Monday, June 20, 2011

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 2
பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 2
பரிந்துரை: சண்முகம்


இப்பொழுது இந்து சமய இலக்கியங்களைப் பற்றிப பார்ப்போம்.

பல நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியில், இராமாயணம் மூன்று பதிப்புகளாக வந்திருக்கிறது. முதல் பதிப்பில், ஒரு வரலாற்றுக் கதையாக - இராமனின் மனைவி சீதையை அபகரித்துச் சென்ற இராவணனுடன் இராமன் புரிந்த போர், என்ற சிறு கதையாக மட்டுமே இருந்தது. இரண்டாவது பதிப்பில், கதையுடன், சமூகம் நீதி சமயம் தொடர்பாக மக்கள் ஆற்ற வேண்டிய போதனை நூலாகப் பரிணமித்தது. மூன்றாவது பதிப்பில், மேலும் தொல்கதைகள், தத்துவங்கள், அறிவு, கல்வி, அறிவியல்கள் ஆகிய அனைத்தும் கொண்ட கருவூலமாக முற்று பெற்றது.

மகாபாரதமும் மூன்று பதிப்புகளாக வெளிவந்ததை அறிகிறோம். முதலில், வியாசரால் எழுதப்பட்ட பதிப்பு, 8800 பாக்களைக் கொண்ட வரலாற்றுக் கதை, அதாவது பாண்டவர்களுக்கும் கௌரவரவர்களுக்குமிடையே நடந்த ஒரு போரைப் பற்றியதாகும். இரண்டாவது பதிப்பில், வைசம்பாயணர் எழுதிய 'பாரதம்', 24000 பாக்காளாக விரிவடைந்து மூலக்கதையோடு சமூக, தார்மிக, சமய கோட்பாடுகளைப் போதிக்கும் ஒரு கட்டளை நூலாக வடிவெடுத்தது. மூன்றாவது பதிப்பில், 1 லட்சம் பாடல்களைக் கொண்ட தொல்கதைகள் அடங்கிய 'மகாபாரதமாக' சவுதி என்பவரால் உருவெடுத்தது.

மகாபாரதத்தின் ஒரு பிற்சேர்க்கையாய், பின்னாளில் (கி. பி. 4 -ம நூற்றாண்டு) தோன்றிய கீதையை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார் அம்பேத்கர்.

பண்டைய இந்திய இலக்கியத்தில் கீதை பெறும் இடம் என்ன ? இந்துக்கள் கீதையைத தங்கள் வேதமெனக் கருதுகிறார்கள். கீதை எதைப போதிக்கிறது ? கீதையில் பல உயரிய, அழகிய சிந்தனைகளும், கவிதா சக்தியும், ஆன்மிக எழுச்சியும் உள்ளதாயினும், பலகீனமான கருத்துக்களும், சப்பைக்கட்டு கட்டும் முரண்பாடுகளும் முதிர்ச்சியுறாதத தத்துவக் கருத்துக்களின் தொகுப்பாகவும் உள்ளது என்கிறார் அம்பேத்கர்.

உதாரணமாக, சில சமயம் கிருஷ்ணன் தனிப்பெருங்கடவுளாகிய தான் உலகம் யாவையும் படைத்துக் காப்பதாகக் குறிப்பிடுகிறார். பிறிதொரு சமயம் வேதாந்தக் கருத்தாகிய பிரம்மத்தையும் மாயையையும் விளக்குகிறார்.

கீதை தத்துவ நூலா ? அல்லது சமய நூலா ? இரண்டும் அல்ல, தத்துவ அடிப்படையில் சில சமயக் கோட்பாடுகளைத் தூக்கிப்பிடிக்கும் நூல். இந்தக் காரணத்தினால் கீதையை சமய நூலாகவோ தத்துவ நூலாகவோ கருத எவரும் விரும்பினால் அவ்வாறே செய்து திருப்திப் பட்டுக் கொள்ளலாம் என்கிறார் அம்பேத்கர். ஆனால், அடிப்படையில் சமயத்தைக் காப்பதற்கு தத்துவத்தைப் பயன்படுத்தும் இரண்டும்கெட்டான் நூலே பகவத்கீதை.

சுருக்கமாகக் கூறினால், முதலில் கீதை போரை நியாயப்படுத்துகிறது. இரண்டாவது, உடல் அழியக்கூடியது, ஆன்மா அழிவற்றது. உடலை அழிக்கலாம். அதாவது, ஒரு மனிதனைக் கொள்வது இரங்கத் தக்கதன்று. போரும் அதனுடன் உண்டாகும் கொலையும் துயரத்திற்கோ வெட்கப்படுவதற்கோ உரியன அல்ல என்கிறது கீதை. மூன்றாவது, நான்கு வருணங்களை இறைவன் படைத்தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. வருணதர்மம் ஐயத்துக்கிடமின்றி புனிதமானது என்றும் இயல்பான பிறவிக் குணங்களின் ( ப.கீதை இயல் 4, செய்யுள் 13 ) அடிப்படையில் வருணம் தீர்மாணிக்கப்படுகிறது என்கிறது கீதை. நான்காவதாக, கர்ம மார்க்கத்திற்கு கீதை அளிக்கும் விளக்கம், மோட்சமடைய வேள்விகள் போன்ற சமய வினைகளை மேற்கொள்வது ஆகும்.

பகவத்கீதை கர்மயோகத்தை 'செயல் ஆறுதல் முறை' என்றும் ஞானயோகத்தை 'அறிவு அறிதல் முறை' என்றும் கருதுவது முற்றிலும் தவறானது என்கிறார் அம்பேத்கர். செயலுக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் பொதுவான தத்துவ விசாரணை பற்றி கீதை அக்கறை கொள்ளவில்லை.

முதலில், கீதை பொதுமையான கர்மயோகத்தைப் பற்றிப் பேசவில்லை, மாறாக, ஜைமினியின் கர்ம காண்டத்தில் குறித்த கோட்பாடுகளையே, அதாவது வேதங்களில் கூறப்பட்டுள்ள சமய வினைகளை ( ritual practice ) ஆற்றுவதையே கர்மயோகம் என்கிறது. கர்மத்தைப் பற்றிப்பேசும்பொழுது, செயல் அல்லது செயலின்மை பற்றியோ, சாந்த நிலை அல்லது வினையைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, சமய வினைகளைப் பற்றியும் விரதங்களைப் பற்றியும் கூறுகிறது என்பதை கீதை படித்த எவராலும் மறுக்க இயலாது. (அதே போல், ஞானயோகமோ வாதராயணரின் பிரம்ம சூத்திரத்துள் அடங்கியது என கீதை குறிக்கிறது.) கீதையின் குறுகிய கோட்பாடுகளை வரிந்து கட்டிக் கொண்டு, பரந்து விரிந்த பொருள் கூற முயலும் தந்திரத்திற்கு திலகரையே குறை கூற வேண்டியுள்ளது என்கிறார் அம்பேத்கர்.

கிருஷ்ணன், பிறப்பிக்கும் இரண்டு கட்டளைகளைப பார்ப்போம். சதுர்வருண நெறியிலமைந்த கர்ம காண்டத்தை (சமய வினைகள், விரதங்கள் மற்றும் வேள்விகள்) அறிவுடையார் எதிர்க்கக்கூடாது (ப.கீதை இயல்-3, செய்யுள்-26 ) . இரண்டாவது, அவரவர் தத்தமக்கு விதிக்கப்பட்ட வருண தர்மத்தை ஆற்ற வேண்டும். பக்தியால் மட்டும் மோட்சத்தை அடையமுடியாது, வருண தர்மத்தையும் கடைபிடித்தல் வேண்டும். (ப.கீதை இயல்-18, செய்யுள் 41-48 )

சதுர் வர்ணத்தை எதிர்த்த, அஹிம்சையைப போதித்த, வேத வேள்விகளையும் பலிகளையும் கண்டித்த, சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை நல்கிய பௌத்தத்திற்கு எதிர்புரட்சியாய் வந்த கர்ம காண்டத்திற்கு தத்துவப பாதுகாப்பையே பகவத்கீதை அருளியது !

இதில் வேடிக்கை என்னெவென்றால், பௌத்தத்தை எதிர்க்க எத்தனித்த கீதை, புத்த தத்துவங்களையே கடன் வாங்கி, கிருஷ்ணன் தன வாயால் அருளியது போல் இயம்பியது தான் ! கீதை பிரம நிர்வாணத்தை அடைய 1 ) தன்னம்பிக்கை 2 ) தீர்மானமான உறுதி 3 ) இலட்சிய நினைவு 4 ) உளமொத்த தியானம் 5 ) மெய்யறிவு ஆகிய வழிகளைக் கூறுகிறது. (நிர்வாணம் என்ற சொல்லே உபநிடதங்களில இல்லை) புத்தரின் மகாப்பரிநிம்பன சுத்தாவில் நிர்வாணத்தை அடைய இதே வழிகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கீதையின்படி உண்மையான பக்தன் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் 1 ) கனிவான அன்பு 2 ) கருணை 3 ) பரிவூட்டும் இன்பம் 4 ) பற்றின்மை ஆகியவை பற்றி பேசுகிறது. இவையாவும் வரிக்கு வரி, மனப்பயிற்சிக்கு உதவிடும் குணங்களாக மகாபதன சுத்தா, தேவிஜ்ஜ சுத்தா ஆகிய பௌத்த நூல்களில் வழங்கப்பட்டுள்ளன. இதே போல், மஜ்ஜிஹின நிகாயா சுத்தா ஆகிய சுத்தாக்களில் உள்ள கருத்தியல் வரிக்கு வரி கீதையில் சொல்லப்பட்டிருப்பது எவராலும் மறுத்திட இயலுமா என்று கேட்கிறார் அம்பேத்கர்.

கர்ம யோகம், ஞான யோகம் என்ற உயர்நத தத்துவங்களைச சொல்வதே பகவத்கீதை என்று கேட்டு வளர்ந்த என் போன்ற வாசகர்கள் கீதையை தாங்களாகவே படித்து, தத்தமது முடிவுக்கு வர வேண்டியது உசிதம்.

இப்பொழுது புராணத்திற்கு வருவோம். புராணங்கள் மொத்தம் 18. இவை விஷ்ணு, சிவன், பிரமமா, சூரியன், தேவி ஆகிய கடவுள்களைப் பற்றியதாகும். தொடக்கத்தில், அண்ட கோளங்களின் சிருஷ்டி, அழிவு, குலவழி மரபு, பரம்பரை என்று கூறி வந்தவை, பின்பு கடவுளின் அவதாரங்களை இணைத்து, பிற்பாடு ஸ்மிருதி தர்மத்தையும் சேர்த்துக் கொண்டது. புராணங்களின் குறி இலக்கும், கருப்பொருளும் பெரிதும் விரிவு படுத்தப்பட்டிருப்பது கண்கூடு.


இனி, பெண்களின் இடம் குறித்து பண்டைய இந்தியாவில் நிலவி வந்த நிலை என்ன என்று பார்ப்போம். இந்தியப் பண்பாட்டின் பாதுகாவலர்களாக பெண்கள் போற்றப்படுகிறார்கள். மனு பெண்களைப் பற்றி என்ன அபிப்ராயப் படுகிறார் ?

'ஆண்களைச சபலம் கொள்ளச் செய்வதே பெண்களின் இயல்பு... கற்று அறிந்தவனைக் கூடத தவறான வழியில் இட்டுச்செல்பவர்கள்... ஒருவன் தனது தாய் சகோதரி மகள் ஆகியோருடன் கூட தனிமையாக இருக்கக்கூடாது. புலன்கள் சக்தி வாய்ந்தவையாகையால் அவனை ஆட்கொண்டுவிடும். பெண்கள் தங்கள் மோகத்தினாலும், மாறும் குணத்தினாலும், இயற்கையான இரக்கமின்மையினாலும் தங்கள் கணவர்களுக்கு விசுவாசமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்....'

இப்படியெல்லாம் பெண்களுடைய 'இயற்கை'யை வகுத்துவிட்டு, அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று மனு சொல்கிறார்: ' ஒரு சிறுமியோ, இளம் பெண்ணோ, வயதான் பெண்ணோ கூட எதையும் சுயேச்சையாக தன சொந்தவீட்டில் கூட எதையும் செய்யக்கூடாது.'

பெண்ணின் இலட்சியம் தான் என்ன ? 'கணவனின் ஆயுள் உள்ளவரை அவனுக்குக் கீழ்ப்பணிந்து நடக்கவேண்டும். அவன் இறந்தபின்னும் அவன் நினைவை அவமதிக்கக்கூடாது. கணவன் வேறு இடத்தில் இன்பம் தேடும் நற்பண்பு இல்லாதவனாக இருந்தாலும் கூட, விசுவாசமுள்ள மனைவியாய் அவனைக் கடவுளாக வணங்கவேண்டும்'. இதைத்தான் ஒரு இந்து ஒரு பெண்ணுக்குரிய உயர்ந்த இலட்சியமாகக் கருதுகிறான் !

வருணக் கலப்பைத தடுக்க மனு பெண்களையே பெரிதும் 'பலிகடா' ஆக்கினார். இனக்கலப்பு பெண்ணின் மூலம் தடுக்கப்படும் பொருட்டு மூன்று முக்கிய மாற்றங்கள் கொண்டு வந்தார் மனு. ஒன்று, கணவனை இழந்த பெண்ணைக கணவனுடன் எரித்து விடுவது. ( இதனால், கணவனை இழந்த பெண் வேறொரு சாதியிலிருந்து ஆணுடன் கலப்பது தடுக்கப்படுகிறது. சதி என்னும் வழக்கம் பண்டைய உலகம் முழுதும் இருந்தது என்றாலும் இந்தியாவில் இருந்தது போல பெருவழக்காக இல்லை ). இரண்டாவது, எரிக்கவில்லையென்றால் வாழ்நாள் விதவை. இது எரிக்கப்படுவதைக்காட்டிலும் சற்று மனிதாபகரமானது. ஆனால் விதவை மறுமணம் அனுமதிக்கப் படவில்லை, அது சொந்த சாதியிலும் இருந்தால் கூட. ( ஏனென்றால், விதவை மறுமணத்தால், தகுதி வாய்ந்த ஒரு ஆண்மகன் மணம் கொள்வதால், ஒரு தகுதியான பெண் உபரியாகிறாள். ) மூன்றாவதாக பெண்ணை சிறு வயதிலேயே மணமுடிப்பது.

சிறு வயதில் மணமுடிப்பதைப பற்றி இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். 'ஒரு பெண் தான் மணமுடிக்கும் ஆணுக்கு மட்டும் விசுவாசமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவளைத் தூய்மையானவளாகக் கருத முடியும். ஒரு பெண்ணிடம் பாலியல் உணர்வுகள் விழிப்பதற்கு முன்பாகவே, அவள் யாரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது நல்லது.'.

தங்கமுழாம் பூசப்பட்ட இரும்புத் தகடு போல் இருக்கும் இத்தகைய வழக்கங்கள் ஏன் மதிக்கப்பட்டன ? அம்பேத்கர் இதற்கு அளிக்கும் விளக்கம்: பின்பற்றப்பட்டதாலேயே இவ்வழக்கங்கள் மதிக்கப்பட்டன. எப்போதுமே இயக்கங்கள் தான் முக்கியமானது. தத்துவங்கள் அதற்கு பின்பு உருவாகி அதை நியாயப்படுத்தி அதற்கு தார்மிக ஆதரவு கொடுக்கின்றன.

ஆனால், மனுவின் காலத்திற்குமுன் பெண்களின் நிலை இவ்வாறு இல்லை. கௌடில்யரின் அர்த்தசாஸ்த்திரத்தின் வாயிலாக, பெண்கள் பருவம் எய்தியபிறகே திருமணம் செய்து கொண்டனர். பரஸ்பர வெறுப்பு காரணமாக, ஒரு பெண் விவாகரத்து கோரலாம். மனு இதைத தடை செய்து விட்டார். கௌடில்யரின் காலத்தில் ஒரு பெண், விதவையாய் இருந்தாலும் கூட, மறுமணம் செய்து கொள்ளத் தடையில்லை. மனு, இதைத் தவிடு பொடியாக்கினார். கௌடில்யர், ஒரு பெண் முதல் மாதவிடாய்க்கு மூன்று ஆண்டுகள் கழிந்தபின் வேறு சாதியைச் சார்ந்த ஆடவன் என்றாலும் உடலுறவு கொள்வது தவறாகாது. மனுவோ, ஒரு சூத்திரன் உயர்சாதி பெண்ணுடன் உடலுறவு கொண்டால், தவறிழைத்த உறுப்பையோ அல்லது மரணத்தையோ எதிர்கொள்ள நேரிடும். ( மேற்கூறிய கடுமையான சட்டம் உண்மையாக நிறைவேற்றப்பட்டதா அல்லது மக்களிடையே அச்சத்தை உண்டாக்கும் பொருட்டு ஏட்டளவில் மட்டும் சட்டமாக இருந்ததா என்று தெரியவில்லை. )


'ஸ்த்ரீ, சூத்ர' - ஆகிய இரு சொற்களின் பின் உள்ள மக்கள் தொகையைப பற்றி எண்ணிப்பார்க்கச் சொல்கிறார் அம்பேத்கர். தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மாத்திரமே 24 சதவிகிதம். பெண்களையும் இதர சூத்திரர்களையும் உள்ளடக்கினால், 75 சதவிகிதம் ! இவ்வளவு பெருந்தொகையான மக்களைத் தான் இந்து சமூகம் நிரந்தர அடிமைத்தனத்துக்கு உள்ளாக்கி, உயிர் வாழ்தலுக்கும், சுதந்தரத்திற்கும், மகிழ்ச்சியை நாடும் வாழ்க்கை நடத்துவதற்கு வாழ இயலாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள், அதுவும் ஒரு சில நூற்றாண்டுகள் அல்ல, ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங்களாக !

இந்திய சமூகத்தில், இந்து சமயத்திலிருந்தே புரட்சிகளோ சீர்திருத்தங்களோ தோன்றவில்லையா ? பத்தாம் நூற்றாண்டில் ராமானுஜர் தொடங்கி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார், நாராயணகுரு வரை சீர்திருத்த வாதிகளும் சேவைப் பாரம்பரியம் தொடரவில்லையா ? இருந்திருக்கலாம், ஆனால் இவை, இந்து சமூகத்தில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தாமல், ஏதோ சுருதிபேதமாய் வந்துபோன முரண்கள் என்றே கொள்ளமுடியும்.
அம்பேத்கர், இந்து, பௌத்தக் கருத்தியல்களை விளக்கும் இடங்களில் சில வேடிக்கையான சுவராஸ்யமான தகவல்களும் கிடைக்கின்றன. உதாரணமாக ஒன்று:

அம்பத்தா என்னும் பிராமணன் புத்தருடன் விவாதிக்கின்றான். அங்க லட்சணங்களைக் குறித்த அசட்டு நம்பிக்கைகள் பௌத்தர்களையும் விட்டு வைக்க வில்லை போலும் !

'அம்பத்தாவும் புத்தரும் உரையாடுகின்றனர். அப்போது அம்பத்தா புத்தருடைய உடலில் மகான்களின் உடலில் காணப்படும் முப்பத்திரண்டு அடையாளங்கள் உள்ளனவா இன்று கவனித்துப் பார்த்தான். அவற்றில் இரண்டு தவிர மற்ற அனைத்தும் இருப்பதைக் கண்டான். இந்த இரண்டில் ஒன்று நாக்கு. மற்றொன்று மறைவாய் உள்ள உறுப்பு. அம்பத்தா சந்தேகிப்பதை உணர்ந்த புத்தர், தனது நாக்கை நீட்டி, அதைக்கொண்டு காதுகளையும், மூக்குத துவாரங்களையும் நெற்றியையும் தொட்டார். தனது அற்புத சக்தியால் உறையால் மூடப்பட்டிருக்கும் மறைக்கப்பட்ட உறுப்பை அம்பத்தா உணருமாறும செய்தார்.' ( மறைக்கப்பட்ட உறுப்பில் என்ன லட்சணத்தை அம்பத்தா எதிர்பார்த்தான் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.)

மேலும் ஒன்று. இது க்ஷத்திரிய குலம் மீண்டும் தழைத்தக் கதை (ஆதிவர்வத்திளிருந்து எடுக்கப்பட்டது) :

"பூமியிலிருந்து அனைத்து க்ஷ்த்திரியர்களும் இருபத்தொருமுறை அழித்த பின்னர், மகேந்திர மலையில் ஜமதக்னியின் மகன் தவம் செய்தான். க்ஷத்திரியர்கள் அனைவரையும் அவன் அழித்தொழிந்த காரணத்தால் அவர்களின் விதவைகள் தங்களுக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமென்று பிராமணர்களிடம் பிரார்த்திக்கொண்டனர்.

எவ்வித காமவெறியும் இல்லாத பக்திமான்களான பிராமணர்கள் இப்பெண்களிடம் உரிய காலங்களில் உடல் உறவு கொண்டனர். இப்பெண்கள் கர்ப்பமுற்று வீரமிக்க க்ஷத்திரிய குழந்தைகளைப பெற்றெடுத்தனர். இதனால் க்ஷத்திரிய குலம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது."

எவ்வித காமவெறியும் இல்லாத இந்த பக்திமான்களின் சேவை அரிய சேவை தான்.

இறுதியாக, தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவராகிய அம்பேத்கரிடமிருந்து, இந்தியப் பண்பாடு, இந்து மதம் மற்றும் சமூகம் குறித்த அவரது பார்வையில் குறைகளையும் தூற்றுதல்களையும் தவிர வேறு என்ன எதிர்பார்க்கமுடியும் என்று கேட்கலாம். நடந்ததைத் தானே கூற முடியும் ? இந்த நூலைப் படிக்கும்போது, ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தவர் தன இனத்துக்கு காலம் காலமாக நடந்த அநீதியை தட்டிக் கேட்பதாக எனக்குப்படவில்லை. மாறாக, இந்த மண்ணில் நடந்திருக்க வேண்டிய நியாயங்களையும், அவ்வாறு நடக்காமல் போன துரதிர்ஷ்டங்களையும், நம்முள் ஒருவராக, மானுட நேயத்துடனும், அதன் கூடவே வரும் அறச் சீற்றத்துடனும், எந்தவிதப் பழிவாங்கும் உணர்ச்சியோ, வன்மமோ இன்றி, கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு அறிவியல்பூர்வமான அடிப்படையில், நிதாதனமாகத் தன ஒவ்வொரு வாக்கியத்தையும், கருத்துக்களையும், யூகங்களையும் நம்முன் வைக்கிறார் அம்பேத்கர். பண்டைய இந்தியப பண்பாட்டைத் தெரிந்து கொள்ள விழையும் எவரும் புறக்கணிக்கமுடியாதது, அம்பேத்கர் வரையும் வரலாறு.

இந்தச் சாதிச சமூகத்தில், அநேகமாக நாம் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ பங்குகொண்டு, குற்றவாளிகளாய்த்தான் இன்று நிற்கிறோம். சாதியின் ரிஷிமூலம் தெரிந்தால் தான் அதை விட முடியுமா என்ன ?   ஒரு வேளை உதவலாம்.

1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment