புத்தகங்களைப் பரிந்துரை செய்யும் எங்கள் முயற்சியைப் பற்றி...
நாங்கள்
மூவரும் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த
போது சந்தித்தோம். சில ஆண்டுகளுக்கு முன் காலத்தின் சுழற்ச்சியில்
மீண்டும்
சேரும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அடிக்கடி சேர்ந்து கதைக்கும் போது
அண்மையில் படித்த புத்தகங்கள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.
நல்ல புத்தகங்களைப் படிக்கும் போது கிடைக்கும் அனுபவம்
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது, உள்ளார்ந்தது. நண்பர்களுடன் புத்தகங்களைப்
பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, நாம் வாசித்த அதே புத்தகத்தை
மற்றவர்கள் பார்த்த முறை, நம் வாசிப்பில் புலப்படாத கோணங்கள், என பல இனிய
அனுபவங்கள் கிடைக்கும். பல நேரங்களில் இந்த நாவல்கள் நம்மைப் பற்றி நாமே
அறிந்திராதவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கியக் கண்ணாடிகளாயும் அமைவதையும்
கண்டிருக்கிறோம். இப்படி அடிக்கடி மணிக்கணக்காக நிகழ்த்திய உரையாடல்களை,
கேட்ட கேள்விகளை, பகிர்ந்த சந்தோஷங்களைச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் விளைவே இந்த நூல் பரிந்துரை வலைத்தளம்.
உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளின் பட்டியலில் இடம் பெறக்கூடிய
பல நூல்கள் தமிழில் படைக்கப்பட்டுள்ளன. பல நாடுகளில் இலக்கிய
எழுத்தாளர்கள் தம் நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். எழுத்தின்
மூலம் வரும் வருவாயிலேயே அவர்களால் வசதியாக வாழ்க்கை நடத்த முடிகிறது.
ஆனால், தமிழின் முன்னணி இலக்கிய எழுத்தாளர்களால் கூட எழுத்தை மட்டுமே
நம்பிப் பிழைக்கும் நிலை எப்போதுமே இருந்ததில்லை. நெல் குத்தி
பிழைப்பவரைவிட சொல் குத்தி பிழைப்பவர் பாடு மெத்தக் கடினமாக இருக்கிறது.
'தமிழைக் கற்றேன் தரித்திரம் பிடித்தேன்' என்று தருமி காலம் தொட்டு வரும்
இந்த அவலம் குறித்து அடிக்கடி ஆற்றாமையோடு பேசிக் கொள்வோம். இந்தச்
சூழலுக்குப் பண்பாடு, பொருளாதார, சமூக ரீதியான காரணங்கள் ஒரு பக்கம்.
அடிப்படை விநியோக உத்திகளைக் கூடக் கையாளும் திறனில்லாத பதிப்பகங்கள்
மறுபக்கம். நல்ல நூல்கள் குறைந்த அளவே விற்கும் அவலமான சூழலைப் பற்றி
ஜெயமோகன், சாரு, மற்றும் பா.ராகவன் ஆகியோரும், பதிப்புத் துறையில் உள்ள
பொருளாதாரக் கணக்கு வழக்குகள் பற்றி பத்ரியும் எழுதி உள்ளனர்.
எங்களுடன் வேலை செய்யும் பிற தேசத்து நண்பர்கள், அடிக்கடி, "நீ, இந்தப்
புத்தகம் படித்தாயா? மிக நன்றாக இருந்தது!", என்று பேச்சு வாக்கில்
சொல்வது கேட்டு, பல புத்தகங்களை வாங்கிப் படித்துள்ளோம். நாங்கள் நிதமும்
கேட்கும் National Public Radio (NPR) F M வானொலியில் ஒவ்வொரு வாரமும் "You Must Read this" என்ற பகுதியில் நல்ல நூலாசிரியர்களையும், நூல்களையும்
அடையாளம் காட்டுவார்கள். கோடை விடுமுறையில் படிக்க என்று ஒரு அட்டவணை,
புதினங்களுக்கு என்று ஒரு அட்டவணை என்று பல வெகு ஜன ஊடகங்களிலும் இலக்கியப்
புத்தகங்களைப் பற்றிய தரமான பரிந்துரைகள் இருக்கும். நல்ல இலக்கியப்
படைப்பாளிகளுக்கென 'New Yorker' போன்ற தரமான வார இதழ்களும் உண்டு.
தமிழிலும் காலப் போக்கில் இத்தகைய அமைப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு உள்ளது. இந்த அமைப்புகளை, அமைப்புகளின் தேவைகளை வெகுஜன
ஊடகங்களில் உருவாக்குவதில், வாசகர்களுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.
அது, தான் படித்த நல்ல புத்தகங்களை பிறருக்கு அடையாளம் காட்டுவது தான்.
நல்ல நூல்களை அடையாளம் காட்டுபவர்கள் ஒரு சிலருக்கு மட்டும் சிறு வயதிலேயே
அமைந்து விடுகிறார்கள். எங்களுக்கும் நல்ல புத்தகங்களை முதலில் நண்பர்கள்
தான் அடையாளம் காட்டினார்கள்.
ஒரு நூலைப் பரிந்துரை செய்ய இலக்கியத் திறனாய்வு செய்யும் அனுபவம்
விமர்சகருக்கு இருப்பது மிகச் சிறப்பு. அந்தத் திறன் எங்கள் மூவர்
குழுவில் யாருக்கும் இல்லை என நன்றாக உணர்வோம். எளிய வாசகர்களான
எம்போன்றவரின் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், நல்ல நூல்களைப்
பிறரிடம் அறிமுகப்படுத்துவதே முக்கிய நோக்கம்.
நம் கலாச்சார வேர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் புத்தகங்களைப் பற்றிக்
கதைப்பதே ஒரு அலாதியான சுகம்! நீங்கள் வாசித்த நல்ல புத்தகங்களை
எங்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். கதைக்கலாம் வாருங்கள்!!
7 comments:
அரும் பெரும் புத்தகங்களை மொழி பெயர்த்தவர்கள் பெயர் யாருக்காவது தெரியுமா? கண்ட கண்ட கழிசடைகள் பெயர் தான் உங்களுக்கும் எழுத வருது. திலகவதி-தேடிப்பாருங்கள்.(குற்றமும் தண்டனையும் -மொழி பெயர்த்தவர்)
எனக்கு ஒன்று புரியவில்லை. கதைக்கலாம் வாருங்கள் என்கிறீர்கள். எனில், யாரும் தங்கள் மதிப்புரையை அனுப்பலாமா? என்றால் எவ்வாறு? தமிழ் இலக்கியம் மட்டுமா, அல்லது எவ்வித, எம்மொழி நூல்களும் சம்மதமா? தயவு செய்து விளக்கவும்.
>>pukalini said... அரும் பெரும் புத்தகங்களை மொழி பெயர்த்தவர்கள் பெயர் யாருக்காவது தெரியுமா?
புகழினி, உங்கள் கருத்துக்கு நன்றி. நாங்கள் குறிப்பிட்டிருந்தது போல நல்ல நூல்களைத் தேடத்தான் ஆரம்பித்துள்ளோம். அவற்றுள் பதித்த நூல்களின் வாசிப்பனுபவத்தைப் பதிவு செய்கிறோம். இது எங்களுக்கு ஒரு பயிற்சிக் கூடம்தான். தங்கள் வலைத்தளத்தில் சொல்லியிருக்கும் நூல்களின் உங்கள் அறிமுகத்தை தயவு செய்து எங்களுக்கும் அனுப்புங்கள். இது ஒரு 'community effort ' தான்.
திரு ஜெகதீஷ், இதை ஒரு community effort மூலம் நூல் அறிமுக தகவல் தளமாகச் செய்வது எங்கள் பேராசை.
1 . எவரும் தங்கள் மதிப்புரைகளை அனுப்பலாம். அவை விமர்சகர் அறிமுகத்துடன் பதிப்பிக்கப்படும்.
2 . தமிழ்ப் புத்தகங்கள் அல்லது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்கள்.
3. உங்கள் மதிப்புரைகளை 'kbaski' என்ற 'gmail' ஐடிக்கு அனுப்புங்கள்.
4. மாதம் குறைந்தது ஒரு மதிப்புரையாவது எழுத முடிந்தால் உங்களுக்கு இந்தத் தளத்தில் 'posting permission ' கொடுக்கிறோம். நேரடியாக நீங்களே பதிவு செய்யலாம்.
5. உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
நன்றி clayhorse,(பாஸ்கி?)என் கருத்துக்கு விளக்கமளித்தமைக்கு.
தங்கள் அனைவரது வாசிப்பு அனுபவங்களில் பெரும்பாலனவற்றைப் படித்தேன். சிறந்த முயற்சி. தங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் பதிவுகளையும் பரிந்துரைகளையும் இயன்றவரை படிக்க முயல்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்.
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
Post a Comment