ஆளுக்கொரு கிணறு
(மொழி... பண்பாடு... கல்வி குறித்த கட்டுரைகள் )
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com
பரிந்துரை: கரிகாலன், சண்முகம்
எல்லாக் குழந்தைகளின் ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்களே எடுக்கின்றனர். பெற்றோர்கள் எதை நல்ல கல்வி முறை என்று கருதுகிறார்கள்? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்கியங்களை உங்கள் நண்பர் உங்களிடம் சொன்னால் அவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
1) எந்தப் பள்ளியில் அதிக நேரம் செலவழித்து, அதிகமான பாடங்களைச் சொல்லித் தருகிறார்களோ அதுவே நல்ல பள்ளி.
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).
2) எந்தப் பள்ளி பாடத் திட்டத்தில் கடினமான பாடங்கள் இருக்கிறதோ, அந்தப் பாடத் திட்டமே தரமானது.
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).
3) எந்த வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து, சப்தமின்றி ஆசிரியர் சொல்லுவதை கேட்கிறார்களோ, அதுவே நல்ல வகுப்பறை.
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும். ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும். ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).
4) எந்த ஆசிரியர் தேர்வுக்குத் தேவையான எல்லாப் பாடத்தையும் பல முறை சொல்லித் தருகிறாரோ அவரே நல்ல ஆசிரியர்.
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).
பெரும்பாலான, மத்திய வர்க்க குடும்பப் பார்வையில், மேலே சொல்லப்பட்டஅனைத்தும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்க உதவும் முறை என்று தானே நினைப்பீர்கள்?
ஆனால், மேலே சொல்லப்பட்ட எல்லாக் கருத்துக்களுமே கல்வியைப் பற்றிய தவறான புரிதலில் விளையும் கருத்துக்கள் என்று வாதிடுகிறார் ச. மாடசாமி. அமெரிக்காவில் 1960-களில் கல்வியைப் பற்றியும், மாணவர்கள் கல்வியில் தோல்வி அடைவதின் காரணங்களைப் பற்றியும் துல்லியமாக ஆய்வு செய்து பல நூல்கள் எழுதிய கல்வியாளர் ஜான் ஹோல்ட். அவர் எழுத்துக்கள் மேலை நாட்டுக் கல்வி முறைகளில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. அதே போல் தமிழ்ச் சூழலில் இருக்கும் கல்வி முறை பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், கூர்மையான அவதானிப்போடு எழுதி வருபவர் ஆசிரியர் ச. மாடசாமி. நாற்பது ஆண்டு காலஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும், தமிழ் நாட்டில் உள்ள குக்கிராமங்களுக்குச் சென்று கிராம மக்களுக்கு கல்வி அளித்த களப் பணி அனுபவமும், தனது தீர்க்கமான சிந்தனையும் அளித்த தெளிவுடன் எழுதுகிறார் திரு. மாடசாமி.
ஆசிரியர் ச. மாடசாமி, மொழி, பண்பாடு, மற்றும் கல்வி பற்றி எழுதிய ஒன்பது கட்டுரைகளை அருவி மாலை பதிப்பகம் தொகுத்து வெளியிட்டு உள்ளது. மொழி, பண்பாடு பற்றி இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதால், இந்தக் கட்டுரைகள் அறுவையாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்! கட்டுரைகளில் சுவாரஸ்யமான கள அனுபவக் குறிப்புகள், இது வரை கேட்டிராத பழமொழிகள், எழுதும் நடையில் மென்மையான எள்ளல், எல்லாம் நிறைந்து உள்ளது. எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. தற்கால கல்வி முறையில் உள்ள குறைகளைத் தெளிவாக விளக்குவதோடு மட்டும் நிற்காமல், அதை எப்படித் திருத்துவது என்பது பற்றிய கருத்துக்களையும் விவரிக்கிறார்.
தற்காலக் கல்வி முறை
நம் ஊரில் நிலவும் சாதிக் கொடுமை, சமுதாயத் தடைகள், அனைத்தையும் மீறி ஒரு மனிதன் முன்னுக்கு வர கல்வி ஒன்றே வழியாக இருக்கிறது என்பது உண்மையே. ஆனாலும், கல்வியின் ஒரே நோக்கம், நல்ல சம்பளம் தரும் வேலையை அடைய உதவும் ஒரு கருவி என்ற குறுகிய நோக்கு, நம் கல்வி முறையின் ஒவ்வொரு அங்கத்தையும், - ஆசிரியர்களை, மாணவர்களை, வகுப்பறைகளை, கல்வித் திட்டங்களை - வெகுவாக சிதைக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.
ஆசிரியர்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் படிக்கும் போது தொண்டை கிழிய கத்தி பாடம் எடுத்த ஒரு நல்ல ஆசிரியரையே நினைவு கூறுங்கள். அவர் என்ன விரும்பினார்? தான் எடுக்கும் பாடத்தை மாணவர்கள் கவனமாக, அமைதியாக கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று தானே விரும்பினார்? வகுப்பறையில் விவாதங்களை உருவாக்க முயற்ச்சித்தாரா? யோசித்துப் பாருங்கள் ஒரு சில ஆசிரியர்களைத் தவிர, பெரும்பாலான பிற ஆசிரியர்கள், தரம், ஒழுக்கம் என்ற போர்வையில் வகுப்பறைகளில் அதிகாரம் மட்டுமே செலுத்துகிறார்கள். "இதுவா சொல்லித் தரும் முறை?." எனக் கேட்கிறார்.
சரி, ஆசிரியர்களை விடுங்கள். மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள்? நல்ல மாணவர்களையே எடுத்துக் கொள்வோம். எத்தனை பள்ளிகளில் மாணவர்கள் மறுத்துச் சொல்லப் பழக்கப் பட்டு இருக்கிறார்கள்? ஆசிரியர் சொல்வதை, " இந்தக் காரணங்களால் என்னால் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.", என்று மறுத்துச் சொல்லும் மாணவர்கள் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்? விவாதங்களற்று ஒடுங்கிக் கிடக்கின்றன நம் வகுப்பறைகள் என்று வருந்துகிறார் மாடசாமி. "ஆசிரியர்களையே எதிர்பார்த்து, எதிர்பார்த்து மாணவர்கள் கல்வியைத் தொடரப் பழக்கியாயிற்று. விடமுடியாத ஒரு கெட்ட பழக்கமாக அது பிடித்துக் கொண்டு இருக்கிறது", என்று சாடுகிறார் மாடசாமி.
அடுத்து, பாடத் திட்டங்கள். இவற்றை உருவாக்குவதில், மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி அதிகப் பங்கு இருப்பதில்லை. பெரும்பாலும், வகுப்பறையில் கல்வி சொல்லித் தராத கல்வியாளர்களாலே தான் இது நிர்ணயிக்கப் படுகிறது. கல்வித் திட்டம் கடினமாக இருந்தால், அது தரமானதாகக் கருதப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பத்தாம் வகுப்பில் நுண்கணிதம் சொல்லித் தந்தோம். இனி, ஒன்பதாம் வகுப்பிலேயே நுண்கணிதம் சொல்லித் தரலாம்! என்ற நிலையில் தான் பாடத் திட்டக் குழுக்கள் யோசிக்கின்றன. குழந்தைகளை சக்கையாகப் பிழிந்து எடுப்பது தான் தரமான கல்வி என்று நினைக்கிறார்கள். யாராவது கேட்டால், "தம்பி, உலகம் மிக வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் படிக்கா விட்டால் நம் குழந்தைகள் உலகச் சந்தையில் பின் தங்கி விடுவர்", என்று கரிசனத்தோடு சொல்லுகின்றனர், என்று பாடத் திட்டக் குழுக்களின் அபத்தத்தை எள்ளி நகையாடுகிறார்.
கல்வி என்பது நல்ல சம்பளம் தரக் கூடிய வேலையைப் பெற்றுத் தரக் கூடிய கருவி என்ற குறுகிய நோக்கு, நம் கல்வியை ஒரு வியாபாரப் பொருளாக்கி விட்டது. அறிவியல் என்பது வெறும் பாடமாகவும், மோகமாகவும் மட்டுமே இருக்கிறது. இந்த மோகத்தை மேல்தட்டுப் பள்ளிகள் (elite schools) வியாபாரப் பொருட்களாக்கி விட்டன. மாணவர்களுக்கு விமரிசன அறிவு (Critical thinking) என்ற ஒன்றே இல்லாமல் போய் விட்டது என்று வருந்துகிறார். சரி, இந்த நிலைமைக்கு காரணம் என்ன, அதை எப்படி மாற்றுவது என்ற கேள்விகளுக்கு தன் நீண்ட கால நேரடி அனுபவமும், பரந்து பட்ட படிப்பும், சிந்தனையும் அளிக்கும் தெளிவுடன் விடையளிக்கிறார்.
கல்வி முறை எப்படி இருக்க வேண்டும்?
வகுப்பறைகளில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டும். கல்வி என்பது மாணவனிடமிருந்து தொடங்குகிறது ஆசிரியரிடம் இருந்து அல்ல என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். மாணவர்களுக்கு கற்பிப்பதை விட அவர்கள் தங்களைத் தானே கண்டு கொள்ள உதவுவது தான் ஆசிரியரின் முதன்மையான பணி, என்கிறார் மாடசாமி. சரி, இதை ஏன் நம் ஆசிரியர்கள் செய்வதில்லை?
இந்தச் சிக்கலான கேள்விக்கான விடையைப் பல கோணங்களில் இருந்து அணுகுகிறார் மாடசாமி.
முதல் கோணம், கல்விக்கும், கலாச்சாரத்திற்கும் இடையே ஆன உரசல். கல்வி என்பது தினமும் வளர்வது. ஒவ்வொரு துறையிலும் தினமும் புதிய கண்டுபிடிப்புகள். அறிவியலை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு நாளும் புதுப் புது கண்டுபிடிப்புகள். இந்த தொடர் நகர்ச்சி கல்வியின் உள்ளாற்றல் - உள் பலம். அதே சமயம், நம் சமூகத்தில் இன்னும் சடங்குகள், சம்பிரதாயங்களின் வலு சற்றும் குறையவில்லை சூரிய கிரகணத்தை அறிவியல் ரீதியாக பாடம் நடத்தி விட்டு வந்த அதே ஆசிரியர், வீட்டிற்கு வந்தவுடன் அதே கிரகணத்தின் போது செய்ய வேண்டிய மூடச் சடங்குகளில் ஈடுபடுகிறார். கலாசாரம் என்பது மெதுவாக மாறுவது. அதன் இயல்பான நிலை தேக்கம். ஆனால், கலாசாரத் தேக்கத்திற்கும், கல்வியின் இயல்பான தொடர் நகர்ச்சிக்கும் இடையே மாணவர்களை வழிநடத்தும் பொறுப்பைக் கொண்ட ஆசிரியர்களே இன்னும் மாறாமல் சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் சிக்கித் தேங்கி இருக்கிறார்கள். "இத்தகைய ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்?", எனச் சாடுகிறார்.
இன்னொரு காரணம், நம் ஆசிரியர்களுக்கு விவாதம் பற்றிய அடிப்படை கோட்பாடுகள் தெரியாதது என்கிறார். பாடத் திட்டத்தில் இருப்பதை அப்படியே சொல்லித் தருவது சுலபமானது. ஆனால் அதே பாடத் திட்டத்தை மாணவர்களே, தாங்கள் விவாதித்து, உணர்ந்து கற்றுக் கொள்ளும் படி சொல்லித் தருவதற்கு கடின தயாரிப்பு தேவை. விவாதம் என்பது பொழுது போக்காக நடக்கும் பொங்கல் பட்டி மன்றம் அல்ல. வார்த்தைச் சண்டை அல்ல. விவாதம் என்பது அர்த்தமுள்ள உரையாடல், புரிதலை நோக்கி நடத்தப்படும் உரையாடல். இதில் பேசுவதும், பிறர் பேச்சைக் கேட்பதும் அவசியம். மாற்றுக் கருத்துக்கள் விவாதத்தில் அவசியம். கேள்வி கேட்கும் மாணவர்களை அதிகப் பிரசங்கிகள் என்று பல ஆசிரியர்கள் கருதுவதின் முக்கிய காரணம், அவர்களுக்கு அந்தக் கேள்விகளை வழிநடத்தி ஒரு நல்ல விவாதங்களை வகுப்பறையில் உருவாக்கத் தெரியாதது தான் என்கிறார்.
சகஜத் தன்மை உள்ள இடத்தில் தான் விவாதம் வளரும். நான் ஆசிரியன், எனக்கு உன்னை விடத் தெரியும் என்ற ஏற்ற-இறக்கம் உள்ள இடத்தில் விவாதம் வளராது. நான் சொல்வதை மாணவன் கேட்க வேண்டும் என்ற ஆசிரியப் பிரக்ஞை இல்லாமல், இந்தப் பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று கூட்டாகப் பார்க்கலாம் என்ற மனப்பாங்கு வேண்டும் என்கிறார். மாணவர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் மனப்பாங்கு வேண்டும். வகுப்பறையில் சுதந்திரம் கொடுக்கும் போது, அத்துமீறல்கள் இருக்கும். அந்த அத்துமீறல்களை எதிர் கொள்ள ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லாதது, ஆசிரியர்களை எளிய அதிகாரத்தை கொண்டு வகுப்பறையை வழிநடத்தும் முறையை நோக்கி நகர்த்துகிறது என்கிறார்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் வலு, ஆசிரியர் திரு.மாடசாமி தன் களப்பணியில், தான் கற்றுக் கொண்ட பாடங்களை பகட்டின்றி பகிர்ந்து கொள்வது என்று சொல்லலாம். பழமொழிகள் மூலம், விடுகதைகள் மூலம், நாடகங்கள் மூலம், கிராமங்களில் கல்வி சொல்லிக் கொடுக்க போன களப்பணியாளர்களின் அனுபவங்கள், நமக்கு கல்வியைப் பற்றிய புதிய திறப்புகளை உருவாக்குகின்றன.
கல்வி என்பது வெறும் அறிவியல், கணிதம் போன்ற இயல்களில் தேர்ச்சி பெறுவது மட்டும் அல்ல. பள்ளிக்கூட கல்வி என்பது, மிகக் குறைந்த பட்சம், மாணவர்களுக்கு விமரிசன அறிவையும், விவாதத்தில் ஈடுபடும் பயிற்சியையும், தன் தரப்பை தெளிவாக முன் வைக்கும் திறமையையும், தனக்கு ஒப்புதலற்ற கருத்துக்களை சிராய்ப்பின்றி மறுத்துரைக்கும் தன்மையையும், ஏனைய மென் திறமைகளையும் (Soft Skills) நிதமும் வளர்த்துக் கொள்ள உதவும் ஒரு களம். கல்வியை ஒரு பொருளீட்டும் தந்திரமாக பயன்படுத்தலாகாது ஒரு முழு மனிதனை, தன்னைத் தானே அறிந்து கொள்ளும் திறன் கொண்ட ஒருவனை, உருவாக்க உதவுவது தான் கல்வியின் ஆதார நோக்கம் என வலியுறுத்துகிறார் ச.மாடசாமி.
நம் குழந்தைகளை தேவையற்ற உபரி தகவல்களை நினைவில் நிறுத்தி, அவற்றைத் தொகுத்து, பிழையின்றி எழுதும் சர்க்கஸ் சாகச வீரர்களாக பார்க்கும் காலம் இது. மாட்டுக்கொட்டகையில் அடைத்துப்போட்டு, எதையும் யோசிக்காமல் செவ்வனே செக்கிழுக்கும் மாடுகளை உருவாக்குவதைப் போல, வெறும் பொருளீட்டும் எந்திரங்களாக, 'வெற்றிகரமான' மாணவர்களை உருவாக்கும் ஆர்ய விகாஸ், வெற்றி விகாஸ் போன்ற கல்விக்(சிறைக்)கூடங்கள் தமிழகத்தில்கொழித்துக் கொண்டிருக்கின்றன.
தற்போது, கல்வி என்னும் பெயரில் நடந்துக்கொண்டிருக்கும் வியாபாரச் சந்தையில், ச.மாடசாமி போன்ற ஆசிரியர்கள் ஆற்றும் பணி - போற்றுதற்குரியது. ஈண்டு கவனிக்கப்பட வேண்டியது. இந்நூலை நாம் வாசிப்பது, நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவியாகும். இந்த சன்னமான புத்தகத்தில் (80 பக்கங்கள்) பல கனமான விஷயங்களைப் பற்றித் துல்லியமாக, ஆனால் எளிய நடையில் எழுதியுள்ளார்.
ச.மாடசாமி எழுதிய சில கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.
http://www.keetru.com/index.
http://aruvi.org/wordpress/?
http://books.google.com/books/
2 comments:
இந்த ஜூலை மாதம் சுற்றுலா நிமித்தம் சாலைப் பயணமாக பாண்டிச்சேரி தொடங்கி பழனி வழியாகக் கொடைக்கானல் போய், பிறகு கன்யாகுமரி தொடங்கி கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக பாண்டிச்சேரி வந்தடைந்தேன்.
சிற்றூரோ, மாநகரோ, எல்லாப் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் பொதுவாகக் காணப்பட்டவை இரண்டு விதமான விளம்பரங்கள். ஒன்று, "மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாட்சி"யில் அன்று காலைப் பொழுது புலர்ந்ததற்கும், ஆகாயம் நீலமாக இருப்பதற்கும், குடி மக்கள் நலம் போல முடியாட்சி காண்கின்ற கொற்றவைக்கு அவரது அடிப்பொடிகள் நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்டமான பேனர்கள்.
இன்னொன்று, பத்து மாணவர்களின் போட்டோக்களும் அவர்களது பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மற்றும் செல்போன் நம்பர்கள். இதற்கு முன் பிரியாணி கடைகளுக்குத்தான் இப்படி மீன் வறுவல், நண்டு வறுவல் போன்ற படம் போட்டு பேனர் கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அடித்துப் பிடித்து இப்படிப்பட்ட 'மதிப்பெண் பாக்டரி'களில் சேர்த்து விடும் பெற்றோர்களைத்தான் சொல்ல வேண்டும்.
http://baski-lounge.blogspot.com/2010/11/blog-post.html
"இதற்கு முன் பிரியாணி கடைகளுக்குத்தான் இப்படி மீன் வறுவல், நண்டு வறுவல் போன்ற படம் போட்டு பேனர் கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்"
சரியான உதாரணம் - கல்விக் கூடங்கள், வியாபாரச் சந்தைக் கூடங்களாகத் தான் மாறி வருகின்றன!
அன்புடன்
Post a Comment