Thursday, April 11, 2013

புத்தம் வீடு


புத்தம் வீடு 
ஹெப்சிபா ஜேசுதாசன்
காலச்சுவடு பதிப்பகம் (நவம்பர் 2011)

பனைவிளை  கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு  ஒட்டு வில்லை வீட்டை  மிக விரிவாக விவரிப்பதில் ஆரம்பிகிறது இந்த நாவல்.   கிராமத்தவர் அனைவரும் அந்த வீட்டைப் புத்தம் வீடு என்று அழைக்கிறார்கள்.  சிதிலமடைந்த அந்த வீட்டின் பழம் பெருமையை பறை சாற்றுவது அந்த வீட்டின் உறுதியான தேக்கு மரத்தாலான கதவு மட்டுமே, என்பது போன்ற நுட்பமான வீட்டைப் பற்றிய விவரணைகள்  மூலம் நம்மை வெகு சீக்கிரத்திலேயே நாவலுக்குள் இழுத்துக் கொண்டு விடுகின்றார் ஹெப்சிபா ஜேசுதாசன்.  


வயதான வீட்டுப் பெரியவர கண்ணப்பச்சியும் அவரது இரண்டு மகன்களும் தான் புத்தம் வீட்டின் ஆண் மக்கள்.  மகன்கள் இருவரும் குடும்பச் சொத்தான பனை மரத் தோப்பில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு, வேறெந்த முனைப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்களது கையாலாகாத தனம் கன்னப்பச்சிக்கு பெரும் குறை.  வீட்டுத் திண்ணையில் அமர்ந்து காறித் துப்பிக் கொண்டு தன் அதிருப்தியை அவ்வப்போது பதிவு செய்கிறார்  கண்ணப்பச்சியின் மூத்த மகனின் மகள் லிஸி தான் கன்னப்பச்சியின் செல்லப் பேத்தி.  லிஸி  குழந்தையாய் இருப்பதில் இருந்து, அவள் திருமணம் வரை நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நேர்கோட்டில் எளிய நடையில் விவரிக்கிறார் ஹெப்சிபா.  இந்தக் கதையை  மேம்போக்காக பார்த்தால் ஒரு மெல்லிய காதல் கதை போலத் தோன்றலாம்.  ஆனால், கதையின் உண்மையான களம், வெகு விரைவாக மாறி வரும் சமுதாயத்தில் நிகழும் தவிர்க்க முடியாத  உரசல்களை  முன்வைப்பது தான். 

பனையேறிகள், பனைமரத் தோப்புக் காரர்களின் தயவில் அண்டி வாழ்பவர்கள் .  அப்பன் பனையேறி என்றால் மகனும் பனையேறியாக மட்டுமே ஆக முடியும் என்ற சமுதாய கட்டுப்பாடு  உறுதியாக இருந்த காலத்தில் நாவல் ஆரம்பிக்கறது.  ஒரு சின்னத் தவறுக்காக ஒரே வார்த்தையில் பல ஆண்டுகளாக தங்கள் தோப்பில் பனையேறி வந்த   தங்கையனை வேலையை விட்டு துரத்தி விடுகிறார் மூத்த மகன்.  அந்த அளவுக்கு பனந்தோப்பு முதலாளிகளுக்கு செல்வாக்கு.  பனையேறிகளுக்கும் வேறு போக்கிடம் இல்லாத நிலை.  சுற்றி இருக்கும் நகரங்கள் பெருகப் பெருக இந்தச் சூழ்நிலை மாறுகிறது.  பனையேறிகளின் மகன்கள், நகரங்களுக்குச் சென்று பிற தொழில்களில் சேர்ந்து பணம் சேர்க்கும் முனைப்பு கொள்கிறார்கள்.  இந்தச் சமுதாய மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து, புதிய யுகத்திற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்ளாத பனந்தோப்பு முதலாளிகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் செல்வாக்கை இழக்க நேரிடுகிறது.   இப்படி ஆண்டாண்டு காலமாக இறுகிக் கிடந்த விழுமியங்களின் அச்சாணிகள் தளர்வதை சித்தரிப்பது தான் இந்த நாவல்.  

ஹெப்சிபா ஜேசுதாசனின் ஆடம்பரமற்ற நடையில்  கதை, மிகச் சரளமாக  ஓடுகிறது. ஒவ்வொரு பாத்திரமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.   கதையின் மையத்திற்கு முக்கியமில்லாததாகத் தோன்றும் சின்ன, சின்னப் பாத்திரங்கள்  கூட ( தங்கையனின் அம்மா, மிஷன் வீட்டு மேரி போன்ற பாத்திரங்கள்) மிகுந்த கவனத்துடன் சித்தரிக்கப் பட்டுள்ளன.   எப்படி ஒரு நல்ல தேர்ந்த ஓவியனால்  ஒரு சில கோடுகளைக் கொண்டே ஒரு நுட்பமான சித்திரத்தை வரைய முடிகிறதோ, அது போல், ஆசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசன், ஒரு சில வரிகளிலேயே ஒவ்வொரு பாத்திரத்தின் பரிணாமங்களையும் சுருங்க, ஆனால் கச்சிதமாகக் கூறி விடுகிறார்.  நாவலில் திகட்ட வைக்கும் தகவல்கள் இல்லை.  கதாசிரியரின் பிரசார நெடி இல்லை.  மிகைப்படுத்தப்பட்ட உணர்வுப் பூர்வமான வசனங்கள் இல்லை.   எல்லாப் பாத்திரங்களும் நம்பகத் தன்மையோடு இருக்கின்றன.  பனைவிளை கிராமத்தில் வாழும் மக்களின் உறவு முறைகளை, அந்தக் கிராமத்தில் ஏற்படும் பொருளாதார மாற்றத்தை,- மொத்தமாகச் சொல்லப் போனால்  பனைவிளை கிராமத்தின் சாரத்தை-  நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 
இன்னொரு விஷயம், இந்த நாவல் 1964லில் எழுதப்பட்டது.  ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த நாவலை இன்று படிக்கும் போது கூட, நவீனமாகத் தான் தோன்றுகிறது.  இதற்கு முக்கிய காரணம், நாவலின் ஆடம்பரமற்ற, மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட நடை.  இரண்டாவது காரணம், இந்த நாவல் சொல்லும் சமூக உரசல் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருப்பது தான்.  1960களில் பனையேறியின் மகன்கள் நகரங்களுக்குச் சென்றது பனைவிளை போன்ற கிராமங்களின் இறுகிப் போன விழுமியங்களை இளகிப் போகச் செய்தது.  2000த்தில் படித்து மேலைநாடு சென்று திரும்பி வந்த (வராத) மென்பொருள் மைந்தர்கள் அதே போன்ற மாற்றங்களைத் தங்கள்  வீட்டளவில் அல்லது கிராமத்தளவில் நிகழ்த்திக் கொண்து தானே இருக்கிறார்கள்?  சுத்த சைவ உணவு மட்டுமே சாப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் பேரக் குழந்தைகள் ஹாம்பர்கர் சாப்பிடுவதை ஒப்புக் கொள்வதைப் பார்க்கத் தானே செய்கிறோம்?
 

இத்தகைய அதிவிரைவான சமூக மாற்றத்தை எந்த அளவிற்கு மக்கள் உள் வாங்கிக் கொள்கிறார்கள் என்ற முக்கியமான கேள்வி எழுகிறது அல்லவா?  இதைப் பக்கம் பக்கமாக விவரிக்காமல், ஹெப்சிபா ஜேசுதாசன் ஓரிரு வரிகளிலேயே அழகாகச் சொல்லி விடுகிறார். உதாரணமாக, தன் காதலை தைரியமாகத் தன்  அம்மையின் முன் வைக்கும் போது லிஸி, தன் குடும்பத்தில் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த கலாசாரத் தளைகளை உடைத்து எறிகிறாள்.  ஆனால்,அதே லிஸி, கல்யாணத்திற்கு அனைவரும் ஒப்புக் கொண்ட பின்னர் தன்னைப் பார்க்க விரும்பும் தங்கராஜை பார்க்க முடியாது என்று மறுத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்து கொள்கிறாள், என்று நாவலை முடிக்கிறார் ஜேசுதாசன்.  அடுக்களைக்குள் ஆண்கள் - குறிப்பாக வேற்று ஆண்கள்- வருவது இயலாது என்ற கலாச்சாரத் தடையை, லிஸியும் சரி, தங்கராஜும் சரி, விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.  சமூக மாற்றங்கள் மிகுந்த தயக்கத்துடன், தேவைகேற்ப  மட்டுமே மாறுகின்றன என்பதை எப்படி ஒரு வரியில் சொல்லி விடுகிறார் பாருங்கள்? ஆக, நாவலின் கருவும், அதைச் சொல்லும் ஆடம்பரமில்லாத முறையுமே இந்த நாவலின் சிறப்பு அம்சங்கள்.  சமுதாய மாற்றங்களை எதிர் கொள்வதில் உள்ள சங்கடங்களை, உரசல்களை, சமரசங்களை, பேரங்களை தெளிவாக, கதையோடு ஒட்டி, முன் வைக்கிறது இந்த நாவல்.  

புத்தம் வீட்டின் உறுதியான, அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தேக்கு மரக் கதவு, அந்த வீட்டின் பாரம்பரியத்தைக் கவனமாக காத்து வருகிறது.  வெளி உலக மாற்றங்களை, வீட்டுக்குள் இருப்போர் உறுதியுடன் போராடினால் மட்டுமே, மிகுந்த தயக்கத்துடன், தேவையான அளவு மட்டுமே திறந்து உள்ளே வர அனுமதிக்கிறது.  கதவின் பின் இருக்கும் புத்தம் வீட்டு மனிதர்களுடன் பழகும் போது நம்மைப் பற்றியும் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிகிறது.
  


காலச்சுவடு  இந்த நாவலை 'காலச்சுவடு கிளாசிக் வரிசை'யில் பதிப்பித்துள்ளது மிகவும் பொருத்தமானதே! இந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Lizzy's Legacy' amazon.com இல் கிடைக்கிறது.

2 comments:

Jegadeesh Kumar said...

நாவலை நான் வாசித்து விட்டேன். வட்டார வழக்கு நாவலின் பலம். இதை ஒரு மாதத்துக்குள் எழுதி முடித்து விட்டார் ஹெப்சிபா என்றார்கள்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment