Friday, July 12, 2013

தேவதேவன் கதைகள்

தேவதேவன் கதைகள்

தமிழினி பதிப்பகம்
சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ 50/-






சில சமயங்களில், பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டி பார்க்கும் போது மனதில் பல ஆண்டுகளாக நினைவு கூறாத எண்ணங்கள் சட்டென்று ஒரே கணத்தில் உங்களை வியாபித்து விடும்.  அந்த ஒரு கணத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தான் உணர்ந்தவாறே மீட்டெடுத்து சொல்லும் சக்தி வாய்ந்த கதை சொல்லி தேவதேவன். 






அறிந்தும், அறியாமலும் இருக்கும் பதின் பருவம் ஒரு அற்புதமான பருவம்.   குழந்தைப் பருவத்தின் யதார்த்தமான வெகுளித் தனமும், தன்னைப் பெரியவர்கள் உலகத்தில் நிலை நிறுத்திக் கொள்ளும் முனைப்பும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் பருவம்.   பறித்த மலரின் மனத்தைப் போல, வெகு குறுகிய காலத்திலேயே, குழந்தைமை அருகிப் போகும் பருவமும் கூட.  அந்தப் பருவத்தின் சஞ்சலங்களை 'வரம்' கதை விவரிக்கிறது.  சந்திராக்கா வீட்டுக்கு வரும் பொன்ராஜுக்கும் , மணிக்கும், பாட்டியம்மா கொண்டு வந்து உபசரிக்கும் காபியும், பிஸ்கட்டும், "ஒரு வினோத உலகத்தில் முதன் முதலாக அவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டதின் அறிகுறியாக விளங்கியது", என்றும்,  அதற்கு அடுத்த வரியிலேயே, "அரைடிராயரில்   உட்கார்ந்த கோலத்தில் துடைகள் சற்று பெரியதாகத் தெரிவது போல அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது", என்று சொல்வதும், அதே வயதில், நான் இப்படி சஞ்சலப் பட்ட பல தருணங்களை நினைவு கூற வைத்தது.  (இதே சாயல் கொண்ட இன்னொரு கதை, "பூந்தோட்டம்", ஒரு பெண் குழந்தையின் பார்வையில்)  தாங்களும் ஒரு காலத்தில் இப்படித் தானே இருந்தோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் நடந்து கொள்ளும் பெரியவர்களின் விசித்திரமான போக்கை விந்தையுடன் பார்க்கும் கதைகள் இவை.


வாழ்க்கையைப் பற்றிய நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதன்,  அந்த நுண்ணுணர்வுகளுக்கு பெரிதளவு மரியாதை தராத உலகத்தை நேர்கொள்ளும்  போது எழும் சஞ்சலங்களை, செய்து கொள்ளும் சமரசங்களை, வெளிஉலகைத் தவிர்க்க எடுக்கும் முஸ்தீபுகளை, பற்றிச் சொல்லும் கதைகளும் இந்தக் கதை தொகுப்பில் உள்ளன.

இந்த ரகத்தில்,  என் மனதை மிகவும் கவர்ந்த கதை, "பூங்காவும், பூ சேகரிக்கும் நொண்டிச் சிறுமியும்".  ஒரு நொண்டிச் சிறுமி, தன் வீட்டின் அருகில் இறுக்கும் பூங்காவில் உள்ள பூக்களைப் பறித்து வீட்டிற்கு கொண்டு செல்வதை சித்தரிக்கும் கதை.   நான்கைந்து பக்கங்களே கொண்ட அந்தக் கதையை படித்து முடிப்பதற்குள் அந்தப் பெண் தன் வீட்டிற்கு பத்திரமாகச் சென்று விடுவாளா? என்ற பதற்றம் என்னையும் தொத்திக் கொண்டது.  அவ்வளவு கூர்மையான சித்தரிப்பு.  உதாரணமாக, அந்த நொண்டிப்  பெண் தன் வீட்டை அடைய ஒரு தெருவைக் கடக்க வேண்டும்.   அந்த முயற்சியை இப்படி விவரிக்கிறார்:

"... பாய்ந்து பாய்ந்து கூடிய வெப்பத்தில், மிரட்டும் மரணமெனக் கறுத்த தார் பரவியிருந்த அந்தச் சாலையே இளக்கம் கொண்டு விரிந்து விரிந்து ஒரு ராஷசப் பல்லியுனடைய நாக்கைப் போல நீண்டு அவளது பாதங்களை நெருங்கி வாரிக் கொள்ளக் காத்திருப்பதாகப் பட்டது.  பின்னாலிருந்து ஹாரனடித்துக் கொண்டு ஒரு கறுப்பு பிளஷர் கார் - அவளைப் பிடித்து விடுவது போல வந்தது.  அந்த மரணச் சாலையிலுருந்திவள் மீண்டு வந்தது பொறுக்காது இவளைப் பிடுங்கிக் கொள்ளவே பாசம் நீட்டிப் புலம்பிக் கொண்டு வந்தது அது."


அட ஒரு, நொண்டிக் குழந்தை தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு பத்திரமாகச் சென்று திரும்பி வரும் அற்பமான பாதுகாப்பைக் கூட அளிக்க இயலாத சமுதாயத்தில் வாழ்கிறோமே என்ற ஆற்றாமை கதைசொல்லிக்கு.   அந்த ஆற்றாமை, வெம்மித் தகித்தச் சாலையை ராக்ஷஷப் பள்ளியின் நாவாகவும், அவசரத்தில் போகும் காரை யமனின் வாகனமாகவும், வெளிப்படுகிறது.  
ஒன்று, சுற்றி இருக்கும் அவலத்தை பார்த்தும் பாராதிருக்கும் தடித்த தோல் இருக்க வேண்டும்.  அல்லது, பார்க்கும் அவலத்தை மாற்றப் போராடும் மனத் திண்மை இருக்க வேண்டும்.  நுண்ணுணர்வும், அந்த நுண்ணுணர்வு சுட்டும் வழியில் செல்ல முடியாத இயலாமையும்  ஒருங்கே இருப்பது பெரும் துயரம் தானே?  கதை சொல்லி உதவி செய்ய வருவதை நிர்தாட்சண்யமாக மறுத்து விடும் அச்சிறுமி, அதே உதவியை சக தோழி அளிக்கும் போது இயல்பாக ஏற்றுக் கொள்கிறாள்.  இப்படி, பல வண்ணப் பூச்சுக்கள் நிறைந்த ஓவியம், இந்தக் கதை.  இதே, இயலாமையை, இன்னொரு கோணத்தில் பார்க்கும் கதை, "ஒரு நூறு பன்றிகளும் திருவாளர் சமுத்ர பாண்டி நாடாரும்".



இன்னொரு அற்புதமான கதை, "சுந்தரவனம்".  இயற்கை அழகு நிறைந்த வனத்தை,  ஒரு இளவரசன், ஒரு மர வெட்டி, மற்றும் வனத்தைக் கடந்து செல்லும் ஒரு சாமியார் கூட்டம், எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய கதை.  தேரில் வரும் இளவரசன், அந்த வனத்தின் இயற்கை அழகை  மனமொன்றி அனுபவிக்கிறான்.  அந்த வனத்தில் இருக்கும் மரங்கள், பறவைகள், மலைகள், நீர் நிலைகள் அவை அனைத்துடனும்  சம்பாஷிக்கிறான்.  அதே வனம், உழைத்துக், களைத்து வரும் மர வெட்டிக்கு, தன் குடும்பத்திற்கு விறகைத் தரும் பொருள் கிடங்காக மட்டும் காட்சியளிக்கிறது.  அதைக் கடந்து செல்லும் சாமியார்களின் கண்களில் அந்த வனம் படுவது கூட இல்லை.  அவர்கள் அந்த வனத்தைக் கடந்து செல்வதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்.   அந்த சாமியார்களை அந்த வனத்தின் செடிகளும், பறவைகளும் கூட ஏளனத்துடன் பார்க்கின்றன.   இளவரசன், சந்நியாசிகள் மரவெட்டி, மூவரும் ஒரே வனத்தில், ஒரே சமயத்தில் தான் இருக்கிறார்கள்.    இளவரசன், சந்நியாசிகளைப் பார்த்து வணங்கி மரியாதை செலுத்தி விட்டு விடை பெறுகிறான்.  மரவெட்டி, சந்நியாசிகளையும், இளவரசனையும், மறைந்து நின்று பார்க்கிறான்.  இளவரசனைப் பார்த்தால் கூனிக் குறுகி வணக்கம் சொல்ல வேண்டும்.  அதைச் செய்ய அவன் விரும்புவதில்லை.  கொடகொடவென்று மந்திரத்தைச் சொல்லி வரும் சாமியார்களும், எரிச்சலைத் தான் உண்டு பண்ணுகிறார்கள்.  அந்த வனத்தின் விலங்குகள் கூடத் தன்னை கேலி செய்வது போல உணர்ந்து எரிச்சலடைகிறான்.

இந்தக் கதையை பல விதங்களில் பார்க்கலாம்.  ஒரு தளத்தில், "வெளி உலகில், புறவயமான உண்மை என்று எதாகிலும் உண்டா?  இல்லை, எல்லாமுமே பார்வையாளின் மன நிலையை மட்டும் பொருத்ததா?", என்ற தத்துவக் கேள்வியை எழுப்புகிறது.  பிறிதொரு தளத்தில்,  இயற்கையை ரசிப்பதில் அவர்களுக்கு உள்ள வேறுபாடு, அவர்களின் சமூக நிலைமையைப் பொருத்ததா? வசதியான வாழ்க்கை கொடுக்கும் சுதந்திரம் தான், இளவரசனுக்கு இயற்கையை ரசிக்கும் மன நிலையை அளிக்கிறதா?   சாமியார்களாக இருப்பதாலேயே, அரசாங்கத்தின் பாதுகாப்பை இயல்பாக பெரும், சாமியார்களின் பார்வையில் அந்த இயற்கை சற்றும் படுவதில்லையே? ஏன்? வயிற்றுப் பசியின் கொடுமையின் முன், இயற்கையின் அழகு எம்மாத்திரம்? என பல கேள்விகள் எழுகின்றன.

இந்தக் கதைத் தொகுப்பில் உள்ள விருட்சம், பாஷை  கதைகள், கவித்துவம் நிறைந்தவை.  பிரபஞ்சத்தை அறிந்து கொள்ள முயல்பவனின் மனதில் நிகழும் அந்தரங்க உரையாடல்களை ஒரு கருவி கொண்டு பதிவு செய்ததற்கு ஒப்பான கதைகள் அவை.  உதாரணமாக, கீழ்க் கண்ட பத்தி 'விருட்சம்' கதையில் வருகிறது.

"... அலைச்சல்கள் மகா வேதனை தரக்கூடியதாகியிருந்தது அதன் வியர்த்தமாகிற பலன் கருதியே.  யாவும் வியர்த்தமே என்னும் சித்தாந்தமும் இதில் ஆருதலாயில்லாபடிக்கு இதில் மிகுந்த கேவலம் ஒட்டி இருப்பதை உணர்ந்தேன்.  காரணம்: தேடி அலைகையில் நான் நழுவவிட்ட மனிதம், கவனிக்காது விட்ட காட்சிகள், பழகாது விட்ட உறவுகள், புசிக்காது விட்ட ரசங்கள்... இன்று எனது தேடல்களை நான் நிறுத்தியதும் குபுகுபுவென்று ஒரு சேர லபிக்கத் தொடங்கியிருப்பதுதான்..."

ஊதுவத்தியின் புகை போல, ஒரு எண்ணம் கொஞ்சம், கொஞ்சமாகத் மேலெழுந்து பரவி சன்னமாகி மறையும் தருணம், அந்த எண்ணத்தின் கடைசி சுவாசம் இன்னொரு எண்ணத்திற்கு  உயிரளித்து மறைகிறது.  இந்த எண்ணத் தொடர்களின் ஊடே நாமும் ஊசலாடிப் பயணிப்பது நல்ல வாசிப்பு அனுபவம்.


நேர் கோட்டில், லௌகீக வாழ்க்கையின் சிக்கல்களை, ஒரு நல்ல முத்தாராமான முடிவைக் கொண்டு ' திட்டமிட்டுச் செதுக்கப்பட்ட' சிறுகதைகள் அல்ல இவை.    ஒரு கவியின் நனவோடையை, கனவை - எழுத்தில் கட்டி எழுப்பும் முயற்சி.

ஒரு கவித்துவம் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.

4 comments:

Jegadeesh Kumar said...

கவிஞர் தேவதேவனை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்தித்தது இனிய அனுபவம். அவரது கவிதைகளைப் போலவே எளிமையாகவும், ஆழமான மனிதராகவும் இருந்தார்.

அவரது கவிதைத் தொகுப்புகளையும், நாடகங்களையும் வாங்கினேன். கதைகள் எழுதி இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிந்தது.

அவரது கவிதைகள் போலவே கதைகளும் மெய்மை நோக்கிய பயணம்தான் போலும்.

Raja M said...

ஜெகதீஷ்,

கவிஞர் தேவதேவனை இதுவரை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை . நீங்கள் சொல்வதைக் கேட்கும் பொது, சந்திக்கும் வைப்பை உன்ருவாக்கிக் கொள்ள வேண்டும், எற எண்ணம் வலுப்படுகிறது.

அன்புடன்

Unknown said...

வணக்கம். தேவ தேவனின் ஒரு கதை. அம்மாவை கொடுமைபடுத்திய அப்பாவைப் பற்றியது. அம்மாவின் புகைப்படத்தைத் தர மறுப்பது என்று ..... படித்து வெகு நாட்களாகிறது.தலைப்பும் நினைவில் இல்லை. இப்பொழுது உடனே படிக்க வேண்டும்.

Unknown said...

வணக்கம். தேவ தேவனின் ஒரு கதை. அம்மாவை கொடுமைபடுத்திய அப்பாவைப் பற்றியது. அம்மாவின் புகைப்படத்தைத் தர மறுப்பது என்று ..... படித்து வெகு நாட்களாகிறது.தலைப்பும் நினைவில் இல்லை. இப்பொழுது உடனே படிக்க வேண்டும்.

Post a Comment