ஆதியூர் அவதானி சரிதம்
வித்துவான்
தூ.வி. சேஷையங்கார்
வகை:
அம்மானை வடிவிலான நாவல்
விஜயா
பதிப்பகம்
விலை:
ரூ 60/-
கடந்த வருடம், விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள் மொத்தமாக வாங்கிய பின்னர், பணம் கட்ட கீழே வந்த போது, கல்லாவில் இருந்த விஜயா பதிப்பக முதலாளி நான் வாங்கிய புத்தக்களைப் பற்றி பேச்சுக் கொடுத்துக் கொண்டே ரசீது எழுதினார்.
பேச்சு வாக்கில், “மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழிலே எழுதப்பட்ட முதல் நாவல் என பலர் கருதுவார்கள். அந்த நாவல் வெளிவருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரெ வெளி வந்த நாவல், ஆதியூர் அவதானி சரித்திரம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று சொல்லி (பணம் பெற்றுக் கொள்ளாமலே), ஒரு பிரதியை கையில் திணித்து விட்டார். அட, இவ்வளவு தமிழார்வம் கொண்ட பதிப்பாளரா, என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வருடத்திற்கு மேலே அலமாரியில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சமீபத்தில் எடுத்துப் படித்தேன்.
பேச்சு வாக்கில், “மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் தான் தமிழிலே எழுதப்பட்ட முதல் நாவல் என பலர் கருதுவார்கள். அந்த நாவல் வெளிவருவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னரெ வெளி வந்த நாவல், ஆதியூர் அவதானி சரித்திரம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்று சொல்லி (பணம் பெற்றுக் கொள்ளாமலே), ஒரு பிரதியை கையில் திணித்து விட்டார். அட, இவ்வளவு தமிழார்வம் கொண்ட பதிப்பாளரா, என்று நினைத்துக் கொண்டேன். ஒரு வருடத்திற்கு மேலே அலமாரியில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சமீபத்தில் எடுத்துப் படித்தேன்.
முதலில் சொல்ல வேண்டிய விஷயம், இந்த நாவல் உரை நடை வடிவத்தில் இல்லாமல், அந்தக் கால வெகுஜன மக்கள் கேட்டு ரசிக்கும் விதத்தில், அம்மானை என்ற பாடல் வடிவில் உள்ளது.
ஆகவே, இது நாவல் தானா, என்ற கேள்வியும் எழுகிறது.
இதை எழுதிய சேஷையங்காருக்கு, இது ஒரு நாவல் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை.
அவரது ஆங்கில முன்னுரை மூன்றெ (சற்று நீண்ட) வரிகள் தாம்.
தனது முகவுரையின் முதல் வரியிலேயெ, அழுத்தம், திருத்தமாக வருமாறு கூறியுள்ளார்:
“Conceiving
that an original novel in the Tamil delineating pictures of the modern Hindu
life would suit the taste of my countrymen, in their present transition stage –
a stage in which … old ideas are giving way to new ones, and myths to facts …”
கடைசி வரியை இப்படி முடிக்கிறார்.
“The
materials are taken from real life, but are glossed over a little with poetic
varnish, and the language employed is simple and unpedantic.”
இந்த முன்னுரை, ஆசிரியர் வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு கோட்டுச் சித்திரத்தை அளிக்கிறது.
வில்லுப்பாட்டுகள்
வடிவில், நல்ல தங்காள், பொன்னர்/சங்கர் கதை போன்ற வரலாற்றுக் கதைகள், புராணக் கதைகள் கேட்டு வந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்க்கையை ஒட்டிய சமகால மாந்தரைக் கொண்டு, ஒரு கதையைச் சொல்ல முயல்கிறார். தனது முயற்சியின் புதுமை, ஆசிரியருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.
யாருக்காக இதை எழுதுகிறோம், என்பதையும் நன்றாகப் புரிந்து கொண்டு தான் எழுதியுள்ளார்.
எந்த நடையில் எழுதினால், வெகு ஜன மக்களிடம் போய்ச் சேரும், என்பதை உணர்ந்து உருவாக்கப் பட்ட படைப்பு.
நாவல் என்ற வடிவமே தமிழில் அப்போது ஒரு புதிய பரிசோதனையாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
ஆக,
இலக்கிய
வரலாற்று
ரீதியில்
இது ஒரு முக்கியமான படைப்பு என்பது உண்மை.
இரண்டாவது, இந்த நாவலில் சொல்லப்படும் விஷயங்கள், ஏறத்தாழ 130 வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் போது கூட, முற்போக்கான விஷயங்களாகத் தான் படுகின்றன.
உதாரணமாக, நாவலாசிரியர், விதவை மறுமணத்தை முன் வைக்கிறார்; கலப்பு ஜாதித் திருமணத்தை ஆதரிக்கிறார்; ஜாதி, ஆசாரம் போன்றவற்றை தீராமல் நக்கல் செய்கிறார்.
படிக்கும் போது ஆச்சர்யமாகத் தான் இருந்த்து.
சேஷையங்கார், அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை விட, மிக முற்போக்குச் சிந்தனை கொண்டிருந்தவரா?
இல்லை, நம்
சமுதாயம் தான் அதிகம் மாறவில்லையா?.
மூன்றாவது, நாவலின் நடை.
முதல் இரு பக்கங்கள் படிக்க கொஞ்சம் தடுமாற்றமாய் இருந்தது.
கொஞ்சம் மெதுவாகப் படித்த போது, நடை பழகி விட்டது.
பல இடங்களில் நாவலின் நடை, குறிப்பாக வசைச் சொற்கள், வாய் விட்டு சிரிக்கவும் வைத்தன.
உதாரணமாக, நாவலின் மையப்பாத்திரம் (அவதானி / protogonist), தன் குலத்திற்கு ஒவ்வாத ஒரு வேலையை எடுத்துச் செய்கையில், அவன் உறவினர் இப்படிக் கூறுகிறார்கள்:
“உன் சாதியென்ன? உறுகுடியின் கீர்த்தியென்ன?
புன்சாதி செய்யும் புழுக்கைத் தொழிலிழைத்துச்
சாதி கெடுக்கும் சதிகாரா …
பார்ப்பாணோ நீயும் படித்த பறையனென்றார்”
புழுக்கைத் தொழில்
– படிக்கும் போதே நறுக்கென்று இருக்கிறது அல்லவா? இந்தப் பேச்சைக் கேட்டு, அவதானியின் அம்மா, கவலைப் படுகிறாள்.
அவளைத் தேற்ற அவதானி சொல்லும் பதிலை (வாய் விட்டு) படித்து ரசியுங்கள்:
“.. எடுத்தறு தக்கவென்றேயென எண்ணமிடும் புண்ணியரும்
பிறருடைய
வாழ்வு பொறுக்காத பேதையரும்
பிறர்பொருளை
வவ்வுதற்குப்
பேராசை கொள்பவரும்
பொய்ச்சாஷி
சொல்லிப் பிழைக்கும் புரட்டர்களும்
இச்சகம்
பாடி யிருந்துண்ணும் பாவிகளும்
வக்கணை பேசி
வழிச்சண்டை
கிண்டிவிட்டுக்
கைக்கொள்ளை
கொள்ளும் கடன் காரப்பேயர்களும்
திண்ணைகள்
தூங்கித் திடங்கெட்ட மாக்களைக்
கண்டுண்ணிகள்
போல் உறுக்கும் பதடர்களும் …
வடிப்பமாய் பேசி
வரும் வல்லடி வம்பர்களும்
அடுத்துக் கெடுப்பவரும் ஆகாத
செய்பவரும்
தொடுக்கும்
வழிகளுக்குள் துட்டவழி நாடுவோரும்
பொய்யாணை
யிட்டு பொறுத்தார்க்குத் தீங்குசெய்யும்
ஐயோவென்றெண்ணா அநியாயப் பாதகரும்
கட்டுக் கட்டாகக் கனக்க
விபூதியிட்டு
மட்டில்லா நாமம்
வழித்துக்
குழையலிட்டு
மாணிக்கப் பட்டையிட்ட வண்ணப்பெருந்தூண் போல்
சாணுக்குமெலகலச் சாயக்கரை பொலிய
ஒப்புந் துகிலுடுத்தி யோரைந்து மெட்டுஞ் சொல்லி
வைப்பாட்டி கொண்டையிலெ வாடும் மருவெடுத்தே
அம்மன் பிரசாதம் ஆத்துமா வீடேறும்
இம்மைச் சுகந்தரும் இந்தாரு மென்று சொல்லி
ஏமாற்றி மூடர்களை யெத்திப் பணம்பறிக்கும்
சீமான்கள் ஈங்கிவர்பின் தேடிப் போகவோ
காண்?”
என்று
கேட்கிறான். அந்தக்
கால சமுதாயத்தில் இருந்த இழிய தொழில்களை, அழகாக பிட்டுப் பிட்டு வைக்கிறார் – சந்தத்துடன்.
வக்கணை பேசுதல்,வடிப்பமாய் பேசுதல், வழிச்சண்டை கிண்டுதல், அடுத்துக் கெடுத்தல், பொய்யாணை இடுதல், பொய்சாஷி சொல்லுதல், மோட்சம் கிடைக்கும் என்று ஏமாற்றிப் பிழைத்தல், என்று
சகட்டு மேனிக்கு விட்டு விளாசுவது அற்புதம்.
இந்த வார்த்தைகள் அனைத்தையும் ஒரே பத்தியில் எந்த நாவலில் படிக்க முடியும்? இந்தப் புத்தகத்தை கவனமாகப் படித்தால், உங்கள் தமிழ் மொழி அறிவு (பாஷா ஞானம்) விரிவடையும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக, நேர்த்தியான மொழியில் பிறரைச் சாட (முக நூலில்) உதவலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட
தொழில்கள் எல்லாம் இன்றும் அதிவீர்யத்துடன் தான் நடந்து வருகின்றன என்பது தான் அவலம்.
இந்தப் புத்தகத்தின் வலு, நாவலாசிரியர் உணர்ச்சிப்
பூர்வமாக முன் வைக்கும் இலட்சியம், நம் மனதைத் தொடுகிறது என்பது தான். இந்தக் கதை உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்
கொண்டு எழுதப்பட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையை எழுதிய பெ. கோ.
சுந்தரராஜன்/சோ. சிவபாத சுந்தரம்
ஆகியோர், சேஷையங்கார், தன் மகள் மிகச் சின்ன
வயதிலேயே (13) விதவையானதனால், மறுமணம் செய்து
வைத்தார், என்பதற்கான சான்றுகளை முன்வைக்கின்றனர். இந்த மறுமணத்தை, ஊர் பிராமணர்கள், கடுமையாக எதிர்த்தனர். ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர். திருவாங்கூர் மகாராஜாவிடம்
(ஆசிரியர், திருநெல்வேலியில் இருந்தார்)
உத்தரவு வாங்கி, ஆசிரியர், ஊர் குளத்தில் குளிக்கக் கூடாது; ஊரார் மளிகை சாமான்
விற்கக் கூடாது; நாவிதரோ, சலவைத் தொழிலாளியோ,
புரோகிதரோ, அவரிடம் வேலை செய்யலாகாது, என பல கஷ்டங்களை விளைவித்தனர்.
அதையொட்டி, அன்றைய சென்னைக் கவர்னர்,
சேஷையங்காருக்கு உரிய பரிகாரம் அளிக்க உத்தரவிடும் வரை, அந்தக் கஷ்டங்கள் நீடித்தன.
பின்னர், சேஷையங்கார், விதவை மறுமணத்திற்காக ஒரு அமைப்பை ஆரம்பித்தார், என்றும்
குறிப்பிடுகிறர்.
இதை
எழுதிய சேஷையங்கார், ஒரு சமூக முன்னோடி. சாதி எதிர்ப்பு, விதவை மறுமணம், அறிவுப் பூர்வமான நோக்கு, ஆகியவற்றைத் தன் சொந்த வாழ்க்கையில் பின் பற்றியவர் மட்டுமல்ல. தேர்ந்த தமிழ்ப் புலமையும் கொண்டவர். தன் அனுபவங்கள் சாதாரண மக்களையும்
சென்றடைய வேண்டும் என விரும்பியவர் என்பது தெரிகிறது.
19 ஆம் நூற்றாண்டின், பிந்தைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் விழுமியங்கள் பற்றியும், அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தைப் பற்றியும், அவர்கள் இருந்த ஊரைப் பற்றியும், பல நுட்பமான தகவல்கள், இந்த நாவலில் உள்ளன.
அந்தக் காலத்தில் ஒரு பிராமணர் சமூகத்தில் பூனூல் போடுவதற்காகும் செலவு, ஒரு
திருமணத்திற்கு ஆகும் செலவு, என்பது பற்றிய தகவல்கள் எல்லாம் கதையை ஒட்டியெ சொல்லப்பட்டு
இருக்கிறது. இந்த விரிவான தகவல்கள், தமிழிலக்கிய ஆய்வு செய்பவர்களுக்கு, தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு, ஒரு விலை மதிப்பற்ற ஆவணம்.
இந்த நாவலைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்த விஜயா பதிப்பகம் பாராட்டுக்குரியது.
3 comments:
நல்ல புத்தக அறிமுகத்திற்கு முதலில் உங்களுக்கு நன்றி.
விக்ரம் சேத் எழுதிய 'எ சூட்டபிள் பாய்' கவிதை நடையில் எழுதப்பட்ட நாவல்தானே? அதுபோல வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். சுஜாதா கூட சூட்டபிள் பாய் போலத் தமிழில் கவிதை வடிவில் நாவல் எழுதப்பட்டால் நன்றாயிருக்கும் என்று அப்போது எழுதியிருந்தார்.
சரவணன்,
மிக்க நன்றி. அடடே, அப்படியா? நான் இன்னும் "A suitable Boy", படிக்கவில்லை! சேஷையங்காரின், நாவல் வடிவத்தைப் பற்றிய பரிசோதனை இன்றும் தொடர்கிறது என்பது வியப்புக்குரியது.
ஆதியூர் அவதானி சரிதம் புத்தகம் முழுவதும் இந்தச் சுட்டியில் கிடைக்கிறது - ஆசிரியரின் முன்னரையுடன்.
http://www.tamilheritage.org/thfcms/index.php/the-first-tamil-novel
Post a Comment