Friday, February 25, 2011

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் - 1

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்:   டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
  
 பாகம் 1

வரலாறு முக்கியம்.     ஏன் ? 

இந்தியாவில் பிறந்து வளர்ந்த தகுதியால் மட்டுமே இந்தியாவைப் பற்றி எனக்கு நிறையத் தெரியும் என்ற   நம்பிக்கையை  பொய்யாக்கும்  அபுனைவு 'பண்டைய இந்தியா'.   பண்டைய இந்தியாவைப் புரிந்து கொள்வது,   இன்றைய இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் தேவை.    இதையே,   சுருக்கமாக நூலாசிரியர் கோசாம்பி பின்வருமாறு  சொல்கிறார்:

"நிகழ்காலத்தைப்   பற்றி   கடந்தகாலத் தெளிவுடன் அறிவது,   கடந்த காலத்தை நிகழ்காலத் தெளிவுடன் அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்"
 

(இதை ஜெயமோகன் இன்னும் ரத்தினச் சுருக்கமாய் ' இன்றைக்கொண்டே நேற்றை ஆராய்கிறோம்.   நேற்றை அறிவது இன்றை அறிவதே'  என்கிறார்).

முதலில் இந்நூல் குறித்து சில வரிகள் ...

  
இந்நூலில் கனமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.   புத்தகத்தின் நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும் (மொழி பெயர்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம்), இதை ஆழ்ந்து படிப்பதன் மூலம் பண்டைய இந்தியாவைப் பற்றி மற்றும் அல்ல, இன்றைய இந்தியாவையும்  புரிந்து கொள்ளலாம்.

இது ஒரு வழக்கமான பரிந்துரை அல்ல. கோசாம்பியின் பண்டைய இந்திய வரலாற்றை, எங்களுக்கு முக்கியமென  பட்ட அம்சங்களை ஒரு சாரமாகத தொகுத்திருக்கிறோம்.     இதன் சாரம்ஸத்தை கோர்வையாக ஒரு  பதவுரையாக எடுத்துரைப்பதே இதைப் பலரும் படிக்கத தூண்டுகோளாய் அமையும்  எனக் கருதுகிறோம். 

தேடும் கண்களுக்கு கோடு  காட்டினால் போதும்,  சுட்டியதைச் சென்றடையும்.  ஏனையோருக்கு  நமக்குத் தெரியாத  வரலாற்றை,  ஓரளவாவது  அறிமுகமாக்கிக்கொள்ள இது உதவலாம். 

நூலாசிரியர் கோசாம்பி - ஒரு அறிமுகம்
 
ஒரு கணிதப் பேராசிரியராக வாழ்வைத தொடங்கி,  பின்னர் மொழியியல் அறிஞராக,  அகழ்வாராய்ச்சி நிபுணராக,   முதன் முறையாக இந்திய நாணயங்களை அறிவியல் அடிப்படையில் கால நிர்ணயம் செய்தவராக  -  என்று தான் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு துறையிலும் தன முத்திரையைப் பதித்தவர் தாமோதர் தர்மானந்த கோசம்பி.

இந்தியாவின் நினைவுச்சின்னங்கள்,  கல்வெட்டுக்கள்,  சமூகப் பழக்க வழக்கங்கள்,  பழங்குடி மரபுகள்,  புராணங்கள் ஆகியவற்றை எல்லாம் அறிவியல் பூர்வமாக,  நிகழ்காலப் பிரக்ஞையுடன் அணுகி, இந்தியப் பண்பாடு, நாகரிகம் குறித்த இவரது ஆய்வுகள் மகத்தானவை,  எவரையும் பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியவை.


சரி, இப்போது பண்டைய இந்தியாவின் வரலாற்றுக்கு வருவோம்.
 
இந்திய வரலாறை அறிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள்: 


இந்தியா, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே முகலாயர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் அடிமையாய் இருந்த தேசம், இன்றும் கொடிய வறுமையில் வாடும் தேசம். இருப்பினும் பெரும்பாலான (படித்த) இந்தியர்களுக்கு "என் தேசம் மிகச் சிறந்த தேசம்", என்ற பெருமையும், அசாத்திய நம்பிக்கையும் இருக்கிறது.  இந்த  நம்பிக்கையின் அடிப்படை என்ன என்று கேட்டால்,  கற்று அறியாத வேதங்களும், இந்திய ஞான மரபைப் பற்றிய அரைகுறை  புரிதலை பலஹீனமாக சுட்டிக்காட்டும் பரிதாபகரமான நிலையில் தான் பெரும்பாலானவர் இருக்க வேண்டி உள்ளது. 
வரலாறு என்பது பொதுவாக நம்மை ஆண்ட மன்னர்கள்,  நடந்த போர்கள்,   நிலவிய மதங்கள்,  படைக்கப்பட்ட இலக்கியங்கள்  வழியாக  மானுட வாழ்வை  தரிசிப்பது  எனச் சொல்லலாம்.   இவ்வகை வரலாறு,  அதிகாரத்தில் இருந்தவர்களின் கண்ணோட்டத்தில்   காணும் வரலாறு.  பெரும்பாலான வரலாறுகள்  இவ்வகையறாவைச் சார்ந்ததே.
 
ஆனால் பண்டைய இந்திய வரலாற்றை  மேற்கூறிய  நோக்கில்  அறிவதென்பது கடினம்.  மற்ற கலாச்சாரங்களை விட பண்டைய இந்தியாவை   அறிந்து கொள்வதில் மிக்கவே  சிக்கல்கள்  உள்ளன.
 
முதலில்,  சீன,   சுமேரிய,   கிரேக்க நாகரீங்களைப் போலல்லாமல்,   இந்தியாவின் பண்டைய நாகரீமான, சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்து முறையை இன்று வரை நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை.    பிந்தைய காலத்திலும், இந்திய மன்னர்கள், சீனர்களைப் போல, தொடர்ந்து ஒரு அதிகாரப் பூர்வாமான வரலாற்றை ஆவணகளின் மூலமாகவோ, அரண்மனை குறிப்புகள் வாயிலாகவோ  எழுதுவதில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.    இன்றளவும் நம்மை ஆண்ட அரசர்களின் பட்டியல்,    நமது வரலாற்று  நாயகர்களின் காலங்கள்,  பெரும்பாலான நூலாசிரியர்களின் விபரங்கள்,  ஏன் நூலாசிரியர்க்களின் உண்மையான பெயர்கள் என்று எதுவுமே உருப்படியாய் நமக்குத்  தெரியாது.   நாம் அறிந்த இந்திய வரலாறு, பெரும்பாலும் மக்களிடையே புழங்கி வரும் தெளிவற்ற அறிவும், கிடைத்துள்ள சொற்ப விஷயங்களைக் கொண்டு ஏற்பட்ட யூகங்களும் மட்டுமே.
 
பிறகு,  ரோமானிய,  மத்திய கிழக்கின் வரலாற்றை  ஏறக்குறைய மதநூல்களின் துணை கொண்டு அறிந்து கொள்ள முடியும்.  விவிலியத்தில் (பைபிள்) இருக்கும் பல ஊர்களை,   சம்பவங்களை  நம்மால் இன்றும் அடையாளம் கொண்டு,  ஊர்ஜிதப் படுத்தி கொள்ள முடியும்.  அவ்வாறில்லாமல்,  இந்தியாவில் கிடைக்கும் தொன்மையான வேதங்கள் பெரும்பாலும் புராண கட்டுக் கதைகளாகவும், இதில் எது உண்மை,   எது புனைவு  என்று பிரித்தெடுக்க முடியாதவையாக உள்ளன.    

 மேலும்,  இந்தியாவின் பரந்த புவியியல்,   பாலைவனங்களில் இருந்து   நீர்நிலைகளைக் கொண்ட வளமான பகுதிகளையும்,   இந்த இரண்டு எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளையும் கொண்டுள்ளது.  ஐரோப்பாவையும், யுரெசிஆவையும், முற்றிலும்  பாதித்த பனிக்கட்டிக்காலம் இந்தியாவின் தென் பகுதிகளை அதிகமாகப் பாதிக்கவில்லை.  பனிக்கட்டிக்காலம் பாதித்த இடங்களில் வாழ்ந்த மக்கள், அதை எதிர் கொள்ள, ஒரு சில பொதுவான முறைகளை கையாள வேண்டி இருந்தது.  அந்தப் பொது யுத்திகள், ஒரு வரலாறை எழுதுவதற்கான ஒரு 'ஒழுங்கை' அளித்தன.  ஆனால், இந்தியாவில் எல்லா பிரதேசங்களிலும், சமூக வளர்ச்சி, ஒரே நேர்கோட்டில், படிப்படியாக வளரவில்லை.  பல முன்னேறிய சமூகங்கள் (சிந்து நகரங்கள்), தோன்றிய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் கூட சற்றும் முன்னேற்றம் அடையாத பழங்குடி வாழ்க்கை முறை தொடர்ந்து வந்தது.  முன்னேறிய சமுதாய வாழ்க்கை முறைகள்  சீக்கிரத்தில் அழிந்தும விட்டன.  மீன்றும் தோன்றின.  இப்படி, ஒரே காலகட்டத்தில் பல வகையான வாழ்க்கை முறைகளைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்ததால்,  குறைந்த புவியமைப்பில் விளைந்த சுமேரிய, எகிப்திய நாகரீகங்களைப் போல,  எளிதான ஒரு படிப்படியான வளர்ச்சி உள்ள வரலாற்றுப் பார்வையால் இந்தியாவைச் சித்தரிக்க முடியாது.

கோசாம்பியின் வரலாற்றுப் பார்வை: 


இப்படிப் பட்ட பல்வேறு இடர்கள் இருக்கையில் எந்த வழியில் பண்டைய இந்தியாவை நாம் அறிந்து கொள்ள முடியும்?   இந்தக் கேள்விக்கு, கோசாம்பி,   'முடியும்'   என்ற உறுதியான பதிலை அளிக்கிறார்.  இந்தியாவைப் புரிந்து கொள்ள, மற்ற தேசங்களின் வரலாறுகளை அறிந்து கொள்ளும் முயற்சிகளுடன்  இந்தியச் சூழலுக்கு உரித்தான இரண்டு அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.  

1 )முதலாவது,  மனிதன் எப்போது ஒரு குழுவாகச் செயல்பட ஆரம்பித்தானோ, அப்போதிலிருந்து எந்த ஒரு சமூகத்திலும் மக்கள் வாழ்வதற்கு உணவும், பண்டங்களும் தேவை.   இந்தப் பொருட்களை எப்படி உற்பத்தி செய்தார்கள் ?  உற்பத்தி செய்ய கருவிகள் இருந்தனவா, உதாரணமாக, உழுவதற்கு நல்ல ஏர்கள் இருந்தனவா?  உணவுப் பண்டங்களைச் எப்படி சேமித்து வைத்தார்கள்? உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் எவ்வாறு மக்கள் உபயோகத்திற்குப் போய்ச் சேர்ந்தது ?  பொருட்களை விற்றதால் என்ன சன்மானம் கிடைத்தது ? அதாவது  கூலி அல்லது பண்டமாற்றம் ?  உற்பத்தி செய்த மக்களை கட்டுப்படுத்திய சக்திகள் என்ன?  இப்படி, உணவு உற்பத்தி  மற்றும் எல்லா உபரிப் பொருள்களும் எவ்வாறு மக்கள் உபயோகத்திற்குப் போய்ச்சேருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கோசாம்பி.   சமூகமே இத்தகைய உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கிறது. இவ்வுற்பத்தி உறவுகளால் நிர்ணயிக்கவும் படுகிறது.

உற்பத்திக் கருவிகள் மற்றும் உற்பத்தி உறவுகளிலும் தோன்றி வந்த மாறுதல்களை கால வரிசைக் கிரமமாக பார்ப்பதே வரலாறு என்ற தனித்துவமான கருத்தை முன்வைக்கிறார் கோசாம்பி.    இந்தக் கண்ணோட்டத்தின் மூலம், மக்களுக்கும் அவர்களைக் கட்டுப்படுத்திய சத்திகளோடு  (பழங்குடித் தலைவன்,   அரசு,  நிலக்கிழார்   முதலாளி)  கொண்ட உறவினூடாக   ஒரு பண்பாடு  அடைந்த மாற்றங்களை,  வளர்ச்சியை  தரிசிக்கலாம்.  எந்தப் பண்பாட்டிற்கும் மக்கள் நுகரும் பொருளே அடிப்படை என்ற நோக்கில் காணும் வரலாறு எனவும் கொள்ளலாம்.

இது இந்தியச் சூழ்நிலையைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.    இதற்கு, ஒரு அழகிய உதாரணத்தைத் தருகிறார்.

" கி.மு. 150 ஐச் சேர்ந்த பார்ஹத் சிர்ப்பங்களில் காணப்படும் மாட்டு வண்டியும், கிராமக் குடிசைகளும், கி.பி. 250 -ஐச் சேர்ந்த குஷானர்களின் சிர்ப்பங்களில் காணப்படும் ஏரும், உழவனும், திடீரென்று இக்கால இந்தியக் கிராமத்தில் தென்படுமேயானால் அவை அங்கு எவ்விதமான வியப்பையும் விளைவிக்கா".
 
 காலமற்ற இந்திய விவசாயி..

இந்தியக் கிராமங்களில் உள்ள வாழ்க்கை முறைகள், அவர்களது உற்பத்தி முறைகளும், கருவிகளும், பண்டைய காலத்தில் இருந்து மிகக் குறைவாகவே மாறி உள்ளதால், இந்தியக் கிராமங்கள், இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் பரிசோதனைக் களங்கள் என்கிறார் கோசாம்பி.  ஒரு கிராம மரபின் மூலக் கூறுகளை ஆழ்ந்த கவனத்தோடு பிரித்தெடுத்தால் , பண்டைய வரலாற்றைப் புரிந்து கொள்ளலாம்.


2) பழங்குடி மக்களின் சடங்குகளிலும், வாழ்க்கை முறையிலும் பண்டைய வரலாறு பொதிந்துள்ளது.   இந்தியாவின் தொன்மையான குடியினர் இன்றும் கூட, ஆயிரக்கணக்கான வருடங்களாக, வாழ்க்கை முறையில் சிறிதளவும் மாற்றமில்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
பழங்குடி மக்கள் அவர்களை விட முன்னேறிய சமூகத்தைச் சந்தித்த பொது, அவர்களிடையே நிகழ்ந்த பரிமாற்றத்தின் எச்சங்கள், இரு சாராரிடமும் இன்றும் எஞ்சியுள்ளன.   அவற்றை, நுட்பமாக ஆய்வு செய்வது இந்திய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மிகவும் அவசியம் என்று கூறுகிறார்.

இந்த இரண்டு அணுகுமுறைகளையும், அறிவியல் பூர்வமான தொல்பொருள் முறைகளையும், எந்த அரசியல் நோக்கும் இல்லாமல், கைக்கொண்டு கோசாம்பி பிண்ணும் பண்டைய இந்தியாவின் சரித்திரம் எவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும்.  கோசாம்பியின் இந்த வரலாற்றுப் பார்வை தனித்துவமானது,   இந்தியாவைப் பற்றிய நம் புரிதலை பெருக்கக் கூடியது.  மேலோட்டமாய் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல்  தோன்றும் விஷயங்கள், உதாரணமாக - சாதிப் பிரிவினைகள், அஹிம்சை வாயிலாகப் பெற்ற சுதந்திரம், இந்து,  புத்த மத வளர்ச்சி - போன்ற அனைத்தையும் மிக அருமையாக தன்னுடைய வரலாற்று நோக்கில் விளக்கிச் சொல்கிறார்.

பண்பாடும் அதன் அடிப்படையும் 


பண்பாட்டைப்பற்றி எளிய வார்த்தைகளில் இப்படிச் சொல்லலாம்: ஒரு இனத்தைச்சேர்ந்த எல்லா மக்களுடைய வாழ்க்கை நெறியின் மிக முக்கியமான அம்சங்களை விவரிப்பதே பண்பாடு.  சுருக்கமாய், எந்த ஒரு சம்பிரதாயமான பண்பாட்டிற்கும்  அடிப்படைதான்  என்ன ?    கோசாம்பி சொல்கிறார்:

"ஒரு நாட்டில் தேவைக்கு மேல் கிடைக்கக்கூடிய உபரி உணவு மற்றும் பண்டங்கள்"

 உற்பத்தி உறவுகளின் பரிணாமம்


பண்டைக் காலத்தில், உணவு சேகரிப்பு (இயற்கையாக வளர்ந்த உணவைச் சேகரித்தல், வேட்டையாடுதல்)  பழங்குடியில்,  அந்தந்த குழுவிலுள்ள பெண்க்ளே உணவைப் பங்கிட்டனர்.

மேற்கொண்டு சற்று வளர்ச்சியடைந்த சமூகத்தில் ஆணாகிய   குடும்பத்தலைவனோ, பழங்குடித் தலைவனோ அந்தப் பணியை எடுத்துக் கொண்டனர்.

உபரி உணவு அதிகரித்ததும்  குருமார்கள்,   நிலப்பிரபுக்கள் என்று விநியோகிப்பதைத்  தீர்மாணித்தனர்.  இதே சமயத்தில்   வணிகர்களும் முதலாளிகளும்   கைத்தொழில் செய்வோரைக் கட்டுப்படுத்தி,   பண்டங்களை  விநியோகிக்கும்   உரிமையைக் கொண்டாடினர். 

பின்னர்   வணிகர்கள் உற்பத்தியாளர்களாக  மாறி முதலாளித்தத்துவ சகாப்தத்தையும் தொடங்கி மனித உழைப்பையும்   விற்பனைப்   பொருளாக   மாற்றினர்.


உற்பத்தி உறவு     x     கருத்துக்கள் 


அப்படியானால்,   உணவும், பணடமும் - சுருக்கமாய் பொருட்கள் தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறதா ?  சமூகத்தில் கருத்துக்கள் என்று எதுவும் இல்லையா ?  'சமூக முன்னேற்றத்தில் கருத்துகள் விளைவிக்கும் பாதிப்பையும் நாம் அலட்சியப்படுத்த முடியாது'   என்று எச்சரிக்கிறார் கோசாம்பி.   கறாரான,  வரட்டுத்தனமான மார்க்சீயப் பார்வையால் மாத்திரமே கோசம்பி வரலாற்றை அணுகவில்லை,  கருத்துக்கள், தத்துவங்கள், சமய சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் பங்களிப்பை, தனது வரலாற்று நோக்கில்,  அததற்குரிய  இடத்தை  அளிக்கிறார்.
 
இந்தியச் சுதந்திரம்  -  உற்பத்தி  உறவுகளின்  அடிப்படையில்
   
இந்த உற்பத்தி உறவுகளின் அடிப்படையில்,  வரலாற்றை எப்படி பார்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக, சற்றே முன்னோக்கி,  நம்மில் பலருக்கும் மிகவும் பரிச்சயமான இந்திய சுதந்திர வரலாற்றைப பார்ப்போம்:

பண்டைய காலம் முதல் இந்தியாவின் செல்வம் பல் வேறு படையெடுப்புகளால் சூறையாடப்பட்டது.   எஞ்சிய செல்வத்தின் பெரும்பகுதி 18, 19 ம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர்களால் சூரையாடப்பட்டு,   இங்கிலாந்தில் இயந்திர உற்பத்திக்கு மூலதனமாய் விளங்கி அங்கு தொழில்புரட்சிக்கு வித்திட்டது.   இதனால்,   இங்கிலாந்தில் ராணுவம் மற்றும் நிர்வாகம் விரிவடைந்ததால் அதைப் பராமரிக்க பென்ஷன்,  டிவிடென்டு, வட்டி என்று பட்டுவாடா செய்ய இந்தியப்பணம் மேலும் தேவைப்பட்டது. இங்கிலாந்திற்கு தேவையான (இந்தியாவுக்கு தேவையே இல்லாத)  சணல், தேயிலை, புகையிலை,  பருத்தி போன்ற கச்சா பொருள்கள், இங்கு பெரும் நிலப்பரப்புகளில் பயிராகி,  நம்மை ஆண்டவர்களாலேயே சொற்ப விலைக்கு நிர்ணயம் செய்ய்யபட்டன. (இந்திய மக்களுக்கு அத்தியாவசமான கோதுமை மற்றும் இதர உணவு வகைகள் பயிரிடப்படாததால்,  பெரும் பஞ்சங்களும் நிகழ்ந்தன.) கச்சா பொருகளை இங்கிலாந்தில் சுத்தப்படுத்தி பண்டங்களாய் ஆக்கிய பின்னர், எந்தப் போட்டியுமில்லாமல் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவே இந்திய சந்தைகளில் விற்கப்பட்டு, ஆங்கிலேய முதலாளிகள் கொள்ளை லாபம் அடித்தனர். 


இதே சமயம் இந்தியப் பெருநகரங்களில் இரண்டாம் தர முதலீடுகள் உண்டானதையும் ஆங்கிலேயர்களால் தவிர்க்க இயலவில்லை. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியர்களுக்குப் பயிற்சி அளித்தால்,  இங்கேயே ஆலைகளில் பொருட்களை மலிவு விலையில் உற்பத்தி செய்து, அவர்களை பராமரிக்க இந்தியர்களையே குமாஸ்தாவாக நிர்ணயித்தால் மேலும் லாபம் அடையலாம் என்று கண்டு கொண்டதால், அதற்கு தேவையான ஆலைகள்,  கல்லூரிகள், பல்கலைக் கழகங்களும் உருவாயின. ஆனால் மேல்பதவிகள் எல்லாம் நம்மை ஆண்டவர்களுக்கே  ஒதுக்கப்பட்டன.  முடிவில், இந்திய ஏஜெண்டுகள் தாங்களே சொந்தமாய் ஆலைகளைத் தொடங்கினர்.  இவர்களில் சிலர்,  கிழக்கிந்தியக் கம்பெனியுடன் கூட்டாளிகளாகவும் சேர்ந்து நல்ல லாபமும் ஈட்டினர் (கிழக்கிந்தியக் கம்பெனியுடன் கூட்டாக அபினியை சீனாவிற்கு ஏற்றுமதி செய்த பார்ஸிகளான டாடா குடும்பத்தினரும் இதில் அடங்குவர்)   வெளிநாட்டு   வர்த்தகர்களுக்கு உள்நாட்டு ஏஜெண்டுகளாக தோன்றிய இந்த இந்திய பூர்ஷுவா வர்க்கம், பின்னர்  ஆங்கிலேயர்களின் காலனி  ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டது.  (ஆங்கிலேயர் இல்லாத இந்தியாவில் கிடைக்கும் மிகுந்த லாபமும்,  கொஞ்சம் தேசிய உணர்வும் இதற்கு உந்துதல்கள் என அவதானிக்கலாம்.)   இந்திய மக்களில் பெரும்பாண்மையினர் ஏற்றுக்கொண்ட, அகிம்சைவழி வந்த எளிய பனியாவாகிய காந்தியே,  இந்தப் பூர்ஷுவா வர்க்கத்திற்கும் உவப்பானதாக இருந்தது (ஆங்கிலேயர்களுக்கும், அவர்கள் நாட்டில் படித்த,  மேலை நாட்டுப் பண்புகளை உணர்ந்த, முக்கியமாக தீவிரவாதத்தை ஆதரிக்காத, காந்தியை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்வது அவர்களுடைய ஆட்சிக்கு பங்கமில்லாததாகக் கருதினர்). இந்தியா விடுதலை பெற்ற பின்னர்,  இந்த பூர்ஷுவா வர்க்கத்தினரிடம் கடந்த கால உணர்வு மேலோங்கி இருப்பது போல் தோன்றினாலும், இந்தியத் தொழிலாளிகள்,  நிலமற்றவர்கள் மற்றும் ஏழைகளைச் சுரண்டி, விரைந்து லாபம் பெறும் பேராசையே இவர்களது அடிநாதமாய் விளங்குவது நிதர்சனம்.

இது தான் கோசாம்பி காணும் இந்திய சுதந்திர  வரலாறு.      எப்படி ? !


2 comments:

Jegadeesh Kumar said...

இந்திய வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல பரிந்துரை.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment