Thursday, March 25, 2010

கண்ணீரைப் பின் தொடர்தல்


கண்ணீரைப் பின் தொடர்தல்
ஆசிரியர்: ஜெயமோகன்
பதிப்பகம்: உயிர்மை




இருபதாம் நூற்றாண்டில், அதுவும் அதன் பின் ஐம்பது ஆண்டுகளில், இந்தியாவில் பல அற்புதமான நாவல்கள் வெளிவந்துள்ளன.   இந்தியாவில் பெரும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார, அமைப்புகளில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் இது.  நவீன யுகத்தின் எதையும் அறிவுப்பூர்வமாக நோக்கும் ஆய்வு முறை, பல நூற்றாண்டுகளில் எந்தக் கேள்விக்கும் உட்படாத தொன்மையான மரபுவாத முறைகளை, யந்திரத்தன்மையுடன் சந்தித்த காலம்.   சுதந்திரம் மட்டும் அடைந்து விட்டால், மக்களும், மன்னர்களும் சமமாவார்கள் என்று லட்சியவாதிகள் கனவும், தினவும் கொண்ட - ஒரு தேசத்தின் வரலாற்றில் அபூர்வமாக மட்டுமே வரக்கூடிய- காலம்.  இந்தக் காலகட்டம் இந்தியச் சமூகத்தின் அனைத்து மட்டங்களையும், அரசன் முதல் ஆண்டி வரை, மிக அடிப்படையான விதங்களில் பாதித்தது.  சமூகத்தில் பெரும் மாற்றங்களை, எதிர்பார்ப்புகளை உருவாகியது.  இந்த மாற்றங்கள், இந்திய எழுத்தாளர்களுக்கு செறிந்த இலக்கியங்களைப் படைக்க அற்புதமான விளைநிலங்கள் ஆயின.  பல நல்ல இலக்கியங்கள், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் தமிழ் இலக்கிய உலகிற்கு வந்தன.



அப்படி வந்த மொழிபெயர்ப்புகளில்,  இருபத்தியிரண்டு நாவல்களை, நாவலாசிரியர் ஜெயமோகன், தமிழ் வாசகர்களுக்கு (மீண்டும்) இந்தக் கட்டுரைதொகுப்பில் அறிமுகப்படுத்துகிறார்.  இக்கட்டுரைத்தொகுப்பில், ஜெயமோகன், தனக்குப் பிடித்த, பிற மொழி கதைகளைப் பற்றி, மனம் கவரும் வகையில் எழுதி உள்ளார்.  பெரும்பாலான கதைகள், வங்க, கன்னட, மலையாளத்தைச் சார்ந்தவை.  பிரதிநிதித்துவம் குறித்து, சில தெலுங்கு, மராத்தி, பஞ்சாபிக் கதைகளைச் சேர்த்துக் கொண்டதாக முன்னுரையில் கூறுகிறார்.  ஜெயமோகன், தனக்கு பிடித்த கதைகளைப் பற்றி மட்டும் எழுதுவதாக முன்னுரையிலேயே தெளிவாக கூறிவிடுவதால், 'ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்தார்?, ஏன் இந்தக் கதையைத் தேர்வு செய்யவில்லை?', என்ற சர்ச்சைக்கு இடமில்லை.  சரி, கட்டுரைத்தொகுப்பிற்கு வருவோம்.  இந்தக் கட்டுரைகளின் அமைப்பு மூன்று பரிமாணங்களாகக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.
 
முதலாவது, இந்தக் கட்டுரைத் தொகுப்பில் உள்ள நாவல்கள் அனைத்தும் இந்தியாவில் கடந்த அறுபது ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும் மாறுதல்கள் எவ்வாறு மக்களைப் பாதித்தன என்பதைப் பற்றியவை.  நவீன யுகத்தின் வேகம், காட்டாறு போல,ஆழ்ந்த வேரற்ற சமுதாயங்களை அடித்து கொண்டு போகும் சக்தி வாய்ந்தது.  இந்த மாற்றங்களை, ஒரு தொன்மையான கலாச்சாரம் எப்படி எதிர் கொண்டது, எப்படி பல ரூபங்களில் உள்வாங்கிக் கொண்டது என்பதை ஜெயமோகன் மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறார். எல்லா நாவல்களைப் பற்றியும் கூற இயலாது என்பதால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், ஒரே ஒரு நாவலைப் பற்றி பார்க்கலாம்.  


ஜெயமோகன் மிகவும் சிலாகிக்கும் நாவல் தாராசங்கர் பானர்ஜியின், 'ஆரோக்ய நிகேதனம்'  என்ற நாவல்.  இந்த நாவலில் கதாநாயகன் மஷாய் ஒரு ஆயுர்வேத வைத்தியர்.  சிறந்த வைத்தியரும் கூட.  ஆனால் காலத்தின் மாற்றத்தால் ஊருக்கு அலோபதி மருத்துவம் வருகிறது. பழமையும், புதுமையும் சந்திக்கும் போது நிகழும் உரசல் பல தளங்களில் நிகழ்கிறது.  இந்த உரசலைப் பற்றி ஜெயமோகன்:   'ஆயுர்வேதம் மரணத்தை துயரங்களில் இருந்து விடுதலை தரும் பிங்கல கேசினியாக பார்க்கிறது; வாழ்வை மருத்துவம் மூலம் செம்மைப் படுத்தலாம், ஆனால் மருத்துவம் மூலம் மரணத்தை தவிர்த்து விட முடியாது.  மரணத்தை மன நிம்மதியுடன் எதிர்கொள்வதே முக்கியம் என கருதிகிறது.'  இதன் மறு பக்கம் அலோபதி மருத்துவம்;  'மரணத்தை மருத்துவரின் தோல்வியாக பார்க்கிறது.  மரணம் எனும் கரியபெரும் சக்தியை அனைத்து ஆயுதங்களாலும் எதிர்த்து போரிட முயல்கிறது.' இந்த, இரு எதிர்முனைகளுக்கு இடையே நிகழும் போராட்டம் பல தளங்களில் வெளி வருகிறது இந்த நாவலில்.  இந்த நாவலின் சாரத்தைப் பற்றி வருமாறு விவரிக்கிறார்: "ஆரோக்ய நிகேதனம், மரணத்திற்கும் வாழ்வுக்கும், உள்ளுணர்வுக்கும் தருக்க பூர்வ அறிவுக்கும், கிராமத்திற்கும் நகரத்திற்கும், இசைந்து வாழ்தலுக்கும் போராடி வாழ்தலுக்கும், இடையேயான முடிவற்ற முரண் சாத்தியங்களை பற்றியது".  இது நவீன உலகும், மரபுலகும் சந்திக்கும் போது ஏற்படும் பெரும் சமரின் மத்தியில் நின்று எல்லா பக்கங்களையும் நுண்ணிய கவனிப்போடு விவரிக்கும் நாவல் என்பதை அழகாக உணர்த்துகிறார்.   


தாராசங்கர் பானர்ஜி வங்கத்தில் நாற்பதாண்டுகளுக்கு மேலாக எழுதி வந்தவர்.  நாற்பது நாவல்களையும், இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியவர்.    இவரது பல நாவல்கள், ஆரோக்ய நிகேதன் உள்பட, திரைப்படங்களாக்கப் பட்டன.  சத்யஜித் ரே, இவரது ஜல்சாகர் என்ற கதையை திரைப்படமாக எடுத்த போது, அது உலகெங்கும் பரவலாக விமரிசிக்கப்பட்டது.
  





இரண்டாவது முக்கியமான விஷயம், இந்த மொழி பெயர்ப்புகளைப் பற்றி ஜெயமோகன் எழுதி இருக்கும் விதம்.  ஒவ்வொரு நாவலைப் பற்றி எழுதும் போது, அவர் கட்டுரையில் ஏறக்குறைய மூன்று பொதுவான அணுகுமுறைகள் இருப்பது தெரிய வருகிறது.  முதல் பகுதியில், அந்த நாவலின் பின் புலத்தை, அதற்கு இலக்கியத்தில் இருக்க வேண்டிய இடத்தை, அது வெளி வந்த கால கட்டத்தில் இருந்த வழி முறைகளை, விவரிக்கிறார்.  பின்னர், அந்த நாவலின் தனித்துவத்தை அழகாக முன் வைக்கிறார்.  தன்னுடைய நுண்ணிய வாசிப்பால், அந்த நாவலின் நுணுக்கங்களை வாசகர்களுக்கு கோடிட்டுக் கட்டுகிறார்.  (மேலை நாடுகளில் ஜெயமோகன் இருந்திருந்தால், ஒரு நல்ல கல்லூரிப் பேராசிரியர் ஆகி, மாணாக்கர்களுக்கு 'literature appreciation' வகுப்பு நடத்தி கொண்டிருந்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது). இந்த இடத்தில் தான் ஜெயமோகனின் எழுத்து மிளிர்கிறது, நாவலின் நுட்பங்களை ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு விவரிக்கிறார்.  அந்த உற்சாகம் படிக்கும் நமக்கும் தொற்றி விடுகிறது. கடைசி பகுதியில், இந்த நாவல்கள் எப்படி இந்திய பண்பாட்டு மரபில் எந்த இடத்தில் அமர்கின்றன என்பதைப் பற்றிய அவரது அனுமானம் பற்றி எழுதுகிறார்.  உதாரணமாக, ஆயுர்வேத வைத்தியர் மஷாய் ஒரு சமயம் அலோபதி மருத்துவம் கற்க முயல்கிறார்.  ஆனால் அவரால் பிணத்தை அறுத்து ஆராய முடியவில்லை.  இதைப் பற்றி அலோபதி மருத்துவர் நினைப்பதாக ஜெயமோகன் வருமாறு எழுதுகிறார்: 'மஷாய் சாத்வீக குணம் கொண்டவர். அவர் உள்ளே துடிக்கும் ஒரு துளி ராஜசம் அன்றி வேறேதும் இல்லை' என.  இப்படிப்பட்ட, ரஜ, தமோ, சாத்விக குணங்களைப் பற்றிய சாராம்சங்கள், நூலில் இருந்தனவா, இல்லை இவை ஜெயமோகனின் ஆழ்ந்த இந்து மரபின் பரிச்சயத்தில் விளைந்தவையா என்று தெரியவில்லை.  இந்த கடைசிப் பகுதியில் மட்டும், ஜெயமோகனின் நேரடியான கருத்து வெளிப்பாடுகள் பற்றி, சிலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். வாசிப்பின் தாக்கம் வாசிப்பவனின் ரசனையைப் பொறுத்தது என்பதால், அத்தகைய வேறுபாடுகள் எழுவது இயல்பும் கூட.  எப்படி இருந்தாலும், ஜெயமோகனின் ஒட்டுமொத்த  அறிவுப்பூர்வமான அணுகுமுறை, ஓர்  எளிய வாசகனும் பேரிலக்கியங்களை சுலபமான புரிந்து கொள்ள வைக்கிறது.  திறனாய்வுகள் போல் வரண்ட எழுத்துகள் இல்லாமல், ஜெயமோகனின் துடிப்பான எழுத்துக்கள் இந்த நாவல்களைப் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. எல்லா நாவல்களையும் சமநிலையுடன் ஜெயமோகன் விமரிசித்து இருக்கிறார் என்றாலும், இந்தத் தொகுப்பில், மற்ற மொழி நாவல்களை விட, மலையாள மற்றும் வங்க நாவல்களை பற்றி எழுதும் போது மிகவும் மனமுவந்து எழுதி இருக்கிறார் என்று படுகிறது. 

இதைப் போன்றே, நவீன யுகத்தின் வேகத்தை எதிர் கொள்ள முடியாமல், சொந்த ஊரை விட்டு நகரங்களில் சிக்கிச் சிதையும் குடும்பம் பற்றிய நாவல்கள் (விபுதி பூஷனின் பதேர் பாஞ்சாலி, எஸ். எல். பைரப்பாவின், ஒரு குடும்பம் சிதைகிறது), கடும் பஞ்சத்தை எதிர் கொள்ளும் மக்களைப் பற்றிய நாவல்கள் (பன்னாலால் படேலின், வாழ்க்கை ஒரு நாடகம்), இந்தியாவில் நிகழும் மாறுதல்களை நிலப்பிரபுத்துவ வர்க்கம் எப்படி எதிர்கொண்டது என்பதைப் பற்றிய நாவல்கள் (கேசவதேவின் அண்டை வீட்டார், கிரிராஜ் கிஷோரின் சதுரங்கக் குதிரைகள்), பிரபுக்கள்ஆண்டது போய், இன்னொரு ஆளும் வர்க்கம் வந்ததை தவிர வேறென்ன பெரிதாக நடந்து விட்டது என்று சிக்கலான கேள்விகள் கேட்கும் நாவல்கள் (பி. கேசவதேவின் அண்டை வீட்டார், தகழியின் ஏணிப்படிகள்), சுதந்திர இந்தியாவில் நிகழும் அன்றாட அபத்தங்களை நக்கல் செய்யும் நாவல் (ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்), என பல அற்புதமான மொழிபெயர்ப்புகளை அறிமுகப் படுத்துகிறார். அட, இவற்றில் ஒன்றைக் கூட படித்ததில்லையே என்ற ஏக்கம் வாசகனுக்கு எழத்தான் செய்கிறது!


மூன்றாவதாக, இந்த கட்டுரைத் தொகுப்பை படிப்பதில் ஒரு இலக்கிய வாசகனுக்கு பல பயன்கள் உள்ளன. ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர். அதை விட நுண்ணிய வாசிப்பாளர். இந்த தொகுப்பைப் படிக்கும் போது அவர் வாசிப்பின் நுணுக்கம் புரிகிறது. ஒரு நாவலைப் படிக்கும் போது வாசகர்கள் கொள்ள வேண்டிய கவனத்தை கற்றுக் கொடுக்கும் வகையில் ஜெயமோகனின் எழுத்து அமைந்துள்ளது. இரண்டாவதாக, இந்தியர் ஒவ்வொருவரும், அவரவர் சூழலில், மொழி, உணவு, உடை வேறுபாடுகளால் தனித்தனி தீவுகளாகத் தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நாவல்கள், வாசகர்களை தத்தம் தீவுகளின் வசதிகளை விட்டு பிற தீவுகளுக்குச் செல்லத் தூண்டும் தோணிகளாய் அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தின் நாவல்களின் அறிமுகங்களைப் படிக்கும் போது, இந்தியா என்னும் பரந்த தேசத்தின் கலாசார விஸ்தாரத்தையும், அந்த விஸ்தாரத்தில் ஊடுருவும் சில பொதுத் தன்மைகளையும் பற்றியும் பிரமிப்பே எழுகிறது. இந்தப் புத்தகங்களின் மூலம், இந்தியா என்ற கலவையை நன்றாக புரிந்து கொள்ள முடியும். நல்ல இலக்கியங்களைப் பற்றி ஒரு கற்ற அனுமானத்தையும் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும். கடைசியாக, இந்த மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களை ஒரு நல்ல தேர்ந்த தமிழ் இலக்கிய வாசகன் கூட அறிந்திருப்பானா என்பதே சந்தேகம் தான். இவர்களது மொழி பெயர்ப்புகள், சாகித்ய அகாதமி, நேஷனல் புக் டிரஸ்டு, மற்றும் இன்னும் சில (காலச்சுவடு, வாசகர் வட்டம் போன்ற) பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு, கல்லூரி நூலகங்களிலும், சில கல்லூரி பேராசிரியர்களின் வீட்டு அலமாரிகளிலும் தங்கி தூசு படிந்து போய் விடுகின்றன. ஜெயமோகன், புத்தகத்தின் கடைசியில், இந்த மாதிரியான மொழிபெயர்ப்புகளின் பெயர்களை ஒரு அட்டவணையாக இணைத்திருக்கிறார். இந்த மொழி பெயர்ப்புகளைப் பற்றி, வெகுஜன ஊடகங்களில் யாரும் அதிகம் பேசுவதில்லை. இந்தப் புத்தகங்களை, ஜெயமோகன் தன் வலிய எழுத்துக்களால் மீண்டும் உயிர் கொள்ளச் செய்திருக்கிறார். இதில் உள்ள புத்தகங்களில் ஒரு சிலவற்றையாவது, குறிப்பாக தாரஷங்கரின் ஆரோக்ய நிவேதனம், தகழியின் ஏணிப்படிகள் நாவல்களை இந்த வருடம் முடிவதற்குள் தேடிப் படித்து விட வேண்டும் என நினைக்கிறேன். (வருடக் கடைசிக்குள் படிக்க முடியா விட்டால், இந்த நாவல்களை மூலமாகக் கொண்ட சில திரைப்படங்களையாவது பார்த்து விட வேண்டும். என்ன நம்பிக்கை பாருங்கள்?).


தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

11 comments:

Baski.. said...

useful post...nice..

Jegadeesh Kumar said...

வாசிப்பில் ஈடுபடத்தூண்டும் பதிவு.
நாவல்களின் பட்டியலைக் கொடுத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.
எனினும் நல்ல படிவுக்கு நன்றி

sammuvam said...

அன்புள்ள ஜெகதீஷ் குமார்,

நீங்க கேட்ட பட்டியல்:

அசாமி

1. கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மீ நந்தன் போரா

வங்கம்

2. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பானர்ஜி
3. கொல்லப்படுவதில்லை - மைத்ரேயி தேவி
4. நீலகண்டப் பறவையைத் தேடி - அதீன் பந்த்யோபாத்யாய்
5, பதேர் பாஞ்சாலி - விபூதி பூஷண்பந்த்யோபாத்யாய்

குஜராத்தி

6. வாழ்க்கை ஒரு நாடகம் - பன்னாலால் படேல்

இந்தி

7. சதுரங்கக் குதிரைகள் - கிரிராஜ் கிஷோர்
8. தர்பாரி ராகம் - ஸ்ரீலால் சுக்ல

கன்னடம்

9. ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ். எல். பைரப்பா
10. மண்ணும் மனிதரும் - சிவராம காரந்த்
11. முதலில்லாததும் முடிவில்லாததும் - ஸ்ரீரங்க
12. சம்ஸ்காரா - யு. ஆர். அனந்தமூர்த்தி
13, சிக்கவீர ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்

மலையாளம்

14. அண்டைவீட்டார் - பி. கேசவதேவ்
15. பாத்தும்மாவின் ஆடும் இளம்பருவத்தோழியும் - வைக்கம் முகமது பஷீர்.
16. ஏணிப்படிகள் - தகழி சிவசங்கரப்பிள்ளை
17. மீசான் கற்கள் - புனத்தில் குஞ்ஞப்துல்லா

மராட்டி

18. பங்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
19. யயாதி - வி. எஸ். காண்டேகர்

பஞ்சாபி

20. வெண்குருதி - நானக் சிங்

தெலுங்கு

21. அற்ப ஜீவி - ஆர்.விஸ்வனாத சாஸ்திரி

உருது

22. அக்னி நதி - குர் அதுல் ஐன் ஹைதர்

கோவை அரன் said...

என்ன அருமையான விமர்சனம் , ஆழ்ந்து படித்துள்ளீர்கள் .

Raja M said...

கோவை அரண்:
சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் படியுங்கள். நான் மிக விரும்பிப் படித்த புத்தகம் இது.

ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.

Jegadeesh Kumar said...

thanks sammuvam

Unknown said...

நல்ல அருமையான விமர்சனம்.

Anonymous said...

அன்பிற்கினிய கரிகாலன்
தங்களின் கீழ்க்கண்ட கருத்து என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தியர் ஒவ்வொருவரும், அவரவர் சூழலில், மொழி, உணவு, உடை வேறுபாடுகளால் தனித்தனி தீவுகளாகத் தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நாவல்கள், வாசகர்களை தத்தம் தீவுகளின் வசதிகளை விட்டு பிற தீவுகளுக்குச் செல்லத் தூண்டும் தோணிகளாய் அமைந்துள்ளன. இந்தப் புத்தகத்தின் நாவல்களின் அறிமுகங்களைப் படிக்கும் போது, இந்தியா என்னும் பரந்த தேசத்தின் கலாசார விஸ்தாரத்தையும், அந்த விஸ்தாரத்தில் ஊடுருவும் சில பொதுத் தன்மைகளையும் பற்றியும் பிரமிப்பே எழுகிறது. இந்தப் புத்தகங்களின் மூலம், இந்தியா என்ற கலவையை நன்றாக புரிந்து கொள்ள முடியும். நல்ல இலக்கியங்களைப் பற்றி ஒரு கற்ற அனுமானத்தையும் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
"தத்தம் தீவுகளின் வசதிகளை விட்டு பிற தீவுகளுக்குச் செல்லத் தூண்டும் தோணிகளாய் அமைந்துள்ளன" என்ற வரி அருமையான உருவகம். பிற நாட்டு நல் அறிஞர்சாத்திரங்கள் தமிழ் மொழியில் akkal வேண்டும் என்றபாரதியின் வாக்கிற்கேற்பnuulயாத்துள்ள ஆயிரியருக்கும் அது பற்றி அருமையான நடையில் எழுதியுள்ள தங்களுக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
மிக்க அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Raja M said...

அன்புள்ள அய்யா:

உங்களது ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி!

R. Gopi said...

தங்கள் பகிர்வுக்கு நன்றி.

நான் எழுதலாம் என்று யோசித்து இருந்தேன்.

இந்தப் பட்டியலில் உள்ள ஆறு புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். ஐந்து புத்தகங்கள் இன்னும் வாசிக்க வாங்கியுள்ளேன்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment