கவிதைகள்
வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் நான். தற்செயலாக கவிஞர்
பிரமிளின், "சூரியன் தகித்த நிறம்', கவிதை மொழிபெயர்ப்புத் தொகுப்பை
எடுத்து வாசிக்க ஆரம்பித்த எனக்குக் கிட்டியது திகைப்பூட்டும் இனிய
விருந்து.
இந்தக் கவிதைத் தொகுப்பில், கவிஞர் பிரமிள், தனக்குப் பிடித்த கவிதைகளை பல மூலங்களில் இருந்து மொழி பெயர்த்திருக்கிறார். கேனோ உபநிஷத்தின் பிரபஞ்ச தரிசனத்திலிருந்து, காளிதாசனின் அனுபவாரசம் வரை, கலீல் கிப்ரானினின் ஆன்மீகத் தேடலில் இருந்து அமெரிக்கக் கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கின் நவீனக் கவிதைகள் வரை , பல தரப்பட்ட அற்புதமான கவிதைகளை தமிழாக்கம் செய்திருக்கிறார். சிறந்த உலகப் புகழ் பெற்ற கவிகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார். நெருடலற்ற சரளம், எந்த வார்த்தையையும் இம்மியளவு கூட மாற்ற முடியாத மொழி நேர்த்தி, வாய் உரக்கப் படிக்கும் போது இயல்பாய் இணையும் சந்தம், இவையனைத்தும் ஒருங்கிணைந்து வரும் அபூர்வம், இந்த மொழி பெயர்ப்பு ஒரு மேதையின் கைவேலை என நமக்கு உணர்த்துகிறது.
முதல் வரி:
"There is not a cloud in the sky; there is not a breath of wind; the sun is pouring down cruelly and relentlessly its hot rays; there is a mist caused by the heat, and I am alone on the road.."
"முகிலற்று வறண்டிருக்கிறது வானம். காற்றின் மெல்லிய சுவாசம் கூட இல்லை. தனது வெம்மையான கதிர்களை சூர்யன், இடைவிடாத குரூரத்துடன் பொழிந்தபடி இருக்கிறான். உஷ்ணத்தின் விளைவாக எங்கும் ஆவி மண்டுகிறது. நான் தெருவிலே தனியனாக நிற்கிறேன்..."
கடைசிப் பத்தி:
"...I am strong, I no longer falter; the divine spark is burning in me; I have beheld in a waking dream, the Master of all things and I am radiant with his eternal joy. I have gazed into the deep pool of knowledge and many reflections have I beheld. I am the stone in the sacred temple. I am the humble grass that is mown down and trodden upon. I am the tall and stately tree that courts the very heavens. I am the animal that is hunted. I am the criminal who is hated by all. I am the noble man who is honoured by all. I am sorrow, pain and fleeting pleasure; the passions and the gratifications; the bitter wrath and the infinite compassion; the sin and the sinner. I am the lover and the very love itself. I am the saint, the adorer, the worshipper and the follower. I am God.".
"...இப்போது நான் வலியவன். இனி, நான் தடுமாறமாட்டேன். எல்லாவற்றுக்கும் தலைவனை, நான் தரிசித்து, அவனது முடிவற்ற ஆனந்தத்தில் திளைக்கிறேன். விவேகத்தின் ஆழத்தினுள் நோக்கி, அங்கே நான் பலவாகப் பிரதிபலிக்கக் கண்டேன். திவ்யமான கோயிலின் சிலை நான். அறுத்தி வீழ்த்தி மிதிக்கப்படும் புல் நான். விண்வெளியுடன் குலாவும் பிரம்மாண்டமான விருட்சம் நான். வேட்டையாடப்படும் மிருகம் நான். வெறுக்கப்படும் குற்றவாளி நான். யாவரும் போற்றும் பிரபு நான். துக்கம், வேதனை, ஓடி மறையும் சிற்றின்பம், உண்ர்ச்சிகள், திருப்திகள், கசப்பான கோபம், எல்லையற்ற கருணை, பாபம், பாவி, யாவுமே நான். நானே காதலும், நானே காதலனும், நானே ஞானியும், அவனை வழிபடுபவனும். நானே கடவுள். "
மூலத்தின் வீர்யத்தை விஞ்சியதோ பிரமிளின் மொழிபெயர்ப்பு என எண்ணத் தோன்றுகிறது. இதைப் படிக்க ஆரம்பித்தவுடன், முடிக்காமல் கீழே வைப்பது சாத்தியம் இல்லை.
இந்தக் கட்டுரைக்கு கவிஞர் பிரமிள் எழுதியுள்ள முன்னுரை ஜே. கிருஷ்ணமுர்த்தியைப் பற்றிய புரிதலில் ஒரு புதிய திறப்பை உருவாக்கக் கூடும் - அவரது நீண்ட கால வாசகர்களுக்குக் கூட. இந்தக் கவிதைத் தொகுப்பில், கவிஞர் பிரமிள், மொழிபெயர்க்கத் தெரிவு செய்த கவிதைகள்/கட்டுரைகள் அவரது உள்ளத்திற்கு மிக நெருங்கியவையாக இருந்திருக்க வேண்டும்.
இந்தக் கவிதைகளின் தெரிவு, அவரது ஆன்மீகத் தேடலைச் சுட்டுகிறது. மொழிபெயர்ப்பின் வெகுநேர்த்தியான துல்லியம் அவரது ஆன்மீகப் புரிதலின் ஆழத்தைக் காட்டுகிறது. மொழித் திறனும், நுண்ணுணர்வும், ஆன்மீகப் புரிதலும் ஒருங்கே மிளிரும் இந்தக் கவிதைத் தொகுப்பு, கவிஞர் பிரமிளின் உலகுக்குள் நம்மை அழைக்கும் திறந்த வாசல்.
No comments:
Post a Comment