Friday, September 2, 2011

இட்டு, உண்டு, இரும்

 

Give, Eat, And Live

Poems of Avvaiyar

Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan



ஔவையாரின் பாடல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் அமெரிக்கக் கவிஞர் திரு. ப்ரூக்சிமா .  நான் இந்தப் புத்தகத்தை முதலில் இணையப் புத்தகக் கடையான அமேசானில் பார்த்த போது சற்றே திகைப்புக் கலந்த ஆர்வத்துடன் வாங்கினேன்.  வாங்கிப் படித்தபோது மொழி பெயர்ப்பின் தரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  இந்த மொழி பெயர்ப்பில் இருக்கும் பல பாடல்கள் நான் சிறுவனாக இருக்கும் போது அறிந்தவையே.  ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியையாக இருக்கும் என் தாயார், இன்றும் கூட, ஔவையாரின் பாடல்களின் முதல் வரியை எடுத்துக் கொடுத்தால் சரளமாக முழுப் பாட்டையும் சொல்கிறார்கள்.  இந்தப் பாடல்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியது எனக் கருதுகிறார்கள்.  சங்க கால ஒளவையார் பாடல்கள் அல்ல இவை. 



ஒரு நல்ல பாடலின் கவித்துவம், அதன் இசை மற்றும் ஒலிச்சரளம், நம் அகத்தில் விரிக்கும் ஓவியம், வடிவமைப்பு , பாடலில் இருக்கும் மனித குலம் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய பொது உணர்வு, எனப் பல பரிமாணங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவது. அதனாலாயே,   பாடல்களை ஒரு மொழியில் இருந்து  இன்னொரு மொழிக்கு எந்தச் சுவையும் மாறாமல்  மாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தமிழைத் தாய் மொழியாய்க் கொண்ட (ஆனால் அதிக இலக்கியப் பரிச்சயம் இல்லாத) என் போன்ற ஒரு சராசரி வாசகனின் பார்வையில், திரு. ப்ரூக்சிமா, இந்தக் கடினமான செயலை மிகத் திறம்படச் செய்து இருக்கிறார்.  


இந்த மொழிபெயர்ப்பில், ஒளவையாரின் அறுபது வெண்பாக்கள் உள்ளன.  பெரும்பாலான வெண்பாக்கள் ஒளவையாரின் மூதுரையில் இருந்தும், நல்வழியில் இருந்தும் எடுக்கப்பட்டவை.  தமிழ் மூலமும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் அருகருகே கொடுக்கப்பட்டுள்ளன.  அதனால், எளிதில் ஒன்றை ஒன்று ஒப்பு நோக்க வசதியாக உள்ளது.  திரு.  ப்ரூக்சிமா, எந்தப்பாடல்கள் அவர் பார்வையில் மனதில் மறக்க முடியாத கவித்துவம் நிறைந்த சித்திரத்தை வரைகின்றனவோ, அந்தப் பாடல்களை மட்டுமே மொழி பெயர்த்திருப்பதாகக் கூறுகிறார். ஒளவையாரின் பாடல்களில் மிளிரும், காலத்தால் மங்காத உண்மைகளை, திறம்பட, நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார்.  இரண்டு உதாரணங்கள் கீழே.

ஒளவையாரின் பாடல்களில் அடிக்கடி புகழ்ந்து சொல்லப்படும் கருத்துக்கள் மறமும், வீரமும்.

உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின
தளர்ந்து வளையுமோ தான்?

Does he who gives life before he gives honor
Bow when he sees his enemies? 
                                   -Beneath a heavy load
A stone pillar may break, but tell me,
Does it buckle? Does it bend?


 தமிழில் இருக்கும் சுருக்கமும், ஒலி நயமும், மொழிபெயர்ப்பில் சற்றே குறைவாக இருப்பதாகப் பட்டாலும், திரு.  ப்ரூக்சிமா, இந்தப் பாடலை மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார்.  குறிப்பாக, கடைசி வரியில், அவர் மிக எளிய மொழிநடையில் எழுப்பும் இரண்டு வினாக்கள், ஒளவையாரின் பாடல்களுக்கே உரித்தான நேரடித்தன்மையையும், படிப்பவரின் மனதில் எழுப்பும் ஆழமான நெருக்கத்தையும், நேர்த்தியுடன் பிரதி பலிக்கின்றன.  தமிழ் வெண்பாவில், இரண்டாவது வரியில், மூன்றாம் சீருக்கும், நான்காம் சீருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை, திரு. ப்ரூக்சிமா, ஒரு 'திருப்தி தரும் ஒருங்கின்மை'  (satisfying dissymmetry) என்று கூறுகிறார்.  ஒரு கவிஞனின் நுண்மையான உணர்வுடன், அத்தகைய ஒருங்கின்மையை ஆங்கில மொழி பெயர்ப்பிலும் உருவாக்க முயல்கிறார்.  இன்னொரு பாடல்:

கற்றதுகைம் மண்ணளவு கல்லாத துலகளவென்று
கற்ற கலைமடந்தை ஓதுகிறாள் - மெத்த  
வெறும் பந்தயம் வேண்டா புலவீர்
எறும்பும்தன் கையால்எண் சான்.

What we know: A handful of dirt. What we don't:
The width of the world. The goddess of learning
Keeps learning -
          So, poets don't bet and talk big
The body of an ant too is eight spans


இந்த வெண்பாவை மொழி பெயர்க்கும் போது திரு.ப்ரூக்சிமா, சான் என்பதை மிக நேர்த்தியாக, ஆங்கிலத்தில் 'span' என்பதின் அர்த்தத்தை - கையை நன்கு விரித்து வைத்து இருக்கும் போதுகட்டை விரலுக்கும், சுண்டு விரலுக்கும்இடையில் உள்ள தூரம்  என்று கோடி காட்டி விடுகிறார்.  கடைசி வரியை மிக நேர்த்தியாக ஆங்கில மொழி பெயர்ப்பில் சுருக்கி விடுகிறார்.  தமிழில் உள்ளதை, அப்படியே மொழி பெயர்க்க முயன்று இருந்தாரேயானால், அந்த வாக்கியம் நீண்டு மொக்கையாக வந்திருக்கும்.  அதைத் தவிர்த்து, முட்டாள்களைப் பற்றிப் பாடும் போது  ஒளவையார் கொள்ளும் கடும் எள்ளலை சுருக்கமாகச் சொல்லி விடுகிறார். 

மொத்தத்தில், இது நன்கு அனுபவித்து படிக்கக் கூடிய புத்தகம்.  தமிழ் தெரியாத நண்பர்களுக்கோ, உறவினற்கோ இந்தப் புத்தகம் நல்ல பரிசாக அமையும்.  ஒவ்வொரு பாடலுக்கும், அதீத விளக்கம் அளிக்கும் வேலையை மொழி பெயர்ப்பாளர் செய்யாதது இன்னொரு சிறப்பு.  கொஞ்சம் முயற்சியும், கொஞ்சம் கற்பனையும் இருந்தால் கூட, இந்தப் பாடல்கள் உங்கள் மனத்தைக் கவரும் என்பதில் ஐயம் இல்லை.  எழுபதுகளிலும், எண்பதுகளிலும் உயர்நிலைக் கல்வி படித்து வளர்ந்த பெரும்பாலான நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் விழுமியங்கள் ஒளவையாரின் பாடல்களைச் சார்ந்தே இருந்தன என்று கூடச் சொல்ல முடியும்.  தன்னைச் சுற்றி இருந்த உலகத்தை கூர்ந்து நோக்கி, அதை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் படிக்கும் இன்றைய வாசகர்களின் மனதில் தத்ரூபமான சித்திரத்தை தோற்றுவிக்கும் அளவில் அமைந்திருக்கும் ஒளவையாரின் பாடல்கள் நமக்குப் பிரமிப்பையே அளிக்கின்றன. 

இந்தப் புத்தகத்தில் குறை என்று சொல்ல வேண்டும் என்றால், இதில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் வெண்பாக்களின் எண்ணிக்கை வெறும் அறுபது என்பது தான்.  புத்தகத்தை படித்து முடித்த பின், அடடா, இன்னும் அதிகப் பாடல்கள் இல்லையே என்று எண்ணத் தோன்றுகிறது.  ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டு தமிழ் பயின்றவர்கள் மிகச் சிலரே.  அந்தச் சின்னக் குழுவில் திரு. ப்ரூக்சிமாவும் ஒருவராக இருப்பது வரவேற்புக்குரியது.  இந்தப் புத்தகம், இன்னும் அவரால் எழுதப்படவிருக்கிற/மொழி பெயர்க்கப்படவிருக்கிற  தமிழ்ப் புத்தகங்களின் முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன். 

 பி.கு.: இந்தப் புத்தகம் தமிழ் அதிகம் தெரியாத ஆங்கிலப் பரிச்சயம் மிக்கவர்களுக்கு பயன் படலாம் என்பதால் அவர்களின் பார்வைக்காக இந்த வாசகர் அனுபவம் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு கீழே அளிக்கப் பட்டுள்ளது.

3 comments:

Anonymous said...

very good articale, vanarajan from malaysia

clayhorse said...

சிறப்பான பரிந்துரை. மொழியாக்கம் அசல் ஆக்கம் போலவே வந்துள்ளது.
எக்காலத்துக்கும் யாவருக்கும் நெருக்கமாக வரக்கூடியவை அவ்வையின் பாடல்கள். தமிழ் கற்றவரைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.
'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்' என்று அறிவூட்டியும், 'பாங்கறியாப் புல்லறிவாளர்க்கு செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம்' என்றும் 'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழி நிலனே' என்று தக்கார் யார் என்று சொல்வதிலும், வர்ணனை ஜாலமில்லாமல் நேரடியாக நம்மோடு பேசுபவை அவை.

டமில் பேஷாத, படிக்காத, நவீன பேருக்கு இது போன்ற மொழியாக்கங்கள் வந்துதான் நம் செல்வங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. முத்தெடுத்த கரிகாலனுக்கு நன்றி.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment