Thursday, June 16, 2011

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
உயிர்த்தண்ணீர்
ஆசிரியர்: கண்மணி குணசேகரன்பரிந்துரை: சண்முகம்

பீக்காட்டுல தொடச்சிப் போட்ட கல்லு மாதிரி, சமுதாயத்தில தொடச்சிப் போட்ட சனங்களை, நம்ப கண் முன்னாடி வரையாரு கண்மணி குணசேகரன். (என்னமா நல்ல பேரு வச்சிருக்காரு ! ). நடுநாடுன்னு சொல்றாங்களே - அதாவது நெய்வேலி, கடலூர், பண்ருட்டின்னு - இப்படி இங்கிருந்து யாரோ ஒரு நல்ல கதை சொல்றவரு கதையை நேர்ல சொன்னா எப்படி இருக்குமோ, அப்படியே எழுத்துல சொல்லியிருக்காரு கண்மணி. இந்தக் கொச்சையான வட்டார சொல்நடை, மொத கொஞ்சம் கடுப்பாத் தான் இருந்துச்சி. ஆனா போகப்போக ருசிக்க ஆரம்பிச்சிருச்சி. (கி.ரா, இது தான் நெசமான மக்கள் தமிளு, நாம சாதரணமா படிக்கிறதெல்லாம் மொண்ணெத் தமிளும்பாரு. )இப்பெல்லாம் ஒவ்வொரு நாளும் பறவையினமோ, விலங்கினமோ அழிஞ்சிக்கிட்டு வராப்பல, இந்த கதைங்களப் படிக்கறப்போ, மனுசங்கள்ல ஒரு முக்கியமான இனம் அழிஞ்சிக்கிட்டு வராப்பல நெனப்பா இருந்துச்சு. இந்த பண்பாடு, மரபு அதையெல்லாம் இதுவரைக்கும் பல நூறோ ஆயிரம் வருசமோ கட்டிக் காத்துட்டு வந்த அடித்தட்டு சனங்களத தான் சொல்றேன். தனமானம் ரோசம் இதெல்லாத்தோடும் இனிமேலும் இந்த மக்க தொடர்ந்து வாழ முடியுமான்னு படிக்கிற யாருக்கும் வெசனம் தட்டாமப் போகாது. இதத்தான் 'அடகு' கதையில, களை வெட்டி பொழப்பு நடத்தற வேம்பாயி, கந்துவட்டிகாரன்கிட்ட கடன் கட்ட முடியாம, சக்கையா வசவு வாங்கிட்டு, ஒடம்பெல்லாம் கூசிப்போய் வூட்டுக்குள்ள வர்றப்ப தான் அந்த 'ஞானம்' வருது. அவள மாதிரி ஆளுங்க எல்லாம் சூடு சொரணை பாத்தா நிம்மதியா வாழ முடியாதுங்கறது தான் அந்த ஞானம். என்னத்த சொல்றது ?

இந்தத் தொகுப்புல ரொம்ப புடிச்ச கதை 'சுருக்கு' தான். அதுல வர முத்துலட்சுமி வெறவு வெட்டி, முந்திரிக்கொட்டை பொறுக்கி நடத்தற பொழப்பு தான். ஆனா, செய்யுற எதிலும் வேகமும் விவேகமும் தான். கூலிக்குப் பொறுக்கறது போக, காட்டுக்கரனுக்குத் தெரியாம சுட்டுட்டு வர்ரதிலும் கில்லாடி தான். எப்பவுமே மாட்டாத ஆளு ஒரு தடவை காட்டுக்காரன்கிட்ட மாட்டிக்கிறா. ஆனா எப்படியோ தப்பிச்சிகிறா. காட்டுக்காரனோ எப்படியாவது முத்துலட்சுமிய ஒரு 'கை' பாத்துடனும்னு கருவிக்கிறான். ஆனா சந்தேகப்புத்தி புருஷன்காரன் பொண்டாட்டி காட்டுக்காரன்கிட்ட 'கெடந்துட்டு' வந்ததனால தான் தப்பிச்சிக்கிட்டான்னு சக்கையா அடிச்சி ஒதச்சி தொரத்திடுறான். நொந்து வதைபட்டு முந்திரிக்காட்டுலேயே சுருக்கு மாட்டி சாகபோறப்போ, அந்தப்பக்கம் காட்டுக்காரன் வர்றான். சாகப்போற முத்துலட்சுமிக்கு அப்ப என்ன நெனப்பு ஓடிருக்கும் ? கண்மணி குணசேகரனோட எழுத்தாளுமையை தெரிஞ்சிக்கிறத்துக்கு அந்த கடைசி யோசனையை படிச்சா போதும்.

முந்திரிக் காட்டுல கொட்டை பொருக்கற முத்துலட்சுமி, வயக்காட்டுல களையெடுக்கற வேம்பாயி, கூத்து பிரமாதமா கட்ற செல்ராசு வாத்தியாரு, கூத்தை ரசிச்சாலும் கூத்துக்காரங்கள கேவலமா பாகக்ற ராசோக்கியம், சுடுகாட்டுக்கு கொடும்பாவி இழுத்துக்குட்டு போற குப்பன், அம்பது வயசாயும் (மத்தவங்களால 'வாடா, போடா'ன்னு கூப்புடப்படற) எளவு வூட்டுல பாடை கட்டுற சின்னக் குண்டு, பன்னி வளத்து சீவனம் பண்ற தங்கவேலு - இப்படி எத்தன விதமான சனங்களோட வாழ்க்கையை, ஏதோ அவங்க ஒடம்புல பூந்து வாழ்ந்தாமாதிரி, அவங்களோட நடப்பையும் நெனப்பையும் சொல்றாரு கண்மணி குணசேகரன்.


கண்மணியோட எழுத்துல எல்லாத்துக்கும் எடம் இருக்குது. மேலோட்டமாவும் இல்லாம, சலிப்பூட்டுற அளவுக்கு நீட்டி முழக்காமலேயும், சரியான அளவா, வாழ்க்கையோட எல்லா அம்சமும் ஒன்னோடு ஒன்னு கலந்து வருது. எதுவும் ரொம்ப முக்கியமும் கெடையாது, முக்கியமில்லேனும் கெடையாது. பல விதமான சனங்க மனசுக்குள்ள நெனைக்கறதையும், வெளியில ஊர் நடப்பையும் அளவா கலந்து கொடுக்குறாரு.

அவர்கிட்ட நல்ல அவதானம் இருக்கு. பெட்டக் கோழி, சேவலை நாம பாத்திருக்கோம். இவரு: " ...பெரிய சாவ றெக்கைய கால்ல எறக்கி தேய்ச்சிக்கிட்டியே சேக்கரிச்சிக்கிட்டு கன்னிப்பொட்டைய தொரத்திக்கிட்டு ஓடிச்சு. வேலி, பக்கத்து வூட்டுத் தோட்டம், குப்பக்குழி, வைக்கப்போரு, முருங்கமரம்னு வுடாம ஓடி கடைசியில முழுங்கிப் பாடலு இடுக்குல வச்சி நெறிச்சப்பறந்தான் வுட்டுது.".

'மீறல்' கதையில, சொந்தமா குடிசைன்னு இருந்தாலும், ஏதேதோ மிருகம் - பெருச்சாளி, வூட்டுக்கு பக்கத்துல ஆந்தை, கரடி மாதிரில்லாம வூட்டுக்கு வந்துட்டு போகுது. பெருச்சாளியைப் பத்தி இப்படி சொல்றாரு : " வாசப்படியில சத்தம் கேட்டுது. பெரண்டு படுத்துப் பாத்தன். வெளிய போனது திரும்பி வந்தது. தொம்ப சந்துக்குள்ள நொழஞ்சி, கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொண்ணையும் கூட்டிக்கிட்டு வந்தது. பொஞ்சாதியா இருக்கும் ..."

'குலைவு' கதையில பன்னி வளத்துற தாழ்ந்த சாதி சனங்க படுற சாதிக்கொடுமையை கதையினோட போக்குலயே யதார்த்தமா சொல்லிட்டுப் போறாரு.
இந்தக் கதைத் தொகுப்ப படிச்சா முந்திரித்தோப்பு, கூத்து - இதப்பத்தி நெனைக்காம இருக்க முடியாது. தமிழ்ல நடுநாட்டு அடித்தட்டு மக்களோட வாழ்க்கையை சுரம் பிரிச்சி, அதுவும் வட்டார வழக்குலேயே எழுதி, தனித்தன்மை ரொம்பவும் வாய்ஞ்ச முக்கியமான எழுத்தாளர் (நடுநாட்டு சொல்லகராதி ஒன்னையும் தனியா ஒரு பொஸ்தகமாவே பதிப்பிச்சி இருக்காரு) கண்மணி குணசேகரன்.

4 comments:

hariharan said...

கந்தர்வன் படைப்புகள் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் ?

Raja M said...

சண்முகம்:

ரொம்ப நல்ல பரிந்துரை. வட்டாரச் சொல் நடையிலேயே எழுதியது அருமை! நல்ல எழுத்தாளாரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment