Thursday, March 10, 2011

பண்டைய இந்தியா - பாகம் 3
பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்

பாகம் 3


ஓராயிரம் சதுர மீட்டர் அளவில், வேட்டைத் தொழிலையும், உணவு சேகரித்தலையும் மட்டுமே நம்பி ஒரு மனிதன் தான் வாழ முடியும். ஆனால், அதே நிலத்தில், ஓரளவிற்கு உணவு உற்பத்தி முறையை அறிந்த, விவசாயத்தின் அனுகூலங்களை அறிந்த, சமுதாயத்தில் நூறு பேருக்கு மேல் வாழ முடியும்.

உணவு சேகரித்து வாழ்ந்த பூர்வ குடி மக்கள், தங்களை விட மிக நேர்த்தியான உணவு உற்பத்தி முறைகளைக் கொண்ட ஆரிய சமூகத்தை நேர்கொண்ட போது அதீதமான பாதிப்புகளுக்கு உள்ளானது இயற்கையே. இப்படி இந்த இரு மாறுபட்ட சமூகங்களின் உரசலினால் வன்முறை உண்டாயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. வன்முறையை தவிர்த்தது சாதி அமைப்பு என்கிறார் கோசாம்பி.


பிராமண சாதி

ஆரியர்களுக்கும் பூர்வகுடி மக்களுக்கும் நடந்த இனக்கலப்பால் வளர்ச்சியுற்ற நிபுணர்களின் ஒரு புதிய வர்க்கமாகிய பிராமண சாதி, எல்லா ஆரியச் சடங்குகளுக்கும் ஏகபோக உரிமை கொண்டாடியது. இன்று நம்மிடையே எஞ்சியுள்ள புனித நூல்களை இந்த சாதியே பாதுகாத்து வந்துள்ளது. பகைவர்களாக இருந்த கூட்டங்களையும், அவற்றின் பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் சேர்த்துக்கொண்டு எல்லோருக்கும் பொதுவான தெய்வங்களை வணங்கும் ஒரு சமுதாயப் பிணைப்பை உண்டாக்கியதே இந்த பிராமண சாதி அளித்த மகத்தான பணி என்கிறார் கோசாம்பி.

உதாரணமாக, உணவு உற்பத்தி முறையில் முன்னேறிய விவசாயத்தின் வாயிலாக ஒரு கிராமம் செழிப்படையும் போது, ஒரு புரோகிதர் அக்கிராமத்தில் நுழைவார். அப்போது, கிராமத்தின் கீழ்நிலைத் தெய்வங்கள், மேல்நிலைத் தெய்வங்களோடு இணைக்கப்படுகின்றன.

தந்தைவழி மரபு போற்றிய ஆரிய-புரோகித சமூகமும் தாய்வழி மரபு கொண்ட (உணவு சேகரித்து வாழும்) பழங்குடிச் சமூகமும் பிணைந்த போது, அவர்கள் வழிபட்ட தெய்வங்களும் இணைக்கப்பட்டன. உயர்நிலைத் தெய்வங்கள் பழங்குடி இனத்தின் குலச் சின்னங்களாகிய மிருகங்கள் அல்லது பறவைகள் மீது சவாரி புரியத் தொடங்கின (திருமால் - ஆதிசேஷன், முருகன் - மயில்). தெய்வங்களுக்கு மிருகங்கள் காவலும் காத்தன (சிவன் - நந்தி). சில தெய்வங்கள் பாதி மிருகங்களாகவும் உள்ளனர் (கணேசர்). மிருகங்கள் தெய்வங்களாக உயர்பதவியும் பெற்றன (குரங்கு - அனுமார்). பின்னர், கலப்பு மணங்களும் நடந்தேறின. உயர்நிலைத் தெய்வமாகிய கிருஷ்ணன் பல பெண் தெய்வங்களை மணந்து கொண்டான். (கிருஷ்ணனின் சட்டப்பூர்வமான மனைவிமார்கள், ராதா, பிருந்தா நீங்களாக, மொத்தம் 16108 என்று கணக்கிடப்பட்டுள்ளது) இத்தகைய ஒருமைப்பாட்டு முயற்சிகளை நியாயப்படுத்தும் நோக்கில், தெய்வீகக் கதைகள் புனையப்பட்டு, பிராமண நூல்களில் இடம்பெற்றன. இப்படி தெய்வங்கள் கொண்டாடிய உறவு வேறு, இரு சமூக மக்கள் கொண்டாடிய உறவு வேறு. ஒரு குலத்திற்குரிய சாதி மக்கள் மற்ற குலத்து சாதிமக்களோடு எந்த உறவும் கொள்வதில்லை. ஒவ்வொரு குலமும் தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ளவும் விழைந்தனர். ஒவ்வொரு குலத்திற்கும் சடங்குகளைச் செய்ய புரோகிதர்களாக ஒருசில பிராமணர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதற்கு சாதி உதவியது. வேலை இல்லாமலிருந்த பிராமணர்களும் இதை எப்போதும் ஊக்குவித்தார்கள்.பிராமண சாதியில் உள்ள ஏழு கோத்திரங்களைச் சார்ந்தவர்கள் ஆரியருக்கு முற்பட்ட தாய் தெய்வத்தை வணங்கியவர்களின் வழிவந்தவர்கள். இப்படித் தாய்வழி மரபுவந்த முனிகளை தந்தைவழி மரபு போற்றும் ஆரியரின் புரோகிதக் குழுவில் ஆட்கொள்ளும் முறை ஒரு அடிப்படை உத்தி என்கிறார் கோசாம்பி.


சமஸ்கிருதத்தில் 'ஆரிய்' என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. அதில் ஒன்று: 'மூன்று மேல் சாதி மக்களில் ஒருவர்'; ஆக, தொடக்கத்தில் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் ஆகியோரே ஆரியர்களாய்க் கருதப்பட்டனர். இந்தியாவிற்கு வந்த ஆரியர்கள் சிந்துவிலிருந்து கிழக்கு (கங்கை) நோக்கிச் சென்றபோது, கூடுதல் உழைப்பிற்காக அவர்களுக்குக் கிடைத்த அடிமைகள் தான் பழங்குடி இனத்தவராகிய 'தாசர்கள்'. இந்த தாசர்களே பின்னர் நாலாவது வர்ணமாய் சூத்திரர்களாய் மாறியிருக்கலாம். பின்னர், இந்த நான்கு வர்ணங்களும் பழங்குடிக்குள், வர்க்க கட்டமைப்பாக ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஆனால் பண்டைய இந்தியாவில் இந்தச் சூத்திரர்கள் விலைக்கு அடிமைகளாக விற்கப்படவில்லை. இது ஒன்றும் கருணை உணர்வால் அல்ல. அதன் காரணம், உற்பத்தி உறவுகளின் அடிப்படையில்: விலைக்கு வாங்கும் அளவுக்கு சரக்கு உற்பத்தியோ தனியார் சொத்தோ அப்பொழுது வளர்ச்சியடையவில்லை.

( ஆனால் பண்டைய இந்தியாவில், ரோமப்பேரரசு, மற்றும் அமெரிக்காவில் நிலவி வந்த அடிமைமுறை போல நடக்கவில்லை எனக் கண்டோம். ஒரு வேளை இது நடந்திருந்தால் இந்தியா சென்ற திசை மிகுந்த வன்முறை கொண்ட பாதையாய் இருந்திருக்கும். இடைவிடாத போர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களும் அடிமைகளாய் வேறு வேறு பிராந்தியங்களில், பல நூற்றாண்டுகளாக விற்கப்பட்டிருக்கக்கூடும். )
வைதீகச் சடங்கு நூல்கள் விவரிப்பதாவது: " வைசியரைப்போல் ... அடுத்தவனுக்குக் கப்பம் செலுத்தவும், அடுத்தவனால் உண்ணப்படவும், அடுத்தவின் இச்சைக்கு ஏற்ப கொடுமைப்படவும் வேண்டும்... சூத்திரரைப்போல் ... அடுத்தவனுக்கு வேலையாள் இச்சைப்படி வேலையைவிட்டு நீக்கப்படவேண்டும்: கொல்லப்படவேண்டும்". (வைசியனையும் சூத்திரனையும் மட்டும் அடக்கி வைத்திருக்கவேண்டும் என்பதைக் கவனிக்க). இப்படி சமூகத்தை சாதியாகப் பிரித்து, ஒரு சாதியை மற்றொரு சாதிக்குக்கீழ் பணிபுரியும் ஒரு படி அமைப்பாக, வர்க்க அமைப்பாக மாறியது. அதாவது பூர்வீக உற்பத்தி உறவில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கமே சாதி.
இதன் நீட்சி பின்னால் வந்த நிலப் பிரபுத்துவ காலத்திலும், பூர்ஷுவா ஜனநாயக ஆட்சியிலும் தொடர்கிறது என்கிறார் கோசாம்பி.

இந்த அடிப்படையற்ற, இழிவான ஜாதி அமைப்பு இன்னும் எதனை காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வியின் விடை இந்தியாவில் விளையக்கூடிய நவீன உற்பத்திப் பெருக்கத்தைப் பொறுத்திருக்கிறது என்கிறார் கோசாம்பி.


உணவு உற்பத்தியும் சாதியும்

உணவு உற்பத்தி பெருமளவில், இந்தியாவின் மேற்கில், சிந்து சமவெளியில் தான் நடந்தது (கி.மு 3000 - கி.மு 1750). ஆனால், இவ்வகை விவசாயம் சிந்து சமவெளியை மீறி பரவவில்லை. கனமான மேம்பட்ட உழவுக்கருவிகளைப் பயன்படுத்தாமை, நீர்ப் பாசன கால்வாய்கள் இல்லாதது, ஆழமான உழவு முறையைக் கடைபிடிக்காதது எனக் காரணங்கள் பல.

பிறகு உண்மையான விவசாயப்பெருக்கம் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் கங்கைச் சமவெளியில் நிகழ்ந்தது. இதற்கு thனிச்சிறப்பு பொருந்திய உணவு உற்பத்தி முறைகளுடன் சேர்ந்து செல்லும் வர்ணசாதி சமூக அமைப்பு தேவையாய் இருந்தது. பூர்வகாலம் தொடங்கியே இந்த வர்ண சாதி அமைப்பு இல்லாவிடில் இவ்வளவு பரவலாக விவசாயம் சுலபமாக பரவியிருக்காது. கடுமையான சாதி வேறுபாடுகள் பலதரப்பட்ட தொழில்களில் படிப்படியாக வளர்ந்து நிலைபெற்றன. கீழ்சாதி சூத்திரர்களைக் கொண்டு உழைப்பின் பலனை அடிமை முறையின்றிப் பறித்துக்கொள்ள முடிந்தது என்கிறார் கோசாம்பி.

கிழக்கிலிருந்து தக்காணப் (தென்) பகுதிகளில் (Deccan) பின்னர் விவசாயம் பரவியது. வடக்கத்திய சமூகத்தினர் ஏற்கெனவே அடைந்திருந்த உயர் வளர்ச்சியும், அபிவிருத்தி அடைந்த தொழில் முறைகளும், புதிதாகக் கிடைத்த உலோகத்தைப் பற்றிய அறிவும் இதற்குப் பெரிதும் உதவின. ஆனால் தக்காண சமூகங்கள் பெரும்பாலும் பழங்குடிச் சமூகங்களாகவே இருந்தன. இந்த இடங்களில் பிராமணர்கள் ஒரு புதிய வேலையைச் செய்தனர். புராணங்களை எழுதியோ, சீரமைத்தோ பழங்குடிகளின் சடங்குகளை மரியாதைக்குரியனவாக ஆக்கிக் கொடுத்தனர்.

ஊன்றிப் பார்க்கையில், விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தி வளர வளர, சாதியும் பண்டைய இந்தியாவில் வளர்ந்து தழைத்தது. விவசாயத்திற்கு சாதி தேவைப்பட்டது. சாதி, விவசாயத்தை மேலும் பரவலாக நடைபெறச் செய்தது.

ஒரு பொருளாதார சமுதாய நிலையில் இன்று பல சாதிகள் தாழ்ந்த அந்தஸ்த்தை பெற்றுள்ளன என்றால், முன்பு அவர்கள் உணவு உற்பத்தியிலோ ஏர் உழுவதிலோ ஈடுபட மறுத்தனர் என்பதாகும். சுருங்கக்கூறின், இன்று முதல் நிலையில் உணவை உற்பத்தி செய்யும் உழவர்களும், தொழிலாளிகளும் முன்னர் தாழ்ந்த சாதியிலிருந்த வந்தவர்களாகும் உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு காலம் கடந்து நுழைந்ததாலேயே இவ்வர்க்க வேற்றுமை தோன்றியது.

இந்தியாவில், எப்படி அதீத உணவு, உணவு-சேகரிப்பு காலத்தில் கொல்லாமைக்கு வித்திட்டதோ, உணவு-உற்பத்தி காலத்தில் சாதி ஆழமாக வேரூன்றவும் வழிவகுத்ததோ என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை !


இந்தியக் கிராமமும், சாதியும்

இந்தியச் சமூகத்தின் முக்கிய அம்சமான சாதி, கிராமப்புறங்களில் என்றைக்கும் முழுவீச்சுடன் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. ஏட்டளவில் நான்கு சாதிகள்தான் என்றாலும் நடைமுறையில் செயல்படும் சாதிகளும் அதன் உட்பிரிவுகளும் பூர்வீக மக்களின் பல்வேறு இனங்களின் அடிபடையிலேயே அமைந்திருக்கிறது.

ஐரோப்பா அல்லது அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், நெருக்கமாகப் பின்னிப்படர்ந்த சாலைகளும் இருப்புப் பாதைகளும் காணலாம். ஆனால் இந்தியாவில் அப்படியில்லை. இதை வேறு வகையாகப் பார்ப்போமேயானால், அந்தந்த இடங்களில் தேவையான பொருட்கள் அங்கேயே உற்பத்தியாகி அங்கேயே விற்பனையாகி விடுகின்றன.

கிராமத்தில் ஒரு மனிதனின் சராசரி பண்ட உற்பத்தி மிகக் குறைவு. நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த நிலக்கிழார்களே இன்னமும் நிறைய விளைநிலத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். ஏனையோர் சொற்பகூலிக்காக உழைப்பையே மூலதனமாகக் கொண்ட பாட்டாளி வர்க்கங்கள். சில உழவர்கள் சிறு துண்டு நிலங்களை உடையவர்கள். சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்பவர்கள் மிகக் குறைவு.

இவ்வாறு பிற்போக்கான ஊர்த்தேவைகளுடன் அடங்கிவிடும் உற்பத்தி ஆகியவற்றில் தான் பல்வேறு பழங்குடி மக்கள் இன்னமும் போராடி வாழ்ந்து வருகின்றனர்.

கிராம வாழ்க்கை இன்னமும் பருவ காலங்களை ஆதாரமாகக் கொண்டது. கிராமவாசியின் வாழ்க்கை முறைக்கு கல்வியறிவால் யாதொரு பயனும் இல்லை. இத்தகைய துன்பங்களிலும் இழிவிலும் வாழும் மக்களிடமிருந்து பறித்துக் கொண்ட உபரியே இந்தியப் பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் முக்கியமான அடிப்படையை அளித்தது: இன்னமும் அளித்து வருகின்றது.


பழங்குடியிலிருந்து சமூகம் தோன்றுதல்
ரிக்வேத காலத்தில் நடந்த யாகப்பலிகளின் நோக்கம்: கால்நடைகள், உணவு மற்றும் வளமை பெருக வேண்டுவதே. இவையனைத்தும் வன்முறையின் மூலம், அதாவது போர்ச்செயலின் மூலமே சாத்தியம். போர்வெற்றிக்கு யாகப்பலிகள் இன்றியமையாதவை எனக்கருதப்பட்டது. (அசுவமேத யாகம் என்றால் குதிரையை பலியாக்கி உண்பதுதான்). இடைவிடாத போர்களும், இடைவெளியற்ற யாகப் பலிகளும் பிராமணர்களின் யாகக் கட்டனத்தைப் பெருக்கியதுடன், க்ஷத்திரியர்களை ஒய்வில்லாமல் போரிட வைத்தது.

கி.மு 6-ம் நூற்றாண்டில் சீனாவில் கன்பூஷியஸ் தத்துவமும், ஈரானில் ஜாராதுஷ்டிரர் தீவிர சீர்திருத்தங்களும் தோன்றிய அதே காலத்தில், இந்தியாவில் கங்கைச் சமவெளிப்பகுதியில் புதிய சமய குருமார்கள் பலர் தோன்றினர். அவர்களில் புத்தரும் ஒருவரே. அதே காலத்தில் ஜைனர்களும் தங்கள் தத்துவங்களை உபதேசித்தனர். இப்படி ஒரே சமயத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்பிலிருந்து உயர்ந்த நோக்குடைய சமயத் தத்துவங்கள் ஏன் தொன்றவேண்டும் ? அதுவும் அவை ஏன் இந்து மதத்தின் புண்ணிய ஸ்தலங்களாகக் கருதப்பட்ட குருநிலத்திலோ அல்லது கிருஷ்ணரின் புகழ் பரப்பிய மதுராவிலோ ஏன் தோன்றவில்லை ?

அவை சில சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், பழைய இந்து நெறிகளால் அத்தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதாகும் என்கிறார் கோசாம்பி. அதற்குக் காரணமும் உறவு உற்பத்திகளின் அடிப்படையில் விளக்குகிறார்: கி.மு ஆறாம் நூற்றாண்டில், கங்கைச் சமவெளிப் பகுதியில் புதிய வர்கங்களான விவசாயிகள் பழங்குடி மரபிலிருந்து மாறி வந்தனர். பல பழைய பழங்குடி கட்டுப்பாடுகளும் உடைந்தது. வாணிபம், தொழில், விவசாயம் ஆகியவற்றின் மூலம் செல்வமும் கொழிந்தன. ஆனால் அப்போது நிலவிவந்த யஜூர்வேத முடியாட்சிமுறை தனியார் குடும்பங்களின் தடையற்ற விவசாய உற்பத்திகளுக்கு முட்டுக்கட்டையாய் விளங்கியது. விவசாயிகளின் கால்நடைகள் கணக்கற்றவாறு விலை தரப்படாமலேயே யஞ்ஞங்களுக்காக (யாகங்கள்) கவர்ந்து செல்லப்பட்டன. முறையான விவசாயத்திற்கு பொறுக்க முடியாத தொல்லைகள் நேர்ந்தன. பிராமணப் புரோகிதர்கள் மட்டுமே தொடர்ந்து பயனடைந்து வந்தனர்.

எனவே புதிதாக எழுந்த எந்த மதமும் சடங்குகளை, குறிப்பாக வைதீகச் சடங்குகளை எதிர்த்துப் போராடின. யாக பலிகளை வன்மையுடன் கண்டித்தன. இன்றளவும் கடைபிடிக்கப்படும் பசுவதை தடை, ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமயச் சீர்திருத்தங்களின் எதிரொலியே. பசுவதையை எதிர்த்த பௌத்தம், கருணையை விட பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மிகுதியாய் வேரூன்றியிருந்தது என்று வாதிடுகிறார் கோசம்பி. ( இத்தனைக்கும் பசுக்களை யாகங்களில் பலியிட்டு அவற்றைப் புசிக்கவும் செய்து வந்தவர்கள் வேதகாலத்து பிராமணர்கள்! )


