ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 4
புதிய மதங்களின் எழுச்சியும், பேரரசுகளின் தோற்றமும்
யசுர் வேத காலத்தில் பெருமளவில் கால் நடைகளையும், பிற பொருட்களையும் யாகத்தில் அளிப்பது வாழ்க்கையின் பெரும் அம்சங்களாக இருந்தது. யாகங்களை முன்வைத்து அக்கால பிராமணர் பெரும் செல்வத்தை நாடினர். அது போலில்லாமல் அதற்கு நேர் எதிர்மறையாக, மிகவும் சமூக நோக்கு கொண்டதாக புத்த மதத்தின் எழுந்தது. உயிர்க்கொலை புரிதல் கூடாது, பிக்ஷுக்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற புத்த மதக் கொள்கைகள் சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. புத்த பிக்ஷுவின் லௌகீகத் தேவைகள் மிகவும் சொற்பமானவையாக வரையறுக்கப்பட்டிருந்தது.
ஒரு பிக்ஷுவின் மொத்த செல்வங்கள் வருமாறு வரையறுக்கப்பட்டு இருந்தது: "ஒரு திருவோடு, ஒரு கமண்டலம், கரையோ, வேலைப்பாடோ இல்லாத மூன்று அரைவேட்டிகள் மட்டுமே. லாபத்தைக் கருதி, ஒரு பிக்ஷு எந்த வேலையும் (கூலி வேலையோ, பிற வேலைகளையோ) செய்யலாகாது". இந்த எளிய வாழ்க்கையை வலியுறுத்தும் புத்த மத வளர்ச்சி, அப்போதிருந்த மக்களுக்கு ஒரு தேவையான மாற்றமாகத் திகழ்ந்தது. சாதி, செல்வம், தொழில் ஆகியவற்றைக் கருதாமல் எந்தச் சடங்குகளுக்கும் முக்கியத்துவம் தராமல், ஒரு குடும்பத்தினர், ஒரு விவசாயி ஆகியோருக்கான கடமைகளை புத்த மத திருமறை நூல்கள் வகுத்தளித்தன. இத்தகைய சமுதாய நோக்கு புத்த மதத்தின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருந்தது.
கி. மு. ஆறாம் நூற்றாண்டில் எழுந்த புதிய சமயத் தத்துவங்களின் வளர்ச்சியுடன் ஒரு பெரும் அரசியல் மாற்றமும் எழுந்தது. பல்வேறு பழங்குடிகள் ஆங்காங்கே பெருங்குழுக்களாக இருந்த நிலையில் இருந்து வந்த நிலையில் இருந்து, இரு பெரும் முடியரசுகள் எழுந்தன. அவை, கோசலமும், மகதமும் ஆகும். இவ்விரண்டில் தொன்மையானது கோசலம். அயோத்யா ('கைப்பற்ற முடியாத') கோசலத்தின் முக்கிய நகரமாய்த் திகழ்ந்தது. கோசலம், கங்கையின் மூலம், முக்கிய வணிகத் தொடர்புகளைக் கொண்டது. இதற்கு மாறாக, மகதத்தின் எல்லைகளில் பெரும் காடுகளே இருந்தன. வெளி உலகத்துடன் அதிக வணிகத்தொடர்புக்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் இந்தக் காடுகளில் கிடைத்த கனிம வளங்கள் மகதத்தின் ஆட்சியை நீண்ட காலத்திற்கு நிலை கொள்ள வைத்தது. ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் கோசலத்தின் வீழ்ச்சி மகத்திற்கு கிட்டியது. விதூபன் என்ற கோசல மன்னன் தன் படைகளை ராப்தி நதியின் வறண்ட மணற்படுகையில் முகாம் இட்டு இருந்தான். திடீரென்று தோன்றிய பெருவெள்ளத்தில் கோசல படை முற்றிலும் அடித்துக் கொண்டு போய் விட்டது. அப்போது மகத மன்னனாய் இருந்த அஜாதசத்ரு, அன்றைய இந்தியாவின் தனிப் பெரும் மன்னனாய் கருதப்பட்டான். மகதம் பெரும் வர்த்தக வழிகளின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.
அன்றைய முடியரசுகளின் முக்கியப் பிரச்னை என்னவென்றால் அங்குமிங்கும் சிதறிக் கிடந்த பழங்குடி வாழ்க்கை முறையே. இந்தப் பழங்குடிகள் தனிச் சொத்துரிமை கொண்டாடாமல் தங்களது குழுக்களின் சொத்துக்களை பொதுச் சொத்துக்களாகக் கருதினர். தங்கள் சுதந்திரமான வாழ்க்கை முறையை எந்த முடியாட்சிக்கும் இவர்கள் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. இவர்கள் வசித்து வந்த விரிந்த, அடர்ந்த காட்டுப் பகுதிகள் எந்த மன்னராலும் இவர்களை எளிதாக வெல்ல முடியாத அரணாய் விளங்கின. மேலும், வர்த்தக வழிகள் காடுகளை ஊடுருவிச் சென்றன. அந்த வர்த்தக வழிகளை உபயோகித்த வணிகர்களின் பாதுகாப்பு காடுகளில் வாழ்ந்த இந்தப் பழங்குடிகளின் கைகளில் தான் இருந்தது. வர்த்தகத்திற்கு பாதுகாப்பு அளிக்க இயலாத, கையாலாகாத நிலையில் முடியாட்சி மன்னர்கள் இருந்தனர். எனவே, இந்தப் பழங்குடி வாழ்க்கை முறையை, முடியாட்சி வாழ்க்கை முறையோடு இணைப்பது ஒரு முக்கியத் தேவையாக அமைந்தது. மகத ஆட்சி கலை இந்த வேலையை ஒரு நவீனத் தொழில் முறை நேர்த்தியுடன் செய்தது. இந்த ஆட்சிக்கலையின் தொகுப்பே அர்த்த சாஸ்திரம்.
மகத ஆட்சிக்கலையும் அர்த்த சாஸ்திரமும்
மகத ஆட்சி நீண்ட காலம் ஓங்கி வளர்ந்ததின் முக்கியக் காரணம் அர்த்தசாஸ்திரத்தை ஒட்டிய ஆட்சிக்கலையைக் கைக்கொண்டதே என்று கூறலாம். உலகில் எழுதப்பட்ட, அல்லது தொகுக்கப்பட்ட, அரசியல் கொள்கை, நிர்வாகம் போன்றவற்றை வரையறுக்கும் நூல்களில் (e.g., Prince, by Machiavelli), இன்றும் கூட, படிப்பவரை பிரமிப்பில் ஆழ்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம் என்கிறார் கோசாம்பி. கி. மு. நாலாம் நூற்றாண்டில், அன்று நிலவிய அரசியல் கொள்கைகளை தொகுத்தவர் சாணக்யர். அர்த்தசாஸ்திரத்தின் சிறப்பு என்னவென்றால், இது ஒரு நாட்டை ஆழ்வதற்கு தேவையான செயல்களை எந்தப் பாசாங்கும் இன்றி முன்வைத்தது. சூழ்ச்சியும், சூதும் அரசை ஆழ்வதற்கு தேவை என தெளிவாகக் கூறுவது, இன்றைய ஜனநாயக நோக்கோடு படிப்பவர்க்கு கொஞ்சம் அதிர்ச்சியை அளிக்கும், என்பதில் சந்தேகமில்லை. உதாரணமாக, அரியணைச் சச்சரவு என்பதை ஒரு அரசின் அற்பமான தொழிற் சங்கடம் என்றே சாணக்யர் கருதினார் என்பதை இந்த மேற்கோளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்: "இளவரசர்கள் நண்டுகளைப் போல அப்பன் விழுங்கிகள்" என்கிறார் சாணக்யர். ஒரு இளவரசனை எப்படி பயில்விக்க வேண்டும் என்று ஒரு அத்தியாயத்திலும், தந்தையால் நாடு கடத்தப்பட்ட இளவரசன் எப்படி மீண்டும் குறுக்கு வழியில் பட்டத்தை அடைய முடியம் என்று அடுத்த அத்தியாயத்திலும் விளக்குகிறது அர்த்தசாஸ்திரம். பழங்குடிகளை எப்படி திட்டமிட்டு உடைப்பது என்பதையும் விவரிக்கிறது அர்த்தசாஸ்திரம்.
பழங்குடிகளுக்கிடையே எப்படி பூசல்களை உண்டு பண்ணுவது, அவர்களது மூட நம்பிக்கைகளை எப்படி பயன் படுத்தி கொள்வது, உயர் குலப் பெண்கள் போன்ற தோற்றம் கொண்ட பெண்களை கொண்டு எப்படி அவர்களை வசப் படுத்துவது, முதிய பழங்குடி தலைவர்களுக்கு எதிராக இளைய பழங்குடிகளை நிறுத்துவது, என பல சூழ்ச்சிகளை ஆட்சிக் கலையின் அம்சமாக அர்த்தசாஸ்திரம் நிறுத்துகிறது. போரின் மூலம் வெல்வதை விட, சூழ்ச்சியின் மூலம் வெல்வதையே அர்த்தசாஸ்திரம் முன் வைக்கிறது. அர்த்தசாஸ்திரத்தை முன்னிறுத்தி கோசாம்பி சொல்லும் கருத்துக்கள் மிக சுவாரஸ்யமானவை.
பழங்குடிகளுக்கிடையே எப்படி பூசல்களை உண்டு பண்ணுவது, அவர்களது மூட நம்பிக்கைகளை எப்படி பயன் படுத்தி கொள்வது, உயர் குலப் பெண்கள் போன்ற தோற்றம் கொண்ட பெண்களை கொண்டு எப்படி அவர்களை வசப் படுத்துவது, முதிய பழங்குடி தலைவர்களுக்கு எதிராக இளைய பழங்குடிகளை நிறுத்துவது, என பல சூழ்ச்சிகளை ஆட்சிக் கலையின் அம்சமாக அர்த்தசாஸ்திரம் நிறுத்துகிறது. போரின் மூலம் வெல்வதை விட, சூழ்ச்சியின் மூலம் வெல்வதையே அர்த்தசாஸ்திரம் முன் வைக்கிறது. அர்த்தசாஸ்திரத்தை முன்னிறுத்தி கோசாம்பி சொல்லும் கருத்துக்கள் மிக சுவாரஸ்யமானவை.
பொருளாதார அடிப்படியில், நில நிர்வாகமும், வர்த்தகக் கட்டுமானமும் மகதத்தின் பலத்தின் அடிப்படையாகத் திகழ்ந்தன. அவற்றை அடுத்துப் பார்ப்போம்.
நில நிர்வாகம்
அர்த்தசாஸ்திரம் நிலங்களை, 'ராஷ்டிரா' நிலம் என்றும், 'சீதா' நிலம் என்றும் இருவகையாகப் பிரித்தது. ராஷ்டிரா நிலத்தை கொண்டவர், பழைய ஆரிய வழிக்குடியில் இருந்து, நிலச்சொத்துரிமை கொண்டவர். இவர்களது நிலத்தின் விளைச்சலில், ஆறில் ஒரு பங்கு, வரியாக வசூலிக்கப்பட்டது. சீதா நிலம் என்பது, தரிசு நிலம் - காடுகளைத் திருத்திச் சீரமைத்த 'பொது நிலம்', அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த நிலத்தின் சாகுபடியை அரசாங்கமே நிர்வகித்தது. அரசாங்கம், அணைகள், கால்வாய்கள் ஆகியவற்றைக் கட்டி, ராஷ்டிரா நிலத்திற்கு தண்ணீர் கொண்டு வருமானால், நில வரிக்கு மேல் நீர் வரியும் வசூலிக்கப்பட்டது.
சீதா நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் வேலையை அரசே மும்முரமாய்ச் செய்தது. இதில் உழவு செய்தவர்கள், போரில் வெற்றி அடைந்த பின்னர் கைப்பற்றிய எதிரி வீரர்களோ, தன் சொந்த ஆட்சியில் இருந்தே வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்ட சூத்திரர் குடும்பங்களாகவோ, குற்றம் செய்து அந்தக் குற்றத்திற்கு தண்டனையாக இந்த வேலையை ஏற்றுக் கொண்டவர்களாகவோ, போரில் ஈடுபட்ட மாஜி வீரர்களாகவோ இருக்கலாம். இந்த நிலங்களில் பயிரிட்டு வேலை செய்யும் உரிமையை மட்டுமே அந்தக் குடியானவன் பெற்றிருந்தான். அவன் தன் வேலையை ஒழுங்காக செய்து வருவானேயானால், அந்த நிலத்தை உழும் உரிமை அவன் சந்ததியற்குப் போய்ச் சேரும். இல்லையேல் பிறருக்கு அந்த உரிமை அளிக்கப்படும். இந்த விளை நிலங்களின் வரி குறைந்த பட்சம் ஐந்தில் ஒரு பகுதியாகும். தண்ணீர் வசதி அரசாங்கத்தின் உதவியால் கிட்டி இருந்தால், அதிகப்பட்சமாக, வரி மூன்றில் ஒரு பகுதியாக இருந்தது. இப்படி, அரசாங்கமே, தன் செலவிற்கான, (படை, பாதுகாப்பு) போன்ற செலவுகளுக்கு நேரடியாக உற்பத்தி முறையில் இறங்கியது. இந்த வரிகளை வசூலிக்க ஒரு திறமையான அரசாங்க நிர்வாக அமைப்பும் விளங்கியது. மக்களின் உபரிப் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தை நேரடியாகச் சென்றடைய வழி வகுக்கப்பட்டது. இந்த சீதா நிலத்தின், குடியானவர்கள் இந்த வேலையைச் செய்வதைத் தவிர வேறெதிலும் மனம் செல்லாத வகையில், கட்டுப்படுத்தப் பட்டார்கள். அவர்கள் இடத்தில், மதப் பிரசாரர்களோ, கேளிக்கைச் செயல்களோ இல்லாத வகையில், அவர்களது வாழ்க்கை கட்டுப்படுத்தப் பட்டது. அரசின் பங்கிற்கான விளை பொருளை பதனப் படுத்தும் வேலை, குடியானவர்களின் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பொதுப் பணிகளுக்குத் தேவையான உழைப்பைத் தராத எந்த சீதா நிலக் குடியானவனும் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையின் ஒரே பொருள், அரசிற்கு தேவையான உபரிகளை உற்பத்தி செய்வது மட்டுமே. கி. மு. நான்காம் நூற்றாண்டில் வந்த கிரேக்கர்கள், பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்து இடங்களுக்கு மிக அருகிலேயே குடியானவர்கள், அந்தப் போரைப் பற்றி எந்தக் கவனமும் கொள்ளாமால் அசட்டையுடன் சாலோட்டிக் கொண்டு இருந்ததை ஆச்சர்யத்துடன் குறிக்கிறார்கள். இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாண்டர், வந்து போனது கூட இந்தியாவில் எந்த விதமான நிலையான மாற்றத்தை உண்டு பண்ணவில்லை. மகத ஆட்சியில் அங்குமிங்கும் கிரேக்கர்கள் குறிப்படுவதும், பிற்காலத்தில் எழுப்பப்பட்ட ஸ்தூபிகளில் கிரேக்க தொழில் நுட்பம் இருப்பதும் மட்டுமே கிரேக்க படையெடுப்பின் எச்சங்களாய் விளங்குகின்றன. உண்மையில், எந்த மாற்றமும் இல்லாத கிராமிய வாழ்க்கையின் மடமையை போற்றிப் பாதுகாப்பதுவே இந்திய முடியரசுகளின் குறிக்கோளாய் இருந்தது என்கிறார் கோசாம்பி. இந்தக் கொள்கை, இன்றளவில் கூட, இந்தியாவில் வலுவான ஒரு பாதிப்பை விட்டுச் சென்றிருக்கிறது என்று அறியலாம்.
இந்த சீதா நிலத்திற்கும், ராஷ்டிரா நிலத்திற்கும் அப்பால், துணிவுள்ள மக்கள் நேரடியாக தாங்களே காடுகளைச் சீர்திருத்தி வாழ முற்பட்டனர். இவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் தொழில் வல்லுநர் குழுக்களாக இருந்திருக்கலாம். அரசாங்கத்தின் பார்வையில், இப்படி வரி வசூலுக்கு அப்பாற்ப்பட்டு இருந்தவர்கள், 'பிறவிப் போக்கிரிகளாக' கருதப்பட்டனர். சரியான சந்தர்ப்பத்தில், அவர்களும் ஆட்சியின் கட்டுக்குள் கொண்டு வரப் பட்டனர்.
மௌரிய ஆட்சி முடியும் வரை அரசிற்கும், குடியானவர்களுக்கும் இடையே எந்தத் தரகர்களும் இல்லை. நிலப் பிரபுத்துவ காலத்தில், இந்தத் தரகு வேலையைச் செய்து வந்த நிலக் கிழார்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றார்கள். சீதா நிலத்தின் விளைச்சலில், பாதிக்குப் பாதி இந்த நிலக்கிழார்களிடம் சென்றது. அதில் ஆறில் ஒரு பகுதியை அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு, மீதியில் அவரவர் ஒரு சிறு தனிப் படையை அமைத்துக் கொண்டனர். பின்னால், இந்த அரசைக் காக்கும் பொறுப்பு, இவர்கள் மீது விழுந்ததால், இவர்கள் வசமே அரசும் இருந்தது.
மகத அரசும் பண்ட உற்பத்தியும்
மகதப் பேரரசு நாட்டில் உள்ள அனைத்து கனிம வளங்களையும், சுரங்கத் தொழில்களையும் தானே எடுத்துக் கொண்டது. சாணக்யரின் கூற்றுப்படி, " நாட்டின் கருவூலம் சுரங்கத் தொழிலை நம்பி உள்ளது; நாட்டின் படை கருவூலத்தை நம்பி உள்ளது. எவன் நாட்டின் கருவூலத்தையும், படையையும் வைத்திருக்கின்றானோ, அவனால் மண்ணுலகு முழுவதையும் வெல்ல முடியும்". அரசாங்கம் சரியான எடை கொண்ட ( மூன்றரை கிராம் எடையுள்ள) நேர்த்தியாகச் செய்யப்பட்ட வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தன. காசுகள் சரியான எடை கொண்டிருந்தனவா என்று பார்க்க ஒரு தனித் துறை இருந்து வந்தது. பொருள் கொள்கலங்கள் (தராசு, எடை போன்றன) சரியான அளவைக் கொண்டிருந்தனவா என்று (ஒரு வரிக்கு உட்பட்டு) கவனிக்கப் பட்டன. இந்த வர்த்தக அடிப்படையை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட்டது.
மௌர்ய காலத்து மூன்றரை கிராம் எடையுள்ள, இலட்ச்சினை பொறித்த வெள்ளிக் காசுகள் (கி. மு. மூன்றாம் நூற்றாண்டு) |
சரக்குகள், எந்த இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டனவோ அந்த இடத்திலேயே தனியார் வர்த்தகரால் விற்கப்படுவது தடை செய்யப் பட்டது. இதில் இருந்து தெரிவது என்னவென்றால் மூலப் பொருட்கள் பண்டமாகப் பட வேண்டும். அவற்றைத் தொலைவான, அந்தப் பண்டங்கள் கிடைக்காத இடத்திற்கு கொண்டு செல்வதால், அந்தப் பொருளின் விலைமதிப்பை (value addition) உயர்த்த வேண்டும் என்பதே. அத்தியாவசியப் பண்டங்களை ஒரு குறிப்பிட்ட விலையில் (லாபத்துடன்) விற்க அனுமதிக்கப் பட்டது. அத்தியாவசியப் பண்டங்களை பதுக்கி வைத்து அதிக லாபத்தில் விற்கும் முறை தவிர்க்கப்பட்டது. அப்படிச் செய்யும் வியாபாரிகள் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர்.
அரசாங்கம், தனது விளை நிலத்து வரிகளை பதனப் படுத்தப்பட்ட பொருட்களாகவே பெற்றுக் கொண்டது - உதாரணமாக எண்ணெய் வித்துக்களைப் பெறாமல், எண்ணெயாக பெற்றுக் கொண்டது. இதற்கு தேவையான உபரி உழைப்பையும், இலவசமாகப் பெற்றுக் கொண்டது குறிக்கத்தக்கது. அரசாங்கம், எல்லா தொழில்களுக்கும் அளவான சம்பளத்தை அளித்தது. போர் வீரர்களுக்கு, மாத சம்பளம் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கொடுத்த பணத்தை, அரசாங்கமே மிகவும் புத்திசாலித்தனமாக பெருமளவில் திரும்பப் பெற்றுக் கொண்டது. போர் வீரர்கள் இருக்கும் இடத்தில், விற்பனையாகும் பொருட்களை அரசே நல்ல லாபத்தில் விற்றது. மது, பொது மகளிர் போன்றவற்றை நிர்வகிக்கும் அமைச்சர்களும் இருந்தனர். மதுவின் உற்பத்தியில் இருந்து விற்பனை வரை அனைத்தையும் அரசே நிர்வகித்தது.
இதில் இருந்து மகத அரசு மிக வலுவாக பணப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கியது என்பது புலனாகும். இந்தப் பொருளாதாரத்தின் பயன்கள், நகரங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வணிகத்திலும் ஈடுபட்ட மக்களை வந்து சேர்ந்தது என்பது தெரிகிறது. அதே சமயம், இந்தப் பொருளாதாரத்திற்கு அடிப்படையாக விளங்கிய சீதா நில மக்களுக்கு, இந்தப் பயன்கள் எதுவும் வந்தடையவில்லை.
மகதத்தின் உச்சம்
அசோகரின் காலமே மௌரிய ஆட்சியின் உச்சம் எனக் கூறலாம். அசோகர், கலிங்கப் போருக்குப் பின், புத்த மதத்தைத் தழுவினார் (இருப்பினும், எல்லா மதங்களையும் ஆதரித்தார்).
அர்த்தசாஸ்திரத்தைப் பொறுத்தவரை அரசுக்கு பயன் தரும் செயல்களை மட்டுமே ஒரு மன்னர் செய்ய வேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையை, அசோகர் முதல் முறையாக மாற்றி அரசுக்கு லாபமற்ற, ஆனால் மக்களுக்குப் பயன் தரக் கூடிய செயல்களை செய்ய ஆரம்பித்தார். உதாரணமாக, எல்லா வணிகச் சாலைகளிலும் நிழல் தரும் மரங்களும், சரியான தூரங்களில், காளைகளும், வணிக வண்டிகளும் இறங்கி இளைப்பாற தண்ணீர் வசதிகளும், மருத்துவ வசதிகளும் (மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்) செய்யப் பட்டன. மிக அழகான மாளிகைகள் கட்டப் பட்டன. மகதம் பெருமளவில் விஸ்தாரம் அடைந்தது. இந்த விஸ்தரிக்கப்பட்ட, மகதத்தை நிர்வகிக்க, புதிய மேல் நிலை நிர்வாகிகள் கொண்ட வர்க்கம் எழுந்தது. இந்த மேல்நிலை நிர்வாகிகள், 'தர்ம மகாமாத்திரர்' என்று அழைக்கப் பட்டனர். இச்சொல்லுக்கு அசோகர் காலத்திற்கு பொருந்தி வரக் கூடிய சரியான மொழிபெயர்ப்பு 'நடுநிலை மேலாளர்' என்பதே. இந்த நடுநிலை அறம் (Equity) என்பது நியாயத்திற்கும், நீதிக்கும் அடிப்படை என கொள்ளப்படும் விதிமுறைச் சட்டங்களுக்கும், பொது மரபு சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட கொள்கையாகும். இது தொடக்கத்தில் வழங்கப்பட்ட 'தம்மா' என்ற புத்த மத பொருளுடன் பொருந்திச் சென்றது.
அசோகரால் எழுப்பப்பட்ட சாஞ்சி ஸ்தூபம் (கி. மு. மூன்றாம் நூற்றாண்டு) |
உலகெங்கும் எழுந்த அரசுகளில், அரசாங்கம் மக்களின் மேல் கொண்ட உரிமைகளை மிக எளிதாக சட்ட திட்டங்கள் மூலம் அமுல் படுத்துவதே இயல்பான செயலாக இருந்தது. அரசின் அதிகாரம் கட்டற்ற அளவில் அரசிடம் இருந்து மக்கள் மேல் செலுத்தப்படும் ஒரே திசையில் இருந்தது. மக்களுக்கு அரசிடம் எதையும் கோரும் உரிமை எதுவும் வழங்கப்பட்டதில்லை. இதையே அர்த்தசாஸ்திரமும் வழி மொழிந்தது.
உலகிலேயே முதல் முறையாக, அசோகரின் ஆட்சிக்காலத்தில் அரசின் அதிகாரத்தின் எல்லைகளை மக்களின் உரிமைகள் நிர்ணயித்தன. மக்களுக்கு என்று, இயல்பான சில உரிமைகள் உண்டு. அரசாங்கம் அந்த உரிமைகளை காக்க/மதிக்க வேண்டும் என்ற வரையறைகள் நிறுவப்பட்டன. மக்கள் உரிமைச் சட்டங்கள் (People's Bill of Rights) அசோகரால் வெளியிடப்பட்டன. ஆண்டுக்கு மூன்று தடவையாவது இந்த அரச கட்டளைகளை பெரிய பொதுக் கூட்டங்களில் படித்து கவனமுடன் மக்களுக்கு விளக்கப் படவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. சிறைக் கைதிகளின் நலத்தை கண் கொள்ள தர்மமகாமாத்திரர்களுக்கு உத்தரவிடப் பட்டது. சிறைக் கைதிகளின் திக்கற்ற குடும்பக்களுக்கு உதவி வழங்கப் பட்டது. இப்படி பல பொது நலப் பணிகள் பெருமளவு பணத்தை புழக்கத்தில் கொண்டு வந்தன.
அசோகரும், அவரது அதிகாரிகளும் மேற்கொண்ட எண்ணற்ற பயணங்கள், போக்குவரத்துச் சிக்கல்களைப் பெருமளவு குறைத்தது. பரந்து, விரிந்த மகதத்தில், பிராந்திய உபரிகள் அவை விளைந்த இடத்திலேயே தீர்ந்து விட்டன. குடிமக்கள் பால் தோன்றிய புதிய மனப்போக்கும், வணிக வழிகளின் மேல் தோன்றிய புதிய பணித் திட்டங்களும் அரசுக்கு பலமான வர்த்த அடிப்படையை அளித்தது. அர்த்தசாஸ்திரத்தின் அடிப்படையில் எழுந்த மகதம் முதலில், நிலவரித்திட்டம், வர்த்தகக் கட்டுப்பட்டு முறைகள் மூலம், பல வர்க்கங்களைத் தோற்றுவித்தது. அர்த்தசாஸ்திரத்தின் அடிப்படைப் நோக்கம் அரசாங்க நிர்வாகத்தை ஆட்சியின் சொந்த நலனுக்காக நடத்துவதே. வர்க்கங்களுக்கு இடையே இருந்த வேறுபாடுகளை எதிர்கொள்ளும் கடமையை அர்த்தசாஸ்திரம் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. இதை அசோகர், தனது நடுநிலைக் கொள்கையான தர்மமகாமாத்திரர்கள் வாயிலாக வர்க்க வேறுபாடுகளை நேரடியாக எதிர்கொண்டார். அரசரோ, அல்லது அரசரின் அதிகாரம் பெற்ற அதிகாரியோ, நேரடியாக இந்த வர்க்கப் பிரிவினைகளை சமரசம் செய்தனர். இந்தக் கொள்கையின் அடிப்படையை அப்போது எழுந்த புத்த மதம் வகுத்தளித்தது.
மகதத்தின் வீழ்ச்சி
அசோகர் காலத்தில் பரந்து, விரிந்திருந்த மகதப் பேரரசு (கி.மு. 265) |
நாடு விஸ்தாரமடைந்த போது பல சிக்கல்கள் நிகழ்ந்தன. காடுகளை சீர்திருத்தும் போது, எல்லாக் காடுகளும் வளமான பயிர் நிலங்களை அளிக்கவில்லை. அந்த இடங்களில் நேர்ந்த பஞ்சங்களும், வெள்ளங்களும், அரசாங்கத்திற்கு அவற்றை நிர்வகிக்கும் செலவுகளுடன், அந்தச் சங்கடங்களை எதிர்கொள்ளும் செலவுகளையும் அதிகமாக்கின. விரிந்திருந்த தேசத்தில் எல்லா இடங்களிலும் அரசாங்கம் தனது கொள்கைகளை எளிதாக அமுல் படுத்த முடியவில்லை. மகதத்தில் இருந்த சுரங்கங்களில் இருந்து எடுத்த இரும்புகளின் அளவு/தரம் குறைய ஆரம்பித்தது. அதனால், மிக விரைவாக வளர்ந்த ஒரு தேசத்திற்கான தரமான உற்பத்திக் கருவிகளை செய்ய முடியவில்லை. கருவிகளின் தரம் குறைந்தது. இது வெறும் யூகம் இல்லை. பிற்கால மகதத்தின் காசுகள், எடை குறைந்த வெள்ளியால், தாமிரக் கலப்புடன் செய்யப்பட்டிருந்தன என்பது தொல்பொருள் ஆய்வில் தெரிய வருகிறது. மிகத் தொலைவான பகுதிகளில் அரசாங்கத்தால் தனது கட்டுப்பாட்டை எளிதாக நிறுவ முடியவில்லை. இதுவே மகதப் பேரரசின் வீழ்ச்சியின் தொடக்கம் எனலாம்.
1 comment:
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
Post a Comment