),  பல்லூழிகாலம் (பல தலைமுறைக்காலம்),   மற்றும் அறிவியல் கருதுகோள்கள் (Scientific Concepts).   பொருளடக்கமே (Table of Contents)  இல்லாத (இந்தக் காலத்திலும் !) தமிழ் நூல்களுக்கு விதிவிலக்காய், பொருளடக்கம் மட்டுமல்லாது பொருளடைவும் (Index)  கொண்டது இந்நூல்.

காட்டுயிர் குறித்து  தியடோர் பாஸ்கரன் சென்ற சரணாலயங்கள் மற்றும் இயற்கை ஸ்தலங்கள் தமிழ்நாடு,  இந்தியா,  ஆப்பிரிக்கா,  ஆஸ்திரேலியா  என்று பல இடங்களும்,   அவர் சென்று பார்த்த அனுபவங்களும் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் பற்றிய அறிவியல் கோட்பாடுகளை எளிமையாகவும் அதே சமயம் தகவல் குறைவு படாமலும் இந்தியச் சூழலின் தனித்தன்மையை உணர்ந்து விளக்குகிறார் தியடோர் பாஸ்கரன்.  நாம் இலக்கியம் படிப்பவராய் இருந்தாலும் சரி  குத்துப் பாட்டை ரசிப்பவராய் இருந்தாலும் சரி,  சூழியல் குறித்த உண்மைகளை - அது எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைத்  தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  இயற்கை, பருவநிலை,  மழை,   நாம் சுவாசிக்கும் காற்று,   உட்கொள்ளூம் நீர்,   உண்ணும் உணவு, அழிந்துவரும் உயிரினங்கள்,   பெருகிவரும் வெப்பநிலை,   நாம் செய்யும் வேலை -   இவையனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய,   உதாசீனம் செய்ய இயலாத ஒரு மாபெரும் இயக்கமே.   இப்பிணைப்பைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், மெத்தப்படித்தவர் மட்டுமின்றி, சாமானிய மக்களும் தமது அன்றாட வாழ்க்கை வளத்திற்கு கேடு வராதபடி அறிந்து செயல்பட முடியும் என்பதே தியடோரின் நியாயமான நிலைப்பாடு.

பொருளாதார காரணங்கள் மட்டுமின்றி இயற்கைச் சூழல் பற்றிய விழிப்புணர்வு வராததற்கான சமுதாயக் காரணங்களை காட்டுகிறார்.  நம் மக்களில் பலருக்கு காடுகளில், சரணாலயங்களில், வரலாற்றுச் சின்னங்களில், தொல்பொருள் ஆய்வு செய்யும் இடங்களில் இன்னும் எப்படி நடந்து கொள்வது என்பது இன்னும் தெரியவில்லை. அவர்களுக்கு இன்னும் அதற்கான கல்வி முறைப்படி கற்பிக்கப்படவில்லை.  சரணாலயங்களில் சிறுவர்கள் கத்தினால் இந்தியப் பெற்றோர்கள் அதை கண்டு கொள்வதில்லை என்று குறிப்பிடுகிறார்.

சூழல் சுற்றுலா (Ecotourism) என்பது எளிதில் அழியக்கூடிய, தொன்மைப் புனிதமான, பெரும்பாலும் பாதுகாக்கப் பட்ட இடங்களுக்கு, சிறிய அளவில், மனிதர்களின் காலடி தடம் இல்லாமல் சென்று வருவது.  தமிழ்நாட்டில் Eco-Tourism என்ற பெயரில் கூத்து தான் நடத்துகிறார்கள் என்கிறார்: மே மாதத்தில் முதுமலைக்குப் போனால் 'அது பூந்தமல்லி நெடுஞ்சாலையோ என்று சந்தேகம் வலுக்கின்றது' என்கிறார்.  பொது இடங்களைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதை,  "ஒரு முக்கிய சமூகச்சடங்கை நிறைவேற்றுவது போல செய்கிறார்கள்"   என கேலி செய்கிறார்.

இந்தியாவில் இயற்கைச் சூழல் குறித்த விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை.    எல்லா வளரும் நாடுகளில் உள்ளது போல இந்தியாவிலும் சூழலைக் காப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் போராட்டம், கடுமையான உச்சத்தில் இருக்கிறது.  மக்கள் தொகைப் பெருக்கமும், மிகக் குறுகிய காலத்தில் நேர்ந்த நகர்புற வளர்ச்சியும்,  சுற்றுப் புறச் சூழல் மீது பெரும் பாரத்தை சுமத்தியுள்ளன.  பொருளாதார வளர்ச்சிக்கு நாம் கொடுக்கும் விலை என்ன என்பதை இன்னும் நாம் அறியாமல் இருக்கிறோம்.  இந்திய வானிலைப் பிரிவின் அறிக்கை, கடந்த 110 வருடங்களில் அதிக வெப்பம் 2009 இல் தான் எனக் கூறுகிறது.

வெப்ப நிலையின் போக்கைக் கவனியுங்கள்.  வரும் வருடங்களில், வெப்பம் இன்னும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.  நம் மக்களும் அரசாங்கமும் சுற்றுச் சூழல் பற்றியோ, வெப்பமாகி வரும் சீதோஷ்ணநிலை பற்றியோ, வற்றிவரும், வற்றிப்போன ஆறுகள் பற்றியோ அக்கறை கொள்ளாமல் அவதிப் படுவதைப் பார்த்து, பாரதியின் வார்த்தைகளை நினைவு கொண்டு ஆதங்கப் படுகிறார்:   "கஞ்சி குடிபதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் ..."

1978-ஆம் ஆண்டு, ஏற்காட்டில் சேர்வராயன் மலைத் தொடரில் வாழ்ந்த வேங்கைப்புலி ஒன்று சுட்டுகொல்லப்பட்டது (இதை நான் சிறுவனாய் இருந்தபோது, சேலம் கால்நடை மருத்துவமனையில் கிடத்தியிருந்த இந்தப் பெரிய புலியின் சடலத்தை, என் பள்ளியில் கூட்டிச்சென்று காண்பித்தார்கள்). முப்பதே வருடங்களில், இன்றைக்கெல்லாம் ஏற்காட்டில் ஒரு காட்டுக் கோழியைக் காண்பது கூட அரிதாகி விட்டது! இதே மலைத்தொடரில் தான் மிகவும் அரியதுமான மூங்கணத்தான் என்னும் உயிரினம்  இன்று அழியும் தருவாயில் உள்ளது. மூங்கணத்தனை விளிம்பு நிலைக்கு விரட்டிய அதே சூழியல் பிரச்னைகளைத் தான் இன்று மனிதனையும் எதிர்கொண்டிருக்கிறன. முடிவாய் இப்படி எச்சரிக்கிறார்: "மூங்கணத்தனுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு ?".

இயற்கை குறித்து மனிதனுக்கு இருக்கவேண்டிய ரசனையும்,  கரிசனத்தையும்,   தலைசிறந்த விலங்கியலாளர் ஒருவரின் கூற்றை, இப்படி வெகு சிறப்பாகச் சொல்கிறார்:
'நல்ல மனநலமுடைய ஒருவரின் அடையாளம் அவர் இயற்கையுலகில் ஈடுபாடு கொண்டிருப்பது என்று பல உளவியலாளர்கள் கூறியிருக்கின்றனர். தங்களைச் சூழ்ந்திருக்கும் இயற்கையையும் அங்குள்ள உயிர்களைப் பற்றியும் ஒரு கரிசனம் அவர்களுக்கு இருக்கும்.... இளமையில் இயற்கையினின்று விலகி வாழ்ந்தவர்கள் வாழ்வில் விழுமியங்கள் அற்றவர்களாக உருவாகின்றனர். காடுகளில் நடந்து திரிந்தவர், நீருக்கடியில் பவளத்திட்டுகளின் வசீகரத்தைக் கண்டவர், பணத்திற்கும் அந்தஸ்திற்கும் அடிமையாக மாட்டார் என்பது அவரது சித்தாந்தம். அவர்களிடம் இயற்கையைப் பற்றி மட்டுமல்ல, வாழ்வின் மற்றைய பரிமாணங்கள் சார்ந்த ஒரு நுண்ணுணர்வு உருவாகின்றது.'  ஆனால், இந்தியாவில் இயற்கையை ரசிப்பவர்கள் சிறுபாண்மையினரே.   இயற்கையை ரசிப்பவர்களை ஏதோ விளிம்புநிலை மனிதர்களைப் போல் மற்றவர்கள் பார்ப்பது,   ஒரு வேடிக்கையான முரண்.  இயற்கை மீது மனிதன் கொள்ளும் ரசனை மரபணு சார்ந்ததா அல்லது வளர்ப்பு முறையால் போஷிக்கப்படுவதா அல்லது இரண்டும் சேர்ந்த கலவையா ?

சுற்றுச்சூழல் அக்கறையின் ஒரு முக்கியப் பரிமாணம் மொழி. அதுமட்டுமல்ல, எந்தவொரு புதிய நடப்புகால அக்கறையைப்பற்றிப் பேசுவதற்கும் மொழி தயாராகவேண்டும் என்கிறார் தியடோர். உதாரணமாக, நாம் அன்றாடம் உபயோகிக்கும் ஆங்கில வார்த்தை ''Depression'  என்னும் வார்த்தையைத் தமிழில் "குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்" என்கிறோம்.  இத்தகைய பல்லை உடைக்கும் சொல்லாடல் உதவாது என்கிறார்.  இது ஒரு 'தாலுக்கா ஆபீஸ் மொழிபெயர்ப்பு'.

கடந்த சில ஆண்டுகளில், கல்வித்துறையில் காட்டுயிரியல் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைபபெற்றிருக்கிறது.   இது நல்ல விஷயமே.    ஆனால் இதில் ஒரு பிரச்சனையும் உண்டு என்கிறார் தியடோர்.  பன்னாட்டளவில் நல்ல வேலையில் அமரும் வாய்ப்புகள் இருப்பதால்,  இயற்கை, காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லாதவரெல்லாம் இதில் சேருகின்றனர்.  விவசாயக்கல்லூரி பட்டதாரிகள் பலருக்கு நெல் எந்த மரத்தில் விளைகிறது என்று தெரியாதது போன்றது இது.   காட்டுயிர்க்குக் கெடுதல் என்றால் அவர்கள் அதை எதிர்க்கும் திராணியோ தன்முனைப்பும் இல்லாதவர்கள்.   பொருளாதார உலகமயமாக்கலால் வசதியடைந்து வரும் வர்க்கத்தின் சந்ததியினர் ஒரு சிலராவது, "மனதிற்குப் பிடித்திருக்கிறது,  அதனால் செய்கிறேன்" என்னும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பார்களா என்று பார்க்கலாம்?

ஒவ்வொரு தேசத்திலும் கல்வி கற்றவர்களுக்கு, அவர்கள் ஒப்புக் கொள்கிறார்களோ இல்லையோ, ஒரு பொறுப்பு இருக்கிறது.  சமுதாயத்திற்கு வரக் கூடிய பொதுக் கேடுகளை மற்றவர்களுக்கு விளக்கி கூறும் பொறுப்பு.  தி. பாஸ்கரன், இந்தப் பொறுப்பை அற்புதமாய் ஏற்றுச் செய்கிறார்.  இந்தப் புத்தகத்தை, இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படிப்பது, படித்த பின் அதை நம் குழந்தைகளுக்காவது விளக்கிச் சொல்லும் பொறுப்பு நம்முடையது.  இந்தக் கட்டுரைத் தொகுப்பு உங்களைச் சுற்றியுள்ள மரங்களைப் பற்றியும், சுவாசிக்கும் காற்றைப் பற்றியும், அருந்தும் நீரைப் பற்றியும், அந்தச் சூழலோடு உங்களுக்கு இருக்கும் பிரிக்க முடியாத பிணைப்பையும் குறித்த விழிப்பை ஏற்படுத்தும்.

இந்நூலில், 'தாமரை பூத்த தடாகம்'  என்று ஒரு அழகிய உவமையை உதிர்க்கிறார். அது எதைக் குறிக்கிறது என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


'தாமரை பூத்த தடாகங்களே...
உமைத்தந்த அக்காலத்திலே...
எங்கள் தூய்மைச் சகோதரர்
தூர்ந்து மறைந்ததைச்சொல்லவோ ஞாலத்திலே!'
என்ற பாரதிதாசனின் அற்புதமான வரிகள் தொழிலாளர்கள் நிலையை எண்ணி வருந்தியது.  இப்போது தூர்ந்து மறைந்தவை, மறைபவை எண்ணிலாத் தடாகங்களும் நம் சந்ததியினரின் எதிர்காலமும்தான்.



4 comments:

Thekkikattan|தெகா said...

superb! thanks for sharing - it looks like a must read...

clayhorse said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. வெறும் வம்படிகளுக்கு மத்தியில் உங்கள் 'மரம் வளர்ப்போம் வாருங்கள்' போன்ற வெகு சில தளங்கள் நம்பிக்கை ஊட்டுகின்றன. மரங்களுக்கு என்றே தனியாக தளம் அமைத்ததற்கு வாழ்த்துக்கள். எழுபதுகளின் இறுதியில் என் சிறு வயதில் சென்னை நகரில் பார்த்த கீழ்க்கண்ட அரசு விளம்பரம் இன்றும் நினைவில் இருக்கிறது. "சூல் கொண்ட மேகங்கள் கால் கொண்டு இறங்கிட மரங்களே மரகதப் படிகளாம்". பிறகு என்ன ஆயிற்று?

ரகுநாதன் said...

நல்ல விமர்சனம். நைரோபியில் உள்ள நக்கூரா ஏரியில் காணப்படும் பூநாரை கூட்டமே தாமரை பூத்த தடாகம்....

Anonymous said...

buy this book @ http://www.myangadi.com/thamarai-pootha-thadakam-uyirmmai-pathippagam

Post a Comment