Friday, June 18, 2010

குள்ளச்சித்தன் சரித்திரம் - மற்றுமொரு வாசிப்பனுபவம்


குள்ளச் சித்தன் சரித்திரம்
ஆசிரியர்யுவன் சந்திரசேகர்
மதிப்புரை:  ஜெகதீஷ் குமார்
 

பெருங்கனவு www.jekay2ab.blogspot.com
 
ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான். (பிற்பாடு வீட்டில் உள்ள தீட்டு நீங்குவதெற்கென்று தாமிர யந்திரத்தகடு ஒன்று செய்து கொடுத்து முன்னூறு ரூபாய் தீட்டிவிட்டான்). தன் சொல் பலித்து விட்டால் எப்போதாவது அந்தப்பக்கம் வரும்போது தனக்கு வேட்டி, சட்டை எடுத்துத் தருமாறு கேட்டான். இன்றுவரை அவன் வரவில்லை. நான் இன்னும் டவுன்பஸ் போலத்தான் ஏரோப்ளேனில் போய்வந்து கொண்டிருக்கிறேன்.

மாற்றுமெய்மை நாவல் வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிற குள்ளச்சித்தன் சரித்திரம் எழுதுவதற்கும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான் விதையாக இருந்தது என்கிறார் யுவன் சந்திரசேகர். குள்ளச்சித்தன் அல்லது வாமன ஸ்வாமிகள் என்ற ஞானி பல்வேறு கதைமாந்தர்களின் வாழ்வினூடு நடத்திய நிகழ்வுகள் அவர்கள் வாயிலாகவே விரிவடைகின்றன. வாமன ஸ்வாமிகளின் சரித்திரத்தை எழுதப்புகும் ஹாலாஸ்யமைய்யர் அது தன் நண்பன் முத்துச்சாமியின் மற்றொரு பிறவியே என்றறிகிறார். குள்ளச் சித்தன் கதையைவிட பெரும்பாலும் அவரது அன்பர்களின் கதைகளே விவரிக்கப்படுகின்றன. நாவலில் வரும் பல்வேறு கதைமாந்தர்களின் பார்வையில் கதை சொல்லப்படுவதால் நிகழும் இனிமையான குழப்பமும் நன்றாகத்தான் இருக்கிறது. இராம.பழனியப்பனும் அவரது கறுப்பான மனைவி சிகப்பியும் குழந்தை வரம் வேண்டி கரட்டுப்பட்டிகார ஜோதிடரிடம் செல்கிறார்கள். அவன் சிகப்பி உள்பாவாடையில் ஊக்கு குத்தியிருப்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்கிறான். அடுத்த வருடம் இதே தேதியில் அவர்கள் வீட்டில் பாலமுருகன் விளையாடுவான் என்கிறான். குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரும்போது எட்டுமுழம் வேஷ்டியும்,ஒரு சீப்புப் பழமும் வாங்கிவரச் சொல்கிறான்.

பழனியப்பனின் உற்ற நண்பனான யெம்மே வரைக்கும் படித்த செய்யது பழனியப்பன் நிர்வகிக்கும் நூலகத்தில் confessions of an English dreamer என்கிற புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறான். அந்த புத்தகத்தில் ஒரு ஆங்கில மாலுமியின் இந்திய அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன. அவனுக்கு பாதுஷாவின் அன்பளிப்பாக வரும் அழகி அவனை சாட்டை சொடுக்குவது மாதிரி கேள்விகளால் வதைக்கிறாள், படுதாவிற்குப் பின்னிருந்து அவள் பேசுவதை மொழிபெயர்க்கிறான் அவளது தந்தைக் கிழவன். ஆங்கில வணிகன் ஒரு மவுல்வி கொடுத்த பளிங்கு உருண்டையை வாயில் அதக்கியதும் அவனது முற்பிறவி ஞாபகங்கள் ஊற்றெடுக்கின்றன. பெங்குவினாகவும், கழுகுக் குஞ்சாகவும் அவனது பிறவிகளின் நினைவுகள் நிழலாடுகின்றன. பெங்குவின் மற்றும் கழுகுக்குஞ்சின் வாழ்க்கைப் போராட்டமும், உயிரைத் தக்கவைத்துக் கொள்ள அவற்றின் பிரயத்தனங்களும் அவற்றின் பார்வையிலேயே விவரிக்கப் படுகின்றன. பிற்பாடு இந்த ஆங்கில வணிகனே முத்துச்சாமியின் ஒரு பிறவிதான் என்று தெரிய வருகிறது.

கதை பெரும்பாலும் ஹாலாஸ்யமய்யருடனேயே பயணிக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் காவலர் பணியிருந்தவர் அவர். (கதையே அந்தக் காலத்தில் நடப்பதாகத்தான் தெரிகிறது) ஒரு முறை காவல்நிலையத்தில் பூங்காவில் பிடிபட்ட, பைத்தியம் போலிருக்கும் ஒருவன் ஹாலாஸ்யமய்யரைப் பார்த்து நீர் உடுத்தியிருக்கும் உடுப்பு ஒரு வாரம்தான் என்கிறான். சன்யாசியாகிவிட்ட தன் நண்பன் முத்துச்சாமியின் கட்டளையை மீற இயலாமல் வேலையை விட்டுவிட்டு முத்துச்சாமிக்கு கற்றுச் சொல்லியாகிறார். அவர் சரிதத்தை எழுதுகிறார். அவர் மறைவிற்குப் பிறகு அவர் வேண்டுகோளின்படி குள்ளச்சித்தர் மடத்துக்கு அகல்விளக்கேற்றி வைக்க வருகிறார். அங்கு அவருக்கு குள்ளச் சித்தன் கதை தெரியவருகிறது.
ஊருக்குள் வரும்போதே யோகீஸ்வரரை (குள்ளச்சித்தர்) நூறுநாய்கள் பின்தொடர்ந்து வருகின்றன. பல்வேறு அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பிக்கிறார். நாகத்திடமிருந்து காப்பாற்றுகிறார். மடத்தில் அமர்ந்து தனக்குள் உள்ள எல்லாவார்த்தைகளையும் கொட்டிவிட்டு பின் சாகும் வரை பேசாமலிருக்கிறார். திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிவிடுகிற தாயாரம்மாளின் மகளுக்கு அவள் கன்னித்தன்மையைத் திருப்பித் தருகிறார். அவளுக்குப் பிறந்த தொப்புள்கொடி அறுக்காத குழந்தையை குழந்தை வேண்டும் சென்னகேசவன் வீட்டுவாசலில் போடுகிறார். பதினாறு குடம் தண்ணீர் குடித்து விட்டு அவர் பேசுவது அடுத்த தெருவில் இருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கிறது. திடீரென்று ஜவுளிக்கடைக்குள் நுழைந்து அங்கிருந்த துணிகளைக் கிழித்துப் போடுகிறார். அந்தக் கடையில் வியாபாரம் பிய்த்துக் கொள்கிறது.

இது போன்ற சித்தர்கள் நம் தமிழ்நாட்டில் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய குறிப்பு இந்த நாவலிலேயே வருகிறது. நான் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்துக்குச் சென்றிருந்தபோது அருகில் ஷேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம் என்றிருந்தது. அவரது வாழ்க்கைச் சரிதம் வாங்கிப் படித்தேன். குள்ளச்சித்தன் சரித்திரம் அவரது சரிதத்தை நிறைய ஒத்திருக்கிறது. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ள அந்த நூல் ஸ்வாரசியமான ஒன்று.படித்துப் பாருங்கள்.
பழனியப்பனின் கதை தனியாக நகர்கிறது. தன் நூலகத்திலிருந்து குள்ளச்சித்தன் சரித்திரம் எடுத்துப் படிக்கிறார். க்ஷயரோகம் கண்டு ஓடிபோன அவரது தந்தை ரெயில்வே ஸ்டேஷனில் மரங்கள் நட்டுக் கொண்டு வாழ்ந்து வருவது தெரிந்து அவரைச் சென்று சந்தித்து வீட்டுக்குத் திரும்பி வந்து விடுமாறு வேண்டுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடல் என்னைக் கவர்ந்தது.

யுவனின் எழுத்து நடை தனித்துவமிக்கது. அவரது வர்ணனைகள் கவிதை போலும் மயக்குகின்றன. நாவலின் கட்டமைப்பு அசர வைக்கின்றது. இந்தச் சிறிய நாவலை எழுத அவர் அசாத்தியமாய் உழைத்திருக்கிறார். என்று தெரிகிறது. தத்துவங்களும், மாயாவிநோதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கலவையான மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன. ஒரு துப்பறியும் நாவலின் கட்டுமானத்தைக் கொண்டிருப்பினும் நிதானமான வாசிப்புக்கு உகந்தது. சில நேரங்களில் எதற்காக ஒன்றைச் சொல்ல வருகிறார் என்று ஊகித்துவிட முடிகிறது. கதை மாந்தர்கள் மனதில் சப்பணம் போட்டு அமராதது ஒரு குறைதான். நாவல் இன்னும் நீண்டும், ஆழமானதாகவும் இருந்திருப்பின் ஒருவேளை இக்குறை தெரியாதிருந்திருக்கலாம்.

5 comments:

Raja M said...

சுவையான பரிந்துரை! கடந்த இரண்டு மாதத்தில் 'குள்ளச் சித்திரன் சரித்திரத்திற்கு' இரண்டு பரிந்துரைகள். அவசியம் படிக்க வேண்டும். உங்கள் பகிர்வுக்கு நன்றி.

Jegadeesh Kumar said...

என் பரிந்துரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

Jegadeesh Kumar said...

வாசகர் அனுபவத்தில் வெளியான பரிந்துரையின் மூலமே நான் அந்த நாவலை வாங்கிப் படித்தேன். எனவே நான் முதல் பரிந்துரைக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

இனியாள் said...

நல்ல வாசிப்பு அனுபவத்தை தந்த புத்தகம், நீங்களும் ரசித்திருகிரீர்கள் என்று தெரிகிறது.

Anonymous said...

buy this book @ http://www.myangadi.com/kullansiththan-sarithiram-kizhaku-pathipagam

Post a Comment