மரப்பாச்சி
எழுத்தாளர்: உமா மகேஸ்வரி
பதிப்பகம்: தமிழினி
ஓர் அழகிய இளம்பெண், தலை நிலம் நோக்கி, ஆழ்ந்த அகத்தாய்வு செய்வதைப் போன்ற அழகான சித்திரம் அந்தப் புத்தகத்தின் அட்டையில் இருப்பதைப் பார்த்து அதை வாங்கினேன். இதில் இருந்தே நான் புத்தகம் தேர்வு செய்யும் 'அளகை ' நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்! உமா மகேஸ்வரியின் பெயரை இதற்கு முன் எங்கும் கேள்விப்படாததால், அவரது சிறு கதைத் தொகுப்பான 'மரப்பாச்சி' என்ற அந்தப் புத்தகம் பல நாட்களாக என் அலமாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் random ஆக "மரப்பாச்சி"யை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்ததும் அசந்து போய் விட்டேன்!
கதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரு (தமிழ்ப்) பெண்ணின் பார்வையில், அழகான நடையில், எழுதப் பட்டு உள்ளன. தமிழில் பிரபல பெண் எழுத்தாளர்கள் பலரும், தொலைகாட்சிகளின் முடியா நெடுந்தொடர்களும், பெண்களின் பிரச்சினைகளை வணிக நோக்கத்துக்காகவும், மேலோட்டமான உணர்வுகளைத் தூண்டும் கருவிகளாகவும் மட்டுமே பெரும்பாலும் தொடர்ந்து exploit செய்து வருகிறார்கள். இந்த மாதிரியான, பார்முலா எழுத்துக்களை படித்து சலித்துப்போனவர்களுக்கு, உமா மகேஸ்வரியின் எழுத்துக்கள், ஓர் இனிய அதிர்ச்சியைத் தரும்.
இக்கதைத் தொகுப்பில் பெண்களின் உலகத்தை பல கோணங்களில் இருந்து பார்க்க முடிகிறது. குழந்தைப் பருவத்தின் இயல்பான முழு வெகுளித் தன்மையோ அல்லது, பதின் பருவப் பெண்ணுக்குரிய உணர்வுப் பூர்வமான புரிதலோ ஏதும் இல்லாமல், இடைப்பட்ட, ஒரு கண் சிமிட்டலில் பறந்து போகக் கூடிய பருவத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் குழந்தைத் தனம், அவளிடமிருந்து ஒரு கணத்தில் பறிக்கப்படும் கொடுமையைச் சித்தரிக்கும் சிறுகதை மரப்பாச்சி.
உணர்வுகளை உக்கிரமான வார்த்தைகளால் பதிவு செய்கிறார். உதாரணமாக, காரணமின்றி மச்சானிடம் அடிபடும் அக்காவிற்கு உதவி செய்ய முனையும் தங்கையைத் உதறித் தள்ளி விடுகிறாள் அக்காள் (கதை: ஆண்). அப்படித் தள்ளியதன் காரணம் இவை தானோ என்று தங்கை எண்ணுகிறாள், " குழந்தைப் பிராயத்தின் மென்மையான படிவங்கள், இன்றைய குரூரத்தால் உரிபடுவதை சகிக்காத தள்ளல். என்னில் அழியாமல் இருக்கும் தனது பிம்பங்கள் இந்தக் கோர முனையில் சிக்கி விடாமல் இருக்க அவள் ஏற்படுத்திகிற நகர்வு. தன் துக்கங்கள் என் முன்னே திறக்கப்படுவதை அவமானமாய் கருதும் குறுகல்." சுருங்கி விடும் உணர்வுகளை தள்ளல், நகர்வு, குறுகல் என குறிக்க சின்ன வார்த்தைகள். படிக்கும் போதே எவரையும் தடுமாற வைக்கும் உக்கிரமான கவித்துவம் நிறைந்த எழுத்து.
பெண்களைச் சமமாய் நடத்தாத சமூகச் சூழல், பெண்களை மட்டுமல்லாமல், ஆண்களையும் சிறைப் படுத்தித் தான் வைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் அற்புதமான கதை "வருகை". இந்தக் கதையை உமா சொல்லும் விதம் அலாதி. புகுந்த வீட்டில் இருக்கும் பெண் முதல் முறையாக தன்னைப் பார்க்க வரும் தந்தையின் வருகைக்காக வீட்டைத் தயார் செய்யும் போது எழும் நினைவுகள் பற்றியது. இந்தப் பெண் தன் வாழ்க்கையை நினைவு கூறும் போது, அவள் வார்த்தைகளில் ஓர் ஆபரேஷன் தியேட்டரின் சுத்தம் இருக்கிறது. எந்த சமுதாய வரம்புகள், தன் தந்தைக்கு, அவர் வீட்டில், அவர் நினைத்த படி தன் மகளின் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்களுக்கு எல்லாம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமைகளை அளித்ததோ, அதே சமுதாய வரம்புகள், அவரைத் தன் மகளின் புகுந்த வீட்டில்சம்பந்தியிடம் பம்ம வைக்கிறது. தன் வாழ் நாள் முழுவதும் தன் மகளைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமல், சந்தர்ப்பம் இருந்த போது அவளிடம் அன்புடன் பழகாமல், 'கடுமையான' தகப்பனாய் இருப்பது. பின்னர் பருவம் வந்தபின் தன் மகளை, இன்னொரு ஆணிடம் ஒப்படைத்து விட்டுத் தன் 'கடமையை' செவ்வனே செய்து வாழ்ந்து மடியும் தகப்பன்களின் வெறுமையான வாழ்க்கையை உணர்வுகள் அற்ற வார்த்தைகளால் விவரிப்பது நேர்த்தியான எழுத்து.
அதே போல், பெண்களுக்குப் பெண்களே இழைக்கும் கொடுமைகள் (கதை: கரு), பல பெண்கள் உள்ள வீட்டில் பிறக்கும் ஒரே பையனை வைத்துக் கொண்டாடும் அம்மக்களைப் பற்றி, (கதை: தொலைந்தவன்), தன் மனதைப் புரிந்து கொள்ளாத கணவர்களுடன் வாழ்க்கை நடத்த வேண்டிய நிர்பந்தந்த்தைப் பற்றி (கதை: மரணத்தடம்), அம்மா என்ற சிறையில் வைத்துத் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் குடும்ப பாரத்தைச் சற்றேனும் கீழே இறக்கி வைக்க முடியாதா என்ற ஏக்கம் (கதை: தற்கொலை) என பல நோக்குகளில் பெண்களின் உலகத்தை, உள்ளுணர்வுகளை, மென்மையாய், உண்மையான, உயிருள்ள வார்த்தைகளால் விவரிக்கிறார். எல்லாக் கதைகளிலும், அற்புதமான, கவித்தும் நிறைந்த வரிகள். தற்கொலை செய்து கொள்ள நிற்கும் பெண், சற்றே தயங்கும் போது நினைக்கிறாள், " தாய்மை, சேய்மை, பயம், பிடிவாதம் - எந்த சுபாவம் இந்த ஒத்திப் போடலை நிகழ்த்துகிறது?"
வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே இருக்கும் இன வேறுபாடுகளைக் குறிக்க (white previlege), 'வெள்ளை அனுகூலம்" என்ற ஒரு கோட்பாடு இருக்கிறது. தன்னை இன வெறியன் அல்ல என்று உறுதியாக நம்பும் பல வெள்ளையரும், தான் வெள்ளை நிறத் தோல் கொண்டு இருப்பதால் இருக்கும் அனுகூலங்களை அவ்வளவு எளிதாக உணர முடியாது என்பதை உணர்த்தும் கோட்பாடு. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் தான் நூற்றுக் கணக்கான இன சமத்துவமின்மை பற்றிய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
உமா மகேஸ்வரியின் எழுத்து இந்தியச் சூழலில், ஆண்கள் தங்களது, ஆணாய் பிறந்ததால் மட்டுமே கிடைக்கும் இயல்பான அனுகூலங்களை ("male previlege") ஒரு பெண்ணின் பார்வையில் சுட்டிக் காட்டுகிறது. பல அனுகூலங்கள், வெளிப்படையாகத் தெரிந்தாலும், இன்னும் பல அனுகூலங்கள், ஆண்களுக்குக் கிடைப்பது அவ்வளவு வெளிப்படையாக இல்லை. அந்த இருட்டடைந்த மூலைகளை உமாவின் எழுத்து வெளிச்சத்தில் நிறுத்துகிறது. உமா மகேஸ்வரியின் மென்மையான, கவனமான எழுத்தில், எந்த "melodrama" வும் இல்லை. அது உங்களிடம் எந்த அனுதாபத்தையும் கோர மறுக்கிறது. உறவுகளின் மென்மையைக் கவித்துவமான எழுத்துக்களால் உணர்த்தும் இந்தப் புத்தகம், எல்லா ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும். மேலும் இந்தத் தொகுப்பு உங்கள் மனதை விஸ்தாரமாக்கி, அதில் ஓர் ஆழமான புரிதலைக் கோரும்.
5 comments:
எனக்கு அதிகம் பிடித்த சிறுகதையாளர் உமா மகேஸ்வரி. இவரது தொலைகடல்,அரளிவனம் சிறுகதை தொகுப்புகளையும் முடிந்தால் வாசியுங்கள். கவித்துவமான மொழிநடையில் சிறுகதை புனைவதில் தேர்ந்தவர். நல்ல நூலாய்வு.வாழ்த்துகள்.
சுவாரசியமாக இருக்கிறது...வாசிக்க வேண்டும் போல தோன்றுகிறது. உமா மகேஸ்வரியின் வேறொரு நாவலை வாசித்திருக்கிறேன்..பகிர்வுக்கு நன்றி
நிலாரசிகனுக்கு,
உமா மகேஸ்வரியின் மற்ற புத்தகங்களின் அறிமுகத்திற்கு நன்றி. அவசியம் படிக்கிறேன். இந்தப் புத்தகம் படித்த பின், இவரது பிற புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள, இணையத்தில் தேடினேன். உடுமலையில் ஒரு புத்தகம் சிக்கியது. மற்றபடி இவர் எதுவும் இணையத்தில் ஏதாவது வலைப்பூ வைத்திருக்கிறாரா?
உமா மகேஸ்வரி ஏதானும் நாவல் எழுதியுள்ளாரா ?
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
Post a Comment