புத்தரும், நவீன அரசியல் பொருளாதாரமும்
புத்தர், தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் நிர்வாணத்தையும் நல்வழிகளையும் போதித்தது தேற்றம். ஆனால் சர்வாதிகாரிய நாட்டை ஆளும் மன்னனுக்குப் புதிய கடமைகளாக என்ன முன்மொழிந்தார் என்று பார்ப்போம்:

நாட்டு மக்களுக்கு நல்லதைச் செய்ய முறையான வரி வசூல், கடும் சட்டதிட்டங்களால் கொள்ளையரிடமிருந்து பாதுகாப்பு ஆகிவற்றால் மாத்திரம் முடியாது. வறுமையும் வேலையில்லா திண்டாட்டமுமே சமூகக் கேட்டின் அடிப்படை. அறம் நன்கொடை ஆகியவற்றால் அவற்றை களையமுடியாது.

விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு விதைகளை அளிப்பது, வியாபாரத்தை நம்பி வாழும் மக்களுக்கு தேவையான முதல்களை கொடுத்துதவுவது, அரசுப்பணி ஊழியர்களுக்கு முறையாக சம்பளத்தை வழங்குவது ( அப்படிச் செய்தால் அவர்கள் மக்களைக் கசக்கிப் பிழியாமல் இருப்பார்கள்) என தீர்க்கமாகத் திட்டங்களை முன்மொழிந்தனர். இத்திட்டங்களால் விளையும் செல்வத்தைக்கொண்டு மக்களை கொள்ளையர்களிடமிருந்தும் மற்ற துன்பங்களிருந்தும் காப்பாற்ற முடியும். இவ்வாறு உற்பத்தித் தன்மையும் திருப்திகரமும் நிரம்பியதோர் சூழ்நிலையில் ஒரு குடிமகன் தன்னுடைய குழந்தைகளை மகிழ்ச்சியுடனும் வசதியுடனும் வளர்த்துவர முடியும். கருவூலத்திலிருந்தோ மற்ற நன்கொடையிலிருந்தோ கிணறுகள், குளங்கள், சாலை மருங்கில் தோப்புகள் போன்ற பொதுப்பணித்துறைகளில் செலவழிப்பதே சிறந்த திட்டமாகும்.

இது வியப்பூட்டும் ஒரு நவீன அரசியல் பொருளாதாரத் திட்டத்தின் அம்சம் என்று கோசம்பி குறிப்பிடுகிறார். அதுவும் வைதீக ய்ஞ்ஞங்கள் நடந்துவந்த பூர்வகாலத்தில் காடுகளை அழித்தவாறு முன்னேறிவந்த அந்தச் சமூகத்தில் அத்திட்டம் வழிநடத்தப்பட்டதை எண்ணும்போது இது மிக உயர்ந்த வரிசையில் வைத்து எண்ணப்படவேண்டியதோர் அறிவுத்துறை சாதனையாகும் என்று ஆச்சர்யப்படுகிறார் கோசம்பி.

புத்தரும் அவரது சீடர்களும் இறந்த பின்னரும், பௌத்த சமயத்தின் வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்றதன் காரணம், வேகமாக வளர்ந்து செல்லும் ஒரு சமுதாயத்தின் தேவைகளுக்கு மேன்மையுடன் அது பொருந்தி நின்றதேயாகும்


பௌத்த மதத்தின் எழுச்சியும், அதன் சம காலத்தில் இந்தியாவில் எழுந்த மகதப் பேரரசும், இந்திய சமுதாயத்தில் ஒரு ஆழ்ந்த மாற்றத்திற்கு வித்திட்டன. அதைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

3 comments:

Anonymous said...

Excellent blog. This is what I am looking for. could you please enable the subscribe link in your blog or let us know your atom/rss feed link info? Thanks again. -
DT (pachaimayil.blogspot.com)

Anonymous said...

Food for thought and helps to justify our deeds. keep up the work

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment