Friday, September 6, 2013

பெருகும் வேட்கை

பெருகும் வேட்கை 
அழகிய பெரியவன்
வகை: கட்டுரைத் தொகுப்பு 
பதிப்பகம்:உயிர்மை
விலை: ரூ. 100/-

பரிந்துரை: கரிகாலன் /சண்முகம்





இந்தப் புத்தகம் அழகிய பெரியவன் எழுதிய இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. நேரடி அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைகளில் பல உங்களை, சட்டென்று நிமிர்ந்து உட்கார வைக்கும். கட்டுரைகளில் பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை.









1. கல்வியைப் பற்றி:

அழகிய பெரியவன் ஒரு அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணி புரிபவர். தமிழ் நாட்டில் தற்சமயம் உள்ள கல்வியின் நிலையை எந்த மேல்பூச்சும் இல்லாமல், உள்ளது உள்ளபடி சொல்கிறார்.



தற்கால கல்விமுறையின் குறைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார் (கட்டுரையின் பெயர்: எரியும் கல்வி). நம் ஊரில் உள்ள கல்வி முறை, “ குழந்தைகள் மையச் சிந்தனை இல்லாமல் இருப்பது தான் – ... அடிப்படைச் சிக்கல்” என்று சொல்கிறார்.

பாடத்திட்டங்களை வகுப்பதில், மாணவர்களுக்கோ, மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர்களுக்கோ எந்த பங்களிப்பும் இருப்பதிலை என்று சொல்கிறார். இதே குற்றச்சாட்டை, இன்னொரு ஆசிரியர், திரு. சா. மாடசாமியும் சொல்லியிருக்கிறார். பலரும் சொல்லியிருக்கிறார்கள். திரு. அழகிய பெரியவனின் கட்டுரைகளின் சிறப்பு, அவர் தன் கருத்துக்களுக்கு பின்புலமாக இருக்கும் பல ஆவணங்களை முன்வைக்கிறார். உதாரணத்திற்கு, பத்தாம் வகுப்பிற்கான அறிவியல் பாடத்திட்டத்தை உறுவாக்கிய குழுவில், 12 பேர் கல்லூரி விரிவுரையாளர்கள், நான்கு பேர் மட்டுமே பள்ளி ஆசிரியர்கள், அவர்களும் மேல் நிலை வகுப்பு ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள். அவர்கள், உருவாக்கிய 312 பக்கங்களைக் கொண்ட அறிவியல் புத்தகங்களில் சொல்லித் தரும் கருத்துக்கள், கல்லூரி மாணவர்களுக்கு சொல்லித் தருவதற்கு இணையான பாடங்கள். இந்தப் பாடத்திட்டம் மாணவர்களின் கற்றல் திறனையோ, வயதையோ கருத்தில் கொள்ளவில்லை. இந்தப் பாடத்தை சொல்லித் தர முயற்சித்தாலும், அதற்கான ஆய்வுக்கூடமோ, நூலகமோ, உபகரணங்களோ, பெரும்பாலான பள்ளிகளில் இல்லை – தனியார் பள்ளிகளில்கூட, என்று அவர் சான்றுகளை முன் வைப்பது இவரது கட்டுரைகளின் வலு.

இத்தகைய பாடத்திட்டங்கள்,  தேவையான ஆய்வுக்கூடமோ, நூலகமோ இல்லாத நிலையில் சொல்லித் தரப்படும் போது, மாணவர்கள் இயல்பாகவே சலிப்படைகிறார்கள். 
பயிற்சியற்ற ஆசிரியர்கள், சலித்துப் போகும் மாணவர்களின் உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ளாமல், “எப்படியாவது இந்தத் தகவல்களை மாணவர்களின் தலையில் புகுத்தி விட வேண்டும்” என நினைக்கிறார்கள். அதனால், “மாணவர்களை அடிப்பதும், பலர் முன்னிலையில் இழிவாகத் திட்டுவதும், பிரம்பால் அடிப்பதும் இன்னும் பள்ளி வளாகங்களை விட்டு வெளியேரவில்லை”, எனச் சாடுகிறார். இதையே பெற்றோர்களும் விரும்புகிறார்கள் என்று வருந்துகிறார்.

இந்தக் கொடுமையான பள்ளிச் சூழலில் இருந்து தப்பி வரும் மாணவர்களுக்கு, வீட்டிலும் பெற்றொர்கள் மூலம் ஏற்படும் நெருக்கடி பற்றி இப்படிச் சொல்கிறார். “எப்போதும் நூலும், கையுமாகவே தம் பிள்ளைகளை பார்க்க விரும்பும் பெற்றோர்கள்..., தம் பிள்ளைகள் நூற்றுக்கு நூறு எடுக்க விழையும் பெற்றோர்கள்,”, என குடும்ப எதிர்பார்ப்புகளின் அபத்தத்தையும் சுட்டிக் காட்டுகிறார். “கற்றவன் சாதி பார்ப்பதும், மதவெறியுடன் திரிவதும், ஊழல் குற்றங்கள் செய்வதும்,..”, வனிகமயமாக்கப் பட்ட அரைவேக்காட்டுத் தனமான கல்வியின் விளைவு என்று பொட்டில் அடித்தது போல சொல்கிறார்.

சரி, கல்வி குறித்து என்ன செய்யலாம்? என்ற கேள்விக்கு ஆகாயத்தில் நின்று பதில் சொல்லாமல், நடைமுறையில் பின்பற்றக் கூடிய வழிமுறைகளை சொல்கிறார்.

பாடத்திட்டங்களை வகுப்பதில், மாணவர்களும், அவர்களுக்குச் சொல்லித் தரும் ஆசிரியர்களும் முக்கியப் பங்கு எடுக்க வேண்டும். கல்விக் கூடங்களில் மாணவர்கள் இளைப்பாற, “ஓவியம், இசை, கைத்தொழில், விளையாட்டு” போன்றவை கல்வியின் இன்றியமையாத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார். இத்தகைய பாடத்திட்டம், மாணவர்களின் “படைப்பூக்கம், மெல்லுணர்வு, அறமதிப்பீடு, ரசனை, உடல் வலிமை, பல்துறை அறிவு” போன்ற மென்திறன்களை வளப்படுத்தும் என்கிறார்.

ஆசிரியர்களுக்குச் சொல்லித் தருவதற்கான பயிற்சியை அளிக்க வேண்டும். வகுப்பறையில் தன்னை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்ற ஆசிரியர்களின் சர்வாதிகார மனப்பாங்கு மாறி, மாணவர்களின் உளவியலைக் கருத்தில் கொண்டு சொல்லித் தரும் பயிற்சி பெற வேண்டும் என்று கூறுகிறார்.

பள்ளிகளில் நூலகமும், ஆய்வுக் கூடங்களும் இல்லாத நிலை மாற வேண்டும் என்று கூறுகிறார்.

பெற்றோர்களைப் பொருத்தவரை, “கதை சொல்ல பாட்டி தாத்தாக்களோ, நட்புடன் பழக தோழமையோ, கரிசனத்துடன் கேட்க பெற்றொரிடம் பொருமையோ, நேரமோ இருந்தாலே போதும், பெரும் மாற்றங்கள் நிகழும்” என்று சொல்கிறார். பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது சமூதாயத்தின் எதிர்பார்ப்புகளைச் சுமத்தாமல், அந்தக் குழந்தையின் கருத்துக்களை/இயல்பை மனதில் கொள்ள வேண்டும் என்கிறார்.


கல்வியைப் பற்றிய அவரது கட்டுரைகளில் காணப்படும் இன்னொரு முக்கியமான சரடு, கல்வியை அடைவதில் தலித்துகளுக்கு இருக்கும் பெரும் இடைஞ்சல்களைப் பற்றியது.

பல தலித் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள், தங்கள் குடும்பத்திலேயே முதல் முறையாக, கல்விக் கூடம் செல்பவர்கள். பிற சமுதாயத்தில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இருக்கும் சில இயல்பான வசதிகள், - உதாரணமாக, வீட்டில் படித்த பெரியவர்கள் இருப்பது, வீட்டில்/பக்கத்து வீட்டில், கல்வியின் வழியில் வேலை வாய்ப்பை அடைந்தவர்களைப் பார்ப்பது – தலித் குடும்பத்தில் இருந்து வரும் பலருக்கு இருப்பதில்லை. இந்த வேறுபாடுகளை நம் கல்வியமைப்பு கண்டு கொள்வதில்லை. எல்லோருக்கும், ஒரே பாடத்திட்டம் தான். “கல்வியைப் பெறுகிறவர்களின் நிலைக்கு ஏற்ப கல்வி வழங்க வேண்டும்”, என்று சொல்கிறார்.

2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று (ASER) ஒன்றாம்/இரண்டாம் வகுப்பு படிக்கும் கிராமத்தைச் சார்ந்த மாணவர்களில், 45 சதவிகித மாணவர்களால், எழுத்துக்களை படிக்க முடிவதில்லை என்றும், கணிதக் கல்வியின் நிலை இதை விட மோசமாக இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். புதிய கல்வி முறைகளான, செயல்வழிக் கல்வி (Activity Based Learning), மற்றும், படைப்பாற்றல் கல்வி (Activity Learning Methodology?), போன்றவை மாணவர்களை, “ஆசிரியர், பாடம், தேர்வு”, என்ற முப்பூதங்களில் இருந்து காக்கும் சக்தி கொண்டவையாக இருந்தாலும் கூட, நடைமுறையில் கிராமப் பள்ளிகளில் உதவுவதில்லை என்று சுட்டிக் காட்டுகிறார். இந்தக் குறைகளைப் போக்க, பல நடைமுறையில் பின்பற்றக் கூடிய, பல ஆலோசனைகளையும் சொல்கிறார் (கட்டுரை: அடிப்படையை உருவாக்காத தொடக்கக் கல்வி).

2. சாதி பற்றி:


இன்றும் தமிழகத்தில் நிலவும் சாதிக் கொடுமையை பல கட்டுரைகளில் ஆவணப்படுத்துகிறார் .

சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் குரல்களை, காது கொடுத்து கேட்காத சமூகத்திற்கு உரக்கச் சொல்கிறார்.  உணர்வுப் பூர்வமாக வாதிடாமல், பல ஆய்வுகளையும், இன்ன பிற சான்றுகளையும், முன் வைக்கிறார். 
பொதுச் சுடுகாட்டில் தலித் மக்களுக்கு பிணம் புதைக்க முடியாத நிலை, செந்தட்டி கிராமத்தில் முப்பிடாதி அம்மனை வழிபட உரிமை கேட்ட தலித்துக்கள் கொல்லப்பட்டது, அரசாங்க அலுவலகங்களில் தலித்துக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் இருப்பது, ஐந்தாண்டுத் திட்டங்களில், தலித் முன்னேற்றத்திற்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப் படாமல் மத்திய அரசுக்கு திருப்ப அனுப்பப் படுவது, துப்புறவுப் பணியாளர்கள் மற்றும் தோல் பதனிடும் வேலையைச் செய்யும் தலித்துக்களுக்கு சம்பளம் குறைவாக கிடைப்பது - இந்த மாதிரி கடுமையான  வேலைகளை உரிய பாதுகாப்புகள் இன்றிச் செய்வதால் வரும் நோய்கள், போன்ற கொடுமைகளை ஆதாரத்துடன் முன் வைக்கிறார். ஒரு கட்டுரையில்,சாதியின் அடிப்படையில் எழுந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஒருவரின் உடம்பில் உள்ள குத்து/வெட்டுக் காயங்களை அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து அப்படியே பட்டியலிடுகிறார். இந்தக் கொடுமைகளைப் பார்த்தும், ஏதும் செய்யாதிருக்கும்/செயலற்று  இருக்கும் சமூகத்தின் மனசாட்சியை உறுத்தும் கட்டுரைகள் இவை.

அழகிய பெரியவன், அம்பேத்கருக்கு மாலை அணிவித்து “சாமியைப்” போல் கொண்டாடும் தலித்துக்களை சாடுகிறார் (கட்டுரை: அம்பேத்கர் இந்து அல்லர்). தலித் மக்களின் உயர்வுக்காக போராடிய திரு. இரட்டைமலை சீனிவாசன், போன்ற சுவாரசியமான ஆளுமைகளை அறிமுகப் படுத்துகிறார். மிக வித்தியாசமான சிந்தனை/ஆளுமை கொண்ட மனிதர் - இரட்டைமலை சீனிவாசன். அவரைப் பற்றி கட்டுரைதொகுப்பில் படித்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு மனிதர் இருந்தார் என்பதே என்னைப் போன்றவர்களுக்கு இதுவரை தெரியாது.


3. தலித் (தலித் இலக்கியம்) என்ற தனி அடையாளம் தேவையா?


இது ஒரு முக்கியமான கேள்வி. தலித் என்றும் தலித் இலக்கியம் என்று சொல்வது தேவையா? உதாரணமாக,தலித் இலக்கியம் என்று சொல்வது இலக்கியத்தின் எல்லைகளை குறுக்காதா? இப்படியே போனால், செட்டியார் இலக்கியம், முதலியார் இலக்கியம் என்பதை எல்லாம் கொள்ளத் தானே வேண்டும் (சா. கந்தசாமின் கேள்வி)? என்ற கேள்விகளை நேரடியாக எதிர் கொள்ளுகிறார்.


தலித் இலக்கியம் என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கியம் என்று புரிந்து கொள்வது தான் சரி என வாதிடுகிறார். எங்கெங்கெல்லாம், மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் பிறந்தன. இந்த நோக்கில் தான், கறுப்பர்களின் இலக்கியமும் (Black literature), மார்க்சிய இலக்கியமும், புலம் பெயர்ந்தோர் இலக்கியமும் மதிக்கப்படுகின்றன. இதே அளவுகோலை கொண்டு தான் நாம் தலித் இலக்கியத்தையும் அளவிட வேண்டும் என்கிறார். தலித் இலக்கிய மரபு என்பது புத்தர் காலத்திலிருந்து தொடங்கியது என்றும், அது சொக்க மேளா (14 ஆம் நூற்றாண்டு), ஜோதிராவ் புலே (1828-90), எஸ். எம். மாதே, அம்பேத்கர் என்று பல முன்னோடிகளால் தொடர்ந்து வரும் நிகழ்வு என்று கூறுகிறார். இந்த மரபை மனதில் கொள்ளாமல், தலித் இலக்கியம் ஆதிக்க சாதியினரால் தொடங்கப் பட்டது என்று சொல்வது அநியாயமானது என்கிறார்.


இந்தக் கருத்துக்களை இலக்கிய விமரிசர்கள் கோட்பாட்டு ரீதியாக நிராகரிக்கலாம். மனித அவலத்தை யார் வேண்டுமானாலும் எழுதாலாம் என்று வாதிடலாம். எழுத்து தான் முக்கியமே தவிர, எழுதுவன் எந்த சாதி என்பது முக்கியமல்ல என்ற வாதத்தை நானும் பெருமளவில் ஒப்புக் கொண்டிருப்பேன். ஆனால், அழகிய பெரியவனின் கட்டுரைகள், என் கருத்துக்களை மறுபரிசீலனை செய்யச் சொல்கின்றன. நான்கு பேர் இருக்கும் இடத்தில், எவனாவது, 'உன் சாதி என்ன?' என்று கேட்டு விடுவானோ? என்று வாழ்நாள் முழுவதும் பயப்படுவனின் அச்சத்தை என்னால் உள்ளூர உணர முடியுமா? என்ற கேள்விக்கு என்னால் உறுதியாக பதில் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை.  



நம்மைச் சுற்றிலும்,சாதி கண்ணுக்கு புலப்படாத சுவாசிக்கும் காற்றைப் போல நீக்கமற நிரைந்திருக்கிறது. அவ்வபோது நிகழும் சாதிச் சண்டைகள், கரையேறும் புயலைப் போல - சாதியைப் பற்றிய உணர்வை நம் முன் சில காலம் நிறுத்துகின்றன. புயலைப் போலவெ, புயல் வந்து போன கொஞ்ச காலத்திலேயே அதை நாம் மறந்தும் விடுகிறோம். இதன் காரணம் என்ன? நம் சமூகத்தில், உயர் சாதி மக்களுக்கு சாதி, பல அனுகூலங்களை அளிக்கிறது. இந்த அனுகூலங்களை முதலில் உணரவாவது வேண்டும்.  இதே போன்ற அனுகூலம், மேலைநாடுகளில் வெள்ளைத் தோல் இருப்பவர்களுக்கு கிடைப்பதை (White privilege) 'வெள்ளை அனுகூலம்', என்று குறிப்பிடுகிறார்கள். இதே நிலைமை, நம் ஊரில் சாதியின் அடிப்படையில் இன்னும் உக்கிரமாக நிலவுகிறது.


சாதி அடையாளம் கொண்டு போராடுவதால் தான் கொஞ்ச, நஞ்ச உரிமைகளையாவது பெற முடிந்திருக்கிறது என்பது அவர் வாதம். அந்த அடையாளத்தை இழந்து பொதுவுக்கு வாருங்கள் என்று சொல்பவர்களுக்கு இப்படி பதிலளிக்கிறார்: " பொதுவில் சம இடம் இருந்தால் போய் விடலாம். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்பது தான் யதார்த்தம்" (கட்டுரை: அனைத்து அழிக்கப் படும் தலித் அடையாளம்). இந்தக் கூர்மையான பதில், எங்களைப் பொதுவுக்கு வாருங்கள் என்று நீங்கள் அழைப்பதற்கு முன், நீங்கள் செல்லவேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது என்று சுட்டுகிறது.


இந்தக் கட்டுரைத் தொகுப்பை படித்து முடித்தவுடன் என் மனதை உறுத்திய விஷயம் ஒன்று இருந்தது. அது, அமெரிக்க ஐக்கிய நாடுகளில், கருப்பர்கள் தங்கள் உரிமைகளைப் பெற 1960 களில் செய்த போராட்டங்கள், இங்குள்ள சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணியது. அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் இனவெறி இன்றும் இருக்கிறது எனினும் இன வெறியின் வீச்சு தன் வீரியத்தை இழந்து வருகிறது என்பது கண்கூடு. ஒபாமா போன்ற ஒரு கறுப்பர் அமெரிக்க ஜனாதிபதியாக இருமுறை தேர்ந்தடுக்கப்பட முடியும் என்பதே, இந்த மாற்றத்திர்கான சான்று. இந்த மாற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணம் - மார்டின் லூதர் கிங். அவர், கறுப்பர்களின் உரிமைக்காக போராடிய போது, அந்தப் போராட்டத்தில் வெள்ளையர்களும் பங்கு கொள்ள வழி வகுத்தார். சில நாட்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 2013இல், ஒபாமா மார்டின் லூதர் கிங்கின், "என் கனவு " (I have a Dream) என்ற புகழ் பெற்ற பேச்சின் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாளில் சொன்ன வாக்கியம் இது:


"...We rightly and best remember Dr. King's soaring oratory that day, how he gave mighty voice to the quiet hopes of millions, how he offered a salvation path for oppressed and oppressors alike. His words belong to the ages, possessing a power and prophecy unmatched in our time."


" .. அன்று டாக்டர். கிங் கின் எழுச்சி மிகு பேச்சை இன்றும் கூர்ந்து நினைவு கூறுகிறோம். அவரது பேச்சு பல லட்சக் கணக்கான மக்களின் ஓசையற்ற எதிர்பார்ப்புகளுக்கு வலிமையான குரலை அளித்தது. அவரது பேச்சு ஒடுக்கப்பட்டவர்களும், அவர்களை ஒடுக்கியவர்களும், தத்தம் தளைகளில் இருந்து ஒருங்கே வெளியேற வழி வகுத்தது."


எந்த உரிமையும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட ஒரு இனம், எப்படித் தனக்குரிய உரிமைகளைப் பெரும் வாய்ப்பை, ஓரிரு தலைமுறைகளில் உருவாக்கிக் கொண்டது, என்ற பார்வையில் ஒபாமாவின் பேச்சு முக்கியமான ஒன்றாகப் படுகிறது. குறிப்பாக, ஒபாமாவின் வாக்கியம் சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று. ஒடுக்குமுறையை எப்போது மொத்த சமூகமும் கண்டிக்கிறதோ அப்போது மட்டுமே உண்மையான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. அப்படி மொத்த சமூகத்தையும் ஒருங்கிணைக்கும் வழியை உருவாக்கக் கூடிய மொழியை முன்வைக்கும் தலைவர்கள் வர வேண்டும். அத்தகைய தலைவர்கள் நம்மில் இன்றும் இருக்கிறார்களா?


இந்தக் கட்டுரைகள், கல்வியைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் சிந்தனை செய்யும் பலரும் படிக்க வேண்டிய ஒன்று. இவை வெறும் உணர்வுப் பூர்வமான வாதங்கள் நிறைந்த எளிய கட்டுரைகள் அல்ல. மேம்போக்காக எழுதாமல், தனது கட்டுரையில் புள்ளி விவரங்கள், அரசாங்க பட்ஜெட், இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள் போன்ற விபரங்களை தயங்காமல் தருகிறார், அழகிய பெரியவன். இந்தக் கட்டுரைகள் வாசகர்கள் மீது கொண்டுள்ள பெரும் நம்பிக்கையுடன் எழுதப்பட்டவை.


இக்கட்டுரைகளில் உள்ள சில கருத்துக்கள், உங்களைச் சீண்டக் கூடும். உங்களைச் சிந்திக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


அழகிய பெரியவனின் எழுத்துக்கள் கவனிக்கப் பட வேண்டியவை.


தொடர்புடைய சுட்டிகள்:


1. ஆளுக்கொரு கிணறு, சா. மாடசாமி

2. இதுவா கணக்கு, ஜோ போளர்

3. அழகிய பெரியவனின் கதையை ஒட்டி எடுக்கப்பட்ட குறும்படம்

4. அம்பேத்கர் கட்டுரைகள்

1 comment:

Raja M said...

அழகிய பெரியவன் அனுப்பிய மின்னஞ்சல்:
>>
வணக்கம் கரிகாலன்/சண்முகம்.

உங்கள் கட்டுரையைப் படித்தேன். அருமையான கட்டுரை. மிகுந்த பொறுப்புணர்வோடு படித்து எழுதியிருக்கிறீர்கள். அந்த நூலுக்கு சுஜாதா-உயிர்மை விருது கிடைத்தது. மிகவும் நன்றி.

உங்கள் பதிவின் மூலம் என் எழுத்துக்கள் ஏதோ ஒரு புள்ளியிலாவது ஒரு விவாதத்தை உருவாக்கும் என நம்புகிறேன். உங்கள் பணி தொடரட்டும்.

அன்பன்,
அழகிய பெரியவன்
<<

அழகிய பெரியவனைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் (அவர் முன் அனுமதியுடன்):

அழகிய பெரியவனின் கைபேசி: 9442413618
அழகிய பெரியவனின் மின்னஞ்சல் முகவரி: aravindanmarch@gmail.com

Post a Comment