Sunday, August 18, 2013

பெத்தவன்

 பெத்தவன், 40 பக்கங்கள்
ஆசிரியர் :  இமையம்
 பாரதி பதிப்பகம்


ஒரு spoiler alert :  இந்தக் கதை எழுதப்பட்டு ஓரிரு மாதங்களில் கதையில் உள்ளது போலவே தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி சம்பவம் நடைபெற்றது.  கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இமையம் 'கோவேறு கழுதைகள்' மற்றும் 'ஆறுமுகம்' ஆகிய நாவல்கள் மூலம் புகழ் பெற்றவர்.  தாம் வாழும் மண்ணின் சமூக நிகழ்வுகளைத துணிச்சலாகப் படம் பிடித்துக் காட்டுவதால் அவரது எழுத்து யோக்கியமானதாக இருக்கிறது.


தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலிக்கும் மேல்சாதி வீட்டுப் பெண்ணின் கிராமத்தில் ஒரு நாள் நடைபெறும் சம்பவங்களே இந்தக் குறுநாவல்.  ஏறகனவே மூன்று முறை ஓடப்பார்த்து ஊர்க்காரர்களிடம் மாட்டிக்கொண்ட பாக்கியத்தின் தகப்பனிடம் ஊர்க்காரர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. கீழ்ச்சாதிப் பையனைக் காதலிக்கும் பழனி மகள் பாக்கியத்தின் கதையை ரொம்ப நாள் தள்ளிப் போடாமல் நாளைக்கே முடிக்க வேண்டும் என்பதற்குத்தான் பஞ்சாயத்து.  "கல்யாணமா நடக்கப் போவுது?  நல்ல நாள் பாக்க" என்று ஆளாளுக்குப் பேச்சு.  "பூச்சி மருந்த வாயில ஊத்தி ஒரு அறையில போட்டுப் பூட்டிப் புடனும்" என்று கையில் குழந்தை வைத்திருக்கும் ஒரு பெண் யோசனை சொல்கிறாள்.

"எங்களுக்காவா செய்யுறம்? ஆயிரம் தலக்கட்டுக்காரனும் வேட்டி கட்டிக்கிட்டுப் போகணுமில்ல, அதுக்காகத்தான்.  நம்ம சாதி மானம் போவக் கூடாது. எல்லாத்துக்கும் மேல நம்ம கட்சி மானம் போயிடக் கூடாது "  
என்று வருத்தப் படுகிறான் ஒரு கட்சிக்கார இளைஞன்.

ஒருமுறை பிடிபட்டபோது பாக்கியத்தை நன்றாக அடித்துப் போட்டுத் துணியை உருவி மானத்தை வாங்குகிறார்கள் ஊர்க்காரர்கள்.  மறுமுறை, 'இதுக்குத்தானே அலையிற' என்று  ஊர்ப்பசங்கள் வேட்டியை அவிழ்த்துக்காட்டி அவமானப் படுத்துகிறார்கள்.  அந்தப் பையனுடைய பெற்றோரை அடித்து, வீட்டையெல்லாம் கொளுத்திப் போட்டவர்கள் அவனைக் கொல்லத் தயங்குகிறார்கள்.  காரணம் அவன் பொலீஸ் எஸ்.ஐ.
 இதற்கு முன் நல்லூர் எனும் கிராமத்தில் இது போல பிரச்னையில் ஊர் கூடி சம்மந்தப்பட்ட பையனுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைத்துக் காதில் விஷத்தை ஊற்றிக் கொன்று பின் புதைத்து விடுகிறார்கள்.  விஷயம் வெளியில் தெரிந்து  பொலீஸ் வந்து பிணத்தைத் தோண்டி எடுத்து அது பிரச்னையாகி விட்டதால் இந்த முறை பாக்கியத்தை உடனே எரித்து விடுவது என்று ஊர் சார்பில் முடிவு எடுக்கப் படுகிறது.  அன்று இரவு பெண்ணைப் பெத்த பழனியின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே மிகுதிக் கதை.
ஆசிரியர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் எழுத்து தென்னாற்காடு நடையில் இருக்கிறது.
"கூறு கெட்ட @#$#@,   சாம்பலாக்க வேண்டியதுதான.  எதுக்குப் போதச்சாணுவ?"
"அதனாலதான் முன்னெச்சரிக்கயாப் பழனி மவள எரிச்சிடலாமின்னு சொல்லிக்கிட்டிருக்கு"
"நம்ம பயலுவள அவளுவளுக்குப் புடிக்கலியாமா?  அவளுவோ #@$@ மத்துக் கழியாலதான் #$@$@$.  அப்பத்தான் அவளுவ மதம் அடங்கும் "

கிராமங்களின் பக்கம் எட்டிப் பார்க்காதவர்களுக்கு இந்தக் கதையும் நாயக்கன்கொட்டாய் சம்பவங்களும் வினோதமாகத் தோன்றலாம். ஆனால் நிதர்சனம் அதுதான். ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதிக் கம்ப்பார்ட்மெண்ட்டை இறுக்க மூடிக்கொண்டிருக்கிறார்கள்.  நிகழ்கால சமூகவியல் ஆர்வலர்களுக்கும் இலக்கிய வாசகர்களுக்கும்  இந்தக்கதை ஒரு முக்கியமான ஆவணம்.  அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.3 comments:

Raja M said...

"ஒவ்வொரு சாதியினரும் அவரவர் சாதிக் கம்ப்பார்ட்மெண்ட்டை இறுக்க மூடிக்கொண்டிருக்கிறார்கள். "

உண்மைதான். ஏன் மூடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தனையைத் தூண்டும் கட்டுரையை கீழ்கண்ட தளத்தில், திரு. அபிலாஷ் எழுதியுள்ளார்.

http://thiruttusavi.blogspot.com/2013/08/blog-post_14.html

அன்புடன்

clayhorse said...

http://thiruttusavi.blogspot.com/2013/08/blog-post_14.html ஒரு சரியான அவதானிப்பு. இங்கும் அப்படித்தானே. பெருகி வரும் வெள்ளையர் அல்லாத மக்கட்தொகையும் மாறிவரும் demography யும் ஆட்சியையும் அதிகாரத்தையும் மடை மாற்றம் செய்வதால், சொத்தைக் காரணங்களுக்காக டீ-பார்ட்டி ஆர்ப்பாட்டங்கள் நாடெங்கும் அடிக்கடி நடைபெறுகின்றன.

சரவணன் said...

நல்ல அறிமுகம்.
இவ்வளவு வெளிப்படையாகவே கொலைத்திட்டம் போடுகிறார்களா?

Post a Comment