Friday, April 2, 2010

எட்டுத்திக்கும் மதயானை

எட்டுத்திக்கும் மதயானை
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம்

தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப்  பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன் கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன். ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.
ஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த நாவலை நாஞ்சில் நாடன் கொண்டு சென்றிருக்கும் விதமும், நாவலின் ஓட்டமும், அதன் முடிவைத்   தீர்மானித்திருக்கும் அழகும் - அற்புதம்.

நாவல், நாஞ்சில் நாட்டில் ஆரம்பித்து ஆந்திராவில் தஞ்சம் புகுந்து, பின்  அங்கிருந்து கொங்கன் நாட்டுக்குப் பயணித்துக் கடைசியில்  மும்பையில் சங்கமிக்கிறது. இந்த எல்லா இடங்களுக்கும், கதை நாயகன் பூலிங்கத்துடன் நம்மையும் பயணிக்க வைப்பதுடன், அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து, 'தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை' என்பது போல நாஞ்சில் நாடன் இந்த ஆரவாரமில்லாத அற்புதப்புதினத்தைப் படைத்திருக்கிறார். உணர்ச்சிவயப்படாத, ஆனால் மனித நேயமிக்க எழுத்து.

சாதியின் சகதியில் நாறிக்கிடக்கிறது ஊர். தன் பரம்பரையிலேயே முதலாவதாகக் கல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்கிறான் கீழ்சாதியில் பிறந்த பூலிங்கம். பி. காம் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் ஒரு சிறு அசம்பாவிதத்தினால், நாஞ்சில் நாட்டிலிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் புலம் பெயர்கிறான். பிழைப்பைத் தேடி அல்ல, தன் உயிரைக் காத்துக்கொள்ள. பூவலிங்கம் (நியாயமாய்) கோபப்படும் இளைஞன். ரௌத்திரம் பழகியதால் அவன் வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது.

தோல் கறுத்த மனிதன் (சாதியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று பல பிரதேசங்களுக்குப் பிழைப்பு தேடித் போகும்போது, எவ்வளவு அந்நியனாக நடத்தப்படுகிறான் என்பது வியப்பே அளிக்காத வேதனை தரும் விஷயம். பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை  அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். ஆனால் விதியின் வலியாலோ, அல்லது சாதியின் சதியாலோ, நாடோடியாய் திரிந்து, பல உதிரி வேலைகள் செய்து, வாழ்க்கையைக்  குட்டையாக்கி தேக்கம் செய்யலாகாது எனக் கருதி, பின்னர் கடத்தல் என தன்னை அபிவிருத்தம் செய்து கொள்கிறான். முடிவில் மும்பையில் 'அண்ணாச்சி'யிடம் சாராய சாம்ராஜ்யத்தில் சரணடைகிறான்.

கடத்தல், சாராய வியாபாரம், (மேலும் அவசியத்தின் பொருட்டு) ஓரிரு முறை திருடவே செய்தாலும், தன் மனிதத் தன்மையையைத் தக்க வைத்துக்கொள்ள மிகுந்த பிரயத்தனப்படுகிறான். தன்னை சுய விசாரணை செய்து கொள்ளவும் தவறுவதில்லை. சாராய ராஜ்யம் நம் வர்த்தக அமைப்பைப் போன்றதுதான். கீழ்மட்டத்தில், தொழுநோயாளிகள் சாராயம் காய்ச்சுகிறார்கள். அதற்கு மேல் பூலிங்கத்தைப் போல விநியோகமும் கடத்தலும் செய்பவர்கள் (பெரும்பாலும் தமிழக தென் மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்). இவர்களையெல்லாம் மேய்ப்பவராக அடுத்த மட்டத்தில் அண்ணாச்சி. இவர்கள் அனைவருக்கும்  மேலாக காக்கிச் சட்டைக்காரர்கள். தரக் கட்டுப்பாடும் உண்டு. மற்ற இடங்களில் நடப்பது போல, ஆஸ்பத்திரிகளில் இருந்து கடத்தப்படும் பிணங்கள் ஊறவைத்த ஸ்பிரிட்டுகள்,  பெயின்ட் கலவை ஆகியவன அண்ணாச்சியின் மட்டத்தில் நடப்பதில்லை. அப்படியானால் விரல்கள் கழன்று விழுந்த ரோகிகளை வைத்து சாராயம் காய்ச்சுவது ...? "குஷ்டரோகக் கிருமிகள் வாற்றிவரும் சூட்டில் மாண்டுவிடும் என அவர் நினைத்திருக்கக் கூடும்"

இந்த ராஜியத்தில் விநியோகத் துறையில் (கடத்தல்) வேலை செய்யும்போது ஜட்டி அணிவது அவசியம்.   எப்பொழுது வேண்டுமானாலும், காக்கிச்சட்டைக் காரர்கள், கைது செய்து, உடைகளைக் கலைந்து பட்டினியோடு காவல் நிலையத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள் (அண்ணாச்சி போன்றோர் விடுவிக்கும் வரை). மற்றபடி வெளியே வந்துவிட்டால், பாவ் ரொட்டி, அயிலை மீன் வறுவல்,  ஓல்டு மங்க் ரம் என்று ஜமாய்க்கலாம். இங்கே திறமைசாலிகளின் விவேகத்திற்குப் பாராட்டும் உண்டு : ஆபத்தை அரை நொடியில் முகரும் மூக்கு. காக்கி வாசனைக்கென விசேடமான கூர்மை. நாயாய்ப் பிறந்திருக்க வேண்டியவன் என்று அண்ணாச்சி சொன்னதாக ஞாபகம் ... கொலைக்கு அஞ்சியோ, அல்லது கொலையைச் செய்தோ ஊரை  விட்டு ஓடி வருபவனுக்கு அடைக்கலன் உண்டு. இப்படித்தான், தஞ்சம் புகுந்த ஒருவனுக்கு உதவ எத்தனித்து, அவனைத் தேடி வந்தவனை மிரட்டப் போக, அவன் அசந்தர்ப்பவசமாக, ரயிலில் அடிபட்டுச் சாக, இதனால் மனம் அலைக்கழிக்கப் படுவதும் உண்டு.
"சராசரியாய் தினத்துக்கு இரண்டு மூன்று பெயர்கள் லோக்கல் ரயிலில் அடிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். படித்தவனும் செத்தான், பாமரனும் செத்தான், கலயாணமாகாத உதிரி இளைஞனும் செத்தான், குடும்பத்தில் தளைப்பட்ட சராசரி இந்தியக் குடிமகனும் செத்தான். மறுபடியும் தத்துவம். 'ச்சே' என்றிருந்தது பூலிங்கத்துக்கு."

பூலிங்கத்துக்கு சில (மணமான)  பெண்களுடன் தொடர்புண்டு. ஆனால் அந்த உறவுகளில் உண்மையும்  உண்டு. ஊரை விட்டு ஓடும்முன் சுசீலக்காவுடன் உறவு. பின்னர் கொங்கன் நாட்டில், கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழும் கோமதியிடம் உறவு. (தன்னுடன் வாழுமாறு எவ்வளவு சொல்லியும் வர மறுத்து விடுகிறாள். காரணத்தை அவள் சொல்வதில்லை). இவ்வளவும் நடந்து முடிந்த பின்பு, தான் எதனால் ஊரை விட்டு ஓடி வந்தானோ, அதன் காரணமாகிய செண்பகத்திடம் காதல் வயப்படவும் செய்கிறான்!  காவல்துறை கெடுபிடி அதிகமாகும் பொழுது, இவையனைத்தையும் விட்டு விட்டு, 'டெம்போ' என்று ஏதோ வாங்கி 'செட்டில்' ஆகி விடலாம் என்று பூவலிங்கம் நினைப்பது, நமக்கு வாழ்க்கையில் துன்பங்கள் அதிகமாகும் போது எதையாவது செய்து 'அக்கடா என்று உட்கார்ந்தால் தேவலை' என்று எண்ணுவது போலத்தான்.

தான் செய்யும் தொழில் பற்றியும், சுய விசாரணைக்கும் இடமும் உண்டு. தான் வேலை பார்த்து வரும் அண்ணாச்சியின் முன்னாள் சகாவான (பின்னாளில் அந்த தொழிலை விட்டு விலகி வாழும்) சாம்ராஜ் அய்யாவிடம் இணக்கமாய் இருக்கும் போது, இம்மாதிரி வாழ்வது நியாயமா என்று அவரிடம் கேட்கப் போக, அவர் பதிலுரைக்கிறார் : "நீங்கெள்ளாம் சாம்ராஜ்யம் வளந்த் பொறகு வந்து சேர்ந்ததுனால இப்படித் தோணுது. நாங்க பாடுபட்டு சாம்ராஜ்யத்தைக் கெட்ட வேண்டியிருந்தது... நீ கொல்லாட்டா, எதிராளி உன்னை தீத்திருவாண்னா என்ன செய்வே ? அவரவர் நிலைமையிலே அவரவர் செய்ய்யது நியாயம்பா... ஏதோ அண்ணைக்குச் சரிண்ணு தோணிச்சு செய்தேன். இண்ணைக்கு சரிண்ணு தோணலே, செய்ய்யலே" அவர் மேலும் பூலிங்கத்தையே கேட்கிறார்:  "...இந்தப் பொழைப்பு வேண்டாம். வேறு தொழில் பாருண்ணு. நீ கேப்பையா ? உன்னால இப்பம் விட முடியுமா ? ...ஏன் உன்னால மூட்டை தூக்கிப் பொழிச்சிருக்க முடியாதா ? முறுக்கு, வடை, சுண்டல் வித்துப் பொழைச்சிருக்க முடியாதா ? கஞ்சா விக்கதும் கள்ளச்சாராயம் விக்கதும்தான் மார்க்கமா ?"

கோழிக்கும் ஆட்டிற்கும் மீனுக்கும் நாக்கு ருசி கொண்ட நம்மை, அதே  சமயத்தில் 'நானெல்லாம் எதையும் கொல்ல மாட்டேன்பா' என்று சொல்லும் நம்மை, இனி 'நீயே தான் நீ சாப்பிடும் உணவை கொன்று உட்கொள்ளவேண்டும்' என்ற ஒரு நிலையை கற்பனை செய்வோமேயானால், எவ்வளவு நாள் நம்மால் வெட்டருவாளைத் தூக்கிக்கொண்டு கோழியைத் துரத்த முடியாமல் இருக்க முடியும்?  சிலர் இருக்கலாம், நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு. ஆனால், கோழியும் மீனும் தான் உணவே என்ற நிலை உருவாகுமெனின் அதில் எவ்வளவு பேர் 'சாவேனே தவிர கொல்ல மாட்டேன்' என்றிருக்க முடியும் ?  வசதியும் வாய்ப்பும் இருப்பதனாலேயே நம்மால் 'நியாயமாக' வாழ முடிகிறது. நியாயத்தின் எல்லைகளை பெரும்பாலும் வசதியுள்ளவர்களே வரையறை செய்கின்றனர்.

பூவலிங்கம் யார் ? நாம் தான். என்ன, அவனிடம் உள்ள அளவு நியாயம், ரௌத்திரம் மற்றும் நேசம் நம்மிடம் உள்ளதா? - என்பதே நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பூவலிங்கத்தின் மூலம் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் நாஞ்சில் நாடன். அது தானே நல்ல நாவல்?

படித்துப் பல நாள்கள் கழித்தும் இன்னும் மனதை ஆக்கிரமித்து,  நீங்க மறுக்கும் செம்மையான படைப்பு.

5 comments:

Raja M said...
This comment has been removed by the author.
Raja M said...
This comment has been removed by the author.
Raja M said...

"வசதியும் வாய்ப்பும் இருப்பதனாலேயே நம்மால் 'நியாயமாக' வாழ முடிகிறது. நியாயத்தின் எல்லைகளை பெரும்பாலும் வசதியுள்ளவர்களே வரையறை செய்கின்றனர்."

வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் எல்லைகளின் திண்ணங்களை பரிசோதனை செய்கிறார்கள் போலும்.

நல்ல நாவலைப் படிக்கத் தூண்டியுள்ளீர்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
அருமையாக அதன் சிறப்புக்களை எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/

Post a Comment