Wednesday, September 14, 2011

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் :தொகுப்பு


 பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்: தொகுப்பு 
ஆசிரியர்:   டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
  








டி. டி. கோசாம்பியின் 800 பக்கங்களே கொண்ட ௦௦புத்தகமான பண்டைய இந்தியாவைப் பற்றி எழுத ஆரம்பித்த போது அது இவ்வளவு நீளமாக வரும் என்று நாங்கள் இருவரும் நினைக்கவில்லை.  இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும்,  கொஞ்சம் ஊன்றிப் படிக்க ஆரம்பித்ததில், கோசாம்பி இந்திய வரலாற்றை அணுகிய விதம் நாங்கள் இதுவரை படித்த இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புலப்பட்டது.  அதனால், இந்தப் புத்தகத்தில் கோசாம்பி கூறியவற்றை முடிந்த அளவிற்கு தொகுத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வந்தது. அதன் விளைவே இந்த நீண்ட தொடர். உண்மையில் சொல்லப் போனால், இதை எழுதியதில் முக்கிய பலன் எங்கள் இருவருக்கும் தான் என்று சொன்னால் மிகையில்லை. 


 
இந்தப் பதிவு அந்தக் கட்டுரையின் ஐந்து பாகங்களையும் ஒரே இடத்திலிருந்து எளிதில் கண்டடைய உதவுவதற்கான முயற்சியே. 


பண்டைய இந்தியா 1

பண்டைய இந்தியா 2

பண்டைய இந்தியா 3

பண்டைய இந்தியா 4

பண்டைய இந்தியா 5
  


சீனத்தைப் போலவோ, பிற நாடுகளைப் போலவோ, இந்திய வரலாற்றைச் சரியானபடி அறிந்து கொள்ள நம்பகரமான எழுத்துப் பூர்வமான பதிவுகள் அதிகம் இல்லை. புராணங்களும், கட்டுக்கதைகளுமே மிகையாக உள்ளன.  இந்தச் சிக்கலில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் வரலாற்று ஆசிரியர்களே அதிகம்.  டி. டி. கோசாம்பி உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியையும், உற்பத்தி உறவுகளின் வளர்ச்சிகளையும் கொண்டு இந்திய வரலாற்றை எழுத முனைகிறார் (பாகம் 1 ).

வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் தேவைகள் உலகெங்கிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தன. இந்த பழங்குடி மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பாக (Tribal Orgaization) உருவாக்கியது.  இந்தியாவில் எழுந்த பழங்குடி அமைப்பு பல தனிப் பண்புகளைக் கொண்டிருந்தது.  பழங்குடி வாழ்வில் இருந்து சிந்து சமவெளி நாகரிகம் வரை, இருந்த கால கட்டத்தின் வளர்ச்சியை அறிவியல் நோக்கோடு ஆய்கிறார் கோசாம்பி.  இந்த காலகட்டத்தில் இருந்த பழங்குடி சமுதாயம் சாதிப் பிரிவினைகள் இல்லாதது என்றும் கூறுகிறார் (பாகம் 2 ).


உணவு சேகரித்து வாழ்ந்த பூர்வ குடி மக்கள் தங்களை விட மேன்மையான உணவு உற்பத்தி முறையைக் (உணவை பயிரிட்டு வாழும் முறை) கொண்ட ஆரியர்களைச் சந்தித்த போது எழுந்த உரசலை வன்முறையின்றி எதிர்கொள்ள  சாதி அமைப்பு உதவியது என்கிறார் கோசாம்பி.   புரோஹிதர்கள் இந்த இரு வெவ்வேறு சமுதாயங்களை புராணங்கள் மூலம் ஒன்றிணைத்தனர் என்கிறார் கோசாம்பி.  எந்தப் பழங்குடிகள் புதிய உணவு உற்பத்தி முறைகளை விரைவில் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் பலமடைந்தார்கள்.  ஏற்றுக் கொள்ளாதவர்கள் சமுதாயத்தின் கீழ் நிலையை அடைந்தார்கள் (பாகம் 3 ).


இந்த புரோஹித  அமைப்பு பெருமளவில் கால்நடைகளை பலி தரும் சடங்குகளை வலியுறுத்திய பொது, அதை எதிர்த்து அஹிம்சையை வலியுறுத்தும் மதமான புத்த மதம் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றது என்கிறார் கோசாம்பி. இந்தப் புத்த மத எழுச்சியோடு, அதே சமயத்தில் இந்தியாவில் முதல் முறையாக  ஒரு முடியரசு - மகதப் பேரரசு - எழுந்தது.  இந்த மகதப் பேரரசு அர்த்த சாஸ்திரத்தின் அடிப்படியில் தன் ஆட்சிமுறையை நடத்தியது.  அர்த்தசாஸ்திரம், எப்படி காடுகளைத் திருத்தி விளைநிலமாகுவது என்பதில் இருந்து, வரி வசூலிப்பு, கிராம அமைப்பு போன்றவற்றிற்கான அடித்தளத்தை நிறுவியது.  இந்த அடித்தளங்களின் எச்சங்களை இன்றைய இந்தியாவில் கூட காணலாம் என்கிறார் கோசாம்பி. (பாகம் 4 ).  மகதப் பேரரசு பெரும்பாலான பழங்குடி ராஜ்ஜியங்களை முற்றிலும் அழித்து இந்தியாவெங்கும் விரிந்தது.


கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தது. மையப் பேரரசுகள் நிலைகுலைந்த போது இந்தியக் கிராமங்கள் தேக்கமடையத் தொடங்கின.  ஆங்காங்கு வரி வசூலித்து மைய அரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்தவர்கள் நிலக் கிழார்கள் ஆனார்கள்.  இந்திய தேசம் நிலப் பிரபுவத்தின் வாசலில் நின்றது.  இதே சமயத்தில், எளிமையைப் போதித்த புத்த மதமும் மிகச் சிக்கலான தத்துவக் கோட்பாடுகளில் மூழ்கி மக்களிடம் இருந்த செல்வாக்கை இழக்கத் தொடங்கியது.  புத்த மடாலயங்கள் பெரும் செல்வங்களைக் கொண்டிருக்கும் இடங்களாக இருந்தன.  புத்த மதம் இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆனது.  இந்த புத்த மடலாயங்கள் இஸ்லாமியர்களின் தொடர்ந்த சூறையாடலால் நசிவுற்றன.  இந்து மதமும் புத்த மதத்தின் பல அடிப்படை வாதங்களை தன்னுள் வாங்கிக் கொண்டது.  சங்கரர் மூலம் இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்தது.  கீதை, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டில் தொகுகுக்கப்பட்டு இருக்கலாம் என்று யூகிக்கிறார் கோசாம்பி.   பக்தி மார்க்கத்தின் வளர்ச்சி, அடிப்படையில் ஒரு நிலப்பிரபுத்துவ காலத்தின் விழுமியமே என்று கூறுகிறார் கோசாம்பி (பாகம் 5 ) .


இப்படி வரலாற்றுக்கு முந்திய மனிதன் இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியதில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரை உள்ள இந்தியாவின் வரலாற்றை அறிவியல் நோக்கோடு, உற்பத்தி கருவிகளையும், உற்பத்தி உறவு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு விவரிக்கிறார் கோசாம்பி.  இந்தப் புத்தகம் இந்தியாவைப் பற்றிய புரிதலை வெகுவாக அதிகரிக்கும் என்பதில் எங்களுக்கு சற்றும் சந்தேகமில்லை.





1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment