Friday, March 4, 2011

பண்டைய இந்தியா - பாகம் - 2




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்


பாகம் 2


வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் (pre-historic man) தேவைகள் உலகெங்கும் ஒத்து இருந்தன.  வாழ்ந்த புவி, தட்ப-வெட்ப சூழலுக்கு ஏற்ப அவன் கருவிகளை ஏற்படுத்தி, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயன்றான்.  பின்னர், பூர்வகுடி மனிதனின் வாழ்க்கையை இந்தியச் சூழலில் நமக்குக் கிடைக்கும் ஆதரங்களுடன் பொருத்திப் பார்க்கும் பொது, பல சுவாரஸ்யமான விஷயங்களை (இந்தியாவின் சாதி அமைப்பின் அடித்தளங்களையும் கூட) யூகிக்க முடியும் என்கிறார் கோசாம்பி.


முதலில் உலகெங்குக்கும் பொதுவான வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.   இது எப்படி என்று பார்ப்போம்.




பழங்குடி அமைப்பின் தோற்றம் :


பூர்வீக மனிதனின் முக்கியத் தேவை உணவு.  உணவை சேகரிப்பதிலேயே பெரும்பாலான அவன் நேரம் செலவழிந்தது.  அவனது ஒரே சொத்து, தனக்குத் தேவையான அந்த உணவை எப்படி சேகரிப்பது என்ற அறிவு மட்டுமே.  ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்த மனிதர்கள், ஒரு குறிப்பிட்ட உணவைப் பெறுவதற்கான அறிவைப் பெற நெடு நாட்கள் ஆயின.   உதாரணமாக, மீன்கள் அதிகம் இருக்கும் இடத்தில், எப்படி மீனைப் பிடிப்பது, உண்பது, என்ற அறிவு மிகவும் முக்கியம்.  அந்த அறிவு, பல தலைமுறைகளில், அந்தக் குழுவைச் சார்ந்தவர்களுக்கு இயல்பாகச் சென்றடைந்தது.  இது போல ஒவ்வொரு குழுவும், அதற்கு தேவையான உணவைப் பெரும் ஒரு தனி அறிவை, தன் சூழலுக்கு ஏற்ப வளர்த்துக் கொண்டார்கள்.  


அவர்கள் வேட்டை ஆடிய மிருகமோ, அல்லது உணவோ அந்தக் குழுவின் குலச் சின்னமாக திகழ்ந்தது.  இந்த உணவு பெரிதளவில் தொடர்ந்து கிடைப்பதற்காக, இவர்கள் சடங்குகளையும், பலி அளித்தல் முதலிய பழக்கங்களையும் மேற்கொண்டனர்.  இன்றைய பண்பாடுகளின் வித்துக்கள் இத்தகைய சடங்குகளில் உள்ளன.


பிரெஞ்சு, எஸ்பானிய குகைகளில் பனிக்கட்டி காலத்தில் பூர்விக மனிதனால் வரையப்பட்ட விலங்குகளின் சித்திரங்கள் இன்றும் கலையுலகில் மிகச் சிறந்தவையாக கருதப்பட்டன.  இந்த இருண்ட குகைகளில் வரைவதற்கு காரணம், அவன் மேற்கொண்ட ரகசிய சடங்குகளாக இருக்கலாம் என யூகிக்கலாம் என்கிறார் கோசாம்பி.

கி.மு.10000-15000 ஆண்டுகளுக்கு முன் ஸ்பெயின் (altamira) குகைகளில் வரையப்பட்ட அற்புதமான காட்டெருமையின் சித்திரம்



கி.மு.10000 ஆண்டுகளுக்கு முன் இந்தியக் (பிம்பேதகா, போபாலுக்கு அருகே) குகைகளில் வரையப்பட்ட  சித்திரங்கள் (படம்: ராகேஷ் வியாஸ்)

பழைய கற்காலத்தில், கற்களை நன்கு துண்டுகளாச் செதுக்கி கருவிகளாகப் பயன்படுத்தும் அளவுக்கு முன்னேற்றம் பெறவே ஆதி மனிதனுக்கு, லட்சம் ஆண்டுகள் பிடித்தது.  உணவைச் சேகரித்த பின்னர், அதைப் பாதுகாக்க குடுவைகளோ, பானைகளோ, தோல் பைகளோ தேவை.  உணவைப் பாதுகாக்கும் முறை வரும் வரையில், தேவைக்கதிகமான அளவில் உணவைச் சேகரிக்கும் பழக்கம் இல்லை.  தன்னிடம் மிகுதியாக இருந்த உணவை பிறரோடு பகிர்ந்து கொண்டார்கள்.  பண்ட மாற்றம் குழுப் பிரிவுகளை ஒருங்கிணைத்து வைப்பதற்கு ஒரு பெரும் முயற்சியாக விளங்கியது.


குழுக்களிடையே நிகழ்ந்த இந்த உணவு/பொருள் பரிமாற்றம், பின்னர் மண உறவாக வளர்ச்சி அடைந்தது.  கலப்பு மனம் செய்வதால் சந்ததிகளுக்கு நன்மை என்பதை அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திலும், மன வளர்ச்சியிலும் பெற்றோரை விட, செம்மையாய் அமைவதை கண்டு கொண்டனர்.   உட்குழு மணமுறையில், உடல்வளர்ச்சியும் மனவளர்ச்சியும் குன்றி பிறப்பதையும் கண்டு கொண்டனர். இந்த நன்மைகள் எல்லாம் எதேச்சையாக நடந்த நன்மைகள் என்பதை புரிந்து கொள்ளலாம்.


குழுக்களிடையே நிகழ்ந்த பரிமாற்றங்களால் மொழியும்  வளம் பெற்றது, அவர்களிடையே இருந்த கருவிகளின் செயல் திறனும் வலிவுற்றது, உதாரணமாக பாண்டங்கள் செய்யும் முறை, வேட்டைக் கருவிகளின் அமைப்பு முதலியன.  இத்தகைய பண்டைய மனிதனின் குழுக்களின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.

இந்தப் பழங்குடி மனிதனின் வளர்ச்சி எல்லா தேசங்களிலும் ஏறத்தாழ ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் தோன்றிய பழங்குடிகளுக்குச சில சிறப்புத் தன்மைகள் இருந்தன. 


இந்தியப் பழங்குடி இனத்தின் சிறப்புத்தன்மை


அகிம்சையின் ஊற்றுக்கண் ?

 
ஐரோப்பாவோடு ஒப்பிடுகையில், கடைசியாக வந்த பனிக்கட்டிக் காலம் இந்தியாவில் அவ்வளவு தீவிரமானதாக இல்லை.  ஐரோப்பியா மற்றும் யுரேசியா கண்டத்தோடு ஒப்பிட்டால், இந்தியாவில் உணவு சேகரித்தல்,   வேட்டையாடுதல்,   மீன் பிடித்தல் போன்ற அனைத்தையும் சுலபமாய் செய்ய முடிந்தது.   ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால்,  மொத்தமாகவே அரை டஜன் தானியங்களும், பட்டாணி, பீன்ஸ் போன்ற பயிறுகளோடு  அடங்கிவிடுகின்றன.  அதே சமயத்தில் சராசரி வளமுடைய மகாராஷ்டிரத்தில் மட்டுமே நாற்பது வகையான உணவு தானியங்கள்  உழுது பயிறாகின, அதோடு மட்டுமல்லாமல் அவை தானாகவும் முளைத்து காடாகவும் மண்டும். நீண்ட காலம் பத்திரப்படுத்தி வைக்கவும் ஏற்றவை இவை. அரிசி, கோதுமை,   சோளம், பார்லி, தரமான புரதச்சத்துக்கள் அளிக்கும் காய்கறிகள், தாவர எண்ணை வித்துக்கள்,  மிளகு,  பால், வெண்ணை, தயிர், பழங்கள் என இவையனைத்தும் உயிர்க்கொலை செய்யாமல் சமநிலை உணவை பெறுவது சாத்தியம். இந்த எளிய  விஷயமே பிற்காலத்தில் கொல்லாமை (அகிம்சை)  என்ற கோட்பாடாக உருவெடுத்து,   இந்தியாவின் இறையியல், மதம் போன்ற துறைகளில் புரட்சி  ஏற்படுத்தக் காரணமானது என்கிறார் கோசாம்பி. 


இப்படி உணவு வகைகள் தாராளமாய்க் கிடைக்கப்பெற்றதால், இரு குடிகள் தத்தம் பண்பாடுகளைப் பரிமாறிக்கொண்டு ஒருமைப்பாட்டை வளர்த்த விதம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் நிகழ்ந்தது.  தாராளமாக உணவு கிடைத்ததன் காரணமாகவே,   ஐரோப்பாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணவு சேகரிக்கும் வாழ்க்கையில் இருந்து, உணவு உற்பத்தி செய்யும் வாழ்க்கைக்கு மாறிவிட்ட போதிலும், இந்தியாவில் உணவு சேகரித்து வாழும் வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடித்து வழங்கி வந்தது.  அவ்வாறு முன்னேறிய சமூகத்தினர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் குடியேறிய தங்களுடைய செல்வாக்கை நிலை நாட்டிய போதும் கூட, பூர்வீக மக்களின் சில நம்பிக்கைகளையும்  பழக்க வழக்கங்களைக்யும் பொதுவாக தங்களுடையதென ஏற்றுக்கொண்டனர்.


ஆனால், இத்தகைய ஒத்திசைவில் உருவான இந்த சமூகமும் அதன் பண்பாடும், பெருமளவில் மதம், மூடநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலும்  விரிந்திருந்தது என்பதும் உண்மையே.
அகிம்சை, விட்டுக்கொடுத்தல் ஆகிய பண்பாட்டுக்கூறுகள் வெறும் பூகோள அமைப்பால் தான் தீர்மாணிக்கப்படுகிறதா ?   (மனிதவியலாளர் ஜாரட் டையமண்ட் (Jared Diamond), பூகோள அமைப்பே பெரும்பாண்மையாய் ஒரு நாட்டின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சிகளைத் தீர்மாணிக்கிறது என்று ஆதாரப்பூர்வமாகவும்   ஆழமாகவும் தன்னுடைய  'Guns, Germs and Steel"  என்னும் நூலில் வாதிடுகிறார்).  இந்தியாவைத் தவிர்த்து உலகின்  மற்ற பகுதிகளில் இந்த இணக்கமான பூகோள அமைப்பு எங்கும் நிலவவில்லையா என்ற கேள்வியும்  நம்முள் எழத்தான் செய்கிறது. 


 உலோக காலம் ...   இரும்பு யுகம்


கி.மு. 3000 ஆண்டு வாக்கில் வெண்கல யுகம் தோன்றியது. வெண்கலம், நல்ல உறுதியான, கனமான கருவிகளைச் செய்யப் பயன்பட்டது.  வெண்கலத்தைப் பற்றிய அறிவு கொண்ட பூர்வகுடிகள் மற்ற பூர்வகுடிகளை விட விரைவில் முன்னேற்றமடைந்தன.     விவசாயம்,  கால்நடைப் பராமரிப்பு, நாடோடி வாழ்விலிருந்து நிலையான குடியேற்றம் ஆகியன இந்த யுகத்தின் மகத்தான முன்னேற்றங்கள். ஆனால், வெண்கலத்தில் செய்யப்பட்ட கருவிகள் அடர்ந்த காடுகளைச் சீர்திருத்தும் அளவிற்கு உறுதி கொண்டவை இல்லை. அதனால், வெண்கல யுகத்தில், அடர்ந்த காடுகள் இல்லாத இடத்தில், காடுகளின் விளிம்புகளில் மட்டுமே விவசாயம் சாத்தியமாயிற்று.  இப்படித் தோன்றிய ஒரு சமூகம் தான் சிந்து சமவெளி நாகரீகம்.  


பின்னர் கி. மு. 2000 வாக்கில் வந்தது இரும்பு யுகம். முதலில், இரும்பு தற்சமயம் துருக்கி என அழைக்கப் படும் தேசத்தில் கிடைத்தது.  வெண்கல யுகத்தைப் போலவே, இரும்பைப் பற்றி அறிந்த சமூகங்கள் விரைவாக முன்னேறின.  இரும்பைப் பற்றிய அறிவு கி.மு. 1350 வரை கூட அரிதாகவே இருந்து வந்தது.  உறுதியான இரும்பு மலிவாக இருந்ததுடன், எல்லா இடங்களிலும் கிடைத்ததால் உலகெங்கிலும் இரும்பினால் செய்த கருவிகளைக் கொண்டு அடர்ந்த காடுகளைத் திருத்தி விவசாய நிலைக்கு கொண்டு வர முடிந்தது.  பெரும் நாகரீகங்கள் எழுந்தன.  இந்த பெரும் மாற்றத்தின்  பின்னணியில் நாம் பூர்வ குடிகளின் வாழ்க்கையை அறிய முடியும்.


புராதன எச்சங்கள் 


'தாங்கார்' என்ற பூர்வகுடி நாடோடி மக்கள்,   வீரோபா, கண்டோபா, என்ற தெய்வங்களை கி. பி. நான்காம் நூற்றாண்டுக்கு மின்பு இருந்தே வழிபட்டு வந்ததற்கான ஆதாரங்கள்  உள்ளன.  இன்றும் இந்தக் கடவுள்களை பல்வேறு சாதியினர் வணங்குகிறார்கள்.  இதைப் போலவே, புத்தர் பிறந்த இடத்தில் வணங்கப்படும்  அம்மனின் பெயர் லும்மினி-ரும்மினி.  இந்தப் பெண் தெய்வங்கள் கடந்த 2500 ஆண்டுகளாக அதே பெயரில் வணங்கப்பட்டு வருகின்றன.  பூர்வ காலத்தில் இந்த தெய்வங்கள் அனைத்தும் சிறிய கற்களே.    பேராபத்து, பஞ்சம், கொள்ளை நோய் போன்ற தீமைகளில் இருந்து அந்தக் கிராமத்தை இந்தக் காவல் தெய்வங்கள் காக்கின்றன.  அந்தத் தெய்வங்களுக்கு பலிகள் அளிக்கப்படுகின்றன.  குருதியைக் குறிக்கும் வகையில், செந்நிறச் சாந்து அந்தத் தெய்வங்கள் மேல் பூசப்பட்டு இருக்கும்.  இந்தப் பழக்கங்களின் நீட்சியை இன்றும் கிராமங்களில் சுடலைமாடன், அய்யனார் வழிபாடுகளில் காணலாம்.


அதே போல், பூர்விக மனிதன் உபயோகித்த உற்பத்திக் கருவிகளான உரல், அம்மிக்கல் போன்ற கருவிகளின் எச்சங்களும், இன்றும் கூட நம் சமூகத்தில் காணப்படுகின்றன; அம்மி மிதித்தல் போன்ற சடங்குகள் ஒரு முக்கியப் பங்கை இன்றும் வகிக்கின்றன.  மேற்கத்திய நாடுகளில் ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னர் உபயோகித்த பொருட்கள் கூட மிகச் சீக்கிரம் காலாவதியாகி விடுவதைப் பார்க்கும் போது பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து இருக்கும் புராதான காலத்து எச்சங்கள்  பண்டைய இந்திய வாழ்க்கையை நினைவு படுத்தும் ஆச்சர்யமான எதிரொலிகளாக  இன்றும் உள்ளன.


சிந்து சம்வெளிப் பண்பாடு
  

1920 - ம ஆண்டு வரை, கிரேக்க ரோமானிய நாகரிகங்கள் தான் பழமையானவை என்று மேலை உலகம் இறுமாந்திருந்தபோது,   இந்தியாவில் சிந்து நதிக்கரைகளில் மொஹெஞ்சதாரோ, ஹரப்பா (தற்போதைய பாகிஸ்தான்) நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.  இவை இரண்டும் ஐயாயிரம் வருடங்களுக்கும் தொன்மையானவை, நவீன கால இந்திய நகரங்களை விட மிகவும் வசதியாக வடிவமைக்கப்பட்டவை. சிந்து சமவெளி நாகரிகம், அதன் காலகட்டத்தில் மற்ற நாகரீகங்களை விட பல விதங்களில், மிக முன்னேறிய நாகரிகமாகத திகழ்ந்தது.


மொஹெஞ்சதாரோவில் உள்ள பெரும் தடாகம். சாந்துகள் பூசப்பட்ட சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டது. நவீன கழிப்பறை வசதிகளுடன் திகழ்ந்தது

 இரண்டு சிங்கங்களின் வாலை ஒரு வீரன் முறுக்கிப்பிடித்திரிப்பதாக சித்தரிக்கும்
சுமேரிய நாகரிகத்தின் சிற்பம் (நடுப் படம்)  ('கில்காமேஷ்'), சிந்து நாகரித்திலும்
(இடது படம்), அதன் பின்னர் வந்த எகிப்திய நாகரிகத்திலும் காணப்படுவது,
இந்த நாகரிகங்களிடையே இருந்த தொடர்பை குறிக்கிறது.

இந்நாகரிகத்தின் ஊற்றுக்கண் பாலைவனத்தில் ஓடிய சிந்து நதிதான். விவசாயம்,  மீன்பிடித்தல், படகுப் போக்குவரத்து  ஆகியன கைவசமாவது எளிது. (சிந்து நதிக்கு ஊற்றுக்கண் பருவமழை.   பருவமழைக்கு ஊற்றுக்கண் இமயமலை.)  சிந்து நதியின் வெள்ளப்பெருக்கை அணைகட்டி நீர்ப்பாசனம் மூலமாக விவசாயம் புரிந்தனர்.  சிந்துப்பிரதேசத்தின் உழவர்களிடமிருந்து பெற்ற உபரி தானியங்களின் சேமிப்புக் கிடங்குகளாக இந்நகரங்கள் இயங்கின. 


இந்நகரங்களில்  அரன்மனைகளோ காவல் ஏற்பாடுகளோ இல்லை. மன்னரின் ஆட்சிக்கு இங்கு அவசியமே ஏற்படவில்லை போலும்.  மொழியும் அதற்கு எழுத்து வடிவமும் இருந்திருக்கிறது (ஆனால் இதுவரை என்ன மொழி  என்று தெரியவில்லை). 


ஈராக்கிய வணிகர்களுடன் வர்த்தகமும் புரிந்திருக்கின்றனர். மிக குறைவான உள்நாட்டு வியாபாரங்களே நடைபெற்றன.  அதனால் அதை எழுத்தில் பதிவு செய்வது அவசியமற்றதாய் தோன்றியிருக்கலாம். எழுத்திற்குப் பதில் ஞாபகசக்த்தியே  போதுமானது.  (இதுவே பிற்கால இந்தியச் சமூகத்தின் ஒரு சிறப்பியல்பாகத் திகழ்ந்தது. வாய்மொழியிலேயே  ஒப்பந்தங்கள் நடத்தப்பட்டு,  அவ்வாறே வாக்குச் சுத்தமாக நடந்துகொண்ட நாணயம், அந்நியர்களை பிரமிப்படைய  வைத்தது.)


ஆனால் இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கும்மேல் வாழ்ந்திருந்த நகரங்களிலிருந்து மக்கள் தடயமே இன்றி மறைந்தனர். பின்னால் வந்த ஆரியர்களின் தாக்குதல்களால் அழிவு உண்டாயிருக்கலாம் என கோசாம்பி கருதுகிறார். (சிந்து நதியின் ஊற்றுக்கண்ணான பருவமழை பொய்த்து, கி.பி 1750 ம் ஆண்டு வாக்கில் நதி முற்றிலும் வற்றி, கிழக்கு, அதாவது கங்கை நோக்கி, புலம்பெயர்தலை உருவாக்கியிருக்கலாம் என்றும் கருத்துக்கள் உண்டு).


சிந்துப் பண்பாடு,  இந்தியாவின் மற்ற செழிப்பான பகுதிகளில் பரவவில்லை.  இதன் காரணம் பிற நாகரிகங்கள் போலல்லாமல், சிந்து சமவெளி மக்கள், இரும்பினால் ஆன கருவிகளைப் (பற்றி அறிந்திருந்தும் கூட) என்ன காரணத்திலோ பயன்படுத்தவே இல்லை.  அதனால், ஆழமான ஏர்களைக் கொண்டு நிழத்தை உழவு செய்யவோ, அருகில் இருந்த அடர்ந்த காடுகளைச் சீர்திருத்தி விவசாயத்திற்கு கொண்டு வரவோ முடியாமல் போய் விட்டது.  வெண்கல யுகத்திலேயே சிந்து சமவெளி நாகரிகம் நின்று விட்டது ஒரு புதிர் தான்.  


ஆரியர்கள்


ஆரியர்கள் என்போர் உண்மையில் இருந்தார்களா ? எங்கிருந்து வந்தார்கள் ? இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்த நாடோடி வீரர்-குழுவினர்.  கால்நடைகளே முக்கிய உணவாகவும், செல்வமாகவும் கொண்டவர்கள். குதிரையை  ரதத்தில் பூட்டி போரிடும் முறையைக் கொண்டவர்கள்.  ஈடு இணையற்ற வேகத்தில் இடப்பெயர்ச்சி செய்ய  வல்லவர்கள். ஆண் ஆதிக்கம் செய்யும் தந்தை வழி மரபை அடிப்படையாகக் கொண்டவர்கள்.  யுரேசிய  கண்டத்தின் பரந்த புல்வெளிகளை மேய்த்தபடி வாழ்ந்தார்கள்.
  

மத்திய ஆசியாவில், ஆரியர்கள் பல இடங்களில் வாழ்ந்து வந்தனர். தற்போதைய டர்க்மெனிஸ்தானில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்  குதிரை, மற்றும் ரதங்களுடன் புதைக்கப்பட்ட மனிதக் கூட்டங்கள் ஆரியர்கள் எனக்கருத நிறைய  இடம் உண்டு. ஆரியானாம் என்ற சொல்லில் இருந்தே 'ஈரான்' பிறந்தது.


ஈரானில், கி.மு, 6 நூற்றாண்டில் ஜாராதூஷ்டிரன் (ஃஜோரஸ்டெர்) தன்னுடய மதத்தை நிலைநாட்டும் வரையில், இந்திரன், வருணன், மித்திரன் ஆகிய அதே ஆரியக் கடவுள்களை பாரசீக மக்கள் வழிபட்டு வந்தனர்.


யுரேசியா கண்டத்தின் பெரும்பாலான மொழிகள் மூன்று மிகத் தொன்மையான மொழிகளிலிருந்து தோன்றியவை: சமஸ்கிருதம், இலத்தீன்,  கிரேக்கம். (இம்மூன்று மொழிகளில் இருந்தே ஆங்கிலம், இத்தாலியன், ஸ்பானியம், ஜெர்மன், பிரெஞ்சு,  ருஷ்யன், இந்தி, வங்காளி, மராத்தி,  பஞ்சாபி ஆகியன தோன்றின.) இந்த மூன்று இந்தோ-ஆரிய  மொழிகளுக்கு மிக்கவே தொடர்பு உண்டு. இரத்தபாசத்தைக் குறிக்கும் தாய்,  தந்தை, சகோதரன், மாமனார், விதவை ஆகியச் சொற்கள் வியப்பூட்டும் வகையில் ஒத்தனவாய் இருந்தன. இம்மொழ்களுக்கு முன்னோடியாய் பூர்விக ஆர்ய மொழி ஒன்று இருந்திருக்க வேண்டும் என்றும் ஆதியில் நிலவிய பூர்வகால சமூக அமைப்பு ஒன்றே என்று மக்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்று கருத மிக்கவே இடம் உண்டு.


சரி, இவர்கள் ஏன் மத்திய ஆசியாவிலிருந்து புலம் பெயர வேண்டும் ? சுருக்கமாய் நீடித்த வறட்சி காரணமாக  இருக்கலாம்.  ஆரியர்கள் இரு முக்கிய அலைகளாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் கோசாம்பி. இவர்கள் இடம்பெயரும் போது எதிர்கொண்ட நகரப் பண்பாடுகளைத் தாக்கி பெருநாசம் செய்திருக்கின்றனர்.




இந்தியாவில் ஆரியர்கள்


இந்தியாவில் ஆரியர்களைப் பற்றிய தகவல்கள், தொன்மையான ரிக்வேதத்திலிருந்துதான் நமக்குக் கிடைக்கிறது. கி.மு. 14-ம் நூற்றாண்டில் தான், ரிக்வேதம் சரியானபடி தொகுக்கப்பட்டு எழுத்து வடிவம் பெற்றது. (இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால் இதற்கு முன்பு இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களாக செவி மொழியாகவே முறை பிறழாத உச்சரிப்புடன் பரம்பரை பரம்பரையாக புரோகித பிராமண சாதியின் வாயிலாக காக்கப்பட்டு வந்திருக்கிறது.)  ரிக்வேத கால நடவடிக்கைகள் பஞ்சாபில் நடைபெற்றவை.  பைபிளை பழைய ஏற்பாடுடன் (Old Testament) ஒப்பிடும் போது வேதங்களின் வரலாற்று மதிப்பு சொற்பம்தான்.  நிகழ்ச்சிகளை திண்ணமாக  நடந்தது எனக்கூறிவிட இயலாது.  வரலாற்றுச் சான்றுகளும் அரிதே.


ரிக்வேதத்தில் அதிகமாய்ப் போற்றப்படும் கடவுள் அக்னியே. பின்வருவது இந்திரன். இதில் இந்திரன் கடவுளாகவும் இருக்கலாம்,   அல்லது தந்தைவழி மரபு போற்றும் வெண்கலக்காலத்துக் காட்டுமிராண்டிக்குணங்கள் பொருந்திய ஆதி ஆரியர்களின் போர்த்தலைவனாகவும் இருக்கலாம். போதை தரும் ஸோமபானம் பருகுவதற்கு இந்திரன், அனேகமுறை அழைக்கப் பட்டிருக்கிறார். 

ஆப்கானிஸ்தானில் விளையும் ஸோம் என்னும் மரத்தின் பட்டை, கஞ்சா அபினி ஆகிய வஸ்துக்களுடனும் உருவானதுதான் ஸோம பானம் என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


பழங்குடிக்குள் சாதிப்பிரிவுகள் இன்னும் தோன்றாத காலம் ரிக்வேத காலம் என்பது கவனிக்கத்தக்கது.  இன்னும் பேரரசுகள்  உருவாகாத காலம்.  ஆனால்,  மேய்ச்சல்நில பண்பாடு முடியாட்சியை நோக்கி சென்று கொண்டிருந்த காலமிது.
  

பிற்காலத்து ரிக்வேதங்களில் தேவர்களைப்பற்றியல்லாது மனிதர்களும் விவரிக்கப்படுகின்றனர். ஆக, இது  வரலாற்றுச் சார்புடையது என்று எண்ண நிறையவே இடம் உண்டு. அதில் முக்கியமாய் பத்து மன்னர்களின்  கூட்டணியை முறியடித்த சுதாஸின் வெற்றி சிறப்பு வாய்ந்தது. சுதாஸ் திவோதாசனின் புதல்வன். 'தாசன்'  என்பது ஆரம்ப காலத்தில் ஆரியரல்லாத விரோதிகளைக் குறித்தது. ஆக, ஆரம்பகால ஆரிய மன்னனுக்கு 'தாசா'  என்று பெயர் முடிவுற்றதன் காரணம் தான் என்ன ?   பண்டைய ஆரியர்கள் பழங்குடி இனத்தவருடன் கொண்ட  இனக்கலப்புதான் காரணம் என அனுமானிக்கிறார் கோசாம்பி.   சுதாஸ் ஆண்டு வந்த பழங்குடி மக்கள் தான்  பாரதர்கள். இப்பெயரே பின்னர் பாரதர்களின் நாடான இந்தியாவிற்கும் சூட்டப்பட்டது.


இந்தியாவில் சாதி அமைப்பு வந்தது எப்படி என்று அடுத்த பாகத்தில் தொடர்வோம்.

1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment