Monday, April 22, 2013

கிருஷ்ணா கிருஷ்ணா - கேட்டதைக் கொடுப்பவன்

 கிருஷ்ணா கிருஷ்ணா
ஆசிரியர்: இந்திரா பார்த்தசாரதி
கிழக்குப் பதிப்பகம்
216 பக்கங்கள்

நூல் தலைப்பைப் பார்த்ததும், 'கிருஷ்ணன் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இதில் என்ன புதிதாகச் சொல்கிறார்' என்று தோன்றும்; நிஜமாகவே புதிதாகத்தான் சொல்லியிருக்கிறார் இ .பா.
"ஒவ்வொருவருக்கும் அவருடைய அடி மனதில் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். அவற்றின் மொத்த உருவகம்தான் கிருஷ்ணன்.  அவன் ஒரு சமுதாயக் கனவு.  அவனை எந்த யுகத்திலும், அந்தந்தக் காலத்திய மதிப்பீடுகளுக்கேற்ப அர்த்தப்ப படுத்திக்கொள்ள முடியும் என்பதே அவன் தனிச் சிறப்பு. யார் எவ்வாறு அவனைக் காண விரும்புகின்றார்களோ அவ்வாறே அவன் அமைகிறான்" என்று முன்னுரையில் குறிப்பிடுவதை இந்த நூலை எழுதிய காரணமாகக் கொள்ளலாம்.  ராஜாஜி எழுதிய மகாபாரதம் போன்ற 'செய்தி அறிக்கை' வகைப்  புத்தகம் இல்லை இது. இ.பா.வின் வாசகர்கள் அவருடைய Metro  வாசகர்களுக்கான வழக்கமான நடையை இதிலும் காணலாம்.


ஜரா என்கிற வேடன்,  மரணத்தின் வாசலில் இருக்கும் கிருஷ்ணனுக்கும் தனக்கும் நடந்த உரையாடலை நாரதரிடம் சொல்ல, நாரதர், அதைத் தம்முடைய நடையில், வாசகர்களாகிய நம்மிடம் சொல்வது போல் இந்த நூல் அமைந்துள்ளது.  சிக்கலான இடங்களில், 'இதை நான் சொல்லவில்லை, இது ஜரா என்ற வேடனிடம் கிருஷ்ணன் சொன்னது.  நான் வெறும் பத்திரிகை நிருபர்தான்! ' என்று நாரதர் தப்புகிறார்.  பாரதம் மிகவும் சிக்கலான கதை என்பதால் இந்தப் புத்தகமும் ஒரே நேர்க்கோட்டில் போகாமல் காலத்தின் முன்னும் பின்னும் கதையோட்டத்தின் தேவைக்கேற்பப் பயணிக்கிறது.  தேவைக்கேற்ப அவ்வப்போது பல இடங்களில் உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்கால அரசியலையும் உதாரணத்துக்கு எடுத்துக்காட்டி, கண்ணனின் ராஜ தந்திரத்தை விளக்குகிறார் நாரதர்.  இடையிடையே திரிலோக சஞ்சாரி நாரதரின் ஆங்கிலப் பிரயோகங்கள், மற்றும் கிரேக்க நாடகங்களின் ஒப்பீடு வேறு.

ஜரா என்கிற வேடன் வேட்டை ஏதும் கிடைக்காமல் காட்டில் அலைந்து கொண்டிருந்தபோது, பளபளக்கும் மஞ்சள் நிறத்தைப் புலி என்று நினைத்து அம்பு எய்து விடுகிறான்.  அருகே போனால், அது மஞ்சள் வேட்டி  அணிந்திருந்த வயோதிகக் கிருஷ்ணன். பதறிப் போன வேடனைக் தன்னருகே அமர்த்திய கிருஷ்ணன், "சமூகத் தற்கொலை செய்து கொண்ட யாதவக் குலத்தில் எஞ்சியிருப்பது நான்தான்.  இந்த இரும்பால் நான் சாக வேண்டுமென்பது என் விதி.  என் கதையை உலகில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் அர்த்தப்படும்படியாக இருக்கும்படி சொல்ல வேண்டியது உன் விதி" என்கிறான். வேடன் கேட்கும் கேள்விகளுக்குக் கிருஷ்ணன் சொல்லும் பதில்கலாகிறது இந்தக் கதை.

அவரவர் அந்தந்தக் காலத்துக்கு ஏற்ப அர்த்தப்படுத்திக் கொள்வதுதான் நன்மையையும் தீமையும்.  உண்மையும் பொய்யும் சவுகரிய, அசவுகரியங்களைப் பொறுத்த விஷயங்கள்தான். எதையுமே கருப்பு வெள்ளையாகப் பார்க்கக்கூடாது.  தர்மத்துக்காக மனிதர்கள் இல்லை,  மனிதர்களுக்காகத்தான் தர்மம் என்றான். தன்  வாழ்க்கை வரலாற்றை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறான் கண்ணன்.

'சூதாட்டக்காரர்களிடையே நான் சூதாட்டக் கலை' என்று சொன்ன கண்ணன் ஒரு anti -hero.  ஒவ்வொரு ஆணும் ஏராளமான மனைவியருடன் வாழ்ந்தபோது ஒவ்வொரு பெண்ணும் ஏன் தன்னுடைய லட்சியப் புருஷனைக் கற்பனையில் காணக்கூடாது?  அவ்வாறு கோபிகையர் கற்பனையின் வடிகாலாகத் தன்னை அர்ப்பணித்தான் கண்ணன்.    யந்திரத்தனமாக வாழ்ந்த யாதவக் குடும்பங்களின் கட்டுக் கோப்புகளை உடைத்தான், வழக்கம் போல் பிராமணர்களின் கோபத்துக்கு ஆளாகிறான்.  வேறு ஒருவனுக்கு நிச்சயமான, தன்னை விட ஏழு வயது மூத்த ராதையைத் தன்னுடைய காதல் வலையில் வீழ்த்துகிறான்   ஆண்களும் பெண்களும் மனத்தடை இல்லாமல் பழகி வாழ்க்கையை ஒரு ரசானுபவமாகப் பார்க்க வேண்டுமென்பது கண்ணனுடைய கட்சி.  குமாஸ்தாத்தனமான வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?  அந்தக் காலத்திலேயே 'சான் பிரான்சிஸ்கோ ஸ்டைல்' ஹிப்பிகளாக கோகுலத்தை மாற்றினான்.   இவ்வகையில் ஒரு சமூகக் கலகக்காரன் கண்ணன், ஒரு நிஜமான புரட்சித் தலைவன்.
 
கம்சனைக் கொன்று, உக்கிரசேனனை அரசனாக்கி  'கிங் மேக்கர் ' ஆனதில்  ஒரு முழு நேர அரசியல்வாதியாகின்றான் கிருஷ்ணன்.  அதிலிருந்து கிருஷ்ணனின் அரசியல் சித்து விளையாட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.  பிருந்தாவனத்திலிருந்து துவாரகைக்குப் பெயர்வது,  பல மன்னர்களைச் சேர்ப்பது, பிரிப்பது, மற்றும்  பாமா, ருக்மணி, திரௌபதி,  கல்யாணங்கள், இவை அனைத்தும் அரசியல் விளையாட்டுகளாகவே இருக்கின்றன.  அந்தக் காலத்து ராஜபக்தியானது எப்படி இக்காலத்து தேசபக்தியாக  பரிணாம வளர்ச்சி அடைந்தது என்ற விதத்தை நூலாசிரியர் இ.பா. சுவாரஸ்யமாக விளக்குகிறார்.  ஒரு கார்ப்பரேட் முதலாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும், ஒரு தேர்ந்த அரசியல்வாதி எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கெல்லாம் கிருஷ்ணன் எப்படி முன்னுதாரணமாக நடந்து காட்டியிருக்கிறான் என்று சுவைபட விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

செல்வாக்கு மிக்க ஒரு தலைவனிடம் ஏதேனும் ஒரு வகைக் கவர்ச்சி கட்டாயம் இருக்கும்.  அவன் செய்யும் சிறு சிறு தவறுகளை மக்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதை நம்முடைய வாழ்நாளிலேயே பார்த்திருக்கிறோம். கண்ணனோ எல்லா வகையிலும் கவர்ச்சி மிக்கவன்.  மேலும் பெண் குலத்துக்கு மிகவும் இரங்குபவன் ஆகையால், துரியோதனன் மனைவி பானுமதி  உள்பட எல்லாப் பெண்களுமே கண்ணனிடம் எந்தத் தடையுமில்லாமல் மனம் விட்டுப் பேச முடிந்திருக்கிறது.

கண்ணன் தன்னை எங்குமே கடவுளின் அவதாரமாக 'விற்பனை'  செய்யவில்லை.  சராசரி மனிதனாகவே வாழ்ந்து காட்டினான்.  அவன் பங்கேற்ற எல்லாப் போர்களிலும் ஏதேனும் தந்திரம் செய்தே ஜெயித்திருக்கிறான்.  பாரதப் போர் முடிவில், பலராமன், வீழ்ந்து கிடக்கும் துரியோதனன், அசுவத்தாமன் உட்பட பலர், கண்ணன் போர் தர்மத்தை எத்தனையோ  முறை மீறினான் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  தன் கணவன்மார்களும், கற்றறிந்த சபையோர்களும் மூங்கையராய் நிற்க, திருமணமான ஒரு பெண், மேலாடை இழந்து மன்றாட, அவள் கண்ணீரைத் துடைக்கும் எந்தச் செயலுமே தர்மம் தான் என்று அறுதியிட்டுக் கூறுகிறான். ஆட்சியாளர்களும் அறம் பிழைத்தோர்களும் நினைவில் கொள்ளவேண்டியது இது.

அந்திமக்காலத்தில், கிருஷ்ணன் தன்னுடைய மனதுக்கியைந்த ஒரே காதலியான ராதையைப் பார்க்க பிருந்தாவனத்துக்குச் செல்கிறான். சிறுமியாக இருந்தபோது பர்ஸானவை விட்டு வந்த ராதை அதன் பிறகு எங்கும் போகவில்லை;  துவாரகைக்குக் கூட போகவில்லை.  ராதையின் வீட்டு முன்னால் ஒரு சிறுவன் "ராதைப் பாட்டியைப் பார்க்கனுமா? " என்று கேட்க, 'பாட்டியா?' என்று அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் அப்படியே திரும்புவதாக ஜரா சொன்ன கதை முடிகிறது.  இறுதியில்  'ஜரா என்ற வேடன் சொன்ன சம்பவங்களை அப்படியே சொல்லியிருக்கிறேன். அவற்றை வேறு எங்கும் பகவத் புராணத்தில் தேடாதீர்கள்' என்று நாரதரும் ஒரு Disclaimer போட்டு விடுகிறார்.

இந்தப் புத்தகத்தைப் படிக்க உங்களுக்கு புராணம் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்தப் புத்தகம் ஓர் அற்புதமான அரசியல் சாகசக் கதை போலவே இருக்கிறது.  Satire  விரும்புபவர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் பிடிக்கும்.  நாரதர் பாஷையில், இது one of the must reads and keeps.

2 comments:

Raja M said...

நீங்கள் சொன்னது போல், இந்திரா பார்த்தசாரதியின், 'கிருஷ்ணா கிருஷ்ணா' வை, எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியவில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். மகாபாரதத்தின் உட்கதைகள் அதிகம் தெரியாமல் அதை உச்சாணியில் வைத்துக் கும்பிட்டுக் கொண்டு இருப்பவர்கள் படித்தால், கொஞ்சம் ஆடிப் போய் விடுவார்கள். கிருஷ்ணனை வழிபடும் கடவுளாக மட்டும் உருவகப்படுத்தி இருக்கும் பக்தர்கள் இந்தப் புத்தகத்தை படிக்காமல் இருப்பதே நல்லது.

ஆண்டாளின் பாசுரங்கள், சங்கப் பாடல்கள், Macbeth, Steve Weinbergஇன் நவீனப் பிரபஞ்சத் தத்துவம், என எல்லாவற்றிலும் இருந்து சரளமாக உதாரணங்கள் கொடுத்து , புராணங்களில் பரிச்சயம் இல்லாத தற்கால வாசகர்களுக்கு இ.பா. மகாபாரதத்தை மீள் வாசிப்பு செய்கிறார்.

அவதாரப் புருஷன் எனக் கருதப்படும் கிருஷ்ணனை, நம் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் போது நமக்கு பரிச்சயமான ஒரு அரசியல்வாதியை நையாண்டி செய்வது போல, இ,பா. எந்த மரியாதையும் இன்றி சாதாரணமாகப் பகடி செய்கிறார். படிக்கப் படிக்க நமக்கும், கிருஷ்ணனுக்கே இந்தக் கதி என்றால், நம் வாழ்க்கையில் உறுதியாக நம்பும் விழுமியங்களையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும், என்று தோன்றுகிறது.

நல்ல வாசிப்பு அனுபவம். பரிந்துரைக்கு நன்றி.

s.vinaitheerthan said...

நீண்ட நாட்களுக்குப் பின்னால் தளத்திற்குள் எட்டிப் பார்த்தேன். இ.பா வின் குருதிப்புனல் புதினத்தில் வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தன. சில பார்ப்பனர்கள் தர்ப்பையையும் பூணுலையும் விடுத்து அரிவாளையும் சுத்தியலையும் எடுத்துக்கொண்டார்கள் என்று எழுதியிருப்பார். அதுபோல கிருஷ்ணா நூலிலும் பண்டையப் புராண நிகழ்வுகளைத் தற்காலத்தோடு பொருத்திப் பார்த்துள்ளார் என்பது விமரிசனம் மூலம் தெரிகிறது. 2010க்குப் பிறகு 25 பதிவுகள் காண்கிறேன். வாசகர் அனுபவத்தைச் சிறப்பாகத் தொடரும் குழுவினருக்கும் நண்பர்கள் திரு கரிகாலன் முத்துப்பிள்ளை, திரு சண்முவம் ஆகியோருக்கும் என் அன்பும் வாழ்த்துக்க்களும்.
சொ.வினைதீர்த்தான்.

Post a Comment